சில வருடங்களுக்கு முன் சிரிப்புப் புயலாக தமிழகத்தைத் தாக்கியவர் திண்டுக்கல் ஐ. லியோனி. பட்டிமன்றத்தைப் பாட்டு மன்றமாக, சிரிப்பு மன்றமாக மாற்றியவர் இவர். `கங்கா- கௌரி' என்ற படத்திலும் முத்திரை பதித்த லியோனியின் `முத்து... பத்து' குத்து...

`லியோனி' என்றால் என்ன அர்த்தம்?

இத்தாலி மொழியில் சிங்கம் என்று அர்த்தம்! இதை நான் வச்சுக்கலை... பெற்றோர் வைத்த பெயர்தான்!

பட்டிமன்றங்கள் வெறும் சிரிப்பு மன்றங்கள்தானே?

ஒரு காலத்தில் சீரியசாக இருந்தன. இந்த அவசர யுகத்தில் நாங்களும் சுருக்கமா... நகைச்சுவையா... பேசி சொல்ல வந்த கருத்தைப் பதியவைத்தோம். காலத்தின் தேவையாகத்தான் பட்டிமன்றம் சிரிப்பு மன்றமாக மாறிவிட்டது.

நகைச்சுவையாகப் பேசியதால் விளைந்த சங்கடம்?

இதுவரை அப்படி ஏதும் நடக்கவில்லை! நான் நகைச்சுவையாகப் பேசினால் சிரிப்பாங்களே தவிர யாரும் சங்கடப்பட்டதும் இல்லை... என்னை சங்கடப்படுத்தியதும் இல்லை!

சினிமாவை கிண்டலாக விமர்சித்த நீங்களே சினிமாவில் நடித்தது எப்படி?

சினிமாவை மட்டுமல்ல... எல்லா துறைகளைப் பற்றியும் கிண்டலடிப்போம். அதுக்காக அந்த துறையில் நுழையக்கூடாது என்று

சட்டமில்லையே!ஆசிரியரான உங்களுக்கு பள்ளி மாணவர்கள் வைத்த பட்டப்பெயர்?

`யுரேகா' என்று கூவிய கிரேக்க அறிஞரான ஆர்க்கிமிடிஸ் பெயரை எனக்கு பட்டப்பெயராக வைத்திருப்பதாகச் செய்தி!

உங்களை அசத்திய ரசிகர்? அதிர்ச்சி அடைய வைத்த ரசிகர்?

பிரான்சில் ஒரு நிகழ்ச்சி... பேசியவுடன் ஒரு பிரான்ஸ்காரர் ஓடிவந்து என்னை கட்டிப்பிடிச்சு இரண்டரைபவுன் மோதிரத்தை எனது விரலில் மாட்டினார்- இது அசத்தல்.

மலேசியாவில் ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் போதே... ஒரு பெண் திடீரென்று ஓடி வந்து `கிஸ்' பண்ணிடுச்சு- இது அதிர்ச்சி.

கோபமாக இருக்கும் மனைவியை நகைச்சுவையாகப் பேசி திசை திருப்பியதுண்டா?

அதுதானே நமக்கு பெரிய ஆயுதம்! ஒருதடவை சனி, ஞாயிறு நாட்களில் வீட்டில்தான் இருக்கணும்னு மனைவி ஆர்டர் போட்டுட்டாங்க! அப்போ நமது முதல்வர் நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டார்கள். எனது மனைவியிடம் ``என்ன, இதையும் வேண்டாம்னு சொல்லிடவா?'' என்று கிண்டலாக கேட்டேன். உடனே அவுங்க ஆர்டரை கேன்சல் பண்ணிட்டாங்க!

உங்களின் நிறம் குறித்து தாழ்வு மனப்பான்மை உண்டா?

நான் கறுப்பாவா...இருக்கேன்! மாநிறமாத்தானே இருக்கேன்! சிகப்பா இருக்கிறவங்களைப் பார்த்து நான் இரக்கப்படுவேன்!

அதிகம் அறிமுகமில்லாதவர் திடீரெனக் கடன் கேட்டால்...?

ரொம்ப யோசிப்பேன். ஏன்னா... நிறைய தடவை கொடுத்து ஏமாந்துட்டேன்!

அன்றாட வாழ்வில் பேச்சுத்திறமை கை கொடுக்கிறதா?

கண்டிப்பா... `வாயுள்ள பிள்ளை பிழைக்கும்'னு கிராமத்தில் சொல்வார்கள். நான் போகும் நிகழ்ச்சிகளில் கோபமாக அல்லது `தண்ணி'யைப் போட்டுட்டு பிரச்சினை பண்ணும் சிலரை நானும் தண்ணியைப் போட்ட மாதிரி பேசி வழிக்குக் கொண்டு வந்துடுவேன்.