சிவாஜி என்ற சொல்லுக்கு ஒரு ஆகர்ஷண சக்தி உண்டு. அவரை பலமுறை சந்தித்து இருந்தாலும் எனது தந்தையுடன் சென்று சந்தித்த அந்த நினைவு மட்டும் பசுமரத்து ஆணி போல மனதில் என்றும் நிலைத்து இருக்கிறது.
அப்போது எனக்கு வயது 16 என்று நினைக்கிறேன். சில சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் காந்தீய சிந்தனை கொண்டவர்கள் திரு சோமையாஜுலு தலைமையில் சிவாஜியை சந்தித்து அவர் கண்டிப்பாக திப்புவின் கதையில் நடித்து அவருடைய பெருமையை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நிர்பந்திக்க அவருடைய இல்லத்துக்கு சென்றனர். எனது தந்தையுடன் நானும்.
( அந்த "கஞ்ச" நடிகர் வீட்டில் குளிர்பானம் கொடுத்து அனைவரையும் உபசரித்தார்கள்.)
சிவாஜி வந்ததும் பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்தது. அவருடைய இயலாமையை எடுத்து கூறினார். உடன் வந்த முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் தானே அதை தயாரிக்க போவதாக கூறியும் அன்றைய அவருடைய அரசியல் நிலைப்பாடு அவரை செய்யவிடவில்லை.
அனைவருக்கும் சூடாக உப்புமாவும் இனிப்பும் பரிமாறப்பட்டது. ( கஞ்சன் வீட்டில் சுமார் முப்பது பேருக்கு உணவு ) கிளம்பும் நேரத்தில் அந்த மாபெரும் நடிகர் எனது தந்தையிடம் இருந்து கதையை பெற்றுக்கொண்டார். "தநாயக்கன் கோட்டை" என்று பெயரிடப்பட்டு இருந்த அந்த கதை பலரால் தொகுக்கப்பட்டு இருந்தது.
வேண்டாம் என்று கூறியவர் கதையை படித்து பார்ப்பதாக சொல்லி வாங்கிக்கொண்டது பலருக்கு ஆச்சர்யம்.
இரண்டு வாரங்கள் கழித்து அவரிடம் இருந்து எனது தந்தைக்கு அழைப்பு. நானும் ஒட்டிக்கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் கதையை பற்றி பேசிவிட்டு அன்றைய சூழலில் அவரால் ஏன் அந்த கதையில் நடிக்க இயலாது என்பதையும் விளக்கமாக கூறி எங்களை திருப்பி அனுப்பினார். என் தந்தையின் கையின் ஒரு துணிப்பை திணிக்கப்பட்டது. இதை உங்களுடைய காத்தீய சிந்தனை இயக்கத்துக்காக வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து காந்தி அண்ணலின் புகழ் பரப்ப ஆவன செய்யுங்கள். என்னுடைய உதவி எப்போது தேவைப்பட்டாலும் தயங்காமல் வந்து என்னை சந்தியுங்கள் என்று கூறி வழியனுப்பினார்.
அந்த ஒரு நடிகனை பற்றி எத்தனை விமர்சனங்கள். ஒட்டு மொத்த ஊடகங்களும் ( இன்று போல் ) ஒரு சாராருக்கே சரணம் போட்டு வந்த நிலை அன்று. சிவாஜியின் வெற்றி இத்தகைய அனைத்து இன்னல்களையும் தாண்டித்தான் என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது. சுமார் நாற்பதாயிரம் நன்கொடை வழங்கியதை ( சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் ) எனது தந்தை அவருடைய கடைசி காலங்களிலும் சொல்லி சிலாகித்தார்.நன்றி திரு Belge Ravi

siva-004.jpg

Thanks Udha Kumar (நடிகர்திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள் One and only sivaji)