Originally Posted by
makkal thilagam mgr
[ 31-10-1975 அன்று வெளியான மக்கள் திலகத்தின் பல்லாண்டு வாழ்க காவியத்தை, முதல் நாளே, பரங்கிமலை ஜோதி திரையரங்கில், எங்கள் மன்ற அன்பர்களுடன் கண்டு களித்தேன்.
ஜோதி திரையரங்கம் திறந்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவே என்பது என் நினைவு.
சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற தலைவராக அப்போது விளங்கிய எங்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, எங்கள் திருவொற்றியூர் பொன்மனசெம்மல் அன்பர் குழுவினை சார்ந்த தோழர்கள் அனைவரும் ஜோதி திரையரங்கை, ஆலந்தூர் எம். ஜி. ஆர். மன்றத்தினருடனும், அப்போதைய கழக அடலேறுகளுடனும் இணைந்து திரையரங்க வளாகத்தினை நன்கு அலங்கரித்தோம்.
புதிய திரையரங்கில் மக்கள் திலகத்தின் பல்லாண்டு வாழ்க காவியத்தை காணப்போகும் உற்சாகத்தில் எங்கள் மன்ற நண்பர்கள் அனைவரும் திளைத்தோம்.
எங்கள் மன்றத்தினர் சார்பில், நாங்கள் எங்கள் பங்கிற்கு, சென்னை பூக்கடையில் வாங்கிய பெரிய கூடை நிறைய உதிரிப்பூக்களை எடுத்துக்கொண்டு திரையரங்கில் பெயர் காட்டத் துவங்கியது முதல் புரட்சித்தலைவரின் இன்முகத்தை காண்பிக்கும் வரையில், திரை நோக்கி வீசிக்கொண்டே இருந்தோம்.
புரட்சித் தலைவரின், வழக்கமான இயல்பான நடிப்பில் அருமையனா கதையமைப்பில் உருவான இப்படம் வி. சாந்தாராம் அவர்களின் தோ ஆங்கோன் பாரா ஹாத் இந்திப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது அறிந்த செய்தியே ! புரட்சித் தலைவர் நடித்தால் மட்டுமே, இப்படத்தின் தமிழ் உரிமையை தர முடியும் என்று வி. சாந்தாராம் அவர்கள் தெரிவித்ததாக ஒரு பரபரப்பு செய்தி அப்போது வெளியாயின. திறமையை எங்கிருந்தாலும் அதனை போற்றக்கூடிய நம் பொன்மனச்செம்மல், தி. மு. க. வில் இருந்தபோதே, 1972ம் ஆண்டு கால கட்டத்தில் வி. சாந்தாராம் அவர்களை, விழா ஒன்றின் மேடையில் அவரது காலில் விழுந்து வணங்கினார்.
அவரது காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், உலக சினிமா வரலாற்றில் நம் இந்திய படங்களுக்கு தனி ரியாதையையும், விருதுகள் பல பெற்று தந்தவருமான சாந்தாராம் அவர்களின் திறமையை மதித்தார் நம் மக்கள் திலகம் அவர்கள். பின்னாளில் அவரது திரைப்படத்தை தழுவி தமிழில் எடுக்கும் ஒரு திரைப்படத்தில் தான் நடிப்போம் என்று கனவில் கூட கருதியிருக்க மாட்டார் நம் புரட்சித்தலைவர்.
புரட்சித்தலைவரின் கண்களில் தென்படும் அந்த ஒளியின் சக்தியில் வில்லன்கள் மட்டுமா வீழ்ந்தனர். ரசிகர்களாகிய நாமும் அல்லவோ சேர்ந்து வீழ்ந்து விட்டோம். வேறு எந்த நடிகர்களின் கண்களுக்கு இந்த ஈர்ப்பு சக்தி கிடையாது என்பதை உறுதியாக சொல்லும் அளவுக்கு நம் பெருமை மிகுந்த வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்களின் கண்களுக்கு அந்த சாந்த, கருணை ஒளி பொருந்தியிருக்கிறது.
பேரறிஞர் அண்ணா அவர்களை, அதிக அளவில் பெருமைப்படுத்தி வெளிவந்த இந்த புதுமைக் காவியத்தில் ஆறு வில்லன்கள் வித்தியாசமான பாணியில் நடித்திருந்தனர். அந்த கொடூர வில்லன்களின் அறிமுக காட்சி பயங்கரமாக இருந்தாலும், நமது பொன்மனச்செம்மல் தனக்கே உரிய மனிதாபமான உணர்வில் அவர்களை திருத்தும் நோக்கத்தில், சிறையிலிருந்து விடுவித்து தனியாக அழைத்து செல்லும் தைரியத்தை, வெகு அழகாக வெளிப்படுத்தி தனக்கே உரிய தனி கம்பீரத்தை நிலைநாட்டும் காட்சி மிகவும் ரசிக்கத்தக்கதாய் அமைந்துள்ளது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் ஒன்றாம் தம்பி, இரண்டாம் தம்பி, மூன்றாம் தம்பி என்று வரிசைப்படுத்திக் கொண்டு, வில்லன்கள் தங்களை முன்னிறுத்தி கொள்ளும் காட்சியில், தன்னடக்கத்துடன் கடைசி தம்பி என்று நம் புரட்சித்தலைவர் கூறும் காட்சி உண்மையிலேயே ஒரு நெகிழ்ச்சி ஏற்படுத்தும் காட்சியாக தென்படும்.
என்றைக்குமே என் லட்சியம் தோற்றது கிடையாது என்று சொல்லும்பொழுதும், ஜீப்பின் வேகத்துக்கு ஈடு கொடுத்து, அந்த 57 வயதிலும் நம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் வேகமாக ஓடி வரும் காட்சிக்கும், விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளுக்கும், எழுந்த ரசிகர்களின் கர ஒலி அடங்க வெகு நேரமாயிற்று. தேசத்தின் வரைபடத்தை வைத்து விளக்கமளிக்கும் காட்சி மிகவும் ரசிக்கத்தக்கது.
நாட்டுப்பற்று, மனிதாபிமானம், அறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட அளவற்ற பற்று, கொண்ட கொள்கை, இலட்சியம் இவை அனைத்திலும், பேரறிஞர் அண்ணா அவகர்களின் அண்ணாவின் மீது ஆணை, அண்ணாவின் மீது ஆணை என்று கூறிக்கொண்டே ஆறு வில்லன்களும் அடி வாங்கிகொண்டு திரும்பும் காட்சியும், அந்த ஆறு வில்லன்களின் ரேகைகள் அடங்கிய தாள்களை, நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் கிழித்து போடும் காட்சியிலும், மனோகர் தன் தாயையும், தன பிள்ளைகளை அடித்து விரட்டும் காட்சியிலும், ரசிகர்கள உணர்ச்சியின் எல்லைக்கு சென்று கண்கள் கலங்கி விடுவர்.
இந்த காவியத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் இனிய பாடல்களே. குறிப்பாக ஒன்றே குலம் என்று பாடுவோம், ஒருவனே தேவன் என்று போற்றுவோம் என்ற பாடலை,, மக்கள் திலகம் படப்பாடல்களை பாடும் இசைக்குழுவினர், இறைவணக்கம் பாடலாக இன்றும் முதல் பாடலாக பாடுவர்.
சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் 1௦௦ நாட்களை வெற்றிகரமாக கடந்து, இதர நகரங்கள் பலவற்றில் 5௦ நாட்களை கடந்த, 1975ம் ஆண்டின் வெற்றிச்சித்திரம் பல்லாண்டு வாழ்க
மக்கள் திலகத்தின் காவியங்களில் இடம் பெற்ற காட்சிகள் ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுத ஆரம்பித்தால் ஒவ்வொரு காவியத்துக்கும் ஒரு திரியின் ஒரு பாகம் அளவுக்கு எழுதிக்கொண்டே இருக்கலாம்.
[/b]
Bookmarks