மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4
மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4
***************************************
முந்தி வணங்கிடுவோம் முக்கண்ணன் மைந்தனாம்
தொந்திக் கணபதியின் தாள்..
*
ஆகப் பலவாறாய் ஆடலும் பாடலுமாய்
பாகம் பிரித்திங்கே பக்குவமாய் – தேகஞ்
சிலிர்க்கவும் மென்மேலும் சிந்திக்கவும் வைத்தே
மிளிர்ந்ததே இந்தத் திரி..
*
ம்ம் என் இனிய வலை மக்களே..!
முதற்கண் பாகம் துவக்க அழைத்த வாசு அவர்களுக்கும் பணித்த கோபால் அவர்களுக்கும் வாழ்த்திய ராஜேஷ் எஸ்.வி,, கல் நாயக், ரவி, ராகவேந்தர் சிவாஜி செந்தில்,முரளி,கலைவேந்தன் எஸ்.வாசுதேவன் கோபு, ஆதிராம் ராஜ்ராஜ், ராகதேவன், நவ் வேலன் மற்றும் படிக்கும் எண்ணிலா நண்பர்களுக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன்.. மிக்க நன்றி..
மூன்றாம் பாகத்தில் மிளிர்ந்தவர்களை அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று சொன்னாலும் கூட இந்தப் பதிவில் ஒருவரைப் பற்றிக் கண்டிப்பாகச் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்..அவர்.. இனிய நண்பர் கல் நாயக்..
கொஞ்சம் தொய்வடைந்து சோஓஓஒகமாய் இழை இருந்த போது.. ஹஹஹ..அஹோ வாரும் சி.க எனக் கைகோர்த்து சோர்வடையாமல் மாறி மாறி பதிவு செய்து இழையோட்டத்தை உணர்வோட்டமாய்ச் செய்த கல் நாயக்.. கொஞ்சம் கொஞ்சம் குட்டிக் குட்டிப் பாராவில் சிரிக்க வைத்திருந்தவர், முழுக்கையை மடித்து முழுவீச்சில் இறங்கிப் பதிவுகள் செய்தார்..அதுவும் ஒன்லைன் பஞ்ச்சாய் கடைசியில் எழுதும் ஒருவரியில் ஹி ஹி எனப் புன்முறுவல் தானாகவே முகத்தில் வந்து தொற்றிக் கொள்ளும்.. அவருக்கு நன்றி + மென் மேலும் எழுதிக் குவிக்க வாழ்த்துக்கள்..
வேலைப்பளுவின் காரணமாகவோ உடல் நிலை சரியில்லையோ என்னவோ வாராதிருக்கும் கிருஷ்ணாவும் வருவார் என மனசுக்குள் ஒரு நம்பிக்கை..
*
வான மகளுக்கு என்ன கோபமோ, சோகமோ கட்டியிருந்த கருமேகச் சேலையை முகத்தில் போர்த்தி க் கொள்ள காற்றோ வேண்டாம்மா ப்ளீஸ் கொஞ்சம் சிரியேன்.. ஏன் கண்ணா பாகம் ஆரம்பிக்கிறான்னு பயந்துட்டியா என்பது போல் கொஞ்சம் சீண்ட அதையும் மீறி க் கொஞ்சம் கண்ணோரம் துளியாய் நீர் கோர்த்து இறங்கிக் கீழே விட.. அந்தத் தூறல் மெல்ல மெல்லக் கீழிறங்கி விழுந்து மண்ணில் கலக்கும் போது வருமே ஒரு ச்சிலீர் மண் வாசனை..அடடா அடடா.. அது என்ன செய்யும்..
அப்படியே இதயத்தைக் கிளறி எத்தனையோ நினைவுகளைக் கிளர்ந்தெழ வைக்குமில்லையா.. அது போல என் இதயத்திலும் கொஞ்சம் நினைவுகள் பின்னோக்கி ஓட விரல் அதை முன்னோக்கி உங்களுக்காக அடிக்கிறது!
*
அதாகப் பட்டது மன அம்பாஸடரை ரிவர்ஸ் எடுத்து படக் படக்கென பலவருடம் பின்னோக்கிச் சென்றால்..யார் அது என்ன சொல்றது..
தெரியுமே தலைகீழ்ப் ப மீசை, ஒல்லி ஒல்லி சி.க.. கல்லூரி மாணவன் அதானே..
ஆமாங்க்ணா.. கல்லூரி படித்த இறுதியாண்டுஎன நினைக்கிறேன்.. என் கல்லூரி விமான நிலையத்துக்கு அருகில்.. ஆனால் க்விஸ் போட்டி என
விளாங்குடிக்கு அருகில் இருக்கும் ஃபாத்திமா கல்லூரிக்குச் சென்றிருந்தோம்..
எங்கள் கல்லூரியில் இருந்து திடுதிப்பென என் வகுப்பில் நானும் இன்னொரு நண்பரும்.. பின் சில பல கல்லூரிகள்.. ஐந்தாறு இருக்கும் என நினைக்கிறேன்..
க்விஸ் கேட்டது ஒரு ஐ.ஏ.எஸ். ஆஃபீஸர்.. நார்த் இண்டியன். பேசியது ஆங்கிலத்தில் தான்.. நிறையக் கூட்டமெல்லாம் இல்லை..
அவர் கேட்ட ஒவ்வொருகேள்விக்கும் படக் படக்கென மற்ற கல்லூரி மாணவர்கள் சொல்லிக்கொண்டே இருக்க நாங்களும், ஃபாத்திமா கல்லூரி மாணவிகள் இருவரும் முழிமுழியென மேடையிலேயே முழித்துக் கொண்டிருந்தோம்.. ஏதாவது கேள்விக்கு த் தெரிந்த ஆன்ஸர் என்று சொல்வதற்குள் மற்றவர்கள் சொல்லிவிட நானும் நண்பரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்க, கடைசியாய் ஒரு கேள்வி..
அந்தக் கேள்வி கேட்கும் போது அந்தக் கலெக்டர் உணர்ச்சி வசப்பட்டார்..இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்..ஏனெனில் இந்தப் பாட்டு என் தம்பிக்கு மிகப் பிடிக்கும்..ஆனால் அவன் மரித்துவிட்டான் ஒரு விபத்தில் எனச் சொல்லி டேப்ரிகார்டரில் அந்தப் பாட்டின் இடையில் வரும் இசையைப் போட்டு என்ன பாடல் எனக் கேட்க எங்கள் கண்களில் பலப்பல மின்னல்கள் அடிக்க கோரஸாய்ச் சொன்னோம் பாடலையும் படத்தின் பெயரையும்..
பாடல் செல்வமே..ஒரே முகம்காண்கிறேன் எப்போதும்.. படம் அமர காவியம்..
முக்கந்தர் கா சிக்கந்தர் என ஹிந்தியில் வந்து ஓட்டஓட்டமாய் ஓடிய படம்.. தமிழில் சிவாஜி மாதவி ஜெய்கணேஷ் என சினிப்ரியாவில் ரிலீஸாகி சகோதரி வெளி நாட்டிலிருந்து வந்திருந்த போது அவருடன், அவர் கணவருடன் சென்று பார்த்த படம்..
நன்றாகத் தான் இருக்கும் ஆனால் சற்றே நீளம் என நினைவு.. அதன் பிறகு அந்தப் படத்தைப் பார்க்கவில்லை..
பாருங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து இவையெல்லாம் வருகின்றன..இவை சொல்லும் செய்தி என்னன்னாக்க..
சரி சரி..இதயத்தைப் பற்றிப் பாட்டுதான்..
கண்களில் மயக்கம் கொண்டுவிட்ட அக்கன்னி
.. காதலதன் தாக்கம் மேனியதை வாட்டிவிட
எண்ணமது பலவாய் எங்கெங்கோ செல்லும்படி
..ஏக்கமாய்ப் மூச்சும் எழிலாக வந்தபடி
தென்றலும் தீண்ட தேகமது சிலிர்க்காமல்
…தேனுடன் சுவையாய் தித்திப்பாய்ப் பாடுகிறாள்
கன்னமும் சிவக்க களிகொள்ளும் அவள்மனமும்
…காதலன் நினைப்பினிலே கவிதையெனப் பாடுகிறாள்..
இதயம் பேசினால்..
இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ..
இதழ்கள் பேசுமோ மெளனமே போதுமோ..
ஒரு நாள் வானிலே வெண்ணிலா வந்தது
உன்னைத் தான் எண்ணினேன் என்னவோ பேசினேன்
நாடக மேடையைப் போலே இந்தப் பெண்ணின் கனவுகள்
நாளெலாம் யோசனை நாடினேன் தலைவனை
ஆசைகளின் பின்னலிலே அழகின் சோதனை
இரவில் வேதனை விடிந்ததும் சிந்தனை
ந.தி, க.தி (கண்களின் திலகம்) மாதவி,
https://youtu.be/Hz9oRsTibDg
அப்ப்புறம் க்விஸ் என்ன ஆச்சா.. :) வேறுகல்லூரி வின் பண்ணிச்சு..
..அப்புறம் வாரேன்..
**