ஊரெங்கும் திருவிழா
வண்ண வண்ண ஒளிவிழா
கண்ணைக் கூசும் பட்டாசு
காதைக் கிளிக்கும் டப்பாசு
தெரு நிறைக்கும் ஒரு விழா
தீபாவளியென்றும் இனிய விழா
கொண்டாடிக் களித்துக் களைத்து
ஊர் உறங்கச் சென்ற பின்னே
விழித்தெழுந்தது சென்னை வானம்
இருள் பிரியா அதிகாலை வேளை
இன்னுமொரு தீபாவளி ஜனனம்
அந்தரத்தில் சுற்றின சக்கரங்கள்
ஒளி ஊற்றாய் சிதறின பூச்சட்டிகள்
தொடர்ந்தன கடகட லட்சுமி வெடிகள்
இடைவிடா தவுசண்ட்வாலாக்கள்
அரங்கேறியதோர் ஆனந்த தாண்டவம்
இயற்கையின் பரவச கூத்தாட்டம்
தாரை தாரையாய் மழையருவி
பறையாய் தரையில் கொட்டிட
நிற்காத நீர்க்கோடாய் நீண்டிட
கண்ணை மூடி லயிக்கவோர் கச்சேரி
என்றும் எனக்கது ஆகும் நீலாம்பரி
சுகமிதுவே சுபமிதுவே பூலோகத்திலே
குளிரட்டும் கொதித்த நெஞ்சங்களே
மலரட்டுமெங்கும் மனிதநேயங்களே