Makkal thilagam mgr part-10
ஓங்குக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் உலகளாவிய மகோன்னத,மங்காத புகழ் !
http://i59.tinypic.com/o5s0sz.jpg
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று பேரறிஞர் அண்ணா கூறினார். அந்த மகத்தான தீர்ப்பை அளிக்கக்கூடிய மக்கள் சக்தியின் முழு பரிமாணத்தை துல்லியமாக அறிந்து வெற்றி மேல் வெற்றி குவித்த நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நல்லாசியுடன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரியின் 10வது பாகத்தை துவக்கி வைப்பதில் எல்லையில்லா ஆனந்தம் கொள்கிறேன்.
இத்திரியினில் புரட்சித்தலைவர், மக்கள் திலகம், புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல் புகழ் பாடும் செய்திகளை மட்டுமே தொடர்ந்து அனைவரும் பதிவிடவேண்டும் எனபது என் அவா.
தமிழ்திரையுலகில் தனக்கென ஒரு பாணி, ஒரு தனி வழி அமைத்து மக்களை தன் பக்கம் ஈர்த்து, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நம் புரட்சித் தலைவர் அவர்கள்.
1954ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்ரவர்த்தி என்கிற ஸ்தானத்தை தனதாக்கியவர் நமது நிருத்திய சக்ரவர்த்தி எம்.ஜி.ஆர் அவர்கள்.அதனை இன்றளவும், டிஜிட்டல் வடிவ " ஆயிரத்தில் ஒருவன் " மூலம் நிரூபித்து வருகிறார்.
குறைந்த எண்ணிக்கையில் படங்களில் நடித்து போதிய நேரங்களில் கட்சிக்காக உழைத்து பொது வாழ்விலும் ஈடுபட்டு நிறைவான அதிக 100 நாள் படங்கள் மற்றும் வெற்றி விழா காப்பியங்கள் அளித்து சகாப்தம் படைத்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் அவர்கள்.
தன் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் இருந்தே சோதனைகளை சந்தித்து,அவைகளை சாதனைகளாக பின்னாளில் மாற்றி காட்டிய அன்னை சத்யா என்கிற தெய்வத்தாய் ஈன்றெடுத்த தனிப்பிறவி.
இத்திரியினை வேகமாகவும், விவேகமாகவும், அர்த்தமுள்ளதாகவும் கொண்டு செல்லும் பொறுப்பு திரியில் பதிவிடும் நம் அனைவருக்கும் உள்ளது.
சமீபகாலமாக, தேவையில்லாத, வாக்குவாதங்கள், சர்ச்சைகள், சவால்கள் என தங்களது நேரத்தையும் பதில் பதிவிடுவோரின் நேரத்தையும் வீணாக்குவதையே குறிக்கோளாக சிலர் செயல்படுவது மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
அவரவர் அபிமான நடிகர்களின் திரியில் அவரவர் பதிவிட்டு வந்தால் அனைவருக்கும் நல்லது. புனைப்பெயர்களில் வந்து பதிவிட்டு குழப்பங்கள் ஏற்படுத்துவது நாகரீகமான செயல் அல்ல.
தமிழக அரசியலில் மூன்று முறை தொடர்ந்து முதல்வராக பத்தாண்டு காலம் பொற்கால ஆட்சி புரிந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று வங்க கடலோரம் துயில் கொண்டு,மறைந்தும் மறையாமல் வாழ்ந்து வரும் நமது தங்கத்தலைவன், ஏழைகளின் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அவருடைய அன்னமிட்டகையால் தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டம், ஆரம்பத்தில் குறை கூறியவர்கள் கூட இன்று கூடுதலாக சிறப்பு உயர்வு அளித்து மெருகேற்றி செயல்படுத்தும் அளவுக்கு உலகமே பாராட்டிய உன்னத திட்டம்.
மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொணர்ந்து,மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிர்த்து,அண்டை மாநில அரசுகளோடு நல்லுறவு கொண்டு மக்கள் வாட்டத்தைப்போக்கி அவர்களின் நலனில் அக்கறை கொண்டு ஆட்சி செய்ததனாலேயே இன்றும் சிறந்த முதல்வர் என்கிற பட்டத்தை, தான் மறைந்து 27 ஆண்டுகள் ஆன பின்பும் தக்கவைத்து கொண்டுள்ளவர் என்கிற செய்தி நாமெல்லாம் பெருமைப்படக்கூடியது.. உதாரணமாக, லயோலா கல்லூரி மாணவர்களின் சிறந்த முதல்வர் தேர்வில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இடம் பெற்றது.
தாங்கள் பதிவிடும் செய்திகளை கூட்டுவதில் ஆர்வம் காட்டாது, அரிய, உயரிய செய்திகள் விபரங்கள், புகைப்படங்கள் பதிவிட அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆவணங்கள், அபூர்வ புகைப்படங்கள், செய்திகள், விவரங்கள் பதிவிட்டு வரும் அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்வதோடு அந்த பணிகளை தொடர்ந்து பதிவாளர்கள் துரிதப்படுத்தி தொடர வேண்டும் எனபது மற்றும் ஒரு வேண்டுகோள்.
அவரது அருமைகள் / பெருமைகள் பறைசாற்றும் கலையுலக மற்றும் அரசியல் செய்திகள் திரியினில் இடம் பெற வேண்டும்.
இந்த அருமையான வாய்ப்பினை அளித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரியின் (மையம்) நிறுவனர்களுக்கும், முந்தைய பாகங்கள் அனைத்தையும் தொடங்கி, பிரம்மாண்டமாக, பார்வையாளர்கள் அனைவரும் பிரமிக்கத்தக்க வகையில் சிறப்பாக கொண்டு சென்ற மூத்த நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
1995ல் உலக சினிமா நூற்றாண்டு வரலாற்றில் சரித்திரம்,சகாப்தம்,சாதனைகள் படைத்த 140 பேர்களில,இந்தியாவின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நபர்களில் முதன்மையானவர் நமது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எனபது பெருமைக்குரிய விஷயம் மற்றவர்கள் நடிகை நர்கீஸ் மற்றும் சத்யஜித்ரே (இயக்குனர்).
இதுவரை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரியின் அனைத்து பகுதிகளிலும் பங்குற்ற அனைத்து அன்பர்களும் நண்பர்களும் தொடர்ந்து இந்த திரியிலும் பங்கு பெற்று, வாதங்கள், பிரதிவாதங்கள், சர்ச்சைகள், சவால்களை தவிர்த்து, ஏழைகளின் ஒளிவிளக்கு, திரையுலக விநியோகஸ்தர்களின் ஒரே கலங்கரை விளக்கம், அரசியல் நோக்கர்களின் வியக்கத்தக்க சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோள் என்ற எண்ணத்தோடு தங்களின் மேலான சிறப்பான பதிவுகளை அளித்து,10வது பாகத்தை படுவேகத்தில், பட்டொளி வீசி, பறக்கச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஆர்.லோகநாதன்