PDA

View Full Version : kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2



Pages : 1 2 3 4 5 [6] 7 8

pavalamani pragasam
15th May 2014, 06:52 AM
என்னுயிரும் கூட்டுப் பறவையோ
பாலூட்டி வளரும் சிறு கிளியோ
பறக்கத் தவிக்கும் ஓர் கைதியோ
கதவு திறந்திட காத்திருக்குமோ

chinnakkannan
15th May 2014, 11:30 AM
காத்திருக்குமோ என்ற
உங்கள் கவிதை
மிகவும் கவர்ந்து
எங்கள் கவிதை வனத்தில்
பிரசுரிக்க நினைக்கையில்
வேறு பல
ஏற்கெனவே வாசலில் நிற்பதால்
உடனே பிரசுரிக்க இயலாமைக்கு
வருந்துகிறோம்..

pavalamani pragasam
15th May 2014, 03:56 PM
வருந்துகிறோம் படம் வெளியிட தாமதமானால்
வருந்துகிறோம் வெயிலில் தலைவரை தரிசிக்க
அற்ப காரணங்கள் கவலையை குத்தகையெடுக்க
காத்திருக்கு பல அவசர முக்கிய நிவாரணங்கள்

chinnakkannan
15th May 2014, 06:18 PM
நிவாரணங்கள் தருவதாகச் சொன்ன
அரசரைக் காணோமாம்..

ப்லவிதமாய்த் தேடிப் பார்த்து
அலுத்து சலித்து
பின் ஒருவழியாய்க்
குட்டி இளவரசனை
அரியணை ஏற்றி உதவிக்கு
அமைச்சரைக் கொடுத்தால்..

அமைச்சர் வழ்ங்கினார் உரை..
புது மன்னர் உங்கள்
துன்பங்களுக்கு கண்டிப்பாய்
வழங்குவார் நிவாரணம்
என்றவர்
நினைத்துக் கொண்டார் மனதில் இப்படி..

வளர்ந்த பின்
ஓடும்வரை

pavalamani pragasam
15th May 2014, 09:19 PM
ஓடும்வரை ஓடிய நதி
அடங்குவது கடலுக்குள்
சுயம் தொலைக்கும்
உத்தம ஜாதி பெண்
உப்புக்கரித்தாள்
செம்புல பெய் நீர் போல

chinnakkannan
16th May 2014, 01:15 PM
நீர்போல இருப்பதுதான் வாழ்க்கை போல
..நிறைவாக அலசிடலாம் அதனை இன்று
தேர்போல அசைந்தோடி மெல்லச் செல்லும்
..தெளிவான நதியோதான் சுழலில் சுற்றும்
பார்த்தநிறம் தன்னுள்ளே வாங்கும் போல
...பலருக்கும் வாழ்க்கையிலே ஆசை தோன்றும்
ஆர்ப்பாட்ட அருவியொலி அடங்கல் போலே
..அடங்கிடுமே மனிதவாழ்வு ஓர்நாள் தானே..

pavalamani pragasam
16th May 2014, 10:14 PM
ஓர்நாள் தானே என்றாலும்
மணித்துளிகள் ஒன்றல்லவே
பிரியமானவர் உடனிருக்க
குறையுமோ எண்ணிக்கை
பிரிவினில் வாடுகையில்
கூடுமோ நாளின் நீளம்

chinnakkannan
17th May 2014, 10:53 AM
நீளம் எனப் பலதடவை
சொல்லியிருக்கிறேன்

உன் கூந்தல்
உன் கண்கள்
உன்னை ப் பார்க்க வரும்போது
பேசும்
உன் பாட்டியின் பேச்சு
என..

அவையெல்லாம் பொய்..

இதோ இப்போது
வெகு நீளமாய் இருக்கிறது
உன்னைப் பிரிந்த
இந்த
இருபத்து நான்கு மணி நேரம்...

pavalamani pragasam
17th May 2014, 04:53 PM
நேரம் காலம் பார்க்காமல்
நாளை என தள்ளாமல்
நல்லதை செய் இன்றே
நன்றாய் சொன்னாரன்றே

chinnakkannan
18th May 2014, 02:16 PM
சொன்னாரன்றே பெரியவர்கள்
வினை விதைப்பவன் வினை அறுப்பான்
என
எந்தக் காலத்துக்கும் பொருந்தும் எனினும்
இந்தக்காலத்தில் மிகப் பொருத்தம்
அறுவடை ஆகிறது
விரைவாக..

pavalamani pragasam
19th May 2014, 07:43 AM
விரைவாக விரட்டினேன்
வென்றேன் முடித்தேன்
சிக்கெனப் பிடித்தேன்
ஒளிந்து விளையாடிய
கற்பனையைத்தானே
முடிந்தது கண்ணாமூச்சி
கிடைத்தது பட்டாம்பூச்சி
கிறுக்கி முடித்த என் கதை

chinnakkannan
19th May 2014, 09:58 PM
கதையொண்ணு சொல்லப் போறேன் செல்லாத்தா – இந்தக்
கதையினிலே கருத்தில்ல சின்னாத்தா
சதைபோட்ட பையனவன் செல்லாத்தா – பேரு
சதாவுன்னு சொல்லுவாங்க சின்னாத்தா
வதைபட்டான் நெஞ்சுக்குள்ள செல்லாத்தா – ஒருத்தி
வஞ்சனையாப் புகுந்ததால சின்னாத்தா
பதைபதைப்பா இருந்ததால செல்லாத்தா – அவனும்
பக்குவமா காதலத்தான் சொன்னாத்தா

குண்டுகுண்டா இருக்கறடா நீதானே – பின்ன
குடித்தனத்த எப்படித்தான் பண்வேடா..
கண்ணழகா கட்டழகா வாடாநீ – பின்ன
கட்டுறதும் காதலையும் வச்சுக்கலாம்..
வண்ணமெனப் பொண்ணுசொல்ல செல்லாத்தா – பயபுள்ள
ஒடற்பயிற்சி செஞ்சிளைச்சுப் போனாந்தா
பொண்ணவளோ யார்டாநீன்னு கேட்டாத்தா – பயபுள்ள
படக்குன்னு மனசுடைஞ்சான் செல்லாத்தா! :)

pavalamani pragasam
20th May 2014, 08:24 AM
செல்லாத்தா பழகின பாதையில
சொல்லாத்தா பழைய பொன்மொழி
நில்லாத்தா நிலையா ஒழுக்கத்துல
நல்லாத்தான் இருக்கும் உலகம்

chinnakkannan
20th May 2014, 08:53 PM
உலகம் சுற்ற ஒருபிள்ளை
..ஊர்மேல் போகா ஒருபிள்ளை
கலகம் நடக்கக் கனலுடனே
..ககன வெளியில் பறந்தேதான்
பழனி மலையில் நின்றந்தப்
..பாலன் கோபம் கொண்டதனால்
இளமை என்றும் அடைந்தததுவே
..எல்லாக் குன்றும் அவன் இடமாய்..

pavalamani pragasam
21st May 2014, 07:24 AM
இடமாய் வலமாய் தலையை ஆட்டி
வேண்டாம் என்று சொல்லிடுவேன்
வேண்டாத புது சுகங்கள் வேண்டேன்
வினைகள் விதைக்காமல் விடுவேன்

chinnakkannan
21st May 2014, 10:44 PM
விடுவேன் என்றே சொல்லிவிட்டு
...வெறுமை முகத்தில் காட்டிவிட்டு
கிடுக்கிப் பிடியாய்ப் பிடித்தேதான்..
..கண்ணன் பின்னல் இழுத்தாலும்
விடுடா என்றே கத்திடுவேன்
..வேண்டும் என்றே கூவிடுவேன்
கடுக்காய்க் கொடுக்க ஏனோதான்
..கன்னி நெஞ்சம் மறுத்திடுதே..

pavalamani pragasam
22nd May 2014, 08:20 AM
மறுத்திடுதே நம்ப மறுத்திடுதே
கணிப்புகள் தவறிட கனக்குதே
குமைந்து மனம்தான் மருகுதே
பிழையை எண்ணி வருந்துதே

chinnakkannan
22nd May 2014, 11:33 PM
வருந்துதே உள்ளம் என்று
..வண்ணமாய் நினைத்தி டாமல்
திருத்தியே விற்றார் அன்று
..தீர்க்கமாய் கிரஹாம் தானே
அருமைகள் அந்தக் காலம்
..அளவிலே தெரிய வில்லை
பெருமையாய்ப் பேசு தய்யா
..செல்லிடைப் பேசி இன்று..

pavalamani pragasam
23rd May 2014, 08:13 AM
இன்று விளக்காமல் புரிவதில்லை
மூத்தோர் அனுபவம் தெரிவதில்லை
இளந்தலைமுறை நுனிப்புல்லில்
பசியாறுவது பழக்கமானது பாரில்

chinnakkannan
23rd May 2014, 02:39 PM
பாரில் இருப்பதென்ன பார்ப்பதெலாம் வண்ணமயத்
தேரில் பவனிவரும் தெள்ளமுதம் - வாரியே
வள்ளலெனத் தான்வழங்கி வாகாய்ச் சிரித்தபடி
அள்ளும் இயற்கையே ஆம்

pavalamani pragasam
23rd May 2014, 08:59 PM
ஆம் என்கிறாள் நெஞ்சழுத்தமாய்
எடுத்தாயா பணத்தை என்றதற்கு
சட்டைப் பையில் எடுத்தது முன்பு
வங்கியில் ஏடிஎம்மில் பிற்பாடு
வீட்டிலிருந்தே எண்ணை அழுத்தி
இணைய சந்தையில் வாங்க இன்று

chinnakkannan
24th May 2014, 02:00 AM
இன்றிருக்கும் ஆனந்தங்கள் எப்பொழுதும் இல்லையென
பின்வந்த பிஞ்சுகள் சொன்னாலும் - எண்ணத்துள்
ஆமென்று சொல்வதற்கு ஆசைதான் ஆனாலும்
நாமென்ன சொல்வ திருக்கு..

pavalamani pragasam
24th May 2014, 08:31 AM
சொல்வதிருக்கு ஆயிரம் உண்மைகள்
சொல்லாமல் விளங்கும் அதிசயங்கள்
மௌனமாய் உணர்த்தும் அர்த்தங்கள்
சொல்லொணா இனிய அனுபவங்கள்

chinnakkannan
25th May 2014, 09:58 AM
அனுபவங்கள் பற்றித்தான் சொல்வ தற்கு
...அசந்திடவே மாட்டாளே செல்லாப் பாட்டி
அனுஅம்மா உங்களுக்குத் தருவ தற்கு
..அவஸ்தைபல நான்பட்டேன் அறிவீர் நீவிர்..
துணுக்குறவே வைத்திடவே கேட்போம் நாங்கள்
..தோராயம் எட்டுபெற்ற காரணம் என்ன?!
முணுக்கென்றே நாணமுடன் கோபம் கொண்டு
..முனகித்தான் சென்றிடுவாள் கொல்லைப் பக்கம்!!

pavalamani pragasam
26th May 2014, 06:25 AM
கொல்லைப் பக்கம் வழியுண்டு
நுழைந்திடுவர் பசை கொண்டு
தகைமை இல்லா பேராசையே
நாட்டை உலுக்கும் பைசாசமே

chinnakkannan
26th May 2014, 05:39 PM
பைசாசமே பூதமே
பேயே என்றெல்லாம்
திட்டு வாங்கினாலும்
தயங்காமல்
நாற்காலியைப் போட்டு
உயர ஏறி
கோலமாவு டப்பாவைத் தரையிலும்
தலையிலும் தள்ளி
பே என்று சொல்லிச்
சிரிக்கிறது
குட்டிப் பிசாசு..

pavalamani pragasam
27th May 2014, 06:25 AM
பிசாசு உலாவுமோ பனங்காட்டு இருட்டில்
சலசலக்கும் ஓலைகளும் அதன் ஓலமோ
சிறு நரிகளுக்கு பழகிவிட்டது பயமில்லை
சட்டத்தின் வெத்து சத்தமும் அப்படியே

chinnakkannan
27th May 2014, 09:55 AM
அப்படியே நில்லென்றால் நிற்க மாட்டாய்
..அழகாக வக்கணைகள் முகத்தில் காட்டித்
துப்புவதாய் வாய்கோணி இருக்கும் போது
..தொடர்ந்துவரும் படமெடுக்கும் கருவி ஒலியில்
குப்பென்றே சிரித்துவிட்டு எடுத்துப் பார்த்து
..கோணலான படமப்பா என்றே எள்வாய்
இப்போதோ மணவறையில் தலையைச் சாய்த்து
..இருக்கின்ற உனைப்பார்த்தோ எனக்கேன் கண்ணீர்..!

pavalamani pragasam
27th May 2014, 01:35 PM
கண்ணீர் கரைக்கும் பாவத்தை
மறந்துவிடும் பயங்கர குற்றம்
தண்ணீர் கரைக்கும் உப்பை
மறைந்துவிடும் நீர் தன்மை

chinnakkannan
27th May 2014, 05:57 PM
தன்மை ஒருமை தன்மை முன்னிலை
என்பது
நான் நீ நாமாக
இருந்த போது எனக்குத் தெரிந்தது
இப்போது
தெரிகிறது படர்க்கை
நேரமாகிவிட்டது
அவரும் குழந்தையும்
காத்திருப்பார்கள் என நீ
கிளம்பியதில் இருந்து..

pavalamani pragasam
28th May 2014, 07:23 AM
இருந்து கொண்டே இல்லை
குதிருக்குள் அப்பன் என்பான்
சோற்றுக்குள் முழு பூசணி
எல்லாம் என்றும் சாதாரணம்

chinnakkannan
28th May 2014, 05:29 PM
சாதரணமாய்த் தான்
இணையத்தில்
ஆரம்பித்த
பழைய தொலைக்காட்சித் தொடரின்
முதல் அத்தியாயம்
சட்டென உள்ளிழுத்து
மீதி முப்பத்து நான்கையும்
பார்க்க வைத்தபின்
தான்
மிஞ்சியது வருத்தம்
அசாதாரணமாகக் கிடைத்த
விடுமுறை முடிந்தது என்பது..

ம்ம்
காலமும் நேரமும்
நிற்பதில்லை
சமயத்தில்
உட்கார்வது மனிதர்கள் மட்டுமே.

pavalamani pragasam
28th May 2014, 06:23 PM
மனிதர்கள் மட்டுமே
மாற்றம் விரும்புவது
புது உணவு ருசித்திட
புது இடம் வசித்திட
புது பொழுதுபோக்கு
புதுப் புது ஆராய்ச்சி
பொல்லாத ஜீவராசி
திருப்தியில்லா ஜாதி

chinnakkannan
28th May 2014, 09:43 PM
ஜாதி தேர்தலிலே ஜாலமிடும் நல்வோட்டு
மீதி பிறவாம் அறி..

pavalamani pragasam
29th May 2014, 07:24 AM
அறி என்றார் அரிய ஆசான்
தலையை சொறிந்தான் சீடன்
ஏறவில்லை எதுவும் என்றும்
என் செய்வான் பாமரன் பாவம்

chinnakkannan
29th May 2014, 01:52 PM
பாவம்
என்ன ஆச்சோ தெரியலை

காலை மதியம் மாலை இரவு
என
தகவல் புகைப்படம் கேள்வி
என
சொல்லிக்கொண்டே இருப்பவன்..

கேள்வி கேட்டாலும்
மென்சிரித்துப் பதிலும் சொல்பவன்..
கோபமே வராது..
நேரில் பார்ப்பதை விட
கணினியில் அவனைப் பார்க்க
ரொம்பப் பிடிக்கும்..

தொலைபேசி, மின்னஞ்சல்
அனுப்பிப் பார்க்கலாமா..
மறுபடியும் முயன்று பார்க்க்லாம்
பார்த்தால்...

மூன்று நாள் தாடியுடன்
முகம்
கண் உள்ளே போயிருக்க
பார்க்கச் சகிக்கவில்லை..
ஜூரமாம்..

ம்ம்
உடன் உடன்
சீக்கிரம் குணமாகு டா
என எழுதிவிட்டேன்
என் முக நூல் தோழனுக்கு..

உடன் பதில்
எல்லாம் உன்னால் தான்
என பதில்..

கொஞ்சம் குழப்பம்
காதல் சொல்லப் போகிறானா..
படுபாவி..
நான் ஒன்றும் நினைக்கவே இல்லையே..
நேரில் பார்க்கவும் சுமாராகத் தான்
இருந்தான்..
அப்படி ஒன்றும் பெரிய வேலையில் இல்லை..
நான் 45கே அவன் 35கே தான்..
சுமாரான கம்பெனி தான்..
ஏதோ கொஞ்சம் சிலபல விஷயம்
ஒத்துக் கொண்டது தான்..
அதற்காக.. ம்ம்ஹீம்.. நோ காதல்..

பேசாமல் நண்பனில்லை
சொல்லி விடலாமா
என யோசிக்கையிலே
சிரிப்புப் பந்து போட்டு
பயந்துட்டியா என பதில் வர..

ம்ம்
விட்டேன் பெருமூச்சு..
ம்ம்
எதற்கும் இருக்கட்டும் என
துண்டித்தேன் நட்பை !

pavalamani pragasam
29th May 2014, 07:54 PM
நட்பை சொல்ல மொழியில்லை
புரியாமல் போக வழியில்லை
பாராமலே பிணையும் மனங்கள்
பிசிராந்தையாரும் சோழனுமாய்
உயிரை கொடுப்பார்கள் சிலர்
வாழ்வை கெடுப்பார்கள் சிலர்
முகம் காணா இக்கால நட்பு
முகநூலின் முக்கிய சிறப்பு

chinnakkannan
29th May 2014, 08:24 PM
சிறப்பு வரும்போது சீராய் இருந்தால்
திறக்கும் பலகதவு தான்..

pavalamani pragasam
30th May 2014, 07:20 AM
தான் தன் சுகம்
தாரக மந்திரம்
சுயநல இயக்கம்
சுருங்கிய உலகம்

chinnakkannan
30th May 2014, 09:17 PM
உலகம் அறியாப் பெண்ணாய் இருந்தேன்
..உணர்வில் மாற்றம் பருவம் தரவும்
பழகும் பழக்கம் பலவாய் மாற
..பார்வை பேச்சில் பண்பைக் கற்றேன்
அழகாய் நடிப்பு ஆடல் பாடல்
..எல்லாம் வரவும் சினிமா ஆர்வம்
வழக்கம் போல நெஞ்சுள் வரவும்
..வாகாய்ப் படத்தில் நடித்தேன் வென்றேன்..

புதிய நடிகை சிரித்தே சொல்ல
..புருவம் நெறித்தே கெள்வி ஒன்று
பதில்தான் முடிந்தால் சொலவும் ஆனால்..
..பாவை உமக்குப் படிப்பும் பாட்டும்
புதிது என்றே இயக்குனர் சொன்னார்..
..பூவை சிலிர்த்தே எழுந்தாள் சொன்னாள்
விதிதான் இதுதான் போதும் பேட்டி..
..வணக்கம் சொல்லிச் சென்றாள் வெளியே..

pavalamani pragasam
31st May 2014, 08:32 AM
வெளியே குளிருது
உள்ளே வேர்க்குது
கேள்வி கேட்குது
புதிய பெண்ணினம்
புரட்சி நடத்துது
கூடு கலையுது
பார்த்து கலங்குது
படர்ந்த ஆலமரம்

chinnakkannan
31st May 2014, 03:16 PM
ஆல மரமென்பார் ஆசிரியர் தன்வித்தை
பாலகர்க்குச் சொன்னவர் தான்

pavalamani pragasam
1st June 2014, 07:51 AM
சொன்னவர் தான் செய்யவில்லை
செய்தவர்தான் சொல்லவில்லை
வாய்ச்சொல் வீரரும் உண்டிங்கு
கர்மவீரரும் கண்டிருக்கிறோம்

chinnakkannan
1st June 2014, 08:50 PM
கண்டிருக்கிறோம் நாங்கள்..

கூட்டமாகக் குரல்கொடுத்தார்கள்
வகுப்பு மாணவர்கள்

சரி, அந்தத் தலைவர் படத்தை விடுத்து
வேறு போடச் சொல்கிறேன்
என்ற விடுதித் தலைவரிடம்
வேண்டாம் என்ற கூச்சல் எழுந்தது..

அதுவே போடுங்கள்
அந்த மகாத்மாவின்
மனவலிமை எங்களுக்கு வரவேண்டும்..

மாணவர்கள் ஒன்றாய்ச் சொல்லிக் கூவ...

திடுக்கிட்டுப் படுக்கயில் விழித்தார் அவர்..
அடச் சே எல்லாம் கனவு..!

pavalamani pragasam
2nd June 2014, 06:49 AM
கனவு வரும் தூக்கத்தில்
கலைந்துவிடும் பகலில்
பகலில் காணும் கனவு
தூங்கவிடாது செலுத்தும்

chinnakkannan
2nd June 2014, 04:14 PM
தூங்கவிடாது செலுத்தும்
விஷயங்கள்
இளமையில் கல்வி
வேலை
காதல் மணம் குடும்பம்
பின்
வயதான
முதுமையில்
நினைவுகள் மட்டுமே..

pavalamani pragasam
3rd June 2014, 08:01 AM
நினைவுகள் மட்டுமே
தேளாய் கொட்ட
தேனாய் இனிக்க
தொலையும் காதல்

chinnakkannan
3rd June 2014, 12:26 PM
காதல் வெளிப்படுமே கண்ணீராய் நெஞ்சத்தில்
மோதல் வருகின்ற போது..

pavalamani pragasam
3rd June 2014, 02:00 PM
வருகின்ற போது வரட்டும்
திருமணமும் விலக்கும்
பதவியும் உயர்வும்
பிறப்பும் இறப்பும்
தடுத்தால் நிற்காது
அழைத்தால் வாராது
உழைத்தால் போதும்
உறங்கு நிம்மதியாய்

chinnakkannan
3rd June 2014, 03:10 PM
நிம்மதியாய் இருப்பதற்கு என்ன வேண்டும்
..நிறைந்தமனம் பணிவுகுணம் கூட வேண்டும்
வம்பெனவே எழும்பிவிடும் தீய சிந்தை
..வளமதையும் அழிப்பதென எண்ண வேண்டும்
விம்மிவரும் கற்பனையை வடிப்ப தற்கு
..விருத்தவகை நன்றாகக் கற்க வேண்டும்
கம்பனைப்போல் ஆகவெண்ணி ஆசை கொண்டால்
..கட்டாயம் சிலகவிதை வரைய லாமே..

pavalamani pragasam
4th June 2014, 07:08 AM
வரையலாமே கன்னத்தில்
கண்ணீர் கோட்டு சித்திரம்
எட்டாப் பழத்துக்கு கொட்டாவி
முடவன் கொம்புத்தேன் ஆசை
முகமறியா நட்பின் தப்புக்கணக்கு
ஏமாற்றத்தில் என்ன அதிசயம்

chinnakkannan
4th June 2014, 04:32 PM
அதிசயமாய் இருப்பதெது என்று கேட்டால்
..அழகான மனிதரவர் வாழ்க்கை என்பேன்
நதிபோலே ஓரிடத்தில் ஆரம் பித்து
..நன்றாகப் பலவாறாய்ச் சுழித்து ஓடி
கதியில்லை என்பதுபோல் இன்னும் சுற்றி
..கடக்கென்றே நின்றுவிடும் செயல்தான் என்னே..
விதியென்பர் வேறென்பர் ஆனால் என்ன
..வாழ்வதனின் முடிவென்றும் அறிய மாட்டார்..

pavalamani pragasam
5th June 2014, 08:18 AM
அறிய மாட்டார்
அகில மாந்தர்
இனிய சிரிப்பில்
கொடிய வன்மம்
சின்ன இதயத்தில்
பெரிய துரோகம்
எல்லாம் நாடகம்
பல வித வேடம்

chinnakkannan
5th June 2014, 03:29 PM
வேடமிட்டு உள்ளமதை மூடிநிற்கும் மாது
...வேண்டுமென்றா செய்திடுவாள் காதலனின் மீது
பாடமெனச் சொல்லியது தந்தையவர் குணமே
...பாவையிவள் மயங்குகிறாள் பாவமவள் மனமே
தாடகமாய் சிற்றலைகள் எழும்பாத குளந்தான்
...தடக்கென்றே சிறுகல்லால் சுழல்வதுவும் நிஜந்தான்
ஊடலென நினைத்தவனும் போய்விட்டான் இன்று..
...உணர்ந்துவிட்டு மறுபடியும் வந்திடுவான் சென்று..

pavalamani pragasam
6th June 2014, 08:41 AM
சென்று விட்டாள் நீதி மன்ற வாசலுக்கு
நான்காவது பிள்ளையையும் நாயக/வன்
விற்றுக் குடித்த கொடுமை தாளாமல்
வயலை உழுது உரமிட்டு வளர்த்த பயிரை
நீர் விட்டு காத்த மரங்களின் கனிகளை
விற்பது போல்தானே என்றான் அந்த பதர்

chinnakkannan
7th June 2014, 01:04 AM
பதர் என்றால்..
அயோக்கியன்..
புரியலைப்பா..
ரோக் ஆ..
ஆமா..
ஏம்ப்பா தமிழே பேச மாட்டேங்கற
என்ற கேள்விக்கு
பதில் இல்லை என்னிடம்..

pavalamani pragasam
7th June 2014, 08:16 AM
என்னிடம் இல்லை ஏக்கம்
குறையவில்லை ஊக்கம்
நன்மை செய்தல் நோக்கம்
ஆர்வம் காணாது தேக்கம்
விரும்பும் ஆழ்ந்த தாக்கம்
நடக்குமதிலேன் சந்தேகம்

chinnakkannan
7th June 2014, 11:36 PM
சந்தேகம் கொண்டானா அண்ணல் அன்று
..சஞ்சலந்தான் கொண்டானா உளத்தில் இல்லை..
பந்தமென வந்தவந்தப் பாவை தன்னை
..பங்கமிடும் தழலினிலே புகத்தான் சொல்லி
சொந்தங்கள் நண்பர்கள் கலங்கி நிற்க
..சோகத்தால் கண்களுமே சற்றே மூட
நிந்தனைகள் உலகத்தார் பேசும் பேச்சு
..நிறுத்துதற்கு வழியாகச் சொன்னான் தானே..

pavalamani pragasam
8th June 2014, 07:31 AM
தானே நடக்கும்
தடைகள் உடையும்
தக்க தருணத்தில்
தர்ம தேவன் விதி

chinnakkannan
8th June 2014, 09:41 PM
விதியென்பீர் ஆனாலோ இலையென்பேன் கேளீர்
…வேண்டுமென இவ்வவையில் இழுத்துவெனைத் தள்ளி
சதிபலவே செய்துவிட்டு என்கணவர் தோற்க
..சங்கடங்கள் ஏதுமிலை என்பதுபோல் இவனும்
மதிமயங்கி என்சேலை கைவைக்கப் பார்க்க
…மாசற்ற அவையோரே நன்றாமோ சொல்வீர்..
பதைபதைக்கப் பாஞ்சாலி அழுதகுரல் தானே
..பாரதப்போர் வித்தாக அமைந்ததுவும் கண்டீர்..

pavalamani pragasam
9th June 2014, 07:08 AM
கண்டீர் பல வித்தை
கயிற்றின் மேல் நடந்து
அந்தரத்தில் ஊஞ்சலாடி
நுனி விரலில் தாங்கி
சர்க்கஸ்தான் சம்சாரம்
சாதனைதான் எத்தனை

chinnakkannan
10th June 2014, 10:34 AM
எத்தனை அழகு என்றால்
..என்னதான் நானும் சொல்ல
வித்தைகள் புரியும் கண்கள்
..விளக்கிடும் கள்ளப் பார்வை
நித்தமும் மலர்ந்த பூவாய்
..நெகிழ்ந்துதான் சிரிக்கும் தோற்றம்
சித்தமும் என்றும் உன்னைத்
..தேடியே திகைக்கும் பெண்ணே

pavalamani pragasam
10th June 2014, 07:21 PM
பெண்ணே வளரும் பெண்ணே
தேவையுனக்கு நான்கு கண்ணே
பள்ளங்கள் பார்த்திடு முன்னே
ஆபத்துக்கள் தொடருது பின்னே
பிச்சியென்றடைக்கும் காப்பகம்
கற்பும் கிட்னியும் திருட மருந்தகம்
தூங்கும் போதும் நீ விழித்திரு
ஏழாம் அறிவுடன் செழித்திரு

chinnakkannan
11th June 2014, 10:28 AM
செழித்திருக்கும் உடலுமது திமிறி நிற்கும்
..சிவந்தகன்னம் செம்மலராய் இதழும் மின்னும்
விழித்திருக்கும் போதுமெல்லக் கனவு தோன்றும்
..விந்தைகொளும் புன்முறுவல் உதட்டை மெல்லும்
களிகொள்ளும் தோற்றத்தில் அழகு கூட்ட
..கன்னியவள் பலவாறாய் அணிவாள் ஆடை
தெளிவாகத் தெரியுமிது இளமை செய்யும்
..தேன்பூச்சுப் ப்லகொண்ட கோலம் என்றே..

pavalamani pragasam
11th June 2014, 11:47 AM
கோலம் என்றே சொல்வதோ
எழில் விஞ்சும் கலையிதுவோ
கற்பனை வண்ணக்கிண்ணமோ
கைவிரலும்தான் தூரிகையோ

chinnakkannan
11th June 2014, 01:10 PM
தூரிகையோ காரிகையின் கற்பனைக்கு ஏற்றே
..தொடுத்திருக்கும் வண்ணமலர்க் கொத்துகளின் எழிலாய்
வாரிவிடும் வள்ளலலென அழகுடனும் இங்கே
..வழங்கிவிட்டான் பிரம்மனவள் கற்பனைக்குத் தானே
ஏறிவிடும் அவள்வரைந்த ஓவியத்தின் காட்சி
..எண்ணவெண்ண நெஞ்சகத்தில் அமர்ந்திருக்கும் என்றும்
ஊரிலொரு பெண்ணுமில்லை அவளுடைய வார்ப்பாய்
..உணர்வுகளை காட்சிகளை காகிதத்தில் தரவே..

pavalamani pragasam
12th June 2014, 08:57 AM
தரவே வந்துவிட்டு
தராமலே சென்றுவிட்டு
தவியாய் தவித்து
திக் திக் நெஞ்சம்
தித்திக்கும் அனுபவம்
தினமொரு நாடகம்
தனியுலக சஞ்சாரம்
தணிந்த பின் சம்சாரம்

chinnakkannan
12th June 2014, 09:54 PM
சம்சாரம் கிட்டிவிட்டால் என்ன ஆகும்
..சங்கடங்கள் தீருமென்றாய் இல்லை அண்ணா
விம்மிவரும் அழகெல்லாம் வசமாய் ஆகும்
..வேடிக்கை பொறுப்பெல்லாம் கிடைக்கும் என்றாய்
திம்மென்றே கல்லான வயிறு போகும்
.திகட்டாத நல்லுணவு கிடைக்கும் என்றாய்
சிம்மினிலே தோசைக்கல் வைத்து தோசை
..அவளுக்கும் தருகின்றேன் நிலையைப் பாராய்..!

pavalamani pragasam
13th June 2014, 07:54 AM
பாராய் பாரில் பல முன்னேற்றம்
பவுசான அதிசயம் பல்லாயிரம்
நொடியில் வரும் தொடர்ப்பின்று
நோயை வென்று நீண்ட ஆயுள்
சொகுசும் சுகமும் அணைக்குது
அறிவின் ஆட்சிமைதனை தாண்டி
அழியாமல் ஆடுது ஆதிவாசியின்
ஆண்குறி காட்டுமிராண்டித்தனம்

chinnakkannan
13th June 2014, 10:19 PM
காட்டுமிராண்டித் தனம்
இப்படியா மனைவியை அடிப்பது
பொங்கினார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்
பிரபல மாது
செல்லிடைப் பேசி ஒலிக்க
எடுத்து
“சரி சரி..
நிகழ்ச்சி ரெகார்ட் ஆகிட்டிருக்கு..
ம்ம்
என்ன இன்னிக்கும் அவ வரலையா
இப்படி லீவ் போட்டா
வீட்டு வேலை எல்லாம் யார் பார்ப்பா..
சரி அவளை நாளைக்கு வச்சுக்கறேன்..
வந்தா காலை ஒடிச்சுடுவேன்..ம்ம்
நீங்க பாத்திரம் மட்டும்
சுத்தம் பண்ணிடுங்க…
ஏன் முடியாது..
பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாதா..
என்ன தலைவலியா..ஜூரமா..
எல்லாம் பெனடால் போட்டுக்குங்க..
சரியாய்டும்..
ஆஃபீஸ் வேலை இருக்கா..
அடப் போய்யா..கொஞ்சம் வீட்டு வேலையும் பாரு..
நான் இப்ப வந்துடுவேன்
இரண்டுமணிக்குள்ற”
என்றவர் தொடர்பைத் துண்டித்து
பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம்
சொன்னார்..
“சொல்லுங்க”

pavalamani pragasam
14th June 2014, 06:44 AM
“சொல்லுங்க” என்று ஒரு முனையில்
"அப்புறம்" என்று மறுமுனையில்
எத்தனை தரம் அதையே சொல்லிட
செல்லிடைப் பேசியில் கடலை போட
வெட்டியாய் வறுபடும் ஓர் தலைமுறை
விரயம் காலம் பொருள் வாலிப சக்தி

chinnakkannan
15th June 2014, 10:20 PM
சக்தி ஆகினை; சாந்தம் கொடுத்தனை;
..சலனம் தீர்த்தனை; சிரித்தே மகிழ்ந்தனை
பக்தி கொடுத்தனை; பாசம் காட்டினை
..பாழும் உளமதன் பிணியைப் போக்கினை
முத்தி நெகிழ்ந்தனை; மூர்க்கம் தகர்த்தனை
…மெல்லப் பேசினை; மேன்மை காட்டினை
நித்தம் வாழ்விலே ஒளிதான் கூட்டிய
..நீள்கண் பாவையே நீதான் நான் இனி....

pavalamani pragasam
16th June 2014, 08:01 AM
இனி ஒரு விதி செய்ய
மனிதனின் மதி ஒளிர
இனிதாயவன் கதி மாற
கனிய வேண்டும் காலம்

chinnakkannan
17th June 2014, 10:48 AM
காலம் களிகொள்ளும் கற்றவர்கள் இட்டவிதி
ஞாலம் செழித்தால் நலம்..

pavalamani pragasam
18th June 2014, 08:13 AM
நலம் அறிய ஆவல்
அந்தக்கால மடல்
அவசரமான காதல்
அறிவது புது மாடல்

chinnakkannan
18th June 2014, 06:12 PM
மாடல் தான் அம்மா..
அதிர்ந்து பேச்மாட்டாள்
படித்திருக்கிறாள்
பேசுவாள் மென்மையாக
நன்றாகச் சமைப்பாள்
கற்றும் கொடுப்பாள் தங்கைக்கு
உடையெல்லாம் சுரிதார்
அல்லது லெக்கின்ஸ் டாப்ஸ்..
ஆஃபீஸிற்குப் போட்டு வருவாள்..
இன்னும் எதுவும் லோன் எல்லாம் வாங்கவில்லை..
ம்ஹீம் வீட்டிற்குத் தான் தருவேன்
என்றெல்லாம் சொல்லவில்லை
சின்னப் புன்சிரிப்பு
சின்னச் சின்ன வாக்கியம்
குட்டி குட்டி மின்னஞ்சல்
ரொம்பக் குட்டியாய் எஸ் எம் எஸ்
இதான் அவளிடம் பிடிக்கும்..
அவளுக்கு ஒரே தம்பி
அவனும் படிப்பில் விளையாட்டில் சுட்டியாம்
பார்த்ததிலலை
பாசம் உண்டு..ஆனால் திட்டவெல்லாம்
செய்யமாட்டாள்
எப்படி த் தெரியுமா
சிலசமயங்களில் போனில் பேசுவாள்..
அதில் தெரியும்..
அனாவசியச் செலவெல்லாம்
நானும் செய்ததில்லை அவளும்..
சாதாரண ஹோட்டல் தான் காஃபி
சரவண பவன் கூட கிடையாது
உனக்குப் பிடிக்கும்..

மாடல்ங்கறயேடா

மாடல் என்றால் முன்னோடி
என்ற அர்த்தம் அம்மா..

pavalamani pragasam
19th June 2014, 09:00 AM
அம்மா அம்மம்மா இப்படியுமா
வியந்து மாளவில்லை இன்னும்
பாசப்போர்வையில் பணத்துக்கு
அளவில்லா சொத்துக்கு வைத்த குறி
தப்பியதே விலகி வாழ்ந்த மனைவி
பல்லாண்டு பிரிந்திருந்த (அப்)பாவி
படுத்திய பதியை சிதையில் வைத்ததும்
கணக்காய் சொத்துக்கு சொந்தமாகிட
கனாக்கண்ட சகோதரிகள் விடும் கண்ணீர்
இப்போது உண்மையானது நடிப்பில்லை

chinnakkannan
22nd June 2014, 10:51 AM
நடிப்பில்லை வயசாளி கண்ணின் ஓரம்
..நன்றாகத் துளிர்விட்ட ஈரச் சின்னம்
துடிப்புடனே ஓய்விற்காய்ப் பெற்ற காசை
..தெளிவாகப் பையினுள்ளே வைத்த பின்பு
படித்தாரே கம்பெனியில் தானும் நின்று
..பக்குவமாய் உழைத்திட்ட வருடம் தன்னை
விடியுமட்டும் பேசலாந்தான் ஆனால் வேண்டாம்
..விடைகொடுங்கள் எனச்சொல்லி முடித்தார் பேச்சை

pavalamani pragasam
22nd June 2014, 02:17 PM
பேச்சை மந்திரக்கோலாய் மாற்றி
வசியம் செய்யும் அரசியல்வாதி
சரித்திரம் நெடுக காணலாமே
வல்லவனுக்கு வல்லவனாய்
புரூடசும் ஆன்டனியும் பேச
மக்கள் மனத் தராசில் மாறிய
சீசரின் மதிப்பை மறப்போமோ
பேச்சுக்கலையை ரசிப்போமோ

chinnakkannan
22nd June 2014, 05:32 PM
ரசிப்போமா இவளே
வானத்தில் பெளர்ணமி நிலவின் ஒளி
மொட்டை மாடியில் வைத்திருக்கும்
டிஷ் ஆண்ட்டென்னாக்களைப் புறந்தள்ளி
மெல்ல மெல்ல
தண்ணீர்த் தோட்டிக்கு இந்தப்பக்கம்
சற்றே கொஞ்சூண்டு இருட்டிருக்கும்
அங்கே நின்று கொண்டு..
ஆமாம் குளிர் காற்று கொஞ்சம்
வீசத்தான் செய்யும்
வானிலை மையத்தில்
சொல்லியிருக்கிறார்கள்
எனில்
வருகிறாயா ஒன்பதரை வாக்கில்
மேலே துணி உலர்த்துகிறேன்
அல்லது
எதிர் ஃப்ளாட் ஹேமா கூப்பிட்டாள்
என ஏதாவது சொல்லி
நாம் சேர்ந்து ரசிப்போமா
தென்றலையும்
தெளி நிலவையும்
நீ ரசிக்க
அந்த வெளிச்சத்தில் நிழலாய்
அசைந்தாடும் உன் முன்னுச்சி முடியின் அழகையும்
உன் சிறு மின்னல் கண்களையும்
உன் உதட்டு நீரோட்டத்தையும் நான்
ரசிப்பேனே..
வருகிறாயா..

என
வரிந்து வரிந்து மின்னஞ்சல்
எழுதினால்
வந்தது பதில்

போரடிக்காதே..ச்சீ போடா..

pavalamani pragasam
23rd June 2014, 08:14 AM
போடா நீங்களும் உங்கள் அறிவுரையும்
புறந்தள்ளினேன் பல் பராமரிப்பு முறையை
மூன்று நாளாய் உண்ணமுடியவில்லை
உறங்கமுடியவில்லை போகும் நேரம்தான்
வந்துவிட்டது என்றெண்ணும் போதினிலே
வலியோடு ஏன் போக வேண்டும் என்றே
தள்ளிப்போட முடியாதினியும் சோதனை
தைரியமாய் சந்திப்பேன் பல் மருத்துவரை

chinnakkannan
23rd June 2014, 11:54 PM
மருத்துவரைப் பார்ப்பதற்குச் சென்றிருந்த நேரம்
..மங்கையவள் வந்தமர்ந்தாள் என்னிருக்கை ஓரம்
வருத்தமான முகத்தினிலே வாட்டமுற்ற கண்கள்
..வஞ்சியவள் நெஞ்சகத்து வேதனையின் பண்கள்
துருதுருப்பாய்த் தானலைந்த தாதியிடம் சொல்லி
..தூதுவிட அவளுக்கோ சீக்கிரமே அழைப்பு
சுறுசுறுப்பாய்க் கீற்றுமின்னல் புன்சிரிப்பைச் சிந்தித்
..துள்ளிசெல கண்டவெந்தன் உடல்வலியோ காணோம்..

pavalamani pragasam
24th June 2014, 07:35 AM
காணோம் பண்பாட்டை
பழகும் பாங்கை
பொதுநல பொறுப்பை
பணிவான நாகரிகத்தை
பெண்மை போற்றும்
பெருமையான ஆண்மையை
பொருள் வேட்டையில்
மாக்களாய் மாறுபவர்க்கு
மேன்மையில்லா மூடர்க்கு
புத்தி புகட்டுவார் யாரோ

chinnakkannan
22nd July 2014, 10:21 AM
யாரோ பார்க்கக் கூடும்
...ஏதும் பேசக் கூடும்
ஊரோ ஏச்சு தந்தால்
..உளத்தில் கலக்கம் கூடும்
தேரோ என்றே இழுத்து
..திகைக்க முத்தம் தந்தாய்..
வேறாய் ஆன தெந்தன்
..விந்தை கொண்ட நெஞ்சம்..

pavalamani pragasam
22nd July 2014, 06:54 PM
நெஞ்சம் நிறைந்தது இன்பத்தில்
கொஞ்சம் சொர்க்கம் அருகினில்
வெறுமையில் வாடிய என் கூடு
பிருந்தாவனமாய் மாறியதின்று
மக்களும் அவர் தம் மக்களும்
வந்திட்ட களிப்பதனால் உலகம்
உல்லாசமாய் தோன்றிடுதோ
உவகையில் ஊஞ்சல் ஆடுதோ

chinnakkannan
22nd July 2014, 10:11 PM
ஆடுதோ நெஞ்சில் இன்னும்
..அழகிய வீட்டின் எண்ணம்
ஊடியே முகத்தில் வாட்டம்
..உண்மையாய்த் தெரியு தென்றால்
மூடியே கண்சி மிட்டி
..முகமதில் சிரிப்பைக் கூட்டி
ஊடியே உள்ளே செல்வாள்
..உளமதைச் சொல்ல மாட்டாள்..

மெல்லவே அறையில் சென்று
..மேனியைத் தொட்டுச் சற்றே
வெல்லமாய் இதழில் கொஞ்சம்
..விரலினால் தீண்டப் பார்த்தால்
தள்ளியே விட்டு தூரம்
..தாண்டியே நின்று கண்ணில்
விள்ளலாய் ஈரம் காட்ட
..விழுமியே அணைத்துச் சொல்வேன்..

வஞ்சிநீ வாட வேண்டா
.வாய்மொழி சொல்ல வேண்டா
விஞ்சிடும் உன்னு ணர்வு
..விழியதும் காட்ட லாச்சே
துஞ்சியே எழுந்தால் நாளை
..செல்லலாம் என்று சொன்னால்
கொஞ்சலாய் மடிமேல் வீழ்வாள்..
..கோதையும் அதுஓர் காலம்!!!
..

pavalamani pragasam
23rd July 2014, 07:23 AM
காலம் செய்யும் தாமதம்
ஆனியில் சாரலில்லை
ஆடியில் காற்றில்லை
அக்கினி வெயில் தொடர
வாட்டம் சற்றே குறைய
வானிலை இன்று மாறிட
வருத்தம் கொஞ்சம் தேய
வசந்தம் போலொரு சுகமே

chinnakkannan
23rd July 2014, 01:43 PM
சுகமே என்றே இருந்துவிட்டேன்
..சூழல் தந்த மாற்ற்த்தால்
மிகவும் மனத்தில் உற்சாகம்
..மீண்டும் மீண்டும் உல்லாசம்
துகளாய் மாறிப் போகத்தான்
..துயரம் வந்து சேர்ந்திடவும்
அகத்தில் ஈசா உனைஅழைத்தால்
..அழகாய் சிரிக்கிறாய் தப்பில்லை..

pavalamani pragasam
24th July 2014, 09:04 AM
தப்பில்லை வயதை மறப்பது
பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ந்து
ஊரை சுற்றி கண்டதை தின்பது
சர்ரென ஸ்ட்ராவில் உறிஞ்சுவது
காற்றுள்ள போது தூற்றுவது
மறு வசந்தம் வரை வாடுவது

chinnakkannan
4th August 2014, 03:40 PM
வாடுவது எனுமுணர்வு வஞ்சியர்க்கு இளமை
..ஊக்கியதால் எழுந்துவிட்ட காதலினை எண்ணி
ஊடிடுமே அவர்தம்மின் உடலினையே சற்றே
...ஒவ்வாத மாற்றமதைக் கொண்டுவரும் அன்றோ
ஆடுவதும் பாடுவதும் துள்ளியோடி எங்கும்
..அங்கமெலாம் சிலிர்த்திடவும் இருக்கின்ற குணமோ
ஓடிவிட்ட காரணம்தான் என்னவென்று சொல்ல
..ஒளிந்திருந்து மலரம்பு பாய்ந்ததனால் தானே..

pavalamani pragasam
4th August 2014, 08:10 PM
பாய்ந்ததனால் தானே வயல் விளைந்தது
தொடாமல் கொடாமல் வம்சம் வளராது
இடம் கொடாமல் மாது தவிர்க்கும் போது
இனிக்கும் இல்லறம் பாலைவனமானது

chinnakkannan
5th August 2014, 02:02 PM
பாலைவனமானது வாழ்வு
என நினைத்த போது
நீரூற்றாய் நீ வந்தாய்..

சரி என சந்தோஷித்தால்
ஊருக்குப் போய் வருகிறேன் என்கிறாய்..

சீக்கிரம் வந்து சேர்..
இல்லையெனில் என் இடை குறையும்
உன் செல்லிடைப் பேசிக் கட்டணம்
கூடும்..

pavalamani pragasam
5th August 2014, 08:43 PM
கூடும் உடலில் துன்பம்
வாதம் பித்தம் கபம்
வினை தவறான விகிதம்
நில் கவனி அது உசிதம்

chinnakkannan
5th August 2014, 09:52 PM
உசிதம் என்பதை மட்டும்
அழுத்தி அடிக்கோடு போட்டுட்டியா
என்பார் தாத்தா
எல்லா கல்யாணங்களுக்கும்
பத்திரிகையுடன்
கடிதம் எழுதும்பொழுது..
நீங்கள் வந்து நடத்திக் கொடுத்தால்
என முன்வரியையும் அவரே சொல்வார்..

எல்லா உறவுகளும்
கண்டிப்பாய் வருகை தருவார்கள்
எல்லாக் கல்யாணங்களுக்கும்..

கடைசிக் காலத்தில்
பெரியப்பாவுக்கும் சித்தப்பாவிற்கும்
சண்டை வந்த போழ்தில்
திடீரென வந்த நெஞ்சு வலியில்
தாத்தா மரிக்க
வந்த உறவுகள் சொற்பமே..

என்னிடம்
மற்றவர்களுக்கு
உசிதமாயில்லை போலும்
என
அவர் சொல்வது போல பிரமை

pavalamani pragasam
6th August 2014, 07:22 AM
பிரமை நிறைந்த கண்கள்
குழந்தைப் பருவ நாட்கள்
நடுவில் பல வருடங்கள்
தெளிவான உண்மைகள்
மறுபடியும் மயக்கங்கள்
அவை அந்திம காலங்கள்

chinnakkannan
6th August 2014, 04:58 PM
காலங்கள் செய்கின்ற மாயம்தான் என்னே
..கடகடத்துச் சக்கரமாய் ஓடிவிடும் நாட்கள்
ஓலமிடும் உள்மனசு ஓடிவிட்ட வயதை
..உளத்தினிலே குழவியென இருந்தவற்றை எண்ணி
பாலமிடும் நினைவுகளோ இளவயதுக் காதல்
..பகிர்ந்தவளைச் சுமந்துவந்து கரைதனிலே கொட்டும்
தாளமிட்டுத் தாளமிட்டுக் கூவிஅழைத் தாலும்
..தயங்காமல் இனிவருமோ இளமையது தானே..

pavalamani pragasam
7th August 2014, 05:16 PM
இளமையது தானே என்றும் இருக்கும்
தளர்ந்து மூன்று காலால் நடந்தாலும்
உலர்ந்து பல்லும் சொல்லும் போனாலும்
மனதால் வாழலாம் மார்க்கண்டேயனாய்

chinnakkannan
8th August 2014, 09:10 PM
மார்க்கண் டேயனாய் இருக்க வேண்டாம்
..மாறா இளமை மயக்க வேண்டாம்
வேர்க்கும் படியே உழைத்தே என்றும்
..வியப்பாய் ஊரும் பார்த்தால் போதும்
கோர்க்கும் எண்ணம் சிந்தை யுள்ளே
..கோமகன் ராமனை எண்ணி எண்ணி
வார்த்தே இறுதிவரை நின்றால் போதும்
..வருடம் பலவாய் ஆக வேண்டா..
..

pavalamani pragasam
9th August 2014, 08:34 AM
ஆக வேண்டா கேலிக்கூத்தாய்
அழகிய பாரம்பரிய பழக்கங்கள்
கண் முன் தொலைய வேண்டாம்
பீடுடை பரவச அடையாளங்கள்
அன்னியரெல்லாம் ரசித்து நாடும்
உடையும் கலையும் எழிலும்
தூக்கியெரியலாச்சே சோதனையே
பட்டுடுத்தி பூ சூடி அணிகலனுடன்
மணமேடை ஏறிய மங்கல மங்கை
தலைவிரி கோலத்தில் மேல்நாட்டு
பெண் போல நீள் கவுன் அணிந்து
புது விஷ விதை விதைத்தாளே
குலப்பெருமையை புதைத்தாளே

chinnakkannan
11th August 2014, 10:09 PM
புதைத்தாளே கன்னியவள் காதலையே ஆழப்
…பூக்குழியாம் நெஞ்சகத்தில் மண்ணெடுத்துப் போட்டே
கதைகதையாய்ப் பரம்பரையின் பெயர்பற்றிச் சொல்லிக்
…கண்டித்தே மறுதலித்த தந்தையவர் சொல்லால்
பதைபதைத்துப் பாவையவள் காதலனின் உயிரை
…பாதுகாத்து வைத்திடவே உணர்ச்சியிலா வார்த்தை
வதைபட்டுச் சிதைந்தபடி அவனிடமே சொன்னாள்
…..வஞ்சியெனை மறந்திடுவீர் வாழ்ந்திடுவீர் நன்றாய்..

pavalamani pragasam
12th August 2014, 08:46 AM
நன்றாய் நடந்தது
நன்றாய் நடக்கிறது
நன்றாய் நடக்கும்
நன்றுரைத்தது கீதை

chinnakkannan
15th August 2014, 12:55 AM
கீதையைப் பத்தி அந்தப்
பிரபலமான உபன்யாசகர்
ஆரம்பிக்கறார் சார் 5.30க்கு
அப்புறம்
ஏழாவதுமனிதன்
கப்பலோட்டிய தமிழன்
கைகொடுத்த தெய்வம்னு
முழுக்க பாரதியார் பாட்டு..
வீரபாண்டிய கட்ட பொம்மன்
வேறசானல் போடறாங்களாம்
ராஜ பார்ட் ரங்கதுரை
கப்பலோட்டிய தமிழன்
காந்தி தமிழ் நு பேசியிருக்கேன்
இந்தக் கால இளைஞ இளைஞிகளின்
சுதந்தரம் பத்தி சாலமன் பாப்பையாவ
வச்சு ஒரு பட்டி மன்றம்
பரவாயில்லையா சார்:
யோவ் லூசு
வயசு என்ன ஆவுது உனக்கு
அதானே பார்த்தேன்..
இந்த கீதைலாம் வேண்டாம் தூக்கு
காலைல அந்த ப்ரபல நடிகை
அந்தக் காலத்தில
சுதந்திரப் பாடல்கள்னு
ஒரு வெஸ்டர்ன் சாங்க்ஸ் ஆல்பம்
பாடியிருக்காங்கள்ள..யா
மேட் இன் இண்டியா அதப் போடு
இப்போ ரெண்டு மூணு படத்துல
நல்ல குத்துப் பாட்டுல்லாம்
வந்திருக்குல்ல
அந்தப் படங்கள்ளயே போட்டுடலாம் பேசு
ஃபண்ட்ஸ் நோ ப்ராப்ளம்யா..
இந்தப் பட்டிமன்றம்
யூத் தோட ஃப்ரீடம் நல்ல டாபிக்
நடுவரா
அவங்க யாரு நாலுவாட்டி டைவர்ஸ் ஆன நடிகை
ஓ அவங்களையே நடுவரா போட்டுடு
நீ சொன்னமாதிரி போட்டா அட்ஸ்லாம்
கிடைக்காது..
நமக்கு சேலரி போனஸ்லாம்
வேண்டுமில்லையா
நான் சொன்னதைச் செய்டா செல்லம்
சரி என்று சொன்ன
டிவி நிகழ்ச்சிப் பொறுப்பாளர்
நொந்து கொண்டார் மனதுள்தன்
அடிமைத் தனத்தினை

pavalamani pragasam
15th August 2014, 02:46 PM
அடிமைத் தனத்தினை அணைத்துக்கொள்
ஆசையாய் அதிவிரைவாய் அட்டையாய்
ஆதி அடையாளம் அனைத்தும் அழித்துவிடு
ஆடு ராமா ஆடு குரங்கு போல மாறிவிடு

chinnakkannan
15th August 2014, 10:10 PM
மாறிவிடு என்றுசொன்னாய் மாற்றிவிட்டேன் நானும்
..மனமொப்பி வளர்த்திருந்த தலைமுடியை வெட்டி
வாரிவிட ஒன்றுமில்லா சிறுபையன் போலே
..வாகாக வளையாமல் நிற்கிறது தானே.
ஸாரிடியர் என்கின்றாய் உனக்கென்ன ராணி..
..சங்கடங்கள் அலுவலகம் செலும்போது தெரியும்
ஊறுகின்ற கொழுப்புடனே கேட்பார்கள் என்னை..
..உண்மையைச்சொல் தள்ளுபடி கிடைத்ததா என்றே..:)

pavalamani pragasam
15th August 2014, 10:51 PM
கிடைத்ததா என்றே தெரியவில்லை
கள்ள விழியும் சொல்லவில்லை
கடித்த இதழும் இயம்பவில்லை
காதலுக்கு சம்மதம் அறிவதெப்படி

chinnakkannan
24th August 2014, 09:48 PM
அறிவதெப்படி..
தாத்தாவின் அப்பா
பெயர் தெரியும்..
தாத்தாவின் தாத்தா பெயர்..
ம்ஹீம் தெரியாது
அப்பா சொல்லவில்லை
அம்மாவின் வழியும் அப்படியே..
யாராவது வயதான உறவுமுறை
உயிருடன் இருந்தால் தெரியலாம்..
முயன்றதில் ஒரு தொண்ணூறு
வயது உறவினரிடம்
பதில் கிடைத்தது….

அறிவதெப்படி..
என்ற கேள்வியே
காலம் காலமாக
தேடலுக்கு வழிவகுத்து
கண்டுபிடிப்புக்கும் வழி வகுத்திருக்கிறது..
பார்த்தாயா என்றேன் சகோதரியிடம்…..
போடா போ
வாழ்க்கையே ஒரு தேடல் தானே
கண்டு பிடிப்புக்கள் குறைவு
ஏமாற்றங்கள் அதிகம்
எனச் சொல்லி மென்சிரித்துச் செல்ல
நான் நின்றேன் உறைந்து..

pavalamani pragasam
25th August 2014, 08:24 AM
உறைந்து கிடக்குது பனிக்கட்டி
உருகவில்லை கரையவில்லை
சூரிய ஒளியில் வெப்பமில்லை
வீரியத்தை ஏற்று ஆண்மகனே

chinnakkannan
25th August 2014, 09:30 PM
ஆண்மக னென்று உன்னை
..அணங்குநான் எங்கு சொல்வேன்
ஊண்தனை மட்டு மல்ல
…உணர்வுகள் கொண்ட என்னை
தீண்டினாய் ராவ ணாவுன்
..திமிரினை என்ன சொல்வேன்
வீண்மக னென்று நீயும்
…விந்தையாய் ஆன தென்ன

கால்களை இறுக்க வைத்துக்
..கவலையில் உடலும் வாட
நீள்விழி உயர்த்தி சீதை
..நின்றவந் தரக்கன் மீது
வேல்களாய்க் கூர்மை யான
..வென்றிடும் சொற்கள் எய்ய
ஊழ்வினை பற்ற பின்னாள்
…உயிரினை விட்டா னன்றோ..

pavalamani pragasam
26th August 2014, 08:40 AM
விட்டானன்றோ பற்றினை
பெற்றானன்றோ பேற்றினை
புத்தன் சொன்ன கூற்றினை
போற்றிட தீரும் தீவினை

chinnakkannan
26th August 2014, 08:30 PM
தீவினை என்ன செய்யும்
…தினமுமே நல்ல எண்ணம்
மேவியே செயல்கள் செய்தால்
…மேதினி வசமும் ஆகும்
பூவிழிப் பார்வை தன்னை
..பூமகள் முழுதும் வைக்க
வாவியாய் மகிழ்ச்சி பொங்கி
…வளமுமே பெருகு மன்றோ..

pavalamani pragasam
27th August 2014, 07:57 AM
பெருகுமன்றோ ஆனந்தம்
பேராசை இங்கு அனர்த்தம்
சின்ன சின்ன ஆசைகள்
திகட்டாத தேன் துளிகள்

chinnakkannan
12th October 2014, 02:19 PM
துளிகள் மெல்ல மெல்ல
உடலில் இறங்கிக் கொண்டிருக்க
அந்தப் பக்கம்
உடலில் சேர்த்திருந்த
இயந்திரமும்
எண்களைக் கூட்டிக் கொண்டிருந்தது
நம்பிக்கையுடன்

pavalamani pragasam
12th October 2014, 06:00 PM
நம்பிக்கையுடன் நகரும் வண்டி
ஒரு காலத்தில் ராக்கெட் வேகம்
இன்றோ அதற்கு நத்தை சுபாவம்
நகர்கிறதுதானே பாதை தவறாமல்
தொடரட்டும் இந்த வண்டிப்பயணம்
ஆனந்த நிலையம் அடையும் வரை

chinnakkannan
12th October 2014, 09:57 PM
அடையும்வரை முயல்வாய்நிதம் அயராமலே உளத்தில்
படைகள்பல நகரும்வகை பலவாயொலி எழுப்பி
நடையாய்மனக் கனவைமிக நயமாகவே செதுக்க
விடையாகவே வருமேமிக வெற்றியேஅதை உணர்வாய்

pavalamani pragasam
13th October 2014, 08:18 AM
உணர்வாய் உறங்கும் உன் பலம்
அனுமன் தோளை சிலிர்த்தால்
சிரஞ்சீவியும் சுமையல்லவே
கையில் உள்ளது வெண்ணெய்

chinnakkannan
14th October 2014, 01:56 PM
வெண்ணெய் எடுப்பதற்காக
மத்தைத் தயிர்ப்பாளத்தில் போட்டு
ர்ர் எனத்தாளத்துடன்
மத்தால் சுழற்றி
மேலெழுந்து வரும்
உதிரிப் பூக்களை பக்குவமாய்ச் சேர்த்து
அருகில் இருக்கும்
தண்ணீர்ப் பாத்திரத்தில் போடுவாள் பாட்டி..

கொஞ்சூண்டு
ஒரு கோலிக்குண்டு சைஸ்
கிடைக்கும் எனக்கு
அவளுக்கு மனமிருந்தால்..

இல்லையென்றால்
போடா..பட்சணம் பண்ணனும்

இருந்தாலும் அந்தக்
துக்கிணியூண்டு வெணணெய்
சுவையோ சுவை..
தாங்க்ஸ் பாட்டி என்றால் ஓ
போடா பெரிஸ்ஸா இங்க்லீஷ் பேசறான் என்பாள்..

இப்பொழுது
எவ்வளவோ முன்னேறி
ஃப்ரீஸரில் வைக்கும்
வெண்ணெய்க் கட்டிகள்
சுவையாய்த் தான் இருக்கிறது
பாட்டியின் பாசம் மட்டும்
மிஸ்ஸிங்க்..

pavalamani pragasam
14th October 2014, 05:48 PM
மிஸ்ஸிங்க்..ஏதோ மிஸ்ஸிங்க்..
கச்சிதமாய் கலரிங்க் ஷேடிங்க்
நேத்து பண்ணிய த்ரெடிங்க்
பாத்து செய்த ஷாம்பூ வாஷிங்க்
புள்ளியாய் புருவ மத்தியில்
மம்மிக்காக பொட்டு ஸ்டிக்கிங்க்
கண்ணாடி சொல்லுது சம்திங்க்
தப்பாய் முகத்தை காட்டுது
செய்தேன் கொஞ்சம் ஸ்மைலிங்க்
நினைவில் நேற்றைய கிஸ்ஸிங்க்
அடடா அழகாய் முகத்தில் சம்திங்க்
பெண்ணாய் என்னை மாத்தி
இப்போ ஆனது முகம் முழு மதி

chinnakkannan
15th October 2014, 01:41 PM
முழுமதி நீயென்றால் முகிலென நான்வந்தே
..மோகமாய் முத்திட்டு முழுவதும் அணைத்திடுவேன்
பழுதிலை என்றெல்லாம் பாவைநீ கேட்குங்கால்
..பதறினற் போல்நடித்தே பக்குவத்தைக் கூட்டிடுவேன்
வழுவுதல் தவறென்றே வாதிட்டுப் பேசுங்கால்
..வஞ்சியுன் இடைதொட்டே வாகாக இழுத்தபடித்
தழுவியே தக்கபடி சொல்வதற்குப் பார்த்தாலோ
..தயங்கியே நழுவுகிறாய் நியாயமிலை அடிபெண்ணே..!

pavalamani pragasam
15th October 2014, 02:23 PM
அடிபெண்ணே ஆதங்கமேன்
உலகை எழுப்பும் சேவல்
அகங்காரம் அதன் கூவல்
பெட்டை நீயிடுவாய் முட்டை
பொறுமையாய் காப்பாய் அடை
இனத்தை காக்கும் உன் குணம்
அதற்கு துப்பில்லா ஆணினம்
அதனோடு ஏன் வீண் மோதல்

chinnakkannan
19th October 2014, 12:53 PM
மோதலில் ஆரம் பித்தோம்
...மோகினி நானும் நீயும்
சோதனை யாக வந்த
...சூழலும் அந்த நேரம்
வேதனை தந்த பின்பு
..வென்றது நெஞ்சை அன்றோ..
காதலைக் கொண்டு விட்டோம்
..கடிமணம் செய்வ தெப்போ

pavalamani pragasam
19th October 2014, 04:27 PM
எப்போ வருமென
ஏங்கி தவித்து
வாடி வதங்கி
வருந்திய பின்னே
வந்த மழையும்
விடாது பெய்ய
விடிய விடிய கொட்ட
அதுவும் வருத்தமே
பொல்லா மனக்குறை
கூட வரும் நிழலோ

chinnakkannan
1st November 2014, 06:26 PM
நிழலோ நிஜமோ
எனத் தெரியவில்லை தான்..
கருகருவெனக் கூந்தல்
கண்களில் பளீர்
கொஞ்சம் வெளிர்சிவப்பு உதடு
முன்பு சேலை கட்டுவாய்
இன்றோ சுடிதார்..
ஆனால் எனக்கு வயதானது போல்
ஏன் உனக்காகவில்லை..
முகத்தில்
டன் டன்னாய் இளமை..
எப்படி
ஹாய் என்னை
என நான் ஆரம்பிக்க
உன்னிடமிருந்து சிரிப்பு..
தெரியும் அங்க்கிள்..
அம்மா சொல்லியிருக்கிறார்கள்..

சின்னதாய் வழியத் தான் முடிந்தது..

pavalamani pragasam
2nd November 2014, 09:40 AM
முடிந்தது ஆகிறது முடியாதது
முதுமையின் ஆதிக்கமாகிறது
பிடித்தது ஆகிறது பிடிக்காதது
பித்தும் பிடிவாதமும் கூடுது
பயணம் நெடுகிலும் தடைகள்
போராட்டம் மட்டும் தொடருது

chinnakkannan
2nd November 2014, 11:46 AM
தொடருது
கவலைகள்
சந்தோஷங்கள்
நினைவுகள்
வேதனைகள்
சுழன்று சுழன்று
சுழலாய்

தெரியவில்லை
என்று நிற்கும் என..

pavalamani pragasam
2nd November 2014, 05:08 PM
நிற்கும் என நினைத்த இடத்தில் நிற்கவில்லை ஊர்தி
விற்கும் என நினைத்த கடையில் விற்கவில்லை வடை
நினைப்பது நடக்காமல் போனால் மிஞ்சும் ஏமாற்றம்
நினைக்காமல் நடக்கும் பல அதிசயங்கள் யதார்த்தம்

chinnakkannan
2nd November 2014, 10:01 PM
யதார்த்தமென நானுமங்கு ஏதேதும் அறியாமல்
சதாயெதையோ நினைப்பதுபோல் அமர்ந்ததுஏன் அம்மானை?

சதாயெதையோ நினைப்பதுபோல் அமர்ந்ததுநீ இருந்தாலும்
சதாகாலம் தொடர்ந்துவரும் கதையதுவே அம்மானை?

கதாகாலட் சேபமிலை காதலது அம்மானை!

pavalamani pragasam
3rd November 2014, 08:22 AM
அம்மானை ஆடி
ஆலவட்டம் சுத்தி
கிளித்தட்டு தாவி
கண்ணாமூச்சியில்
களித்த காலத்திலே
கண்ட சொர்க்கம்
விரல் நுனி ஆடும்
ஆட்டத்தில் இருக்குதா

chinnakkannan
3rd November 2014, 11:33 AM
இருக்குதா என்று கேட்டால்
...இல்லைபோல் முகத்தைக் காட்ட
விறுக்கென விரல்கள் விரித்து
..வேகமாய்க் காட்டி அங்கே
நறுக்கென இருக்கும் மிட்டாய்
.. நயமுடன் சிரிக்க மேலும்
களுக்கென உந்தன் சிரிப்பு
..களிகொளும் மனதை என்றும்..

pavalamani pragasam
6th November 2014, 12:32 PM
என்றும் பழசின் மதிப்பு பெரிசுதான்
எங்கோ சாலையை வெட்டி மராமத்து
அதனால் நடந்தது இணைய துண்டிப்பு
பாழாய் தோன்றின என் பொழுதுகள்
பழக்கம் மறந்த தோட்ட வேலைகள்
பழக இனிய குடியிருப்புவாசிகள்
நூலகத்திலெடுத்த கதை புத்தகங்கள்
பாழாய் போன புது பித்தான இணையம்
பிடுங்கி நட்டுவிட்டது வேறுலகில்
பொய்யான மாய சொர்க்கத்தில்

AREGU
22nd November 2014, 02:50 PM
அம்மானை ஆடி, ஆலவட்டம் சுத்தி,கிளித்தட்டு தாவி, கண்ணாமூச்சியில் களித்த காலத்திலே கண்ட சொர்க்கம், விரல் நுனி ஆடும் ஆட்டத்தில் இருக்குதா..?

கவிதை..?

சூப்ப்ப்ப்ப்பர்..!

pavalamani pragasam
23rd November 2014, 06:28 PM
நன்றி, aregu! அதென்ன எடிஎம் அட்டையில் பணம் எடுத்த சாதனை? புரியலியே!

kirukan
29th November 2014, 11:54 AM
சொர்க்கம் கிடைக்க வேண்டி வாழ்வை
நரகமாக்கல் மனித மடமை.

-
கிறுக்கன்

pavalamani pragasam
29th November 2014, 08:21 PM
மடமை என்றால் என்ன
ரசனை மாறிய காலத்தில்
புதுமை எடுக்கும் கோலத்தில்
கவிதை என்ற பெயரில்
கால் மொளச்ச ரங்கோலி
என முழங்க கேட்கையில்
மனம் உணரும் வெறுப்பு
மகிழ மறுக்கும் கிறுக்கு

chinnakkannan
30th November 2014, 02:31 PM
கிறுக்கென்றாள் கண்களிலே கோபமதைத் தக்கவைத்து
..கீச்செனவே குளிர்குரலில் சொன்னதனைக் கேட்டபின்னர்
கிறுக்கென்றேன் உன்மேலே எதனாலே சொல்லிடவா
..கீற்றாகப் பிளந்திருக்கும் வெண்ணிலவுப் புன்னகையும்
விருப்பமுடன் தாளமுடன் அசைகின்ற பின்னலுடன்
..வீச்செனவே தெறித்தேதான் மிரட்டுகிற பார்வையுடன்
திரும்பவைக்கும் பேரெழிலும் மென்னடையும் என்னெஞ்சைத்
..தீண்டியதால் என்றாலோ காட்டுகிறாய் வக்கணையை..

pavalamani pragasam
30th November 2014, 09:40 PM
வக்கணையை ஒழித்து வைத்து
வாயை இறுக மூடிக் கொண்டு
வந்த விருந்தினரை உபசரித்து
வழக்கமில்லா வழக்கமாயவள்
வருத்திக்கொண்டதை கண்டு
வெடிக்கப்போகும் எரிமலை
விளையப்போகும் விபரீதம்
விதிமுறைகள் மறப்பேனோ

chinnakkannan
3rd December 2014, 12:31 PM
மறப்பேனோ எனக்கேட்டால் ம்ஹூமில்லை..
..மயங்கவைத்த வார்த்தைகள்தாம் அறிவீர் நீரே
துறந்திடவும் நானுமொன்றும் புத்தனுமில்லை
..தூயவெண்ணம் கொண்டவசை என்றால் இல்லை
புறம்பேசும் மக்களென்றா அதுவும் இல்லை
..புன்சிரித்துப் பேசிநின்ற நண்பர் தாமே
சுரவுளறல் போற்சொன்ன வார்த்தை நெஞ்சில்
..சுடுகிறதே என்னாளும் என்செய் வேனே..

என்செய்வேன் என்றிருந்து நின்ற காலம்
..இளங்கன்றாய்த் துள்ளும்போது இருக்க வில்லை
வன்மமிகு நல்லுலக வாழ்க்கை தன்னில்
..வாகாகக் கற்றதிலும் இருந்தி டவில்லை
திண்ணமென எவரெனையும் இகழ வுமில்லை
..சீயென்றே சொல்லுமனம் இருந்த துமில்லை..
எண்ணமெனச் சொன்னவரை மாற்றங் கொள்ள
..எழுதவேணும் பலவிதமாய் அருள்வாய் வாணி..

pavalamani pragasam
3rd December 2014, 07:42 PM
வாணி என்றெந்தன் பேர் சொல்ல
வா நீ என்றுரிமையோடழைக்க
வாழ்வை என்னோடு பகிர்ந்திட
வாழ்த்தவேண்டும் உறவெல்லாம்
வாழை மரம் நட்டு மேடை கட்டு
விருந்துண்ண அனுப்பு அழைப்பிதழ்

chinnakkannan
4th December 2014, 11:18 AM
அழைப்பிதழ் தரவே வந்த
...அழகியல் சற்று நாணி
வலைவிடும் கண்ணால் பேசி
..வாழ்த்திட வருக என்றாள்
கலைகளும் சிறப்பும் இன்னும்
..க்ன்னிநீ பெறுவாய் என்றேன்
நிலைத்திட நேரில் வந்தால்
..நினைவினில் இனிக்கும் என்றாள்..

pavalamani pragasam
4th December 2014, 06:32 PM
இனிக்கும் என்றாள் அந்த பழக்காரி
இருந்தாலும் எனக்குள் அவநம்பிக்கை
இதற்குமுன் நானிருந்த என் மாளிகை
இகலோகம் காணா இனிப்புடை கனிகள்
இச்சையுடன் நான் உண்ட பழ வகைகள்
இன்னும் அழியாமல் ருசிக்குதென் நாவில்

chinnakkannan
8th December 2014, 02:11 PM
நாவில் எழுதி விட்டு நங்கை சென்ற பின்னர்
பாவில் ஆரம் பித்தே பாங்காய்ச் சொன்ன வண்ணம்
மேவிப் பலவூர் சென்று மயக்கும் கவிதை நெய்தே
தூவினான் கவிமலர்கள் தூயவன் காளி தாஸே

pavalamani pragasam
8th December 2014, 07:15 PM
காளி தாஸே மனம் கசந்து போவான்
இன்றவன் கவிதையும் கதையும் எழுதி
இலக்கிய ரசனையற்ற "மேதைகள்"தான்
மதிப்பெண் வழங்கும் நீதிபதிகளாய் இங்கு
அழைக்கப்படும் அவலம் நிலவுதல் கண்டு
கழுதைக்கு தெரிவதில்லை கற்பூர வாசனை

chinnakkannan
5th January 2015, 03:10 PM
வாசனை தூக்கத் தூக்க
செண்ட் போட்டு க் கொண்டு
வருவாள் எதிர் ப்ளாட் ஆண்ட்டி..
ஆனால்
மிகப்பெரிய பீரோ
கட்டில்
மற்றும் பல பொருட்கள்
சுமந்து இறக்கி வைத்த
கூலியாட்கள்
கொஞ்சம் காப்பிச் செலவுக்குக்
கொடுங்க என்ற போது
முடியாது போப்பா கூலி மட்டும் தான்
என்ற போது
அவளது செண்ட்டின் மணம்
மறைந்திருந்தது..

pavalamani pragasam
5th January 2015, 07:37 PM
மறைந்திருந்தது என்ன
அறிவாயா ஆண்மகனே
பிறந்த வீட்டை மாற்றி
பின்னுள்ள பெயரை மாற்றி
வாரிசுகளை பெற்றெடுத்து
கொடியுடை தொலைத்து
சுய விருப்பங்கள் மறந்து
பழைய நட்புகள் துறந்து
பம்பரமாய் என்றும் சுழன்று
பளிச்சென பொழுதும் நின்று
நட்ட இடத்தில் தழைத்து
அல்லும் பகலும் உழைத்து
அலுப்பும் களைப்பும் மறைத்து
பழகிய பல செலவை குறைத்து
உன் வீட்டை துலங்க வைக்கும்
உன்னவளின் உள்ளத்தின் உள்ளே
உள்ளது வெறும் சின்ன ஆசைகள்
அன்பான ஒரு வார்த்தை போதும்
ஆதரவாய் அரவணைப்பே தேவை
அறிவாய் பெண்ணின் பெருமை
போற்றுவாய் அவள் அருமை

chinnakkannan
5th January 2015, 10:09 PM
அருமை என்றெல்லாம்
சட்டென்று
சொல்லமாட்டார் தாத்தா..

மைசூர்பாகென்றால் ஒரு விள்ளல்
லட்டு என்றால்
பிடிப்பதற்கு முற்பட்ட பூந்தி
காராசேவ், ஓமப் பொடி எல்லாம்
ஒரு குட்டி ஸ்பூன்
தட்டை பாதி மட்டும்

எது செய்தாலும்
சுவை தெரிய முதலில்
தந்தாக வேண்டும்

கொடுத்துப் பயத்துடன்
பார்க்கும் பாட்டிக்கு ஒரு
அலட்சியப் பார்வை
பின்
வரும் பலவிதமாய்..
உப்புக் கம்மி
உரைப்பு அதிகம்
இப்படியா கடக்குன்னு பண்ணுவா
பல் என்னாறது..
ஒரே நெய் திகட்டுது
சர்க்கரை கம்மி
என..

ஒரு நாளும் பாராட்டியதில்லை
பாட்டியை..

பாட்டிக்கு அதுவே போதும்
பிர்ம்மானந்தம்..

ஒரு நாள்
திடீர் நெஞ்சுவலியில்
சோபாவில் சாய்ந்தவர்
அருகில் வந்த பாட்டியிடம்
கொஞ்சம் கண்கள் குழறிப்பார்க்க
பேச்சு மட்டும் திடமாய்
“பாத்துண்டியேடி என்னை அருமையாய்..”
சொன்னார்…
போய்விட்டார் …

pavalamani pragasam
6th January 2015, 06:41 PM
போய்விட்டார் பயந்து பணிந்த பாவையர்
தொழுவில் கட்டிய பசுக்கள் இங்கில்லை
வெருட்டி விழித்து விவாகரதத்தென்று
வீராப்பாய் மீசை முறுக்கினால் இன்று
ஆஹா எவ்வளவு எனக்கு ஜீவனாம்சம்
விட்டு விடுதலையாகி பறப்பாளே பூவை

chinnakkannan
6th January 2015, 09:57 PM
பூவை அவள்விழியில் பொங்கிவிட்ட எண்ணமென்ன
..புதிதாய்த் துளிக்கின்ற நீர்த்துளியின் சாரல்கள்
பாவை கன்னத்தில் மெளனித்து இறங்குவதும்
..பார்வை வெகுதூரம் வானொட்டிப் பார்ப்பதுவும்
தேவை என்னவெனக் கேட்டாலும் கூறாமல்
..தென்னை மரமெனவே நிற்கின்ற நிலையதுவும்
நாவைத் திறந்துமொழி சொன்னால்தான் தெரியுமெனில்
.. நங்கை நிற்கின்றாள் நாயகனை உள்ளிருத்தி..

pavalamani pragasam
7th January 2015, 08:48 AM
உள்ளிருத்தி பத்திரமாய்
திரையிட்டு பாதுகாத்து
பூஜிக்கும் தெய்வமே
என் செல்ல சுய கர்வமே

chinnakkannan
7th January 2015, 11:45 AM
கர்வமே கொண்ட ராவண்
..கண்களால் விழித்து அந்த
அர்த்தமும் பொருளும் பூண்ட
..அகத்திய முனியை வீணை
முற்றிலும் இசைக்க வைத்து
..முடிவுடன் தானும் செய்ய
வெற்றியாய் மலையும் உருக
..வீழ்ந்ததே ஆண வம்தான்

pavalamani pragasam
7th January 2015, 09:11 PM
ஆணவம்தான் வேறென்ன
உண்மை உரைக்க பயமென்ன
செவிட்டு பாவனை காட்டி
தன் பாதையில் பிசகாது
அப்பாவியாய் ஒரு முகம்
அமுக்கமாய் தன் குறியில்
குவித்த முழு முனைப்பு
மௌனமாய் சாதனை
ஆணுக்கு வெறும் சத்தம்
பெண்ணுக்கு பல ஆயுதம்

chinnakkannan
8th January 2015, 10:06 PM
ஆயுத மென்று வில்லை
..அழகுறப் பின்னால் வைத்து
தேயுதே பொழுது என்று
..தேம்பியே கதிரோன் நிற்கும்
சாய்ந்திடும் மாலை ராமன்
..சட்டென விழியு யர்த்த
பாய்ந்ததே சீதை பார்வை
…பற்றினான் அவளை நெஞ்சில்

pavalamani pragasam
9th January 2015, 08:35 AM
நெஞ்சில் கபம்
கொடியதோர் சாபம்
உலுக்கும் இருமல்
நாட்டு காட்டு மருந்து
அனைத்தும் முயன்றும்
இல்லையோர் பலன்
சாவின் விளிம்பில்
ஊசலாடும் உயிர்
கொல்லாமல் கொல்லும்
கொடியதோர் வதை
உச்சி வான் ஓசோன்
உடம்புக்கு நல்லதாம்
தரையில் உலாவுவது
இப்படி வாட்டுமாம்
பனி வாடை காத்து
பக்குவமாய் இருந்து
தப்ப முடியவில்லை
மூப்புடன் கைகோர்த்து
மார்கழி இளிக்கிறது
மூச்சிரைத்தே சாவதல்ல
என் இறப்பின் கனவு
மதியை வெல்லும் விதியே
ஏன் என்னை சோதிக்கிறாய்

chinnakkannan
9th January 2015, 01:42 PM
சோதிக்கிறாய் சுடரேந்திய சேல்விழிகளைக் கொண்டே
மேதினியில் மென்மூச்செலாம் குளிர்தென்றலாய் ஆக்கி
சேதிசொலும் உணர்வைநிதம் செழிப்பாய்க்கலைத் திங்கே
வாதியென வாதம்பல புரிகின்றனை அழகே

pavalamani pragasam
9th January 2015, 04:43 PM
அழகே தன்னை அறியாது
காண்பவரே பாக்கியசாலி
முழுதாய் ரசிக்கவல்லார்
சால சிறந்ததும் அதுவே
தன் அழகில் சொக்கியவன்
கண்ணெடுக்காமல் ஏங்கி
உருகியே செத்தொழிந்தான்
கருத்துள்ள கதை தான்
இறைந்து கிடக்கு அழகு
பக்குவமாய் பருகப் பழகு

chinnakkannan
9th January 2015, 06:42 PM
பழகு எனச்சொன்னீர் பக்குவமாய் நயந்தே
அழகாய்க் கவித்துவமாய் அங்கே – நலத்துடனே
பேசினேன் அப்பா பெரிதாய்ப் பயனில்லை
ஏசுகிறார் என்கணவர் ஆம்..

pavalamani pragasam
10th January 2015, 10:46 AM
ஆம் என்றால் ஆமாம்தானா
இல்லையென்றால் இல்லைதானா
வஞ்சியரின் வார்த்தையிலே
அர்த்தமும் அகராதியும்
வேறென்ற விபரமறிவான்
அனுபவசாலி ஆண்பிள்ளை

chinnakkannan
10th January 2015, 11:50 AM
ஆண்பிள்ளை வேண்டு மென்று
..அரசினைச் சுற்றி ச்சுற்றி
வீண்பேச்சுப் போல நெஞ்சில்
..வியத்தகு ஆசை கொண்டு
ஊண்முழுதும் விரதம் மங்கை
..ஒட்டியே செய்த காலம்
வேண்டாமல் போயே போச்சு..
..பெண்வரம் கேட்க லாச்சு

pavalamani pragasam
10th January 2015, 04:56 PM
கேட்கலாச்சு குத்தல் பேச்சு
மாமியும் நாத்தியும் பிசாசு
குறை சொல்வர் மூச்சுக்கு மூச்சு
வாய்த்தது களிமண்ணாய் ஆச்சு
மொத்தமாய் நிம்மதி போச்சு
வந்தவளுக்கு வயசுமாச்சு
வாழாமலே வெந்துபோயாச்சு
வீணாகுமோ அவள் பெருமூச்சு

chinnakkannan
11th January 2015, 07:45 PM
பெருமூச்சு சிறுமூச்சு விட்டு விட்டே
…பெரியவளும் ஓடிவந்தாள் என்னைக் கட்டி
விறுவிறுப்பாய் முகமாற்றம் செய்த வாறே
…வேகத்தில் சொல்லிவிட்டாள் குற்றந் தன்னை
சிறுபெண்ணும் முகங்கோணி நெருங்கி வந்தாள்
..தீர்க்கமாகத் தமக்கைபொய் சொன்னாள் என்றே
துறுதுறுத்த கண்களிலே நீரும் ஓட..
..துன்பத்தில் அவள்சொலவும் எடுத்தேன் தூக்கி

பெரியவளே வாயிங்கே எனக்கூப் பிட்டால்
..பிகுபலவும் செய்தவண்ணம் வந்தாள் பின்னர்
தெரியும்ப்பா எப்போதும் குட்டிப் பெண்ணைக்
..திகட்டாமல் சீராட்டிச் செல்வீர் என்று
சிரித்தேன்நான் மனக்கவலை மறந்து போக
…சின்னவளே பெரியவளே நீங்கள் எந்தன்
பிரியாத விழிகளன்றோ சொல்லும் போதில்
…பிரியமான மனைவிகேட்டாள் நாந்தான் யாராம்..?!

pavalamani pragasam
12th January 2015, 10:31 AM
யாராம் வெல்வது
சக்தியா சிவனா
சிவனென்பது கதை
நம்புபவன் பேதை

chinnakkannan
12th January 2015, 08:24 PM
பேதை எனச்சொல்வீர் பல்விதமாய் என்னிடத்தில்
..பெண்ணே நீயின்னும் வளரத்தான் இல்லையென
வாதை வாலிபத்தில் வாட்டாமல் இருந்திடுமோ
..வஞ்சி உன்னிடமே மையலது கொண்டதுவும்
போதை நெஞ்சினிலே நீர்கொள்ள வேண்டாமே
..பொறுமை மிகக்கொண்டு என்னழகை என்படிப்பை
சீதை போல்குணத்தை எந்தந்தை செல்வத்தை
..சிந்தை கொண்டிடுவீர் சொல்லிடுவீர் பதிலைத்தான்..


பதிலைத்தான் கேட்கின்றாய் அழகாக பாவாய்..
..பார்த்தவிழி மூடாத பேரழகுப் பெண்ணே
நதியைப்போல் நங்கையுந்தன் உடலோடும் நாணம்
..நன்றாகத் தெரிகிறது உன்வார்த்தை தன்னில்
விதிசெய்த கோலமெனச் சொல்லத்தான் செய்வேன்
..விழிமீனால் பேசுகின்ற உன்னிடமே பெண்ணே
மதிவதனங் கொண்டவொரு மங்கையிடம் முன்பே
..மனதைநான் கொடுத்துவிட்டேன் மன்னிப்பாய் பெண்ணே..

pavalamani pragasam
13th January 2015, 10:08 AM
பெண்ணே சின்னப் பெண்ணே
கண்ணே செல்லக் கண்ணே
விளையாட்டுக்குண்டு விதி
உனக்கு மட்டும் தனி வழி
வென்றுவிடுகிறாய் தாத்தாவை
மெச்சுகிறேன் உன் சமர்த்தை

chinnakkannan
13th January 2015, 11:52 PM
சமர்த்தை
மெச்சிக்கணும்
என்பாள் சித்தி அடிக்கடி
அவள் பேச்சில் அடிபடுவது
சித்தப்பா..
வெண்டைக்காய் இரும்புக் கம்பி
கொத்தவரங்காய் நேராய்க் காயலாம்
வாழக்காய் கருத்திருக்கு
ஆப்பிள் ஒரே புளிப்பு
ஒண்ணு பாத்து வாங்கத் தெரியுதா
மனுஷனுக்கு..

சின்னப் பிள்ளைகளாய்
நாங்கள் பேசாமல் இருந்த காலம் போய்
ஆறாப்பு படிக்கும்போது
ஒரு நாள் சித்தி பையன்
சொல்லியே விட்டான்
ஆ,மாம்மா நீ சொல்றது சரி..
என்னடா சொல்ற
கேட்ட குரலில் கனல்..
பின்ன
சமர்திருந்தா உன்னைக்கட்டியிருப்பாரா

முதலில் விழிசிவந்த சித்தி
அதன் பின்
பேசுவதில்லை அந்த வார்த்தை.

pavalamani pragasam
14th January 2015, 10:22 AM
வார்த்தை கொட்டும் அருவியாய்
வண்ணங்கள் அதில் மிளிரும்
தடையில்லா அக்காட்டாற்றில்
உருண்டு வரும் கற்பனைகள்
திகட்டாத தூய கற்கண்டுகள்
மொழியின் எண்ணற்ற அழகுகள்
வழங்கும் அரிய பெரிய வரகவிகள்
என் மனம் கவர்ந்த தெய்வங்கள்

chinnakkannan
15th January 2015, 10:27 AM
தெய்வங்கள் எல்லாம் உன்னைத்
.தேடித்தான் அருகில் வந்து
பொய்யேதும் கண்டி டாத
…பூப்போன்ற மெலிய நெஞ்சின்
தொய்வேதும் கொண்டி ராத
..தூய்மைகள் கொண்ட வெண்மை
பெய்திடும் தன்மை கண்டே
..பெருமைகள் கொண்டு நிற்கும்..

குழவியாய் இருக்குங் காலம்
..குறுகுறு விழிகள் கொண்டே
உழன்றிடும் விளையாட் டுக்காய்
.உணர்விலே விஷமம் மட்டும்
கலகலப் பான தன்மை
…கண்களில் கவிதை பேசும்
நலமுடன் இருக்க அன்னை
..நயமுடன் வளர்ப்பாள் உன்னை..

pavalamani pragasam
16th January 2015, 07:27 PM
உன்னை சுற்றிய உலகம்
உண்மையில் ஒரு பம்பரம்
உற்சாகமாய் அது சுற்றும்
சாட்டை கயிறுன் சுற்றம்

chinnakkannan
16th January 2015, 08:48 PM
சுற்றமும் நட்பும் வந்து
…சுற்றியே நின்றி ருந்து
உற்றநல் லெண்ணங் கொண்டு
…உணர்வுடன் ஆசி கூற
பற்றினேன் உந்தன் கைகள்
…பாவையே சேர்ந்தோம் இன்று
பற்றுடன் இனிதாய்த் தானே
…பக்குவம் பெறுவோம் பாரில்

pavalamani pragasam
18th January 2015, 01:12 PM
பாரில் தான் காண எத்தனை வேடிக்கை
கிடைக்கப் பெற்றேனொரு வாட்ஸப் வீடியோ
கொண்டை வைத்த பெரிய கிளியொன்று
உடம்பை குலுக்கி குலுக்கி ஜோராய் ஆடுது
பின்னால் ஒலித்த லுங்கி டான்ஸ் பாட்டுக்கு
விந்தை நிறைந்த உலகமிதை வியக்கிறேன்

chinnakkannan
18th January 2015, 09:54 PM
வியக்கிறேன் வெண்ணிலவே உன்னழகை எனச்சொன்னாய்
…வீண்பேச்சா அறியாமல் விழுந்தேனே வலைக்குள்ளே
பயமென்ன பாவைக்கு பார்த்துவிடு விழியிலென்றாய்
…பார்த்ததனால் நோக்கிழந்த பாவியென ஆகிவிட்டேன்
நயத்துடனே தான்சொன்னாய் நங்கைநீ கலங்காதே
..நாயகனாய் நான்வருவேன் என்றெல்லாம் நவின்றிடவும்
சுயமிழந்தேன் சொக்கியுனை நெஞ்சினிலே தான்வைத்தேன்
…சொல்லாமல் போனவிதம் மன்னவனே நானறியேன்..

pavalamani pragasam
19th January 2015, 11:27 AM
நானறியேன் உலகம் செல்லும் திசை
சிறு வயதில் படித்தேன் பூகோளத்தில்
கிழக்கே ஜப்பானில் நாள் பிறக்கிறது
மெதுவாய் மேற்கும் கண் திறக்கிறது
கடிந்து விரையும் நவீன வான ஊர்திகள்
விரலால் நொடியில் தொலைதொடர்புகள்
கிழக்கு மேற்கு பார்க்கவேண்டாம்
தெற்கு வடக்கு தெரியவேண்டாம்
கிராமமாய் சுருங்கிய கோளமிதில்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மெய்யானது மூத்த தமிழன் வாக்கு
வேகமிது கொஞ்சம் அச்சமாயிருக்கு

chinnakkannan
19th January 2015, 09:54 PM
அச்சமா இருக்குதுன்னு அகலமாய் விழிகாட்டி
…அருகேதான் துள்ளிவந்து அணைச்சது நினைப்பிருக்கா
துச்சமா நினைப்பேன்னு தூக்கலாய்ப் பார்வையொண்ணு
..சும்மாதான் மாமான்னு சோடிச்ச நினைவிருக்கா
மிச்சமா தரமாட்டேன்னு மலங்கவே முழிச்சவண்ணம்
..மீண்டுந்தான் அழுந்திமுத்தம் பதிச்சியே நினைப்பிருக்கா
சொச்சமாய் இடிமழைப்போது கூட்டுதே ஒன்நெனப்ப
.. தொக்கித்தான் நிக்குதுபுள்ள நெஞ்சிலுன் நெனப்புமட்டும்

pavalamani pragasam
20th January 2015, 09:27 AM
நெனப்புமட்டும் குமரின்னு கும்மாளமா
குத்துது குடையுது குறுக்கும் மூட்டும்
பத்து நாள் மகன்கள் வீட்டில் கூடியாடி
இப்பாடு என்றால் அக்கரை போவதெப்படி
அமெரிக்க மகளுடன் குலவுவதெப்படி
மனம் குதித்தாலும் கடுப்பு என்னுடம்பு

chinnakkannan
21st January 2015, 06:09 PM
என்னுடம்பு என்னழகு என்றெல்லாம் தான்நினைத்து
..மென்னுடம்பை புண்ணாக்கல் நியாயமா - அடி
என்கனவை நீகரைக்க லாகுமா

வெண்ணிலவு மிகவளர்ந்து முழுநிலவாய் ஆவதுவும்
.வேகமாகத் தேய்வதுவும் இயற்கையே - சகி
பெண்ணிலவு நீமறக்க லாகுமா

சொன்னதுயார் செயற்கையிலே அழகெல்லாம் மிளிருமென
..சொல்லிவிடு என்னினிய பைங்கிளி - பின்
மின்னலெனக் கேட்டிடுவேன் அவரையே..

வண்ணமிகு இதழைவிட மழைத்துளியாய் தாமரையில்
..வக்கணைகள் செய்யுமிதழ் பிடிக்குமே - சகி
அன்னநடைப் பெண்ணுனக்குத் தெரியுமே!

pavalamani pragasam
21st January 2015, 08:13 PM
தெரியுமே தெள்ளத்தெளிவாய்
சமுதாயத்தின் மேடுபள்ளங்கள்
அலமாரி நிறைக்கும் சேலைகள்
இரண்டாம் முறை உடுத்த அலுப்பவை
மாற்றுத் துணியில்லா அபலைகள்
ஜனநாயகத்தின் கொடிய அவலங்கள்

chinnakkannan
21st January 2015, 10:59 PM
அவலங்கள் எல்லாமே அடியோடுதான்
..அவனியிலே எப்போதும் ஒழிந்திட வேண்டும்
புவனமிது பூலோகம் சொர்க்க மென்றே
…புவியதுவும் சீக்கிரமாய் மாறவேண்டும்
அவதிமிகும் கொடியநோய்ப் பேய்களெல்லாம்
…ஆர்ப்பட்ட மிட்டலறி ஓட வேண்டும்
நவதான்யம் மற்றுபல செல்வமெல்லாம்
..நரருக்கு அருள்புரிவாய் சக்தி யம்மா

pavalamani pragasam
22nd January 2015, 08:11 AM
சக்தியம்மா ஊறுதம்மா
உச்சி முதல் பாதம் வரை
பிடித்த வேலைகள் இப்போது
பிடித்த சந்திப்புக்கள் இன்று
சவாலான சாதனைகள் பல
இருக்க தினமும் நல்ல நாள்

chinnakkannan
22nd January 2015, 08:33 AM
நல்லநாள் பார்த்திடவா என்று கேட்டால்
…நானென்ன சொல்லிடுவேன் அப்பா உங்கள்
வல்லமை நானறிவேன் வெளியு லகத்தில்
…வாகான தொடர்புகளும் தெரியு மென்றால்
பலமென நீர்நினைக்கும் விஷய மெல்லாம்
…பணத்தோடு சேர்ந்திருக்கும் படிப்பு என்றும்
அழகுடன் இருக்கின்ற மனமும் சேர்ந்த
..அற்புதமாம் நண்பனெனப் பார்ப்பீர் நீரே..

pavalamani pragasam
22nd January 2015, 07:00 PM
நீரே பகுத்தறிய வேண்டும்
நேரே மேலே கீழே உள்ளே
பரந்த மனதுடன் பார்ப்பீர்
யானை தடவிய குருடன்
ஓர் அரைகுறை அறிவாளி
தேவை நமக்கு முழுமதி

chinnakkannan
22nd January 2015, 08:34 PM
முழுமதி சிரிக்கும் நேரம்
…மூக்கிலே நகையும் மின்ன
சிலுசிலுக் காற்றும் மேனி
;...சிலிர்த்திட வைத்து உன்னைத்
தழுவிட நீயும் கொஞ்சம்
..தள்ளியே நின்று கொண்டே
குலுங்கிடச் சிரிப்ப தென்ன
..கூறிடு உண்மை தன்னை

காற்றினில் கலையும் கேசம்
..காரணம் தெரியும் அன்பே
கூற்றுவன் போலக் கண்கள்
.குட்டியாய் முகத்தில் தாடி
தீற்றலாய் நெற்றி வேர்வை
..திரிந்துதான் கன்னம் வீழ
சீற்றமும் கொண்ட வில்லன்
…சீரிய தோற்றம் கண்டேன்..

pavalamani pragasam
23rd January 2015, 08:52 AM
கண்டேன் மோடி மஸ்தான் வேலையென
அமெரிக்காவில் என் சுற்றம் நகைப்பதிலே
ஐபோன் ஐபாட் லாப்டாப் ஏதேனும் வேணுமா
ஒபாமாகிட்ட குடுத்தனுப்புறேன் என்கிறாள்
என் மகள் அங்கிருக்கும் தங்கை மகளிடம்
அவரிடம் பக்கோடா முறுக்கு வாங்கிவர
சொல்லியிருக்கேன் உனக்கென்ன வேணும்
என வினவ கோகோ மிட்டாய் தேன் மிட்டாய்
அவள் பதில் வருகிறது சும்மா பேசிவிட்டு
போகிறவர் செய்யட்டும் இதை என வாதம்
பிளேன் காலியாய் இருக்கும் நானும் போறேன்
அவருக்கு ஆலோசகராய் என்கிறார் மாப்பிள்ளை

chinnakkannan
24th January 2015, 02:39 AM
மாப்பிள்ளை இவரென்று தந்தை சொல்ல
.மணப்பெண்ணும் தலையாட்டும் காலம் போச்சு
வாய்ப்பில்லை இன்றிருக்கும் சூழல் முன்னர்
..வஞ்சியர்கள் தானெழுப்பும் கேள்வி முன்னே
ஆய்ந்தீரா யாரென்று அப்பா பின்னும்
..அவருடைய படிப்பென்ன மாதம் என்ன
ஏய்ப்பாரா என்றெல்லாம் பல்வி தமாக
..ஏந்திழையர் கேட்கின்றார் இக்கா லத்தில்.

pavalamani pragasam
24th January 2015, 08:31 AM
இக்காலத்தில் சொர்க்கத்தின் சாயல்
கடிகாரமும் நாட்காட்டியும் பாராமல்
உறங்க விழித்திருக்க தோன்றாமல்
அவசரமும் அவதியும் இல்லாமல்
தன சின்ன வட்டத்தை தாண்டாமல்
நீடிக்கட்டும் ஒய்வு காலம் கசக்காமல்

chinnakkannan
24th January 2015, 12:00 PM
கசக்காமல் இருப்பதற்குப் பாகற் காயை
..கடகடென்றே உப்புநீரில் ஊறப் போட்டு
பதமாக வெளியெடுத்து பேப்ப ரின்மேல்
..பக்குவாமய்ப் போட்டுவதைக் காய வைத்து
இதமாகச் சாம்பாரில் தானா கத்தான்
…இச்சையுடன் போட்டுவைப்பாள் பாட்டி அன்று
வசம்பாய்த்தான் கசக்குமென்று வாயிலிட்டால்
..வழுக்கிசெலும் சுவையாக வயிற்றுக் குள்ளே

pavalamani pragasam
24th January 2015, 06:59 PM
வயிற்றுக்குள்ளே பகாசுரன்
அது வளரும் பிள்ளைகள்
பசியெடுக்கா பருவமொன்று
அதன் பேர்தான் வயோதிகம்

chinnakkannan
25th January 2015, 08:33 PM
வயோதிகம் மெல்ல நடக்கும்
இளமை வேகமாய் ஓடும்

வயோதிகம் தேம்பி அழ வைக்கும்
இளமை கெக்கலி கொட்டிச் சிரிக்கும்

வயோதிகம் திரும்பிப் பார்க்கும்
இளமை முன்னே பார்க்கும்

வயோதிகம் சேச்சே
இளமை ஆஹா..

ஆனால் இளமையில் இல்லாதது
வயோதிகத்தில் உண்டு
அது
அனுபவம்…

pavalamani pragasam
25th January 2015, 08:47 PM
அனுபவம் இருக்காம் பெருசுகளுக்கு
முடி இல்லாதவனுக்கெதுக்கு சீப்பு
பல் போனவனுக்கெதுக்கு பக்கோடா
தான் பிடித்த முயலுக்கு மூணு கால்
அப்படித்தான் செய்வேன் போடா
யதார்த்தம் புரியாத தலைமுறை
அனுசரனையில்லா பிடிவாதம்
அகண்ட உலகமிதில் இக்காலத்தில்
அணுவளவும் உதவாத அனுபவம்
பார்த்து அனுபவிப்பவர்தான் பாவம்

chinnakkannan
25th January 2015, 10:38 PM
பாவந்தேன் இல்லேங்கல
பின்ன
நெதக்கும் இந்தக் குடிகுடிச்சுட்டு
புச்சு புச்சா
வெஞ்சனம் வேணுமின்னு
துட்டு கொடுக்காம
ஆர்ப்பாட்டம் பண்ணா
நா இன்னா செய்வேன்
அது இன்னா..பொரிமை
அதுக்கும் லிமிட் உண்டுல்ல
இன்னிக்கு வுட்டேன் பாரு ஒரு அடி
தாவாங்கட்டைல
சுருண்டுடுச்சு
கொஞ்சம் முழிச்சுட்டு
சர்த்தான் புள்ள நாளக்கி பாக்கலாம்னு
சொல்லிப்போட்டு
பாயப்போட்டு தூங்கிடுச்சு
குடிச்சுட்டு கொட்டிக்காம தூங்கினா
கொடல் என்னத்துக்காவாங்காட்டியும்
எய்ப்பினா ம்க்கும் எந்திரிக்கலையே
சரி சரி
நாளைக்கு வெரசா எந்திருச்சு
மார்க்கெட் போய் மீனு வாங்கி
இட்லி மாவும் அய்ர்வூட்ல வாங்கி
இட்லியும் மீன்கொயம்பும் கொடுக்கலாம்
பாவி மனுஷனுக்கு…
இன்னாங்கற…..

pavalamani pragasam
26th January 2015, 08:36 AM
இன்னாங்கற நா நெதமும் நடக்கணும்
என்னோட மூட்டுவலி மோசமாகாதுங்கற
பொத்தாம் பொதுவா சொல்லுற பத்தியம்
ஆச்சே எனக்கு ஆகாத வைத்தியம்
ஏட்டு சுரக்கா கறிக்கு உதவுமா தம்பி
நான் விழுந்து கெடுக்கவா அதை நம்பி
மூச்சுதான் வாங்குது இரைக்குது
இங்கிட்டும் அங்கிட்டும் தள்ளுது
நிமிர்ந்து நடக்கவே நடுங்குது
நாலு சுவத்துக்குள்ளே இக்கிழவி
புத்திசாலி பூனை நடையழகி

chinnakkannan
26th January 2015, 08:46 PM
நடையழகி தான்
ரெட்டைத் தெரு நாலாவது வீட்டு சுகந்தி

கொஞ்சம் தேர்
கொஞ்சம் தென்றலில் அடிபடும் ரோஜா
கொஞ்சம் சீறிச் செல்லும் சிறுத்தை
கொஞ்சம் தலைகுனிந்த சிந்தனை
கொஞ்சம் நேர்ப்பார்வை சுருள்முடி நெற்றியில் தவழ

விடலை வயதில்
வக்கீல் வீட்டு ராதாகிஷணுடன்
அந்தத் தெரு போனால்
பார்த்திருக்கிறோம் ரசித்திருக்கிறோம்.

இன்னிக்கு எப்படி நடப்பாடா..

ம்ம் வாத்து மாதிரி இருக்குமா என்றால்
செல்வா முறைப்பான்
அவனுக்கு அவள் மேல் கண்
எங்கள் வர்ணிப்புகள்
அவளுக்குத் தெரியுமாஎன்ன
எங்களுக்குத் தெரியாது

சூழ் நிலையில்
திருமணமாகி
அவள் வீட்டிலிருந்து
கிளம்பும் போதும்
நாங்கள் எதிர்வீட்டிலிருந்தோம்..

ம்ம் எங்கடா போறா
எங்கயோ விஸ்கான்சின்னாம்
எங்க இருக்கு
ஆஸ்த்ரேலியா என்றான்
முகப்ப்ரகாச செல்வா
என்னிடம்கிள்ளு வாங்கினான்
அது அமெரிக்காடா..

வெளியில் வந்தவள்
காரில் ஏறாமல் எங்களைப் பார்த்து
சாலையை க் கடந்து வந்து
“என்னை மறக்காதீங்கடா”
பேசிய முதலும் கடைசியுமான வார்த்தை

திரும்பிப் புள்ளிமான் துள்ளல் நடை
காரில் ஏறிச் சென்றுவிட்டாள்.

pavalamani pragasam
27th January 2015, 07:53 AM
சென்றுவிட்டாள் வேறகம்
வென்றுவிட்டாள் புது களம்
விம்மி புடைக்கும் தாய் மனம்
சுகமாய் சோகமாய் ஒரு கனம்

chinnakkannan
27th January 2015, 04:57 PM
கனமாய்த் தான் இருக்கும்
ஒவ்வொரு முறை
அக்கா வரும்போதும்
அவருடைய பெட்டி..

வேணாண்டா எனப் பதறப் பதற
காரிலிருந்து
தூக்கமுடியாமல் தூக்கி
வீட்டினுள் கொண்டு வைப்பது
ஒரு வித சுகம்..

அவரைப் பார்த்த மகிழ்வுடன்
எப்போது பெட்டி திறப்பார்
என்ற ஆவலும் கூடும்..

இந்தா இந்த ப்ளாக்ல டாட் வெச்ச
சட்டை உனக்கு
என
வந்த மாலைப்பொழுதில் நீட்டும் போது
பரம் குஷி..

ஒரு மாதம் ஓடிவிட
கிளம்பும் போது
பார்த்துப் படிடா..என்ன
அடுத்த வருஷம் தான் வருவேன்..
ஓகே என்ன வேணும் எழுது
ஒண்ணும் வேணாம்க்கா
ச் அப்படிச் சொல்லாதே
எழுது கொண்டாரேன்..

வாசிலில் கிளம்பி காரிலேறி
விமான நிலையத்துள் விட்டுத் திரும்ப
கனம் மறுபடியும் சூழும்
மனதுள்..

pavalamani pragasam
27th January 2015, 07:24 PM
மனதுள் மணக்குது
மதுரை மருக்கொழுந்து
மல்லிகை பூச்செண்டு
மருதாணி மனோரஞ்சிதம்
பவளமல்லி பாரிஜாதம்
ஜாதிமல்லி செண்பகம்
முகரத் திகட்டா கதம்பம்
பொத்தி வைத்த பொக்கிஷம்
மலரும் நினைவுகள் தரும்
பள்ளி மாணவர் சந்திப்பு

chinnakkannan
28th January 2015, 10:08 PM
சந்திப்பு ஏற்படுமென்று
நான் நினைக்கவேயில்லை
அவனும்

எவ்வளவு வருஷாச்சுடி
எங்க இருக்க மஸ்கட்டா
நான் இந்தக் கம்பெனி
உன்னவர்?
எத்தனை குழந்தைகள்
எனக்கு இவ்வளவு
எவ்ளோ நாள் இருப்ப
வேலை பார்க்கறியா
அவளும் வேலை பார்க்கறா..
அப்புறம்…

தொடர்ந்த உரையாடல்களில்
அவன் கண்கள்
பசும்புல்லைக் கண்ட மாடாய்
மேய்ந்தவண்ணம் இருக்க.
ஒண்ணும் டிஃபரன்ஸே இல்லடி உன்கிட்ட
ஜிம் போறியா என்ன..

ம்ம் யோகா ப்ளஸ் டயட்
,என்று மட்டும் சொன்னேன்..

நீ மட்டும் என்ன வாழுதாம்.
அப்படியே இருக்கடா
காலேஜ்ல படிச்சாமாரி….
ஆளைத் துளைக்கும் பார்வை..
சொல்ல நினைத்து விட்டுவிட்டேன்..

வயதானால் என்ன
வண்டு வண்டு தான்..

pavalamani pragasam
29th January 2015, 08:56 AM
வண்டு தான் காட்டும் சமத்துவம்
உண்டோ அதற்கு நிற பேதம்
தேடித் தேடி தேனை உண்ணும்
பரப்பும் பூமி எங்கும் மகரந்தம்
ஓயாத உழைப்பதன் ரீங்காரம்
சேவைகெடுத்த ஒரு அவதாரம்

chinnakkannan
29th January 2015, 10:19 AM
அவதாரம் எனக்கேட்டால் நீயே தோழி
..அழகான் அனுக்கிரகம் என்றே சொல்வேன்
புவனத்தில் கண்டிப்பாய் அப்பா போலே
...பூர்த்தியான அன்பினிலே அம்மா போலே
உவகைகளை உணர்த்துவதில் அக்கா தங்கை
..உள்ளத்தை வழிநடத்த அண்ணன் போலே
கவலைகளைக் கனவுகளைப் பகிரத் தானே
..கடவுளர்கள் அனுப்பிவைத்தார் எனக்கா கத்தான்

pavalamani pragasam
29th January 2015, 07:48 PM
எனக்காகத்தான் இங்கு எதுவும் மாறுமோ
கிழக்கன்றி மேற்கில் சூரியன் உதிக்குமோ
அலைகளும் கடலில் ஓய்ந்து நிற்குமோ
ஆற்றலேயில்லா அப்பாவியும் நானோ
மாறாத நியதிகளை இயற்கை விதிகளை
மதித்து ஒதுங்கி முரண்படாதிருப்பேனே
மாற்ற முடிந்த என் சூழலை அழகாக்கி
மாந்தர் தம் வாழ்வில் மேம்பட உதவி
மானிடப்பிறவியின் பலனை துய்ப்பதே
மகத்தான மதமும் மார்க்கமுமென்பேனே

chinnakkannan
31st January 2015, 12:44 PM
மார்க்கமுமென்பேனே..
எனில் இறைவன்
எல்லாப் பொருள்களிலும்
எல்லா உயிர்களிலும்
இருக்கிறான்
என மேடையில்
காலட்சேபக் காரர் சொல்லிக் கொண்டிருக்க
காலில் ஏதோகடிக்க..
பார்த்தால் எறும்பு
ஒரே நசுக் என ஒரு ஷணம் நினைப்பை
மாற்றி
கொஞ்சம் தள்ளிவிட்டேன் காலால்..
மனதுள் நிம்மதி
உண்மை தான்.
காதில் எப்போதும் கேட்கவேண்டும்
நற்செய்தி..

pavalamani pragasam
31st January 2015, 09:31 PM
நற்செய்தி மாறும் வயதிற்கேற்ப
பள்ளிக்கு விடுமுறை பால்யத்தில்
காதலும் கல்யாணமும் வாலிபத்தில்
பதவி உயர்வும் பணமும் நாற்பதுகளில்
சுப காரியங்கள் ஒய்வு பெறுமுன்
மூன்றாம் தலைமுறை அறுபதுகளில்
படுத்தாத தேக நிலை எழுபதுகளில்
மன நிறைவாய் உறங்கிய முடிவுரை

chinnakkannan
1st February 2015, 10:46 PM
முடிவுரை எழுதிச் சென்றாய்
.முகத்தினை மறைத்து வேகம்
கடிதெனக் காற்றைப் போல
.காலடி கூட்டி வைத்தே
படிகளில் தாவித் தாவி
…பாய்ந்துநீ சென்ற காட்சி
துடித்தவென் நெஞ்சத் துள்ளே
…சுத்தமாய் பதிந்தி ருக்கு

காதலினை மறுத்துவிட்டுச் சென்றிருந்தால் நியாயமே
…கன்னியுனை மறந்துவிட்டு நின்றிருப்பேன் நானுமே
வாதமிட்டுப் புரியவைத்துப் பின்சென்றால் நியாயமே
..வழக்குவென்ன சொல்லிடாமல் சென்றதுவும் தவறுதான்
பேதமுண்டு இதயத்தில் அந்தஸ்தில் என்றுதான்
..பெண்நீயும் சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் நியாயமே
சேதமிலாக் காதலுமே உனக்குண்டு தெரியுமே
…சேதியென்ன சொல்லிடாமல் சென்றதுவும் நியாயமோ..

பார்க்காதே என்றாய்நீ சரியென்றே நானும்
….பார்க்கவில்லை நிலவின்கண் பார்ப்பதையே விட்டேன்
ஓர்மையினை நெஞ்சுள்ளே வைக்காதே என்றாய்
…உணர்வுகளை அடக்கிடவும் பாடங்கள் கற்றேன்
வேர்வையது நெற்றியிலே பொங்கிவிட வந்து
….வெண்ணிலவுக் கண்ணீராய் கன்னத்தில் ஓட
போர்க்களம்தான் நம்காதல் போய்விடுங்கள் என்றாய்
..போனதுவோ நீதானே நம்காதல் அல்ல.

pavalamani pragasam
2nd February 2015, 08:28 AM
அல்ல அல்ல அது கோபமல்ல
யாரை நினைத்து தும்மினாய்
வெடுக் வெடுக் பச்சைமிளகாய்
கொடுக்கால் கொட்டும் தேள்
எரிக்கும் அனல் பார்வைகள்
பேரன்பின் அடையாளங்கள்

chinnakkannan
3rd February 2015, 08:53 PM
அடையாளங்கள் தெரியத் தான்
செய்கின்றன..

வழக்கம் போல
பத்திரிகை தொலைக்காட்சிப் பேட்டிகள்
நல்லது செய்திருக்கிறோம் என்று
பிரகடனங்கள்
செய்வோம் என வாக்குறுதிகள்
மற்றவர்களைப் பற்றிக் கேள்விகள்.


வந்து விட்டது மற்றொரு தேர்தல்..

பாமர மக்களோ மோன நிலைதான்.
இதுவும் கடந்து போகுமென்று..

pavalamani pragasam
4th February 2015, 08:02 AM
போகுமென்று தெரியும்
அழகும் இளமையும்
ஆயுளும் ஆரோக்கியமும்
அதிலில்லை அதிசயம்
ஆனந்தமான இந்நொடி
அதன் பொருள் கோடி

kalnayak
4th February 2015, 02:05 PM
கோடியில் ஏழு சுழியம்.
ஏழு சுழியும் அமைவாய் பெற்று
கோடி பெற்றால் ஈஸ்வரன்.
செலவு செய்து இழந்து
கோவணம் கொண்டால்
இருப்பதற்கு தெருக் கோடி
இக்கவிதை ஆதியந்தமாதலால் அதன்
பொருட்டே நான் முடிக்கும் இந்த கோடி.

pavalamani pragasam
4th February 2015, 07:49 PM
கோடி வீட்டு கோமளா
பக்கத்து வீட்டு பரிமளா
எதுத்த வீட்டு ஏகாம்பரம்
அடுத்த வீட்டு அண்ணாச்சி
எல்லோரும் இத கேளுங்க
கேட்ட சேதியப் பரப்புங்க
கவிதைத் திரி மணக்குது
மைய்யம் பூத்து குலுங்குது

kalnayak
5th February 2015, 12:10 PM
குலுங்குது குலுங்குது மய்யம் பூத்து
மணக்குது மணக்குது மனசு பாத்து
சேக்குது சேக்குது எவரையும் கூட்டு
தெறிக்குது தெறிக்குது கவிதைப் பாட்டு.

chinnakkannan
5th February 2015, 12:51 PM
பாட்டு செவியில் பதமாய் விழுந்திங்கு
ஆட்டுவிக்கும் நெஞ்சினை ஆம்..

pavalamani pragasam
5th February 2015, 07:40 PM
ஆம் நீதான் முடிவெடுக்க வேண்டும்
உனக்கொரு துன்பம் உடலில் நோவு
ஆ என அலறி ஊரை கூட்டுவாயா
இவ்வலி யாருக்கும் வந்ததுண்டோ
புலம்பி பலத்தை போக்குவாயோ
போதாத காலத்தை நோவாயோ
பல்லைக் கடித்து பொறுப்பாயோ
போய்விடும் இதுவும் கடந்து என
தைரியமாய் வலி தாங்குவாயோ
பொறுப்பாய் விதியை சுமப்பாயோ
வலியை வாங்கிக்கொள்ள முடியுமோ
வருந்தும் சுற்றம் மேலும் வருந்தவோ
விவேகம் கண்டு வியந்து உருகவோ
விரைந்து நீ முடிவு செய்ய வேண்டாமோ

kalnayak
6th February 2015, 01:32 PM
வேண்டாமோ கவிதை பாடும் வளமை நம்மினிலே
தோண்டாம ரகசியத்தை தெரிய வருமா உலகினிலே
தீண்டாம மனைவியை உயிர் வருமா வீட்டினிலே
நோண்டாம மண்ணை பயிர் வருமா விதையினிலே
தூண்டாம விளக்கை ஒளி வருமா அறையினிலே
தாண்டாம படியிருந்தா நடை வருமா இளமையிலே
வேண்டாம இறையோட வரம் வருமா பக்தியிலே
சீண்டாம இருந்திருந்தா சுகம் வருமா காதலிலே

pavalamani pragasam
6th February 2015, 08:20 PM
காதலிலே காண்கிறேன் பரிணாமம்
கடக்கும் அது பல வளர் கட்டங்கள்
பருவம் எட்டிய இளம் வயதினில்
பூவாய் மொட்டொன்று மலர்ந்து
காலூன்றி வாழத் துவங்கியபின்
காயாய் அது மெல்ல கடினப்பட்டு
கலந்து ஒன்றான முதுமையில்
கனியாய் கடைசியில் இனிக்கும்

chinnakkannan
6th February 2015, 08:37 PM
இனிக்கும் தேனை நாவில் வைத்தே
...ஏய்க்க நரியும் எண்ணிச்சாம்
கனிவாய் மரத்தில் காகம் பார்த்தே
…கலக்க லாகச் சொல்லிச்சாம்
மனிதர் போலப் பாடும் தன்மை
….உனக்கு உண்டே சொன்னாங்க
பணிவாய்க் கேட்பேன் பாடு காக்கா
...ரசிப்பேன் ருசிப்பேன் நானும்தான்

படையாய் நாமும் பறந்து போனால்
..பார்க்க மாட்டான் இந்தாளு
தடையில் லாமல் பேசும் பார்வை
…சரியும் இல்லை என்றேதான்
வடையைக் காலில் வைத்த காக்கா
..வெவ்வெவ் வேவே என்றதாம்
மடையாய் ஆசை கொண்ட நரிக்கும்
…மயக்கம் தெளிந்தே போனதாம்.

pavalamani pragasam
7th February 2015, 08:12 AM
போனதாம் பொற்காலம்
பெருசுகளின் புலம்பல்
புரியவில்லை புது கருவிகள்
பிடிக்கவில்லை புது அலைகள்
பழசை பற்றிக்கொண்டு
புதியவற்றை வசை பாடி
படுவது அதிகமா
படுத்துவது அதிகமா

chinnakkannan
7th February 2015, 09:43 PM
அதிகமா பேசாதே
அதிகமா சாப்பிடாதே
அதிகமா விளையாடாதே
அதிகமா படம் பார்க்காதே
அதிகமா படி
என்றெல்லாம் சொன்ன அம்மாவின் வார்த்தைகள்
பிற்காலத்தில் தான் புரிந்தது
வேலைகிடைத்த பிறகு..
ம்ம்
எக்காலத்திலும்
மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்..

pavalamani pragasam
7th February 2015, 11:27 PM
அமிர்தம் கடைந்தெடுக்க
அசுரர் உதவிடவேண்டும்
அதில் பங்கு மட்டுமில்லை
அநீதியின் அமரத்துவம்

chinnakkannan
8th February 2015, 12:40 AM
அமரத்துவம் அடைந்தார் என வரும்
அபிச்சுவரி எனத் தமிழில் வரும்
நீத்தார் நினைவுகள் விளம்பரங்களில் வரும்
புகைப்படத்தில் இருக்கும் சிரிப்பு
மட்டும்
பல சேதிகள் சொல்வதாக
எனக்குப் படுகிறது

pavalamani pragasam
8th February 2015, 08:44 AM
எனக்குப் படுகிறது இதெல்லாம் தவறென்று
ஒத்துக்கொள்ளவில்லையே இவ்வுலகம்
தின்னக்கூடாததை தினம் தின்கிறார்கள்
செய்யக்கூடாத பலவும் செய்கிறார்கள்
இத்தலைமுறையின் அறிவில் மயக்கம்
இதை சொல்லிட எனக்கில்லை தயக்கம்

kalnayak
9th February 2015, 11:16 AM
தயக்கம் கொள்ளுகின்றேன் எனக்கு தெரிந்தததையும் பேசிடவே
வியப்பும் அடைகின்றேன் சிலர் தமக்கு தெரியாததையும் பேசிடவே!!!
சாத்தியம் ஆனது இவரால் எவ்வாறு, என்னால் முடியாதபோது
பாத்தியம் கொண்டாடிட முடியாது எவரும் இத்திறமைக்கே.

pavalamani pragasam
9th February 2015, 07:20 PM
இத்திறமைக்கே ஆசைப்பட்டேன்
கை வரத்தான் அது மறுக்கிறதே
செடியில்லை நீர் விட்டு வளர்க்க
ஆடில்லை இலை தழை கொடுக்க
எப்படித்தான் நான் வளர்ப்பேன்
வக்கணையாய் கவிதை வடிப்பேன்

chinnakkannan
10th February 2015, 12:32 AM
கவிதை வடிப்பேன் என்றேதான்
…காகி தத்தைப் பிடித்தாலும்
நவில மறுக்கும் குழந்தையென
… நன்றாய் ஏதும் வாராமல்
தவித்துத் துடித்து யோசித்தே
..சற்றே நேரம் கண்மூட
குவிந்த மலராய்க் கற்பனைகள்
…கூட்டித் தொடுத்தேன் நெஞ்சத்தில்..

pavalamani pragasam
10th February 2015, 07:11 AM
நெஞ்சத்தில் பக் பக்
துடிக்குது திக் திக்
பிள்ளைகள் நச் நச்
தாங்காமல் செக் செக்
காய்ந்த வயிறுடன் செல்
என்ன தெரியுமோ சொல்

Russellhni
10th February 2015, 11:00 AM
அறிவுரையும் ட்விட்டரும்

சொல்லத்தான் துடிக்குது மனம் அனு தினம்
சொல்லியே ஆகவேண்டும் அது என் குணம்
நல்லதாய் சொன்னால் தரும் அது நறு மணம்
அல்லதாய் சொன்னாலோ தர்ம அடி என்றும் ரணம்

* முதல் கவிதை. குற்றம் குறை பொறுத்துக் கொள்ள வேண்டும் !

kalnayak
10th February 2015, 11:19 AM
ரணம் ஆறாவிட்டால் நெஞ்சில் வலிமிகும்
பணம் செலவழித்து தேடு நீ மருத்துவம்
குணம் ஆகாவிட்டால் உடலையது வருத்தும்
பிணம் ஆகும்வரை உன்னிடம் வடு இருக்கும.

***முரளிதரன், முதல் கவிதையே மிக அருமை. இதற்கு போய் ஏன் மன்னிப்பு?

chinnakkannan
10th February 2015, 11:52 AM
இருக்கும் என்றே பார்த்தாலோ
..இல்லை எங்கே போச்சுதுவோ
கருக்கல் வேளை இருந்ததுவே
..காலை கூட இருந்ததுவே
விருப்பப் பட்டு ஏதேனும்
..வேகஞ் செய்ய முடியலையே
துருப்புச் சீட்டாம் வைஃபிநீ
..கடிதாய் வாநான் பாட்டெழுத!

pavalamani pragasam
10th February 2015, 11:48 PM
பாட்டெழுத அன்று பனை ஓலை
பரிசளிக்க குளிர்ந்த மன்னர் குலம்
பின்னாளில் காகித உபயோகம்
படித்திட பாதுகாக்க குதூகலம்
தட்டித் தடவி இன்று தகவல் பிறக்கும்
எட்டாத விண்ணிலுலகம் பறக்கும்

kalnayak
11th February 2015, 12:43 PM
பறக்கும் மனத்தை கட்டி வைத்து
சீரான பாதையில் கொண்டு சென்று
நடக்கும் நினைப்பிற்கு ஆசை கொண்டு
வழிகளை கண்டு வாழ்க்கை நடத்து
சிறக்கும் வாழ்க்கை செவ்வனே

Russellhni
11th February 2015, 01:18 PM
காதல் உறுதி :

செவ்வனே நான் சாக இறுதியாய் ஒன்று செய்வாயா பத்மினி
செல்வனே நீ சொல் செய்கிறேன் இது உறுதி என் பத்தினி
என்னுயிர் பிரியும் வரை இருப்பாயா நீ என்னுடன்
என்னவள் கலந்தாள் என் கையை தன்னுடன்
என்னுயிர் பிரியும் வரை இருப்பேன் நான் உன்னுடன்
இன்னுயிரே இது நிச்சயம் இது தானடா என் சத்தியம்

pavalamani pragasam
11th February 2015, 07:17 PM
சத்தியம் போற்றும் அரிச்சந்திரன்
பிறன் மனை நோக்கா சீதாராமன்
கொடுத்து கை சிவந்த கர்ணன்
பிரம்மச்சர்யம் தழுவிய பீஷ்மன்
தேடுகிறேன் எங்கே அம்மானுடன்
இருக்கிறானா அது போல் ஒருவன்

chinnakkannan
12th February 2015, 10:23 AM
ஒருவன் வருவான் உன்னை அடக்க
..ஓயாப் பேச்சு ஒழியா அகந்தை
பருவம் தந்த அழகும் மேலும்
...பக்குவ மாகா நெஞ்சும் கொண்டு
உருவ எழில் தான் உண்மை என்று
..உள்ள்ந்தன்னில் வேகம் கூட்டி
சிறுமி போலே பேசும் பெண்ணே
..சின்ன விஷயம் சொல்வேன் நானே

கண்களில் கனவு தாங்கி
..க்ன்னிமைப் பருவந்தன்னில்
எண்ணமும் பலவும் கொண்டு
..ஏந்திழை நானும் நின்றேன்
வண்ணமாம் கனவுக் கோலம்
..வழியிலே மிதிகள் பட்டு
மின்னலாய் மறைந்து போச்சு
..மேவிநீ உணர்வாய் பெண்ணே..


என்னதமிழ் என்னதமிழ் அம்மாநீ உனக்கு
..என்னவென்று சொல்லிநானும் புரியவைக்க முடியும்
கன்னமதைப் பிடித்திடித்து சொல்லட்டுமா அம்மா
..கனவெல்லாம் கண்டதெல்லாம் அந்தகாலம் தானே
எண்ணத்தில் இப்பொழுது படிப்பிருக்கு அம்மா
..ஏற்றமுடன் நல்வேலை தானெனக்கு வருமே
பின்னென்ன வாழ்க்கையிலே சாதனைகள் செய்வேன்..
..பேதையல்ல நானம்மா பெருமைகொளு நீயும்

Russellhni
12th February 2015, 11:33 AM
நீயும் நானும் குறை உள்ளன் நிறை அல்லன் மானுடனே அன்றோ
தீயிலிட்டு கரியாகி உள்ளன் என்பது அல்லனாவோம் அது என்றோ
நோயிலிட்டு அடங்குமுன் அடக்கம் பண்பு அத்துடன் அன்பு
அதிலிட்டு வினைத்தூய்மை கொண்டால் வியக்குமே விசும்பு

kalnayak
12th February 2015, 03:14 PM
விசும்பு நீரினை கண்டு காதல் கொண்டு
ஆதவன் உதவியால் அதனை மொண்டு
கருவினள் ஆகி மழையை பிரசவித்தனள்
உலகுவாழ் உயிர்கட்கு உணவை ஊட்டினள்.

pavalamani pragasam
12th February 2015, 07:09 PM
ஊட்டினள் சாதத்தை கணவனுக்கு
கால்கட்டு போட்ட அவனொரு நாள்
கைகட்டு போட்டு வந்த சமயத்திலே
முதல் குழந்தையானவனின் தாயோ
தன் பதவி பறிக்க வந்தாளேயென்று
தவிக்கிறாள் பழைய யுகத்து மாமியார்

chinnakkannan
12th February 2015, 08:52 PM
மாமியார்னு நினைச்சுக்காதேள்
நீங்க தான் இவ அம்மா
எனக் கண்கலங்கச் சொன்ன
புவனாவின் அம்மா
புவனாவின் அண்ணியிடம்
சொன்னாள்
“ஏய் சும்மா
மசமசன்னு நிக்காம
பெரியவாளக் கவனிடி..”

pavalamani pragasam
13th February 2015, 07:05 AM
கவனிடி அவனடிக்கிற கூத்தை
பாராதது போல் பார்க்கிறான்
தெரியாதது போல் நடிக்கிறான்
அப்பாவி போலவே நிற்கிறான்
பசப்பும் மாயக்கண்ணன் இவன்
மன்மத லீலையில் மன்னன்

Russellhni
13th February 2015, 11:29 AM
மன்னனா அவன் மாக்கான் என்றோ மதி நுட்பம் எனக்கென்றோ
மனம் கெட்டு சொல்வது நன்றன்று மன்னவனோ மேலேவலனோ
மானியம் கொடுப்பவன் அவன் மறுத்தாலோ வெறுத்தாலோ
சூனியம் கொள்வது சொந்த காசில் நாமன்றி பின் வேறாரோ

chinnakkannan
13th February 2015, 11:43 AM
வேறாரோ வந்தாலும் வெண்ணிலவே உன்னுடைய
…வேராகும் அவனென்பேன் விட்டுவிடல் சரியாமோ
ஊரார்கள் சூழ்ந்திருக்க உற்றார்கள் சேர்த்துவைத்த
…உணர்வுகளின் பாலமதை வீழ்த்திவிடல் முறையாமோ
தேராக மெல்லமெல்ல திண்ணமாக அசைந்துசெலும்
..சிறப்பான வாழ்வன்றோ நீபெற்ற நல்விருந்து
போராடி வேண்டியதைப் பெறமுயல விட்டுவிட்டு
…போம்மாபோ வென்றேதான் சொல்லுவது நியாயமிலை.

Russellhni
13th February 2015, 12:08 PM
நியாயமிலை நியாயமில்லை
நாலு வரி நான் கவிதையாய் எழுத
நாளு முழுக்க கண்டதையும் சிந்திக்க
நாலே நொடியில் நீ சென்றதையே முடிக்க
நக்கலாய் கவிதை ஒன்று சொக்கலாய் கொடுக்க
நான் இனி என்ன பண்ண நண்பனாய் நீயே சொல்லு :banghead:

kalnayak
13th February 2015, 12:37 PM
சொல்லுவதற்கு என்ன இருக்கிறது கற்றறிந்தோர் சபைதனிலே
வெல்லத்தான் முடியுமா சிறுவன்? ஒருவர் நாள் முழுக்க
செல்லத்தான் யோசித்து அற்புதக்கவிதை வரைய, மற்றொருவர்
நல்லவையாய் நாலே நொடியினில் நன்றாக சொல்லுகிறார்.
இல்லையென்று சொல்லாமல் கற்பியுங்கள் கவிதைப்பாடம்.
நில்லாது போகிடுமோ உம் கவிதைத்திறன் இச்சிறுவனிடம்.

chinnakkannan
13th February 2015, 02:38 PM
இச்சிறுவ னிடமென்ன இப்படியோர் விளையாட்டு
..இப்புவியில் பலருண்டு ஏற்றமிகு நல்லறிஞர்
மெச்சுதலாய்ப் பலசெயல்கள் மேதினியில் புரிந்தேதான்
..மேவியுனை இதயத்தில் இருத்தித்தான் வைக்கின்றார்
தச்சனென என்னிதயம் செதுக்காமல் ஈசாநீ
…தாரணியில் எனைச்சீண்ட எண்ணியதும் ஏனப்பா
மெத்தனவே இருந்துவிட்டேன் உன்கழலைப் பற்றாமல்.
…மெல்லமெல்ல மாறிடுவேன் மன்னிப்பாய் பரம்பொருளே..

pavalamani pragasam
13th February 2015, 07:03 PM
பரம்பொருளே பார்த்தாயா வேடிக்கையை
காதலா காமமா பேதமறியா இருவர்
கூடி வாழ்ந்து கசந்த ஒரு காலத்தில்
வழக்குத் தொடுக்கிறாள் கெடுத்தானென
வாக்குக் கொடுத்தான் கை பிடிப்பேனென
நம்பி தந்தேன் என்னை அவனின்று
மணக்க மறுக்கிறான் ஆதலாலிது
வன்புணர்வென்று வாதிடுகிறாள்
வம்பாய் தண்டனை வாங்கித்தர
தடுமாறுது நீதி செய்வதறியாது

chinnakkannan
14th February 2015, 10:11 AM
செய்வதறியாது திகைக்கிறது மனது

அது என்ன
கருஞ்சிகப்புச் சுடிதார்
பின் கொஞ்சம் வெளிர் நிற துப்பட்டா
நெற்றியில் நெளிப் பொட்டு
தலையில் ஒற்றை ரோஜா
கண்களில் கனவு மின்னல்
எல்லாம் கொண்டு
நீ வந்து மனம் திறந்ததும்
இந்த நாள் தான்

பின்
இரண்டு வருடங்களில்
இந்த் நாளில்
மலர்க்கொத்துக்கள்
ஐஸ்க்ரீம்
வாழ்த்தட்டைகள்
எஸ் எம் எஸ்
பரிமாறிக்கொண்டதும்
இந்த நாள் தான்.

இதோ
இன்று காலை
ஒரு வாஸ்ஸப் தகவல்
உன்னிடமிருந்து
புகைப்படத்துடன்
இது பிடிச்சிருக்கா
அப்பா அம்மா பார்த்திருக்காங்க
எனக்குப் பிடிச்சுருக்கு என

சத்தியமாகப் புரியவில்லை
செல்லிடைப் பேசி அழைப்புக்கும்
பதிலில்லை

ஏதோ நினைவில்
வழக்கமாகச் சந்திக்கும்
மொட்டை மாடிக்கு வந்தால்
சிரித்தபடி ஹாய்…

பின் மெலிதான பதற்றம் உன்னிடம்
என்னாச்சுப்பா ஏன் இப்படி இருக்க

பின்ன யார் இவன்
கண்களால் மொபைலைக் காட்டிக்
கேட்க
முதலில் அவள் கண்ணில் புதிர்
பின் சிரிப்பு..
கண்ணில் நீர் மல்க
மேலும் தொடர் சிரிப்பு..

ஓ என் இனிய முட்டாளே
அது எனக்கல்ல
என் அக்காவிற்கு..

அவள் சிரிப்புக் கொடி
என்னிடமும் படர
என் கைபற்றி
சுற்றிலும் யாருமில்லையா எனப் பார்த்து
குட்டி முத்தா கொடுத்தவள் சொன்னாள்

“காதலில் முக்கியமானது
நம்பிக்கை”

kalnayak
14th February 2015, 11:33 AM
நம்பிக்கை வைத்த பெற்றோர் சொல் காக்க
படிக்கிற வயதில் தறி கெட்டுப்போகாமல்
நடித்திருந்தான் காதல் வராததுபோல், தைரியமாய்
காதல் சொன்னவளின் கண்ணை மூடிவிட்டான்
காலம் சென்றபின் நினைவிலேயே குடித்தனம்.
ஏமாற்றுவது ஒருவரையல்ல, இருவரை சிந்தித்துப்பார்.

Russellhni
14th February 2015, 05:02 PM
சிந்தித்து பார் என்றும் சீர்மையாக வாழ்வாய்
செம்மையாய் வழியிதை விழியென கொள்வாய்
உன்னை நீ அறிந்து உணர்ந்து கொண்டால்
எண்ணத்தில் என்றும் எழுச்சி கொண்டால்

எதிலும் எப்போதும் நேர்மையாய் நின்றால்
முடிவை நினைத்து மடியிலாமல் சென்றால்
முக்கியம் முன்னால் வை மற்றவை பின்னென்றால்
முடியும் எதுவும் உன்னால் வெற்றியே கிட்டும் தன்னால்

---

* Courtesy : Stephen R Covey’s 7 habits of highly effective people
1. Be proactive 2. Begin with the end in mind 3.Put first things first 4. Think win-win
5. First understand, then be understood 6. Synergies 7.Sharpen your saw

pavalamani pragasam
14th February 2015, 07:01 PM
தன்னால் எடுத்த முடிவுதான் என்றாலும்
தனக்காக பெற்றோர் தேர்ந்தெடுத்தாலும்
திருமணம் என்னும் பந்தம் பாழும் கிணறு
எங்கும் உலா வருதிந்த அரியதோர் கூற்று

chinnakkannan
16th February 2015, 10:28 AM
அரியதோர் கூற்றென்று சொன்ன நீரே
...அதன்படியே நடக்காமல் இருக்க லாமோ
கரியவிருள் சூழ்மனத்தை வெளிச்ச மாக்கும்
..கருத்துக்கள் சொன்னார்கள் ஆன்றோர் தாமே
விரியவைக்கும் நெஞ்சத்தை ஏற்றங் கொண்டே
..வியக்கதக மாற்றத்தைக் கொள்ள் வைக்கும்
செரியசொல் லதுவன்றோ சொல்லும் நீரே
..சீக்கிரமாய் சொல்லுங்கள் மறந்து போகும்!

Russellhni
16th February 2015, 10:44 AM
மறந்து போகுமோ இக்கூற்று ! கொற்றவரோ அல்ல மற்றவரோ
குறையற்றார் இம்மேதினியில் குற்றமற்றவர் என்றுண்டோ
சுற்றிப்பார்க்கில் தனக்குவமை இலாது ஒருவனை இறையவனை
பற்றிப்பார் பாதம் மனதினில் மனிதனில் என்றும் உறைபவனை

kalnayak
16th February 2015, 11:27 AM
உறைபவனை உரசினால் தெரியும் உள்ளவன் உறைவதில்லையென்று
உறங்குபவனை எழுப்பலாம் உறங்குவதுபோல் நடிப்பவனை முடியுமா?
இறைவனாய் நிற்பவன் இயற்கையாய் பிரபஞ்சம் எங்கும் நிற்கிறான்
இறங்கும் கணம் அறிந்து இடம் பிடித்து இறங்குவான் தாங்குவோமோ?
இரக்கம் கொண்டவனை அரக்கனாய் மாற்றிடலாமோ இம்மானுடர்?

chinnakkannan
16th February 2015, 12:05 PM
இம்மானுடர் வாழ்வில்வரும் ஏற்றங்களின் போதிலே
செம்மாந்துதான் பலவண்ணமாய் சிறப்பாய்மகிழ்ந் திருப்பரே
சும்மாச்சில சோகம்வரின் சோர்வாய்மனம் குழம்பியே
கம்மாய்க்குளம் கல்பட்டதால் கலங்கும்வகை கொண்டவர்.

இறையின்கழல் எந்நாளிலும் பிடித்தேஅவர் தொழுதிட
குறையேயிலா வாழ்க்கையது கூடியேநிதம் பெற்றலும்
தரைமீதிலே நிலமீதிலே வான்மீதிலே வந்திடும்
கறைபோன்றிடும் அபாயங்களும் கரைந்தேசெல வாகிடும்..

Russellhni
16th February 2015, 02:01 PM
செலவாகிடும் காசு அதை என்றும் சிக்கனமாய் செய்
சேர்த்து வைத்து பின் செலவு மீதி அதுவன்றோ திறமை
செலவு செய்து அது போக சேமிப்பென்பது செம பொய்
சீர்பட வாழ சேதி ஒன்று சின்னவனே செவி கொடுப்பாய் ! :2thumbsup:


*****
இல்லாத எதுகை மோனைக்காக கொஞ்சம் மாற்றினேன் . மன்னிக்கவும் .முதலில் எழுதியது இதுதான்:

செலவாகிடும் காசு அதை என்றும் சிக்கனமாய் செய்
சேர்த்து வைத்து பின் செலவு மீதி அதுவன்றோ திறமை
செலவு செய்து அது போக சேமிப்பென்பது செம பொய்
சீர்பட வாழ சேதி ஒன்று செவி கொடுப்பாய் சின்னவனே

எனவே சின்னவனே என்பதே சரி! எனது பிழையே !சின்னவனே என்றே ஆரம்பிக்கலாம் சி கே.

chinnakkannan
16th February 2015, 02:13 PM
சின்னவனே எனச்சொன்னாய் திகைப்பினையே அடக்கிவிட்டேன்
..சீர்மிக்க மன்னவனே எனச்சொன்னாய் மேன்மேலும்
எண்ணத்துள் உறைபவனே ஏந்திழையின் நாயகனே
..என்றெல்லாம் ப்லவிதமாய்ப் பேசுவதுன் வழியிலையே
கன்னத்தில் தெரிகின்ற செஞ்சாந்து நிறமதுவும்
..கன்னியுந்தன் வெட்கத்தின் கண்ணாடி ஆகிடுதே
இன்னுமென சொல்லிடுவாய் எனக்குத்தான் உம்தந்தை
..ஏற்கெனவே சொல்லிவிட்டார் நம்முடைய இணையும்நாள்..

chinnakkannan
16th February 2015, 02:14 PM
//இது போங்காட்டம்.. செவிகொடுப்பாய் சின்னவனே என முடித்திருந்ததாய் நினைவு :) //

chinnakkannan
16th February 2015, 02:18 PM
செவிகொடுப்பாய் என்றேதான் கதறுகிறேன் ஓசிவனே
..சேர்த்துவிடு உன்பதத்தில் சீக்கிரமாய் என்றேதான்
புவியினிலே வாழ்ந்தகஷ்டம் போதுமய்யா போதுமென
..புவனத்தை ஆள்கின்ற உன்னருளும் வேண்டுமென
பவித்திரமாய்ப் பலவாறாய் பாடல்கள் தான்பாடி
..பக்குவத்தை அடைவதற்கு முடியாமல் போயின்று
கவிதையிலே வேண்டூகிறேன் ஈசாவுன் அருட்பார்வை
..காட்டிவிடு அதுபோதும் அதுபோதும் ஓசிவனே..

//சரி சரி செவிகொடுப்பாய்க்கும் ஒண்ணு எழுதிப்பார்த்தேன் :)//

chinnakkannan
16th February 2015, 02:19 PM
//இன்னுமென சொல்லிடுவாய் எனக்குத்தான் உம்தந்தை
..ஏற்கெனவே சொல்லிவிட்டார் நம்முடைய இணையும்நாள்..// இந்தப்பாட் இறுதிச் சொல் வைத்துத் தொடருங்கள் :)