**

பாசுரம் பாடி வா தென்றலே

முப்பத்து எட்டு

பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – முப்பது

14.01.15

*

மாலையில் முழுவதும் மணத்தினைத் தந்தவள்
…மாதவன் அழகிலே மயங்கியே நின்றவள்
காலமும் கண்ணனைக் கண்ணுளே கொண்டவள்
…காலினைப் பற்றியே நெஞ்சுளே வைத்தவள்
கோலினால் வாயினில் குழலினை ஊதியே
…கோபியர் மதியிலும் விதியிலும் ஆடிய
வாழ்வதன் அர்த்தமாம் கண்ணனைப் பாடிநீ
.. வாழிய கோதையே வாழியுன் பாடலே


ஆசாபாசங்கள் நிறைந்த மனித மனதில் எப்போது திருப்தி வரும்?

ஓவியக்கலையில் திறமை பெற்ற ஒருவன் ஒரு அழகிய ஓவியம் வரைந்தானாம். இயற்கைக் காட்சி! “சோ”வென்று கொட்டும் அருவி சற்றுத்தொலைவில் தெரிய, அது ஒரு ஆற்றில் கலக்கிறது. கரையில் பசும்புற்கள் வளர்ந்திருக்கின்றன., அழகிய வண்ண மலர்கள் பூத்திருக்கின்றன, ஒரு ஆண்மான் கம்பீரமாக நின்றிருக்கிறது, பெண் மான் ஒன்று அதன் அருகில் அமர்ந்திருக்கிறது, பெண்மானின் முகத்துக்கு நேரே உரசிக் கொண்டு முன்னங்கால்களை மடக்கியவாறு ஏதோ ரகசியம் பேசுவது போல் இருக்கிறது அதன் குட்டி. பக்கத்திலேயே ஒரு பெரிய மரம். மரத்தின் கிளைகள் விரிந்திருக்க அதில் சில பட்சிகள் அமர்ந்திருக்கின்றன.

பார்த்தவர்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது., இது வெறும் சித்திரமல்ல, உயிர்ச் சித்திரம் எனப் பாராட்டுகிறார்கள்.

ஓவியனுக்கோ அதில் திருப்தி ஏற்படவில்லை, அவனுக்கு மனதுள் ஒரு வருத்தம் – அந்த மரத்தின் கிளையில் பசுமையை இன்னும் கூட்டியிருக்கலாமே என்று. உடன் மற்றொரு படம் வரைய ஆரம்பிக்கிறான்.

ஆக கலைஞனுக்கும் சரி, சாதாரண மனிதனுக்கும் சரி, எப்பொழுதும் முழுமையான திருப்தி ஏற்படுவதில்லை.

ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையின் சொல்லழகு, பொருளழகு, கவி நயம், பக்தி மணம், நடையழகு – போன்றவற்றை என் சிற்றறிவுக்கு எட்டியவரை கொஞ்சம் தான் முகர்ந்திருக்கிறேன். நிறைய விஷயங்கள் என்னையும் அறியாமல் விட்டிருக்கலாம் இன்னும் சிறப்பாக செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது

என்னை எழுதத் தூண்டியவர்கள் ஆண்டாளும் அரங்கனும் தான், ஏதாகிலும் குற்றங்குறை இருப்பின் மன்னித்து இன்னும் அழகாய் எழுதுவதற்கு அருள் புரிவார்கள்!

கோபியர்கள் விடியற்காலையில் எழுந்து குளிர நீராடி, அனைவரும் எல்லோரையும் அழைத்துக் கொண்டு கண்ணனை நினைந்துச் செய்த பாவை நோன்பைப் பற்றிய பாடல்களை மனிதப் பிறவிகளாகிய – சஞ்சலத்தில் சதா மூழ்கியிருக்கும் நாம் படித்தால் என்ன ஆகும்?

அட, நம் மனதிற்குத் திருப்தி ஏற்படும் வகையில் ஒரு பதிலை இன்றைய கடைசித் திருப்பாவைப் பாடலில் சொல்கிறாள் ஆண்டாள்.

*

வங்கக் கடல்கடந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்ட வாற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்..

**

தேவர்களுக்கு அமிர்தம் கொடுப்பதற்காக கூர்ம அவதாரம் எடுத்துத் திருப்பாற்கடலைக் கடைந்தவன் ஸ்ரீமந் நாராயணன். அவன் யார்?

மாதவன் - மஹாலஷ்மி என்னும் அமிர்தத்திலேயே தலை சிறந்த அமிர்தத்தின் மணவாளன் அழகிய, கரிய, சுருள்சுருளான கேசங்களை உடையதால் கேசவன் எனப் பெயர் பெற்றவன். அப்படிப்பட்ட நாராயணனை – பூர்ண சந்திரன் உதயமானாற் போல பிரகாசம் கொண்ட முகத்தை உடைய கோபியர்கள் சென்று யாசித்து, பாவை நோன்புக்குரிய பறை முதலிய சாதனங்களைப் பெற்றார்கள்

இந்த வரலாற்றை அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்தவளும், குளிர்ந்த தாமரைப் புஷ்பங்களாலான மாலையைச் சூடிக் கொண்டவளும், பெரியாழ்வார் மகளுமான ஸ்ரீ ஆண்டாள், அடியவர்கள் கூட்டமாகக் கூடி அனுபவிக்கும் தமிழ்ப் பிரபந்தமான திருப்பாவையில் சொன்னாள். அந்த முப்பதுபாடல்களையும் தினமும் பாராயணம் புரிபவருக்கு – நான்கு பெரிய மாலைகளைப் போன்ற தோள்களையும், கோபியர்கள் கூடித் தனக்குக் கைங்கர்யம் செய்ததால் பெருமிதம் அடைந்து செவ்வரியோடிய கண்களையும், அழகியமுகத்தையும் கொண்ட மஹாலஷ்மியுடன் எழுந்தருளியிருக்கின்ற பகவானால் எங்கும் எப்பொழுதும் இணையற்ற அருள் பெற்று இன்பத்தை அடைவார்கள்.

*

வங்கக் கடல் என்பது பிறவிக்கடல். அதில் நீந்திக் கரையேற இஷ்டப் படுபவர்கள் ஆண்டவனின் அருளைப் பெற முயற்சிக்க வேண்டும். அதனை அளிக்கும் எளிமையான திருப்பாவைப் பாராயணம்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

**