அரும்பெரும் அண்டை நாடாம் பாகிஸ்
தானம் அதற்கு ஒரு தலைவன்
அரசது வமைக்கு ஒரு முறையாம்
ஜன நாயக மதற்கே செறு பகைவன்

மறுமொழி கேளா ஜெனரல் ஜியா
என்றால் அண்டம் நடுங்கிடுமே
ஒருசிறு நாவிதன் அவனைக்கூட
மிரட்டிய கதையிது கேட்பீரே

துருதுருப்பாக செயல்படும் அரசன்
காலில் என்றும் சக்கரமே
மாதம் அரைமணிநேரம் மட்டும்
ஓரிடம் அவனும் அமர்வானே

கருகரு முடியை திருத்திட வேண்டி
நாவிதனிடத்தே தலைநீட்டி
மெருகது தன்னிடை கூடிய மட்டும்
ஏத்திட அவனும் முனைந்தானே

ஒருமுறை பாதியில் நாவித மடையன்
'ஜெனரல் சாஹிப்' எனவிளித்து
'வருமோ இப்பொது தேர்தல்கள்' என்று
வினைவின வதனை உதிர்த்தானே

சிறுபிழை பொறுக்கா ஜெனரல் ஜியா
உஷ்ணம் மிகுந்த மூச்சிறைத்து
"அறிவிலி மூடா யாரிடம் என்ன
பேசுவதென்பது அறியாயா ?

ஒருபிழை அருள்வேன் இது போல் இனிமேல்
தரமறியாமல் பேசாதே
மருமுறை நடந்தால் சுல்ஃபிகர் அலியின்
நிலை தான் உனக்கு மறவாதே

பொறிபறந்திடவே கிளம்பிச்சென்ற
ஜெனரல்வாளிடை பிழைத்தவர்கள்
அரிதென வறிந்த நாவிதன் அன்று
கீழுடை மாற்றிட நேர்ந்ததுவே

வரிகள், போர்கள், மானுடப்பதர்கள்
என்றே ஜெனரல் பொன்நேரம்
சரியாய் போவது ஆயினும் அழகை
பேணுவதென்பதை மறவாரே

மறுமுறை நாவிதன் பயத்துடன் மௌனச்
சபதம் எதையோ காப்பதுபோல
விருவிருவெனவே கத்தரிகோலுடன்
வேலையில் மட்டும் ஆழ்ந்தானே

சரிவர முன்முடி திருத்திய பிறகவன்
பின்தலை வேலையை தொடங்கையிலே
'வருமோ இப்பொது தேர்தல்கள்' என்றே
மீண்டும் ஒருமுறை கேட்டானே

எரிகனல் விழிகள் நுணலனை எறிக்க
ஜெனரல் ஜியா எழுந்தங்கு
மரிப்பது இவன் விதி இதுவே எந்தன்
ஆணை என்றும் சொன்னாரே

உருமியபடியே சீருடைக்காவலர்
பிழைஞன் தன்னை நெருங்கிடவே
எரிமிலை ஜெனரல் தாள்சரணெனவே
நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தானே

சிறியவன் யான்செய் பெரும்பிழையதற்கு
காரணமுண்டு அதைக்கேட்டு
பொறையுடை அரசர் நீவிர் என்னை
மன்னித்தருள வேண்டுகிறேன்

சுருள்முடி தங்கள் பிடரியிலுண்டு
வெட்டுவதற்கே பெருஞ்சிரமம்
வருமோ தேர்தல் என நான் கேட்டால்
மயிர்கள் யாவும் கூச்செரிந்து

விரிந்திட கத்திரிகோலினில் வெட்டுதல்
எளிதாய் போவதைக் கண்டேனே.
திரிபர உரைத்தேன் நடந்தது இதுவே
நிரந்தரத் தலைவா அருள்வாயே.

(நன்றி: குஷ்வந்த் சிங்)

Cross Posted here