-
7th May 2016, 12:39 PM
#1061
Junior Member
Veteran Hubber
In Nenjrukkum varai too Sreedhar extracted the full potential of NT's running skills in the climax!!
Last edited by sivajisenthil; 7th May 2016 at 06:52 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
7th May 2016 12:39 PM
# ADS
Circuit advertisement
-
7th May 2016, 12:51 PM
#1062
சிவகாமியின் செல்வன் - ஒரு மீள் பார்வை – Part I
நடிகர் திலகத்தின் மிக பிரபலமான படங்களை சிலாக்கிப்பதை விட அதிகம் பேசப்படாத ஆனால் தரத்தில் குறைவில்லாத படங்களைப் பற்றிய கருத்துகளை விமர்சனங்களை முன் வைப்பது என்பது எப்போதும் எனக்கு பிடித்தமான ஒன்று. அந்த பட்டியலில் சிவகாமியின் செல்வனுக்கும் இடம் உண்டு. இந்த படம் எனக்கு பிடித்துப் போனதற்கு இந்த படத்தின் “தலைப்பு” கூட ஒரு உளவியல் காரணமாக இருக்கலாம்.
இந்த படம் வெளியானபோது.அது சந்தித்த மிகப் பெரிய சவால் இதன் மூலப்படமான ஆராதனாவோடு ஒப்பிட்டப்பட்டதுதான். 85 வருட தமிழ் பேசும்பட வரலாற்றில் இது போன்ற ஒப்பிடலை வேறு எந்த தமிழபடமும் எதிர்கொண்டதில்லை காரணம் ஆராதனா என்ற இந்திப் படம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஏற்படுத்தியிருந்த தாக்கம். ஆராதனா படத்தின் பாடல்கள் மிக மிக பிரபலம். அந்தப் பாடல்களின் சாயல் துளி கூட இல்லாமல் மெல்லிசை மன்னர் போட்டிருந்த அருமையான ட்யூன்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தாலும் ஒரிஜினல் போல இல்லை என்ற விமர்சனம் படத்தை பாதித்தது என்பது உண்மை.
அனைவருக்கும் தெரிந்த இந்த விஷயங்களை இப்போது மீண்டும் இங்கே பதிவிட காரணம் அது போன்ற baggage எவற்றையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் டிஜிட்டல் மெருகேற்றப்பட்டு இப்போது வெளியாகியிருக்கும் சிவகாமியின் செல்வன் படத்தை பார்க்கும் எவருக்கும் படத்தின் தரம் விளங்கும். அந்த அடிப்படையில் எழுதப்படும் எண்ணங்களே இந்த பதிவு.
இந்த படத்திற்கு பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தவர்களைப் பற்றி சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் மஸ்தான். இயக்குனர் சிவிஆரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக 70-களில் விளங்கியவர். வடநாட்டு டார்ஜிலிங்கையும் சரி தென்னாட்டு தேக்கடி மூணாறு போன்ற இடங்களின் அழகை அள்ளிக் கொடுத்த விதத்திலும் பின் இந்த இரண்டு இடங்களையும் மாட்ச் (match) செய்த விதத்திலும் படு துல்லியம்.
மெல்லிசை மன்னரைப் பற்றி என்ன சொல்ல? வேறு ஒரு இசையமைப்பாளராக இருந்தால் ஆராதனா படத்தின் ரீமேக் என்று சொன்னதுமே வேண்டாம் என்று விலகியிருப்பார்கள். ஆனால் எம்எஸ்வியோ அந்த சவாலை ஏற்றுக் கொண்டு மிக பிரமாதமான பாடல்களை மட்டுமல்ல உள்ளத்தில் ஊடுருவி மனதின் அடித்தட்டு வரை ஒரு சோகமான சுகத்தை விதைக்கும் அந்த ஹம்மிங்கையும் தந்தார். அன்று வெளியானபோதும் சரி இன்றைக்கு 42 வருடங்களுக்கு பின்னர் கேட்கும்போதும் சரி, ஏன் இன்னும் பல ஆண்டுகள் கடந்து போனாலும் இந்த பாடல்களும் அந்த ஹம்மிங்கும் மனதில் இருந்து மறையாது.
இந்த படத்தின் பின்னணியில் இருந்து பணியாற்றிவர்களில் கவனம் ஈர்க்கும் மற்றொருவர் ஆலகாலா என்று அன்போடு அழைக்கப்பட்ட ஏ.எல்.நாராயணன். இவர் வசனம் எழுதுவதில் வாலி என்றே சொல்ல வேண்டும். எப்படி வாலியின் பாடல்களில் எதுகை மோனை தூக்கலாக இருக்குமோ அது போன்ற ரைமிங் டயலாக் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர் இவர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை பல நடிகர்கள் தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்று பார்வையாளனுக்கு தோன்ற காரணமே இவரின் வசனங்களால்தான். இதில் மிக பெரும் பலன் அடைந்தவர் ஏவிஎம் ராஜன். முதல் பகுதியில் நடிகர் திலகம் ராஜன் வாணிஸ்ரீ சம்மந்தப்பட்ட காட்சிகளிலெல்லாம் வசன முத்திரைகள் அழகாய் விழுந்திருக்கும்.
“பிரும்ம தேவன் உனக்காகவே ஸ்பெஷலா. இவளை படைச்சிருக்கான். உங்க ரெண்டு போரையும் பார்த்தா ரவிவர்மா ஓவியத்தில் வர ராமன் சீதா மாதிரியே இருக்கீங்க. வில்லை ஒடி விவாகத்தை பண்ணிக்கோ.”
நாயகனின் காஃப்பி மற்றும் சிகரெட் பழக்கத்தை பற்றி பேசும்போது “உங்களுக்குனு யாரும் இல்லையா” என்று நாயகி கேட்க அதற்கு நாயகன்
“நீங்கதான் I mean நீங்களே சொல்லுங்க” என்று ஆரம்பிக்க உடனே நண்பனான் ஏவிஎம் ராஜன் இடை மறித்து “நீங்கதான் சொல்லணும்” என்று சொல்வெதெல்லாம் ரசிக்கக் கூடியவை. இது தவிர ராஜன் பேசுவதாக வரும்
“சிரிக்கிறவ கிட்ட சின்சியாரிட்டி இருக்காதுடா”.
“உனக்காக அழறாளானு பார்க்க வேண்டாமா”
“இந்த பிளேன் அவ மனசிலே லாண்ட் பண்ண ஒரு ரன்வே தயார் பண்ணேன்”.
“Perfect landing straight in to her heart “
“ஒரு பெண்ணை பிடிக்கணுமுனா அவங்க அம்மாவுக்கு ஸ்வீட் வாங்கி கொடுக்கணும். இல்லே வேலைக்காரனுக்கு சில்லறையை தள்ளணும்.”
போன்ற சுவையான வசனங்கள். ராஜனும் இவற்றை கெடுக்காமல் neat-ஆக present பண்ணியிருப்பார்
வசனத்தினாலும் உடல் மொழியாலும் வசீகரிக்கும் மற்றொருவர் வழக்கம் போல் எஸ்.வி.ரங்காராவ். ஆங்கிலமும் தமிழும் கலந்து அவருக்கே உரித்தான அந்த வேகத்தில் அவர் பேசும் அழகே தனி. “என் அனுபவத்திலே உனக்கு ரெண்டு அட்வைஸ் சொல்றேன். ஒன்னு மனைவிக்கு வாக்கு கொடுத்தா அதை எப்படியாவது நிறைவேத்தியே ஆகணும். ரெண்டு மனைவிக்கு எப்போதுமே வாக்கு கொடுக்கக்கூடாது” என்று அவர் நடிகர் திலகத்திடம் சொல்லும் வசனத்திற்கு அன்றும் சரி, இன்றும் சரி காது அடைக்கும் அப்ளாஸ்.
யார் வசனம் எழுதினாலும் சோ பேசும் வசனங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அவர் 1974-ல் பேசின வசனங்களுக்கு இன்றும் அப்ளாஸ் விழுகிறது. "காக்கா பிடிச்சாத்தான் டாக்டர்க்கு பிடிக்கும்" [கலைஞரை] "வர வர நம்ம நாட்டிலே பொம்பளைங்களுக்கு குளிர் விட்டுப் போச்சுப்பா" [இந்திராவை மனதில் வைத்து], "மத்தவங்க உளறதை நான் சொன்னா என்னை போய் உளர்றேன்னு சொல்றாங்க" இதெல்லாம் சாம்பிள்.
சஹஸ்ரநாமம், டி.கே பகவதி, வி.எஸ். ராகவன், எஸ்.என். பார்வதி கச்சிதம். எம்.என்.ராஜம் மற்றும் மனோகர் சற்று ஓவராக பண்ணியிருந்தாலும் அன்றைய நாட்களில் அந்த கேரக்டர்களுக்கு அப்படிப்பட்ட நடிப்பு தேவையாக இருந்தது என்பதனால் பெரிதாக உறுத்தவில்லை.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 6 Thanks, 9 Likes
-
7th May 2016, 12:52 PM
#1063
சிவகாமியின் செல்வன் - ஒரு மீள் பார்வை – Part II
அடுத்து கதையின் நாயகி, தலைப்பின் நாயகி. இந்த பாத்திரத்திற்கு அளவெடுத்து பொருத்தியது போல் அமைந்தார் வாணிஸ்ரீ. இன்னும் சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் அவருக்கு இது போன்ற பலமான ஆழமான பாத்திர வார்ப்பு வேறு எந்த படத்திலும் அமைந்ததாக நினைவில்லை. இருளும் ஒளியும், வாணி ராணி ஏன் வசந்த மாளிகையையும் சேர்த்தே சொல்கிறேன்.
முற்பகுதியில் இளமை துள்ளும் குறும்பு கொப்புளிக்கும் காதல் வயப்பட்ட பெண் பின் எதிர்பாராத விபத்தில் காதலனை இழந்து யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற்று வேறு வீட்டில் தத்தெடுக்கப்படும் அந்த குழந்தையை வளர்க்கும் ஆயாவாக சந்தர்ப்ப சூழலால் கொலைப்பழி சுமப்பவளாக சிறை தண்டனை முடிந்து மகன் இருக்கும் இடம் தெரியாமல் பின் தன்னை ஆதரிக்கும் ஜெயிலரின் மகளின் காதலனாக மகனை சந்தித்து ஆனால் அவன்தான் தன மகன் என்று வெளிக் காட்டிக் கொள்ள முடியாத தாயாக பல்வேறு முகம் காட்ட வேண்டிய ஒரு கடினமான வேடத்தை எந்த பிசிறும் இல்லாமல் செய்திருப்பதற்கு வாணிஸ்ரீக்கு ஒரு மலர்கொத்து.
தன்னை கிண்டல் செய்து பாடும் வாலிபன் மீது ஏற்படும் செல்லக் கோபம் அது ஈர்ப்பாக மாறுவது, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக காதல் வயப்பட்டு கசிந்துருகி தெய்வ சன்னிதானத்தில் மாலை மாற்றி கணவனாக ஏற்று அவனோடு கலந்து உறவாடி - இந்த phase-ல் வாணிஸ்ரீ ஸ்வீட்டோ ஸ்வீட்.
ரயில் பயணத்தில் தன்னை ஈர்த்த வாலிபன் தீடீரென்று வீட்டிற்கு வந்து நிற்க அந்த தவிப்பு, தெரியாமல் வாளி தண்ணீரை ஊற்றி விட்டோமே என்ற குற்ற உணர்வு, சட்டையை அயர்ன் செய்து காஃப்பி போட்டு கொடுத்து காஃப்பிக்கு அதை போட்டுக் கொடுத்த கைக்கு கிடைக்கும் பாராட்டை வெட்கத்தோடு ஏற்றுக் கொண்டு சட்டைக்கு மட்டும் சூடேறலே என்று குறும்பாக நாயகன் சொல்லிவிட்டு போக நாணத்தில் முகம் சிவக்க தலை குனிவது .
நாயகனின் காஃப்பி மற்றும் சிகரெட் பழக்கத்தை பற்றி “சிகரெட்டை கட் பண்ணுங்க. காஃப்பி காலையிலே ஒரு கப் சாயந்திரம் ஒரு கப். (இதை சொல்லும்போது முகத்தை இரண்டு பக்கமும் ஆட்டி) ஓகே? Bye bye” என்று சொல்லும் அழகு, காலையில் தன்னைப் பார்க்கதான் நாயகன் மார்கெட்டிற்கு வந்திருக்கிறான் என்று தெரிந்தும் கூட கெத்தை விட்டுக் கொடுக்காமல் பேசுவது என்றிருப்பவர் கோவிலில் நாயகனை சந்திக்கும்போது காட்டும் முகபாவங்கள் இருக்கிறதே பிரமாதம்! தேவியை தரிசனம் பண்ண வந்தேன் என்று நாயகன் சொல்லும்போது அந்த கண்கள் காட்டும் பாவம்! பிரசாதத்தை வாங்கிக் கொண்டு நாயகன், இன்னிக்கிதான் தேவியோட அருள் எனக்கு கிடைச்சிருக்கு தேங்க்ஸ் என்று குறும்பாக சொல்லும்போது தலையை சாய்த்து கண்களை மூடி அதை ஏற்றுக் கொள்ளும் அழகு அடிக்கடி கோவிலுக்கு வாங்க அப்பத்தான் நினச்சதெல்லாம் நடக்கும் என்று நாயகன் சொல்லும்போது அதை அர்த்தம் பொதிந்த புன்னகையோடு அங்கீகரிப்பது (இந்த காட்சியில் வாணிஸ்ரீக்கு வசனமே கிடையாது என்பது தனி சிறப்பு)
ஞாயிறன்று சாப்பிட வருவதாக சொன்ன நாயகன் அதற்கு முன்னரே வீட்டிற்கு வர, ஞாயிற்றுக்கிழமை வரை உங்களால காத்திருக்க முடியாதுனு எனக்கு நல்லாவே தெரியும் என்று கிண்டல் செய்வது, நாயகன் விவரிக்கும் கனவைக் கேட்டுக் கொண்டே தவறான கையில் கட்டுப் போடுவது நாயகன் தன சம்மதத்தை கேட்க அதற்கு அப்பா என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லுவது, வெட்கப்பட்டு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டு சம்மதம் என்று முகத்தை மட்டும் ஆட்டுவது, அந்நேரம் தந்தை வந்துவிட கதவை லேசாக திறந்து காதலனின் தர்மசங்கடத்தை ரசிப்பது, புன்னைகையோடு டாட்டா காட்டுவது, பார்ட்டியில் IAF உயரதிகாரியின் கிண்டல்களுக்கு நாணத்தோடு கூடிய புன்னகையை மட்டும் பதிலாக அளிப்பது என்று அமர்களப்படுத்தியிருப்பார்.
இனியவளே பாடல் காட்சியில் அந்த டார்க் ப்ளூ/ப்ளாக் கலர் sareeயில் அவ்வளவு attractive-ஆக இருப்பார் என்றால் அடுத்து மேள தாளம் பாடலுக்கு sky blue கலர் sareeயில் பட்டையை கிளப்புவார். மேள தாளம் பாடலுக்கு முன்னர் நாயகன் தன்னையே உற்றுப் பார்ப்பதை என்ன பாக்கறீங்க என்று கேட்க நான் பொண்ணு பாக்கிறேன் சிவகாமி என்று பதில் வர எதுக்கு என்று அடுத்த கேள்வி எழுப்ப அந்த நல்ல நாள் எப்போ வரும்னு பாக்கிறேன் என்ற பதிலுக்கு எந்த நல்ல நாள்? என்று மீண்டும் கேள்வி எழுப்புவார். இதை படிக்கும்போது சாதாரணமாக தோன்றினாலும் அந்த மூன்று கேள்விகளையும் அவர் கேட்கும் விதம்! அந்த நேரத்தில் அவரின் Voice modulation என்னவென்று புரிந்தாலும் புரியாதது போல் நடித்து காதலனின் வாயிலிருந்தே அதை வரவழைக்கும் அந்த குறும்பு! வாவ் வாணிஸ்ரீ!
எத்தனை அழகு பாடலில் அந்த உணர்ச்சி வசப்படும் நிலையை விரசம் இல்லாமல் வெளிப்படுத்தியிருப்பார் தவறு செய்து விட்டோம் என்ற மனநிலையை கூட melodrama இல்லாமல் செய்திருப்பார். அது போன்றே விபத்தில் காதலனை இழக்கும் காட்சியும் அதே ரகம். ஆயாவாக வாழும் வீட்டில் எஜமானியம்மாளின் தம்பியை தவிர்க்கும் இடங்களிலும் சரி ஒரு இயல்பு தெரியும். வயதான பிறகு ஒரு முதிர்ச்சி காண்பித்திருப்பார். மகன் என்று தெரிந்தும் அதை காட்டிக் கொள்ள முடியாமல் தவிப்பது, தன கணவன் சொன்ன அதே வார்த்தைகளை வாக்கியங்களை மகன் சொல்லும்போது நெகிழ்ந்து போவது, அடுத்த ஜென்மத்திலாவது நான் உங்கள் மகனாக பிறக்கணும் என்று உண்மை தெரியாமல் மகன் சொல்லும்போது இந்த ஜென்மத்திலேயே நீ எனக்கு மகன்தான் அப்படின்னு வச்சுக்கோயேன் என சமாதானம் சொல்வது, இறுதிக் காட்சியில் மகன் தன்னை மேடைக்கு அழைத்தவுடன் முதலில் தயங்கி பிறகு மேலே சென்று தன கையால் தங்கபதக்கத்தை மகனுக்கு அணிவித்து ஆனந்தக் கண்ணீர் விடும் அந்த நேரம் வரை வாணிஸ்ரீ கொடிக் கட்டி பறப்பார்..
அவரை முதிய தோற்றத்தில் காண்பிக்க தலை முடி முழுக்க நரை முடியாக் மாற்றியதை தவிர்த்திருக்கலாம். ஆனால் ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். ஒரே படத்தில் இளமையாகவும் முதுமையாகவும் தோன்ற வேண்டும் என்பதே ஒரு சவால். அதிலும் முதல் பகுதியில் காதலனாக வந்த நடிகரே பிற்பகுதியில் மகனாக வரும்போது சவால் கடினமாகிறது. ஆனால் அந்த நெருடல் சற்று கூட பார்வையாளனுக்கு தெரியாமல் திரையில் கொண்டு வருவது என்பது எளிதான காரியமல்ல. அதை திறம்பட செய்ததற்கே வாணிஸ்ரீக்கு மீண்டும் ஒரு மலர் கொத்து!
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 6 Thanks, 9 Likes
-
7th May 2016, 12:55 PM
#1064
சிவகாமியின் செல்வன் - ஒரு மீள் பார்வை – Part III
அடுத்து நமது பாட்டுடை தலைவன்! என்ன சொல்வது! எத்தனை தடவை சொன்னாலும் போதாது அவரின் தொழில் பக்தியைப் பற்றி! இந்த படம் heroine oriented subject. இதில் ஹீரோவிற்கு பெரிய வேலை ஒன்றுமில்லை. அதிலும் நடிகர் திலகம் தேவையில்லை எனும்போது அதிலும் தன தனி முத்திரையை பதிக்கிறாரே அதுதான் நடிகர் திலகம்!. ஒரு துடிப்பான நாயகன் அதைவிட துடிதுடிப்பான மகன். கதையின் போக்கிற்கு நாயகியின் வாழ்க்கையின் போக்கிற்கு உதவுபவர்கள். இதை பெரிய ஹீரோக்கள் செய்வதற்கு யோசிப்பார்கள். அதிலும் காதலன் மறைந்து மகன் சிவாஜியாக வரும் வரை 35 நிமிடத்திற்கு ஹீரோவே இல்லாமல் காட்சிகள் ஓடும் என்கின்ற நிலையில் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். ஆனால் தன் மீதும் தன் ரசிகர்கள் மீதும் அபார நம்பிக்கை வைத்திருந்த நடிகர் திலகம் அந்த ரோல்களை ஏற்று பளிச்சிட வைத்தார் என்றால் அதுதான் கிரேட்!
அசோக் ரோலிற்கும் ஆனந்த் ரோலிற்கும் எவ்வளவு வித்தியாசம் காட்டியிருக்கிறார்! அசோக் ரோலில் Headquarters- லிருந்து நண்பனோடு சும்மா ஒரு ஜாலி ட்ரிப் அடிப்பவர் காதல் வலையில் சிக்கி கொள்வதையும் அந்த காதல் கனிவதற்கு நிறைவேறுவதற்கு கையாளும் உத்திகளை எவ்வளவு இளமை துள்ளலோடு செய்திருக்கிறார் என்று இப்போது பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. முதல் வெளியீட்டில் பள்ளிக்கூட பருவத்தில் அதை புரிந்தும் புரியாமலும் ரசித்ததை விட இப்போது அனுபவித்து ரசிக்க முடிகிறது. அதே நேரத்தில் ஆனந்த் அறிமுகமாகும்போதே காதலித்துக் கொண்டிருப்பதாக கதை அமைந்திருப்பதால் காதல் காட்சிகளை வேறு விதமாக கையாண்டிருக்கிறார்.
முதன் முதல் வீட்டில் வைத்து வாணிஸ்ரீயை சந்திக்கும்போது அவர் உடல் மொழி அபாரம். செட்டில் வைத்து எடுக்கப்பட்ட ஒரு காட்சியை என்னவோ டார்ஜிலிங் குளிரில் வெடவெடவென்று உடல் நடுங்குவது போல் ஒரு உணர்வை பார்வையாளனுக்கு எவ்வளவு எளிதாக கடத்துகிறார்! அந்த நேரத்தில் அவரது குரல் மாடுலேஷனை கவனிக்க வேண்டும். மேடம் ஒரு கப் காஃப்பி கிடைக்குமா என்ற சாதாரண வாக்கியத்தை எப்படி உச்சரிக்கிறார்? அதே வசனத்தை (மேடத்திற்கு பதிலாக ஆன்ட்டி) மகனாக பேசும்போது என்ன ஒரு வித்தியாசம்! அது மட்டுமல்ல அதே போல் தான் கண்ட கனவை காதலியிடம் விவரிக்கும் இடத்தில ஒரே வசனத்தை ( 5000,10000, 300000 feet உயரத்திலே பறக்கிறேன் ---) இரண்டு விதமாக சொல்லும் அழகே தனி. வாணிஸ்ரீ கொடுத்த காஃப்பியை குடித்து விட்டு ஒரு உச் கொட்டுவார். பிறகு சொல்வார் "நானும் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரைக்கும் காஃபி சாப்டிருக்கேன்" இந்த வரியில் அவர் காஃபி என்று சொல்லுவதை கவனித்தால் எவ்வளவு ஸ்டைலிஷாக சொல்லுவார் என்பது புரியும்.
அந்த கனவை பற்றி வாணிஸ்ரீயிடம் சொல்லும்போது அவர் குரல் மாறிக் கொண்டே வரும். "என்ன செய்வேன் கண்ணை மூடிக்கிட்டேன் கடவுளை வேண்டிக்கிட்டேன். தொபுகட்டீர்னு குதிச்சிட்டேன். கண்ணை திறந்து பாக்குறேன் ஒரு புது வீடு தெரியுது. கதவை திறந்துக்கிட்டு ஒரு நிலா வெளியே வந்து என்னை பார்த்து சிரிக்கிது ஒரு பக்கெட் தண்ணியை கொண்டு வந்து என் மேல ஊத்துது" அந்த கடைசி வரியை அவர் சொல்லும்போது அந்த வாய்ஸ் மாடுலேஷனை கேட்கணுமே! இருவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். பிறகு வாணிஸ்ரீ நல்லவேளை உங்க கனவு முடிஞ்சிச்சு என்று சொல்ல முடியறதா இப்பதான் என் கனவே ஆரம்பிக்குது என்று நடிகர் திலகம் சொல்லும்போதுதான் முதன் முறையாக அந்த மனதை வருடும் தாலாட்டும் வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை மனதில் பரத்தும் அந்த ஹம்மிங் ஆரம்பிக்கும். அதன் தொடர்ச்சியாக கதவிற்கு பின்னால் நிற்கும் வாணிஸ்ரீயிடம் உங்கப்பாவிடம் சம்மதம் வாங்கிறேன் என பேசிக் கொண்டிருக்கும்போது வாணியின் அப்பா வந்துவிட எதிர்பாராமல் காதலியின் தந்தை வந்துவிட்டதால் என்ன பேசுவது எப்படி பேசுவது என்று சற்று தடுமாறி மறுநாள் தங்கள் ஆபிசர்ஸ் கிளப்பில் நடக்க போகும் பார்ட்டியைப் பற்றி குறிப்பிட்டு நான் ஜீப்போட வந்துறேன் நீங்க சிவகாமியோட வந்துருங்க என்ற வசனத்தை இரண்டாவது முறையும் அவர் ரீப்பிட் செய்யும் விதம் அந்த நேரத்தில் அவரது வசீகரமான கை அசைவுகள் முகத்தில் தெரியும் தர்மசங்கடத்தை மறைக்கும் அந்த சிரிப்பு! அனுபவித்து பார்க்க வேண்டிய காட்சி!
மகன் வேடத்தில் அவர் உடல்மொழி அப்படியே துள்ளலும் துடிப்புமாக இருக்கும். ஒரு இடத்தில நிற்காமல் துறுதுறுவென்று பேசிக் கொண்டு லதாவை லாலிபாப் லாலிபாப் என்று கிண்டல் செய்துக் கொண்டு வாணிஸ்ரீயை பர்ர்க்கும்பொதெல்லாம் மனதில் தோன்றும் அந்த இனம் புரியாத மரியாதையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் (“Those eyes”) தவிப்பது எல்லாமே தனி சுவை. உங்களுக்கு என்ன டிரஸ் பிடிக்கும் என்று லதா கேட்கும்போது நாலு முழ வேட்டி ஒரு கதர் சட்டை என்ற வசனத்திற்கு இப்போதும் கூட கைதட்டல் பறக்கிறது என்றால் அன்றைய நாளில் எப்படியிருந்திருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். இதை குறிப்பிடும்போது மற்றொன்றை பற்றியும் சொல்ல வேண்டும். காதலுக்கும் கடமைக்கும் தாய்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய இந்த படத்திற்கு சிவகாமியின் செல்வன் என்று பெயர் சூட்ட வேண்டுமென்றால் நடிகர் திலகம் தான் ஏற்றுக் கொண்ட தலைவனை எவ்வளவு உயர்ந்த நிலையில் வைத்திருந்தார் என்பது புரியும்.
அது மட்டுமல்ல படத்தின் கதையோடு ஓட்டிவருவது போல் அதே நேரம் தன் உள்ளக்கிடக்கையையும் ஏன் அன்றைய நாளில் பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்த
சிவகாமி பெற்றெடுத்த செல்வன் அல்லவோ
நாளை இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ
என்ற வரிகளை இடம் பெற வைத்தார் என்றால் அதிலும் குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சியில் மகனுக்கு தங்கப்பதக்கம் சூட்டி மகிழும் தாயை காட்டிவிட்டு பின்னணியில் இந்த வரிகள் ஒலிக்கவிடப்பட்டது என்று சொன்னால் நான் கடந்த பத்தியில் சொன்ன தலைவர் பக்தி புலப்படும்.
மூன்று டுயட் பாடல்கள். மூன்றிலும் ஸ்டைலில் தூள் கிளப்பியிருப்பார். இனியவளே பாடலில் பல்லவியை மெதுவாக ஆரம்பித்து விட்டு பாட்டு நார்மலாக ஆரம்பிக்கும்போது பக்கவாட்டில் ஒரு உடல் அசைவு கொடுப்பார். ஆரவாரம் ஆரம்பம். பின் இரண்டு சரணத்திலும் மெட்டு சற்று பாஸ்ட் பீட்டிற்கு மாறும்போது போடும் இரண்டு ஸ்டெப்ஸ். கைதட்டல் பறக்கும்.
அடுத்து மேள தாளம் பாடல். முதல் சரணத்தின் ஆரம்ப வரி “பூங்கொடி தன்னை மெல்ல தொட்டு” அதை இரண்டாம் முறை பாடும்போது இரண்டு கைகளையும் உடலின் இடைப் பகுதியிலிருந்து அப்படியே பக்கவாட்டில் நேர்கோட்டில் விரித்து ஒரு அடி பின்னாடி எடுத்து வைப்பார். இதை இரண்டு முறை தொடர்ச்சியாக செய்வார். தியேட்டரே அதிரும். ஆடிக்கு பின்னே பாடலில் அணிந்திருக்கும் கோட்டின் ஒரு பகுதியை மட்டும் பிடித்துக் கொண்டு பக்கவாட்டில் இசைக்கேற்றாற்போல் ஸ்டெப்ஸ் போடுவார். அதுவும் ஸ்டைலிஷ்.
Gallantry award விழாவிற்கு போவதற்காக காத்திருக்கும்போது தற்செயலாக புத்தகத்தை பிரித்துப் பார்க்க தன் பிறப்பு பற்றியும் தான் தாய் தந்தையார் யார் என்பதையும் தெரிந்துக் கொண்டவுடன் அவர் முகம் அதில் ஓடும் பலதரப்பட்ட உணர்வுகள். கண்கள் நிறைந்து, சிறு வயதில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை மனகண்ணில் நினைத்துப் பார்த்து தனது வளர்ப்பு தந்தை எழுதிய கடிதத்தின் மூலமாக இன்றைக்கு தான் ஆன்ட்டி என அழைக்கும் பெண்தான் தன் தாய் என்பதை உறுதிப்படுத்தும் கொள்ளும் அந்த வசனமில்லா நிமிடங்கள்! காட்சி சூழலுக்கு ஏற்றவாறு சிறுவனாக இருந்தபோது தன் தாய் பாடிய பாடல் பின்னணியில் மெதுவாக ஒலிப்பது! என்னதான் இந்தியில் வந்திருந்தாலும் அதை வேறு தளத்திற்கு கொண்டுப் போயிருக்கிறார் நடிகர் திலகம். இந்த காட்சியின் சிறப்பில் இயக்குனர் சிவிஆருக்கும் இசையரசி சுசீலாவிற்கும் பங்குண்டு. .
இவ்வளவும் சொல்லக் காரணம் ஒரு heroine oriented subject-ல் கூட ஒரு கைதேர்ந்த நடிகனால் எந்தளவிற்கு value addition செய்ய முடியும் என்பதற்கு நடிகர் திலகமும் சிவகாமியின் செல்வனும் prime examples.
பாடல்கள் மற்றும் பாடகர்கள் பற்றி சொல்லாமல் போனால் பாவம் வந்து சேரும். மெல்லிசை மன்னர் இசை பற்றி சொன்னோம். அவர் குரல் பற்றியும் சொல்ல வேண்டும். எதற்கும் ஒரு காலம் உண்டு பாடலில் அந்த சூழலை அதன் பின்னணியில் புதைந்திருக்கும் சோகத்தை அவரது குரலில் இழையோட விட்டிருப்பார். டிஎம்எஸ்ஸும் சுசீலாவும் இனிமையை இழைத்திருப்பார்கள். இனியவளே ஒரு ரகம் என்றால் சற்றே துரித தாள கதியில் (பாஸ்ட் பீட்) அமைந்த மேள தாளம் பாடலில் தூள் கிளப்பியிருப்பார்கள். அதிலும் சுசீலா முதல் சரணத்தில் "மாங்கனி கன்னம் வெள்ளிதட்டு தங்க பந்தாட்டம் துள்ளி வரவா" பாடும்போது கவனியுங்கள். இரண்டு முறை பாடுவார் (படத்தில்.ஆனால் இசைதட்டில் ஒரு முறைதான் இருக்கும்). வார்த்தைகளால் விவரிக்க முடியாத சுகானுபவமாக இருக்கும் எத்தனை அழகை எஸ்பிபி அவருக்கே உரித்தான பாணியில் மெருக்கேற்ற ஈஸ்வரியின் தனித்தன்மை ஆடிக்கு பின்னே பாடலில் எதிரொலிக்கும்.
பிலிம் ரோலில் படமாக்கப்பட்ட முன்கால படங்களின் பிரிண்டை பாதுகாத்து வைப்பது என்பது கடினமாகவும் இடத்தை அடைப்பதாகவும் ஒரு காலகட்டத்திற்கு மேல் அந்த பிரிண்டும் சரி நெகட்டிவும் சரி சிதிலமடைவதை தடுக்க முடியவில்லை என்ற நிலையில் டிஜிட்டல் முறையில் உருமாற்றி பாதுகாத்து வைக்கும் முறை பலன் அளிக்கவே அந்த முறையில் சில படங்கள் மாற்றப்பட்டன. ஆனால் அப்படி செய்தவர்கள் எல்லோருமே நடிகர் திலகத்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்களான கர்ணன் திருவிளையாடல், கட்டபொம்மன் பாசமலர் வசந்த மாளிகை ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் மாற்றினார்கள்.
பெரிதும் பேசப்பட்ட அந்த படங்களை இன்றைய சூழலுக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால் அதே நேரத்தில் feel good romantic musical films என்ற வகையை சார்ந்த சிவகாமியின் செல்வன் போன்ற படங்களும் டிஜிட்டல் பாஃர்மாட்டிற்கு மாற்றப்படுவது என்பது வரவேற்க்கதக்க விஷயம். இன்றைய தலைமுறைக்கு இன்று பெரிதும் பேசப்படும் feel good movies genre-ல் அன்றைய நாட்களிலே இது போன்ற படங்கள் வெளியாகியிருக்கிறது என்ற செய்தி சென்று சேர வேண்டும். அதை அவர்கள் காண்பதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமையும். அந்த வகையில் சிவகாமியின் செல்வன் டிஜிட்டலிலா என்ற கேள்வி எழுந்தபோதும் அதை புறந்தள்ளி இந்த படத்தை டிஜிட்டல் முறையில் உருமாற்றி வெளியிட்ட மதுரை சிவா மூவிஸாருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி!
இந்த மிக நீண்ட மீள் பார்வையை வாசித்த அனைவருக்கும் நன்றி!
அன்புடன்
-
Post Thanks / Like - 6 Thanks, 9 Likes
-
7th May 2016, 08:42 PM
#1065
Junior Member
Veteran Hubber
நேரம் தவறாமை, திறமை, நேர்மை, தமிழ் உச்சரிப்புப் பாவனைகளின் நேர்த்தி, நடிப்பாளுமை இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்னை மீது காட்டிய அன்பு
பாசம் பக்தி ...வாழ்ந்து காட்டிய உதாரண மாமனிதர் நடிகர்திலகத்தின் கண்ணியத் திரி சார்ந்த உலக அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!
From telugu version of Deiva Makan!
Last edited by sivajisenthil; 7th May 2016 at 08:50 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
7th May 2016, 08:44 PM
#1066
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
8th May 2016, 11:01 AM
#1067
Senior Member
Devoted Hubber
சிவகாமியின் செல்வன் 6 வது வாரம்
(தினத்தந்தி E பேப்பர் விளம்பரம் may 8.2016)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
8th May 2016, 02:47 PM
#1068
Junior Member
Newbie Hubber
முரளி ,
ரொம்ப நாள் கழித்து விஸ்வரூபம் எடுக்கிறீர்கள். ரொம்ப ரசித்து படித்தேன். ரொம்ப மூளைக்கு வேலை வைக்காமல் நல்ல எழுத்து திறனுடன் விளங்குவதால் எஸ்.வாசுதேவன்,ரவிகிரண் போன்றவர்களையும் ரசிக்க வைக்கும் எழுத்து. வழக்கமான பின்னணி விவரணங்கள் குறைவாய்,நடித்தவர்களின் திறன் பற்றிய விமரிசனம்.
இந்த படத்திற்கு,மிகவும் எதிரியானவை பத்திரிகைகள். குமுதம் ஒன்று மட்டும் விதிவிலக்கு. நூறு ராஜேஷ் சேர்ந்தாலும் சிவாஜி புலமைக்கு ஈடாகுமா என்று உண்மை பேசியது .
எனக்கோ சிவாஜி-வாணிஸ்ரீ இணை வெல்லம் போல.வசந்த மாளிகைக்கு பிறகு சி.வீ.ஆர் இசையில் இந்த ஜோடி இணைவு,எத்தனை அழகு பற்றி பத்திரிகை விவரணைகள்,இனியவளே காட்சிகள் பொம்மையில் என்று துடித்து கொண்டிருந்தேன். வழக்கம் போல படம் எங்களூரில் ரிலீஸ் கிடையாது. சிதம்பரத்தில் ,பக்கிரி பார்த்து விட்டு, இந்த ஜோடி விளையாட்டை சொல்லி சொல்லி வெறுப்பேற்றினான்.நான் பிப்ரவரி 1974 வரை காத்திருக்க வேண்டி வந்தது.என் அத்தை பையன் கல்யாணம் சுவாமி மலையில். ஒரு நாள் முன்னதாக சென்று குடந்தை நூர்மஹாலில் ஆஜர்.(பின்னர் செல்வமானது) என்ன அழகு இந்த ஜோடி. சிவாஜி-வாணிஸ்ரீ உடை,தோற்றம் எல்லாமே வசந்த மாளிகையை விட கூடுதல் அழகு. நெருக்கம் அதிகம்.சி.வீ.ஆர் படம் என்பதால் உடை,ஸ்டைல் (ஏ.வீ.எம்.ராஜன்,ஸ்ரீகாந்த்,மனோகர் அனைவரும் செம ஸ்டைல் )எல்லாவற்றிலும் மெருகு. சிவாஜி இரண்டு ரோல்களிலும் கலக்கல். வாணிஸ்ரீ-லதா இருவருடனும் விளையாடி தள்ளுவார்.(மடி கணினி)
தொடர்ந்து மூன்று முறை அடுத்ததடுத்த நாட்கள் விஜயம்.விஸ்வநாதன் இசை, மூலத்தை ஒப்பிடாதிருந்தால், மோசமில்லை ரகம்.ஆனால் வேலுமணி,பந்துலு,ஸ்ரீதர்,ஏ.வீ.எம் படங்களுக்கு காட்டும் அக்கறையை அவர் ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபைக்கு காட்டுவார் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?
நன்றி முரளி, என் பிரிய நடிகைக்கு ஒரு பகுதி ஒதுக்கியதற்கு. (வாணிஸ்ரீ யின் அத்தனை பகுதிகளும் என் பிரியமே),சிவாஜியின் சிறப்பை அழகாக எழுதியதற்கு.
இந்த படம் நான் ஜூலை யில் வந்தால் காண முடியுமா?
Last edited by Gopal.s; 8th May 2016 at 03:15 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th May 2016, 06:48 PM
#1069
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th May 2016, 06:54 PM
#1070
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks