திமுகவின் பிரசார பாடகரும், திரைப்படப் பாடகருமான நாகூர் ஈ.எம். ஹனிஃபா (97) சென்னையில் புதன்கிழமை காலமானார்.


கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது இரவு 8 மணியளவில் திடீரென அவர் உயிர் பிரிந்தது.


கருணாநிதியின் சிறு வயது நண்பர்களில் ஒருவர். இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் மூலம் பெரிதும் புகழ் பெற்றவர். சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவராகவும் இருந்தவர்.


திரைப்படத்திலும் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார். "இறைவனிடம் கையேந்துங்கள்', "உன் மதமா, என் மதமா' போன்ற அவரின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. அவருக்கு 2 மகன்கள் 4 மகள்கள் உள்ளனர்.


திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நாகூரில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.


நன்றி: தினமணி