மனதை மயக்கும் மதுர கானங்கள்
மனதை மயக்கும் மதுர கானங்கள்
அனைவருக்கும் வணக்கம்.
அதுவும் பழைய பாடல்கள் விரும்பிகளுக்கு என் ஸ்பெஷல் வணக்கங்கள்.
இது ஒரு புது இழை.
'மனதை மயக்கும் மதுர கானங்கள்'
தமிழ்ப் படங்களில் நம் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்ற மதுர கானங்களைக் கண்டும், கேட்கவும், மகிழவும் இந்த இழை தொடங்கப்பட்டுள்ளது.
நம் மனதில் பல பாடல்கள் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன. சில பாடல்களை நம்மை அறியாமல் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் படம் என்னவென்று தெரியாது. படத்தின் பெயர் தெரியும். பாடல் நினைவுக்கு வராது.
இதற்கெல்லாம் இந்த இழை ஒரு தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன்.
இதில் இன்னொன்று. மிடில் சாங்ஸ் என்று நாம் செல்லமாகப் பெயரிட்டு அழைக்கும் பல பாடல்களை நாம் இங்கே நினைவு கூற இருக்கிறோம். அவ்வளவு அற்புதமான பாடல்கள் இருக்கின்றன. திரையிசைப் பாடல்களைப் பற்றி அறிந்த ஜாம்பவான்கள் பலர் நமது ஹப்பில் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் இந்த இழையில் பங்கு கொண்டு தங்களுக்குத் தெரிந்த பல அபூர்வ விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..
வெறுமனே யூ டியூபிலிருந்து பாடலை இழுத்துப் போட எனக்கு உடன்பாடில்லை. அது போரடிக்கவே செய்யும். அப்பாடல்களைப் பற்றிய சுவையான தொகுப்புகளை நாம் நமக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு தெரிவித்தால் இத்திரியின் சுவாரஸ்யம் வெகுவாகக் கூடும். மேலும் அரிய, மிக அரிய பாடல்களை நாம் இங்கே அலசலாம்.
அனைவரது ஒத்துழைப்பும் இங்கு கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.
முதலில் 'மறுபிறவி' படத்திலிருந்து ஒரு பாடல்.
http://www.inbaminge.com/t/m/Marupiravi/folder.jpg
முதலில் இந்தப் படத்தைப் பற்றிய சிறு குறிப்பு. 1973-இல் வெளியான இத்திரைப்படம் விஜயா சூரி கம்பைன்ஸ் தயாரிப்பு.
முத்துராமன், மஞ்சுளா, அசோகன், தேங்காய் ஸ்ரீனிவாசன் போன்றோர் நடித்திருந்த இத்திரைப்படம் நிஜமாகவே ஒரு புதுமைத் தயாரிப்புதான். டாக்டர் கோவூர் அவர்களும் இப்படத்தில் மனநல மருத்துவராகவே நடித்திருந்தார்.
அப்போதே 'அடல்ட்ஸ் ஒன்லி' அதாவது 'A' செர்டிபிகேட் பெற்ற படம் இது. மலையாளத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற 'புனர்ஜென்மம்' என்ற திரைப்படத்தின் தமிழாக்கமே 'மறுபிறவி' ஆகும். மலையாளத்தில் பிரேம்நசீர், ஜெயபாரதி பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சிக்கலான முள் மேல் நடப்பது போன்ற கதையமைப்பு கொண்ட அருமையான திரைப்படம் இது.
ஒரு வரியில் கதையை சொல்ல வேண்டுமென்றால்
கல்லூரி பேராசிரியர் ஒருவர் அக்கல்லூரி மாணவியை விரும்பியே மணந்து கொள்கிறார். ஆனால் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்ள மட்டும் அவர் உடலும், மனமும் நடுங்குகின்றது. உடலில் அவருக்குக் குறையில்லை. தனக்கு உடல்சுகம் தேவைப்படும் போது தன் வீட்டு வேலைக்காரியுடன் அவர் உறவு வைத்துக் கொள்கிறார். மனதில்தான் அவருக்குக் குறை. மனைவியோ தன் கணவனின் போக்கை எண்ணி செய்வதறியாது திகைக்கிறாள். கண்ணீர் வடிக்கிறாள்.
இறுதியில் மருத்துவரை நாடும் போது கணவனின் பலவீனத்துக்குக் காரணம் புரிகிறது. கணவனின் தாயின் உருவமும், அவன் தாரத்தின் உருவமும் ஒத்துப் போவதால் அவன் தன் தாரத்தை நெருங்கும் போதெல்லாம் மனைவியின் முகத்தில் தன் அன்னையின் உருவத்தைப் பார்க்கிறான். அதனால் மனைவி உறவு கொள்ள வரும்போதெல்லாம் அவளை விட்டு விலகுகிறான்.
இறுதியில் அருமையான மனநல மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நார்மலாகிறான் கணவன்.
அன்றைய காலகட்டத்தில் "அய்யய்யோ! 'மறுபிறவி' மோசமான படமாயிற்றே!" என்று பொய்யாக எல்லோரும் வெறுத்த படம் இது.
ஏனென்றால் படத்தின் கதை அமைப்பிற்குத் தேவையான காட்சி அமைப்புகள். இளமை பொங்கும் மனைவியாக மஞ்சுளா தன் தாம்பத்ய உறவிற்காக கணவன் முத்துராமனிடம் ஏங்கும் காட்சிகள் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டன. மஞ்சுளாவும் சற்று தாராளமாக நடித்திருந்தார். முத்துராமனுக்கு முற்றிலும் புதுமையான வேடம். அமிர்தம் அவர்களின் ஒளிப்பதிவு பௌர்ணமி நிலவின் ஒளி போல பளிச்சோ பளிச்.
18 வயதுக்குக் கீழே வரும் சிறுவர், சிறுமிகள், மாணாக்கர்களுக்கு தியேட்டரில் டிக்கெட் தர மாட்டார்கள்.
இந்த லிஸ்டில் சேர்ந்த வேறு இரண்டு படங்கள். ஒன்று 'அவள்'. இன்னொரு படம் பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்'.
இலங்கையை சார்ந்த 'டாக்டர் கோவூர்' எழுதிய இந்த கதையை அற்புதமாகப் படமாக்கியிருந்தார் இயக்குனர் ராமண்ணா. டி .ஆர் பாப்பா என்ற அற்புத இசையமைப்பாளரின் பங்கை இப்படத்தில் என்னவென்று சொல்ல!
ஒவ்வொரு பாடலும் தேன் சொட்டும் ராகம்.
டி.என்.பாலு வசனம் எழுதிய இப்படத்தை இப்போது பார்க்கும் போது மிகவும் ரசிக்க முடிந்தது. அப்போது ஆபாசம் மட்டுமே தென்பட்டது. இப்போது மனநல ரீதியாக பல விஷயங்கள் இப்படத்தின் மூலம் புரிய வந்தது.
படத்திலிருந்து சில காட்சிகள்.
http://i1098.photobucket.com/albums/...piravi0002.jpg
http://i1098.photobucket.com/albums/...piravi0004.jpg
http://i1098.photobucket.com/albums/...piravi0005.jpg
http://i1098.photobucket.com/albums/...piravi0007.jpg
http://i1098.photobucket.com/albums/...piravi0009.jpg
இப்போது பாடலுக்கு வருவோம்.
http://i1.ytimg.com/vi/HhastadadV0/maxresdefault.jpg
படத்தின் நாயகன் சிறுவனாக இருக்கும்போது கணவனை இழந்த அவனது தாய் தன் மகனைக் கொஞ்சிப் பாராட்டுவது போல் அமைந்த இந்தப் பாடலில்
விஷேசங்கள் சில உண்டு.
அந்த இளம் வயதிலேயே எந்த ஈகோவும் பார்க்காமல் நெற்றியில் விபூதி அணிந்து விதவைத் தாயாக மஞ்சுளா நடித்திருந்தார். (இப்போதுள்ள ஹீரோயின்கள் அப்படி நடிக்கத் துணிவார்களா!?)
மஞ்சுளாவின் சிறுவயது மகனாக வருபவர் நடிகர் பப்லு. என்ன ஒரு அழகு இந்த சிறுவன்!
இந்தப்பாடலைப் பாடியவர் சூலமங்கலம் ராஜலஷ்மி. ஆஹா! ஒரு தாயின் பரிவையும் பாசத்தையும் இக்குரல் என்னமாய் பிரதிபலிக்கிறது! கேட்க கேட்க அவ்வளவு சுகம். மனதை தாலாட்டும் இப்பாடலைக் கேட்டு மயங்காதவர் இருக்கவே முடியாது.
காவேரி மாந்தோப்புக் கனியோ!
கண்கள்
கல்யாண மண்டபத்து மணியோ!
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ!
பண்பாடும் தென்பாங்கு கிளியோ!
நீங்களே பார்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.
http://www.youtube.com/watch?feature...&v=N9xVrdiKAcc
vasudevan.