இளவரசியக் காப்பாத்தினானா இல்லியா பாட்டி

நீ தூங்கு நாளைக்குச் சொல்றேன்

ம்ஹூம் சொல்லு ராட்சஸன் என்ன ஆனான்..

அதுவா ஒருவேலை எடுத்து
இளவரசன் எறிஞ்சானா
ராட்சஸன் மேலோகம்போய்ட்டான்.
இளவரிசியும் இளவரசனும்..”

வெய்ட் பாட்டி நான் சொல்றேன்
லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர் சரியா..

பாட்டீ பாட்டீஈ..

பாட்டி தூங்கியிருந்தார்..!


*


சந்தோஷமே வ்ருக வருக..

இடர் களையும் பதிகம்

ஏழாம் பாடல்

*

”குட் ஈவ்னிங்க் லேடீஸ் அண்ட் ஜென் ட்டில்மென்!
உங்களை இப்போது புராண காலத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறேன்..

அதோ அங்கே ஒற்றுமையாய் தவம் புரிந்தவண்ணம்மூன்று பேர் இருக்கிறார்களே யார் அவர்கள்.

மூவரும் சகோதரர்கள். வித்துவன்மாலி , தாரகாட்சன், கமலாட்சன்.. இவர்கள் தாருகன் என்ற அரக்கனின் பிள்ளைகள்..
எதற்காகத் தவம்.. யாரிடம் தவம்

அவர்கள் மனதில் ஒரு எண்ணம்..ஒவ்வொருவருக்கும் ஒருகோட்டை வேண்டும்.. அவை நினைத்த மாத்திரத்தில் எங்கும் பறக்கும் படி இருக்க வேண்டும்..அதே சமயத்தில்மூவரும் ஒன்றாய் இருக்கும் போது ஒரே ஒரு அம்பினால் மட்டுமே உயிர் பிரிய வேண்டும்..இதுகாரணம்

இதைக் கொடுப்பவர் பிரம்ம தேவன்.. அவரிடம் தான் தவம்..

பிரம்மனும் மகிழ்ந்து வரம் கொடுத்துவிட ஆரம்பித்தது வினை..

மூவர் மனதிலும் மூன்று அழுக்குகள் குடியேறின.. ஆணவம், மாயை, கன்மம் (கர்மம்)..எனில் அவர்களது எனிமிஸ் தேவர்கள்....எனில் தேவர்களைப் படுத்த ஆரம்பித்தார்கள்.
அசுரர்களாய் இருப்பினும் சிறந்த சிவபக்தர்களாகவும் அவர்கள் இருந்ததால் தேவர்கள் திருமாலையும் பிரம்மனையும் அழைத்து சிவனை வேண்டினர்.
அவர்களை அழிக்கவும் இயலாது.. தனது பக்தர்கள்..இப்படி தேவர்களைத்துன்புறுத்தவும் விட இயலாது..

சிந்தித்தார் சிவன்..

“விஸ்வ கர்மா”

“உள்ளேன் ஐயா”

“ நீ சென்று ஒரு வெகு அழகான ரதம் செய்”

“இதோ” தேவதச்சனான விஸ்வகர்மா சிறந்த ஒரு ரதம் தயாரித்துக் கொணர, வில்லாக மேருமலையையும் வாசுகிப்பாம்பை நாணாகவும் கொண்டு , நான்கு வேதங்களைக் குதிரைகளாக்கி பிரம்மாவைச் சாரதியாக்கி முப்புரம் நோக்கிப் புறப்பட்டார் ஈசன்.

மூன்று கோட்டைகளும் ஒன்றாய்ப் பறந்து வந்துகொண்டிருந்தன..உள்ளே மூன்று சகோதரர்கள் சற்றே இறுமாப்புடன் பேசிக்கொண்டிருக்க பார்த்தார் சிவன்..

அம்பு எய்யவில்லை மாறாக அண்ட சராசரமும் நடுங்கும் வண்ணம் ஒரே ஒரு புன்னகை புரிந்தார்..

பொன்னகையா பூநகையா ம்ஹூம் இல்லை
..புலர்ந்தநற் காலைவண்ணம் பூண்ட நகைதான்
விண்ணகையா பூமிதன்னில் உள்ள மாக்கள்
..வெற்றியென நகைப்பதுவா என்ற வண்ணம்
எண்ணத்தில் சினமும்தான் ஏற ஏற
..எரிதழலாய் மாறியதே நகையும் அங்கே
திண்ணமென புறப்பட்ட தணலும் சென்றே
…தீர்க்கமாய் எரித்ததுவே முப்பு ரத்தை..

அவரது புன்னகையிலிருந்து புறப்பட்ட தழலானது அந்த அசுரர்களின் கோட்டைகளான முப்புரத்தை – ஆணவம் மாயை கர்மம் என்ற மூவகை அழுக்குகளைத் தகர்த்தெரிந்து எரித்து விட அசுர ப்ரதர்ஸ் தனி ஆட்களாய் வெலவெலத்து நிற்க சிவனார் அவர்களில் இருவரை வாயில் காப்போர்களாகவும் ஒருவரை தனக்கு இசைக்கருவி இசைக்கும் வண்ணமும் மாற்றிவிட்டார்..

இது முப்புரம் எரித்த வரலாறு எனலாம்

( என்னடா பெரிஸ்ஸா லேடீஸ் அண்ட் ஜெ.மேன்லாம் ஆரம்பிச்ச..முழுக்க த் தமிழ்ல சீரியஸா வேற சொல்லிட்ட..

என்னபண்றது மன்ச்சு..திடீர்னு டோஸ்ட் மாஸ்டர்ஸ்ல பேசற மாதிரி பேச ஆசை வந்துச்சு!
அதுசரி.. உனக்குத் தெரிஞ்சதெல்லாம் ப்ரெட் டோஸ்ட் தானே..

ம் .. இதுல முப்புரம் எரித்த விஷயம் வருது..தேடினா இந்தக் கதை கிடைச்சது..வா.. போய்ப் பாட்டைப் பார்க்கலாம்..

*

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

*
திரு நெடுங்களம் மேவிய இறைவனே.. தென்னாடுடைய சிவனே..

உனது உடலின் ஒரு கூற்றினை அதாவது ஒரு பாதியை உமையம்மைக்கு ஈந்து உடலின் ஒரு கூறாக அவரை ஆக்கிக் கொண்டாய்..

முப்புரத்தை எரிப்பதற்காக விஷ்ணு, அக்னி, வாயு ஆகிய மூவரின் சக்திகளையும் ஒன்றாகத் திரட்டி ஒரு வலிமைமிக்க கணையாக – அம்பாக மாற்றி அதன் மூலம் பல்கிப் பெருகிய நெருப்பினால் தேவர்களிடமிருந்து மாறுபட்ட கொள்கையுடைய அசுரர்களின் ஊரான திரிபுரத்தை எரித்தாய், மன்னவனே.

ரிஷபத்தைக் கொடியாகக் கொண்டவன் நீ..
நீ அணிந்த திரு நீற்றை மணம்மிகுந்த சந்தனமாய் எண்ணி தங்களது நெற்றியில் அணியும் பக்தர்களின் இடர்களை களைவாயாக..”

*
குட்டி விளக்கம் :
** ஆணவம் – இறைவனைச் சிந்தனையுள் வைக்காமல் இருப்பது.. தன்னை ஆள்பவன் ஒருவன் என்பதை மறந்து தான் என்பது தலைக்குள் ஏறும்போது வருவது..
கன்மம் : ஆன்மாக்கள் மனம் வாக்கு காயம் போன்றவற்றால் செய்த செய்கின்ற புண்ணிய பாவங்கள்
இக லோகத்தில் இப்படி ஆன்மாக்கள் ஆணவம் கன்மங்களைச் செய்து வருவதே மாயை எனலாம்.. அப்படி மாயையால் உழலவைத்து பின்பு தான் ஈசன் சிவானந்தப் பெரும்பேற்றை ஆன்மாக்களுக்குத் தருகிறான்..
(கரெக்டா மனசாட்சி..

தெரியலை.. ஆனா கொஞ்சூண்டு புரியறாமாதிரி இருக்கு..வா..அடுத்த பாட்டுக்குப் போலாம்..)