வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழப் பிரச்னை எப்படி எதிரொலிக்கும் என நினைக்கிறீர்கள்?
”ஈழப் பிரச்னை சம்பிராதாயமான முறையில் பேசப்படும். ‘ஆரம்பத்துலேர்ந்து குரல் கொடுத்தேன். முதல் தீர்மானம் நான்தான் போட்டேன்’ என்று கருணாநிதி சொல்வார். ‘போர் என்றால் அப்பாவிகளும் சாகத்தான் செய்வார்கள்’ என்று சொன்ன அம்மையார் பிறகு உண்ணாவிரதம் நடத்தினார். ஈழப் பிரச்னையை இதைவிட யாரும் கேவலப்படுத்திவிட முடியாது.
இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி, இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள். இவர்களும் மிச்சமிருக்கும் அணிகளும் ஈழப் பிரச்னையை ஒரு ஊறுகாய்போல் பயன்படுத்துவார்கள். இதற்கு மேல் இதற்குப் பெரிய முக்கியத்துவம் இருக்கும் என்று நான் கருதவில்லை.
ஈழத் தமிழர் பிரச்னை என்பது சிங்கள பேரினவாதத்தால் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற நிலையைத் தாண்டி இந்திய அரசு, சிங்கள அடக்குமுறையின் அங்கமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது. இந்தியா ஈழத் தமிழர்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறது என்பது மிக நேரடியாக வெளிவந்துவிட்டது. இந்திய நாட்டின் மக்கள் என்ற அடிப்படையில் நாம் கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கிற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக, ஒரு இனப்படுகொலைக்கு ஆதரவாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு இவர்கள் அத்தனை பேரும் உடந்தையாக இருக்கிறார்கள். இதைப்பற்றி ஒரு வாக்காளன் கேள்வி கேட்டால் அவனுக்குத் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை.
இன்னொன்று, ஏதோ காங்கிரஸ் அரசுதான் ஈழத் தமிழனுக்கு துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இதற்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் யாழ் கோட்டையை புலிகள் சுற்றி வளைத்தபோது அதற்குள் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கியிருந்தனர். அப்போது ‘உடனே முற்றுகையை விலக்கிகொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்திய விமானங்கள் வரும்’ என்று வாஜ்பேயி அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. அதற்கு வைகோ முதல் நெடுமாறன் வரைக்கும் அனைவரும் உடந்தை. ‘இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது. அனுசரித்துப் போனால்தான் ஈழ விடுதலை சாத்தியம்’ என்ற கண்ணோட்டத்தில் இதை செய்தார்கள். ஆக இந்த தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னை பேசுபொருளாக இருக்கும்பட்சத்தில் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
Quote:
இந்தியாவின் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. பிரணாப் முகர்ஜி போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக, யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார். இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.
ஈழப்போரில் இந்தியாவின் தலையீட்டுக்குப் பின்னால் இருக்கும் பொருளாதார நலன்கள் பற்றி?
இந்தியாவில் இருக்கும் பெரும் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. டாடாவுக்கு அங்கே டீ எஸ்டேட் இருக்கிறது, மஹிந்திரா கார் கம்பெனிக்கும், டி.வி.எஸ்ஸுக்கு இலங்கை என்பது மிகப்பெரிய வாகன மார்க்கெட், அம்பானிக்கு வரிசையா பெட்ரோல் பங்க் இருக்குது, திரிகோணமலையில் ஓ.என்.ஜி.சி&க்கு எண்ணெய் கிணறுகள் இருக்குது, போர் நடந்துகொண்டிருக்கிற இந்த சூழலில் ஏர்டெல் மிட்டல் கடந்த மாதம் இலங்கை முழுவதற்குமான சேவையை அங்கு ஆரம்பித்திருக்கிறார். கடந்தமுறை பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போய்விட்டு வந்த பின்னர் போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக, இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார். நாளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் இதேபோன்று பெருமுதலாளிகளின் நலனுக்காகத்தான் பேசும். இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.
இன்னொன்று ஈழ மக்களின் போராட்டத்தை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு இதுவரைக்கும் இங்கு சொல்லப்படும் ஒரே ஒரு காரணம், ‘அவர்கள் நம் ரத்த உறவுகள்’ என்பது. இது ரொம்ப அபத்தமானது. எந்த ஒரு இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத பட்சத்தில் அவர்களை அந்த நாட்டு ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. இதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை. இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு தன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சேர்ந்திருப்பதா, பிரிந்துப் போவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்குதான் உண்டு. இந்த நியாயம் காஷ்மீருக்கும் பொருந்தும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும். இதை யாரும் பேசலை. தீவிரமான ஈழ ஆதரவாளர்கள் கூட, ‘இந்தியாவில் பிரச்னை இல்லை. அங்குதான் பிரச்னை’ என்கிறார்கள். என்ன அயோக்கியத்தனம் இது? காஷ்மீரில் இதுவரைக்கும் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ இந்திய ராணுவத்தின் பாதி பேர் அங்கு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. இந்தியா ஏன் சிங்கள அரசை ஆதரிக்கிறது என்பதை ஈழ ஆதரவாளர்களும் கூட விளக்குவதில்லை. ‘ஏதோ முட்டாள்தனமா நடக்குது, சில அதிகாரிகள் இந்த மாதிரி பண்ணிட்டாங்க’ என்கிறார்கள். ‘ஜி.பார்த்தசாரதி இருந்தார். அவர் அருமையா பண்ணினார்’ என்று பழ.நெடுமாறன் சொல்லிக்கிட்டிருக்கார். இப்போ பார்த்தசாரதி ‘தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் புலி ஆதரவு சக்திகளை ஒடுக்கனும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கார்.
‘இந்தியாவின் தயவில்தான் ஈழத் தமிழன் உயிர்வாழ முடியும்’ என்பது ஒடுக்குபவனின் கருத்து மட்டுமல்ல, ஈழ ஆதரவாளர்களின் நிலையும் அதுதாவாகத்தான் இருக்கிறது.
தமிழக மக்கள் மனங்களில் மனிதாபிமான அடிப்படையிலான இரக்க உணர்ச்சியைத் தாண்டி, ‘நீயும் தமிழன், நானும் தமிழன்’ என்ற உணர்ச்சியைத் தாண்டி அரசியல் ரீதியாக இதனுடைய நியாயம் விளக்கப்படவில்லை. அது பாரதூரமான அளவு அரசியல் பிரச்னையாகும் அளவுக்கு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. அப்படி சொல்லப்படாதபோது நாம் அதில் அதிகமாக எதிர்பார்ப்பது கூடாது. தவிரவும் ஈழத்தை தனிநாடாக அங்கீகரிக்க இந்தியா முனையுமானால் இங்கு காஷ்மீருக்கும், வட கிழக்கு மாநிலங்களுக்கும் அதே தீர்வை கொடுக்க வேண்டியிருக்கும். பொதுவா ‘தமிழகம் முழுவதும் ஒரு எழுட்சி நிலவுகிறது’ என்று சொல்லலாம். அது யதார்த்தமா இருக்கனும். நம்ம மனசுல ஆசைப்படுறதுனால அது எழுட்சியா ஆகிடாது.