தவறான உறவுகளை சித்தரிக்கும் சீரியல்களை குறைக்க வேண்டும்: ஜெயராம் மோகன்


சீரியல்களில் குடும்பங்களில் நடக்கும் நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை தவிர்த்து விடுவது சீரியல்களின் தரத்தை அதிகப்படுத்தும் என்கிறார் நடிகர் ஜெயராம் மோகன்.


அவர் மேலும் கூறுகையில், சீரியல் என்பது மக்களின் வாழ்வோடு கலந்து விட்டது. சீரியல்களை பார்க்கும் நேயர்கள், அதில் வரும் பிரச்சினைகளை தங்களுக்கு ஏற்படுவது போலவே உணருகிறார்கள். இப்படி நேயர்களின் மனநிலை இருப்பதினால் தான் குடும்ப சூழலைக்கொண்ட சீரியல்கள் அதிகமாக வருகிறது .


குடும்ப பிரச்சினைகளில் தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை குறைத்து விட்டு, நல்ல ஆரோக்யமான விசயங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பொதுஅறிவு, விழிப்புணர்வு சம்பந்தமான விசயங்களை நிறையவே சேர்க்கலாம். காமெடி காட்சிகள் சீரியல்களில் இடம்பெறுவதே இல்லை. அதனால் ஒவ்வொரு சீரியல்களிலுமே காமெடியை அதிகப்படுத்தலாம். குழந்தைகள் சம்பந்தப்பட்ட நல்ல விசயங்களை சொல்லலாம்.


இப்படி சொல்லும் நடிகர் ஜெயராம் மோகன், இதுவரை நான் நடித்த பல சீரியல்களில் நெகடீவ் ரோல்களில் அதிகமாக நடித்திருக்கிறேன். அதில் வாணி ராணியில் நடித்த வில்லன் வேடம் என்னை பேச வைத்தது. அதைப்பார்த்து தாமரை சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதில் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டு விதமான வேடங்களில் நடித்தேன். இப்போது அழகு உள்பட இரண்டு சீரியல்களில் நடிக்கிறேன். இதில் எனது இமேஜ் மாறக்கூடிய அளவுக்கு நல்ல குணசித்ர வேடங்கள். அதனால் இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகும் போது எனக்கான வரவேற்பு இன்னும் நேயர்கள் மத்தியில் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்.


சமீபகாலமாக சின்னத்திரைகளில் டப்பிங் சீரியல்களில் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய விசயம். இப்படி சேனல்கள் மாறியிருப்பதால் தமிழ் சீரியல்களையே நம்பியிருக்கும் என்னைப்போன்ற நடிகர் நடிகைகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அதனால் இந்த நிலை தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் ஜெயராம் மோகன்.

நன்றி: தினமலர்