"அதிர்சசியுற்றேன்"
=================

'ஜெயலலிதா'....... தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல, தமிழக அரசியல் உலகில் மட்டுமல்ல, தமிழர் வாழ்விலிருந்து அகற்ற முடியாத பெயர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்த ஒரு ஆளுமை நிறைந்த சக்தி.

இம்முறை பதவியேற்றத்தில் இருந்தே அவர் முகத்தில் பழைய பொலிவில்லை. மிகவும் சோர்ந்து காணப்பட்டார். கடசியிலிருந்தோ, மக்களிடமிருந்தோ, எதிர்க்கட்ச்சிகளிடமிருந்தோ எந்த நெருக்கடியும் நிச்சயமாக இல்லை. அவரது கோட்டைக்குள் கூடவே இருந்தவர்களால் ஏதோ வெளியில் சொல்ல முடியாத நெருக்கடிகளால் தவித்திருக்கிறார், பாவம்.

அப்பல்லோவில் அட்மிட் ஆனார் என்றபோதே மனது துணுக்குற்றது. தொடர்ந்து வந்த செய்திகளில் இருந்த முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் கவலை படர்ந்தது. இருந்தபோதும் 'அம்மா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார்' என்ற செய்திகள் மனதுக்கு அமைதியை தந்தது.

ஆனால் நான்காம் தேதி மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தியும், தொடந்து நிலைமை கவலைக்கிடம் என்ற தகவல்களும் நம் நம்பிக்கையை தகர்த்தது. இறைவா இந்த செய்திகள் பொய்யாக இருக்க வேண்டுமே என்று மனம் துடித்தது. ஆனால் இயற்கையின் தீர்ப்புக்கு முன் எல்லாம் தோற்றது. எது நடக்க கூடாது என்று துடித்தோமோ அது நடந்து விட்டது.

ஆம், தமிழக அரசியலில் முப்பது வருடங்களாக ஆர்ப்பரித்த பெண் சிங்கத்தை இழந்து விட்டோம். சூறாவளியாக சுழன்றடித்த அந்த ஆளுமை, அந்த கம்பீரம் நேற்று முழுவதும் ராஜாஜி மண்டப வாயிலில் மீளா துயிலில் கிடந்த போது, கண்ணீர் விடாதோர், கதறாதோர் உண்டோ.

எழுபத்தைந்து நாட்கள் நீ என்ன நினைத்தாய், என்ன சொல்ல துடித்தாய் என்பது யாருக்கும் தெரியாது போனதே தாயே. உன் இறுதி நாட்களில் குள்ளநரி கூட்டத்தின் கைகளில் விளையாட்டு பொருளாகி போனாயே. மூன்று தொகுதிகளின் வெற்றிசெய்தி உனக்கு உத்வேகம் தந்து உன்னை எழுந்து உட்கார வைத்து விடும் என்ற நம்பிக்கையில் மக்கள் வெற்றியை தந்தனரே. ஆனால் தேர்தல் நடந்ததே உனக்கு தெரியுமா என்ற ஐயப்பாடு இப்போது எங்களுக்குள் எழுகிறதே.

ஆள், அம்பு, சேனை பரிவாரம் எல்லாமிருந்தும் ஏதுமற்றவராய், அந்த கடைசி நேர மூச்சுகாற்றுக்காக எவ்வளவு துடித்திருப்பாய் என்று எண்ணும்போதே இதயம் கனத்து, கண்களில் நீர் பெருக்கெடுக்கிறதே தாயே.

உன் தலைவரையும், எங்கள் அண்ணனையும் காணச்சென்று விட்ட தாயே, நாங்களும் வரிசையில் நிற்கிறோம், வந்து விடுவோம்.

ஆனால் அங்கேயும் நான் உனக்கு எதிர்க்கட்ச்சிதான். உன்னை உரிமையோடு எதிர்ப்பதில் உள்ள சுகமே தனி.

சென்று வா... தாயே

கண்ணீருடன்
ஆதி.