Quote:
சின்னத்திரையில் ஆரம்பத்தில் வாரத் தொடர்களாக மட்டுமே சில நகைச்சுவைத் தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் முதன் முறையாக தினமும் நகைச்சுவை தொடராக ஒளிபரப்பாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள தொடர் "தினம் தினம் தீபாவளி.''
இத்தொடர் வருகிற வாரத்தில் தனது 150-வது பகுதியை கடக்கிறது.
மெகா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரில் நளினி, பாண்டு, சாதனா, குமரேசன், பாலாஜி, ஆர்த்தி, ஊர்வம்பு லட்சுமி, வாசு விக்ரம், ரக்ஷித், கே.எஸ்.ஜெயலட்சுமி, வந்தனா, ரம்யாபாரதி, செம்புலி ஜெகன், மாஸ்டர் சுஜித், மாஸ்டர் அபிஜித், பேபி ஸ்ருதி, லட்சுமிராஜ், சின்னராசு என ஒரு காமெடி பட்டாளமே இருந்து நகைச்சுவை கொட்டமடிக்கிறது.
இத்தொடரை திருவள்ளுவர் கலைக்குடும்பம் சார்பில் டி.குணவதி தயாரிக்கிறார். கணேஷ்ராஜேந்திரன் கதை எழுதி இயக்க, சூர்யபிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை நகைச் சுவையோடு சொல்லும் இத்தொடரில், மாமியாரான நளினியும், சின்னமருமகளான ஆர்த்தியும் குடும்பத்தை உடைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். எது நடந்தாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு தங்களது தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்காமல் குடும்பத்தை தாங்கி நிற்கின்றனர். ஆனால் மூத்த மருமகளான சாதனாவும், இரண்டாவது மருமகளான `ஊர்வம்பு' லட்சுமியும் குடும்பத்தை உடைத்து தனிக்குடித்தனம் போக பல வழிகளை முயற்சி செய்தபடி இருக்கின்றனர். இவர்களது கணவர்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு படும்பாடு செமரகளை.
"வருகிற வாரங்களில் இன்னும் நகைச்சுவை காட்சிகளை அதிகமாக்கி ரசிகர்களை "தினம் தினம் தீபாவளி'' கொண்டாட்டத்தில் பங்கேற்க வைக்கப் போகிறோம்'' என்கிறார், இயக்குனர் கணேஷ் ராஜேந்திரன்.