எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்..

*


சந்தோஷமே வ்ருக வருக..

இடர் களையும் பதிகம்

இரண்டாம் பாடல்..


****

இரண்டாம் பாடல்..

தேவர் எல்லாம் திரள்திர ளாக
ஆவல் கொண்டே பிரம்மனை அணுகி
அபயம் அபயம் அசுரர் எம்மை
சுபமாய் முடிக்க கருத்துக் கொண்டார்

ஆதலின் பிரம்ம சொல்வீர் சேதி
பாதக அசுரரை வெல்வது எப்படி
சாதக மாகவே சிரித்த பிரம்மனும்
நாதன் விஷ்ணுவின் பாற்கடல் கடைந்தே

ஆங்குள அமுதை அமரரும் உண்டால்
ஓங்கியே அசுரரை விரட்டிட லாமென
ஏங்கிய தேவரும் திருமால் தொழுதே
பாங்காய் மந்தரை மத்தாய் மாற

வாசுகிப் பாம்பை கயிறென மாற்றி
மறுபுறம் அசுரர் இப்புறம் இவராய்
குறுகுறு வென்றே கடையத் துவங்க
விரைந்தே அமுதும் விஷமும் எழவே

திணறினர் தேவர் தேவையோ அமுதம்
வினவினர் விஷத்தை என்னதான் செய்ய
வணங்கிக் கேட்க வாமனன் சொன்னான்
அனங்கனை எரித்த அரனைக் கேட்பீர்

அரனோ யாரவன் அடியவர் பணிந்தால்
பரந்த உலகினை படக்கெனக் கொடுப்பவன்
சரசர வென்றே சாரைபோல் வந்து
கரகர வென்றே கட்டியாய் விஷத்தை

கடக்கென விழுங்கக் கணவனின் கழுத்தை
படக்கெனப் பார்வதி பற்றி நிறுத்தி
சடசட வெனவிஷம் போகாமல் அங்கே
படபட வென்றே பார்வையை நிறுத்த

விஷமும் நிற்க வீரிய அமுதம்
கரங்கொளா வண்ணம் தேவரும் குடிக்க
வரமாய்க் கிடைத்த வாழ்க்கையை வாழ
அரனோ நீல கண்டனாய் ஆக

காத்தது அமுதா கரங்களை நீட்டி
பூத்த விஷத்தைக் குடித்தவன் அருளா
நீர்க்க வைத்த உமையவள் அருளா
சேர்ந்தது அரியின் அரனின் அருளே..

//அது சரி..இது ஒன்னோட சின்னவயசுல முழியும் முழியுமா லட்சணமா இருப்பான்னு அடிக்கடி சொல்வியே விமலா டீச்சர்..அவ பாட்டு தானே..

அடப்பாவி..அந்தம்மா இப்ப கொள்ளுப்பாட்டியால்ல ஆகியிருப்பாங்க..இப்ப எதுக்கு அவங்கள இழுக்கற..”

“இல்லடா செல்லம்..ஆசிரியப் பாவான்னு ஸிம்ப்பிளா கேட்டேனாக்கும்..ம் அதுவான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.. சரி போ..பாட்டுக்குள்ள போகலாமா..”

“ம்:
***



கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் க டலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணியி ராப்பகலும்
நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே


திரு நெடுங்களத்தில் எழுந்திருக்கும் எம்பிரானே..சொக்கா..

ஹாஹா என ஆரவாரம் புரிந்து ஆர்ப்பரித்திருந்த பாற்கடலை மந்தரை மத்தாக வாசுகியைக் கயிறாக வைத்துக் கடைந்த போது, வாசுகிப் பாம்பின் மூச்சிலெழும்பிய விஷமும், பாற்கடலில் இருந்து முதலில் எழுந்த விஷமும் சேர்ந்து ஆலகால விஷமாக மாறி மிகக் கொடிய நஞ்சாகிவிட, தேவர்கள் உன்னிடம் வந்து கதறியதால் அருள் மிகக் கூர்ந்து சுந்தரரை அனுப்பி அதைக் கட்டியாக்கி தேவரைக் காப்பதற்காக விழுங்கினாய்..

ஹச்சோ..உலகிலுள்ள உயிர்களெல்லாம் மரித்து விடுமே என உமையன்னை மனதிற்குள் அல்லோலகல்லோலப் பட்டு காற்றினும் கடிதாய் எண்ணத்தினும் கடிதாய் விரைந்து வந்து உனது கழுத்தையும் பிடித்து இறுக்க, மென்மனசுக்காரன் நீ அந்தக் கொடிய விஷத்தை உன் கழுத்திலேயே இருத்திக் கொண்டாய்..
இப்படி மென்குணம் கொண்டு மற்றவரைக் காத்திடும் உன்னைப் பற்றிப் பல பேர் உருகிப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்..அந்த அடியவர்களின் பாடல்களைப் பாடியும் ஆடியும் உன் பேர் சொல்லி உன் கழல் தொழுதிடும் அன்பர்களின் இடரைத் துன்பங்களை நீ களைவாயாக..”

*