கடந்த 2006-ம் ஆண்டுக்கான சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பான "கல்கி' தொடருக்காக குஷ்பு சிறந்த நடிகை விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சிறந்த நடிகர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டுக்கான சின்னத் திரை தொடர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளைத் தேர்வு செய்ய நீதிபதி மருதமுத்து, விடுதலை, வசந்த், கண்மணி சுப்பு, டி.வி.சங்கர், ராஜசேகர், செய்தித்துறை செயலாளர், இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு மொத்தம் 14 தொலைக்காட்சித் தொடர்களைப் பார்வையிட்டு விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்தது. பரிந்துரையை ஏற்று விருதுக்குரிய தொடர்கள், கலைஞர்கள் பெயரை முதல்வர் கருணாநி அறிவித்துள்ளார்.
சிறந்த தொடர் சன் டி.வி.யின் "செல்வி' சிறந்த தொடருக்கான முதல் பரிசுக்கும், "சொர்க்கம்' இரண்டாவது பரிசுக்கும் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளன. "அல்லி ராஜ்யம்' சிறந்த வாரத் தொடருக்கான சிறப்புப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
"செல்வி' தொடருக்காக ராடன் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. "சொர்க்கம்' தொடருக்காக ஏவி.எம். நிறுவனத்துக்கும், "அல்லி ராஜ்யம்' தொடருக்காக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனத்துக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
சாதனையாளர் விருது 2006-ம் ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருதுக்கு "கோலங்கள்' தொடரை இயக்கிய திருச்செல்வமும், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ராணி சோமநாதனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
சிறந்த கலைஞர்களுக்கான விருது விவரம் :-
சிறந்த நடிகை: குஷ்பு (கல்கி)
சிறந்த நடிகர்: அபிஷேக் (மலர்கள்)
சிறந்த குணச்சித்திர நடிகர்: டெல்லி குமார் (ஆனந்தம்)
சிறந்த குணச்சித்திர நடிகை: தேவிப்ரியா (கோலங்கள்)
சிறந்த வில்லன் நடிகர்: அஜய் (கோலங்கள்)
சிறந்த வில்லன் நடிகை: பிருந்தா தாஸ் (ஆனந்தம்)
சிறந்த இயக்குநர்: சமுத்திரக்கனி (செல்வி)
சிறந்த கதாசிரியர்: தேவிபாலா (ஆனந்தம்)
சிறந்த திரைக்கதை ஆசிரியர்: ராஜ்பிரபு (செல்வி)
சிறந்த உரையாடல் ஆசிரியர்: குமரேசன் (அகல்யா)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: மாஸ்டர் பரத் (மை டியர் பூதம்)
சிறந்த ஒளிப்பதிவாளர்: மாடசாமி (மலர்கள்)
சிறந்த படத்தொகுப்பாளர்: பிரேம் (லட்சுமி)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: கிரண் (பல தொடர்கள்)
சிறந்த பின்னணி குரல் (ஆண்): ரவிசங்கர் (பல தொடர்கள்)
சிறந்த பின்னணி குரல் (பெண்): பிரமிளா (பல தொடர்கள்)
சிறந்த தந்திரக் காட்சியாளர்: ஈஸ்வர் (சிந்துபாத்) .
சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 5 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
விருது வழங்கும் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. அதற்கான தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
Bookmarks