PDA

View Full Version : kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2



Pages : 1 2 3 [4] 5 6 7 8

chinnakkannan
7th March 2013, 10:10 AM
தூங்கி விடும் கண்கள்
பொய்யாய்..

மெதுவாய் வந்து
உடை மாற்றி
கிசுகிசுத்து
என்னை எழுப்பப்பார்த்து
பின் படுத்துக் கொள்வாய்

ஹேய்
தூங்கிட்டேங்க்..
ஆஃபீஸ்லவேலை
தெரியுமே
ஸாரிம்மா
தெனசரி இதானே..
ஓகே குட் நைட்

நான் பேசாமல் இருந்தாலும்
நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய்
எனத் தெரியும்..
கொஞ்சம் பீறிட்ட கோபத்தில்
திரும்பி இரண்டு மூன்று
செல்லக்குத்துக்கள் விட
ஏய் என்ன இது என நீயும்
பொய்யாய் அலறிச் சிரிக்க
நானும் சிரிக்க..

போடா..
இது தினமும் தொடராமல்
ஆக்கி விடேன் சிறுகதையாய்...

pavalamani pragasam
7th March 2013, 11:18 AM
சிறுகதையாய் முடிந்தால் அழகு
சின்ன அத்தியாயமே தேன் துளி
மகாபாரதமாயதை இழுக்கையிலே
சின்னத்திரையில் நெடுந்தொடராய்
காணவும் கேட்கவும் சகியாததாய்
பாவம் வேறு கதியற்ற முதியோர்

kaveri kannan
8th March 2013, 02:09 AM
முதியோர்...
யானைக்கூட்டத்தில் பெருந்தலைவி (matriarch)
பட்டறிவால் வழிநடத்தும் அருந்தலைவி..

அடுத்த தலைமுறைக்கு அறிவூட்டும் சுரபி..

முதியோர்...
மனிதக்கூட்டத்தில் கிழவன் - கிழவி..
இடத்தை அடைக்கும் உயிர்ப்பொதி

எதுக்களித்த இத்தலைமுறை அருந்தாமல் காய்ந்த அறிவு மடி!

venkkiram
8th March 2013, 06:33 AM
மடிமீது சாய்த்து
மகனின் தலையை கோதி
முற்றம் வழியே
ஒற்றை நிலா பார்த்து
கணவரை நினைக்கையில்
கண்ணசந்தவன் தூங்கிப் போனதால்
கொலுசுக் கால்களை மௌனமாக்கி
தாழ்வாரம் கடந்தாள் மருமகள்

pavalamani pragasam
8th March 2013, 07:57 AM
மருமகள் மற்றொரு மகள்
பாரம் சுமக்க இன்னொரு தோள்
பகிர்ந்து கொள்ள நல்ல தோழி
ஆலோசனைக்கு அரிய மந்திரி
ஆள வந்த அடுத்த சின்ன ராணி
நடைமுறைக்ள் பழகும் மாணவி
அகமகிழ்வாள் இல்லத்துக் கிழவி
இளந்தலைவியை செதுக்கும் சிற்பி

chinnakkannan
8th March 2013, 09:50 AM
சிற்பியின்
கை விரல்க்ளின் வலி
அறியாமல்
காலங்கள் பல கடந்தும்
சிரித்துக் கொண்டிருக்கிரது
அந்தப் பெண் சிற்பம்...

pavalamani pragasam
8th March 2013, 06:52 PM
சிற்பம் போல் அழகியென்றாலன்று
சிற்றிடை சுற்றிய சிற்றாடையில்
சிலுப்பிய கூந்தல் ஜீன்ஸில் இன்று
சீசன் மாறுவது ஆண்கள் கண்ணில்

chinnakkannan
8th March 2013, 08:01 PM
கண்ணில் எப்போது தட்டுப் படும்
பொருள்
தேவைப்படும் போது
காணவில்லை என
கத்துவார் அப்பா..

நாட்கள் செல்லச் செல்ல
பேச்சைக் குறைத்துக் கொண்டு
தேவைப் படுவ்தை
கொஞ்சம் ஒழுங்காக இன்ன இடம்
என்று வைத்து விடுவார்..

எங்களுக்கும் சொல்லித்தந்தார்..

இப்போது
அப்பா மேலே போய்
கண்ணில் தட்டுப்படுவதில்லை என்றாலும்
எங்க்ள் வழக்கங்க்ளில்
இருந்து
புரிகிறார் அவர் புன்னகை..

pavalamani pragasam
9th March 2013, 07:53 AM
புன்னகையின் பொருள் மாறும்
பூக்கக்காணும் முகத்திற்கேற்ப
சம்பவித்த சூழ்நிலைக்கேற்ப
ஆதரவு ஒப்புதல் ரசனையோடு
ஏளனம் எக்காளம் வஞ்சமென
உணர்த்தும் சேதிகள் ஏராளம்

venkkiram
9th March 2013, 08:41 AM
ஏராளம் எண்ணிக்கையில் தொகுதி வேட்பாளர்கள்
சுறுசுறுப்பாக களத்தில் திரியும் பிரமுகர்கள்
ஓட்டு பிரியுமென்ற அதிர்ச்சியில் பெரிய கட்சிகள்
எல்லா திசையிலும் பணம் பொருள் இலவசம்
காற்றில் கலந்து விட்டிருந்த லஞ்ச வாசம்
பரப்பரப்பான வாக்குப் பதிவின் முந்தைய இரவு
பரலோகம் சென்றார் சுயேட்சை ஒருவர் மாரடைப்பில்
வாங்கியவற்றை ஏப்பமிட்டு வரவிருக்கும் இடைத்தேர்தலை
வரவேற்கத் தயார் நிலையில் ஊர் மக்கள்

chinnakkannan
9th March 2013, 11:37 AM
மக்கள்ளாம் செளக்கியமா

ஒவ்வொரு முறையும்
அந்த வீட்டுத்திண்ணையைக் கடக்கும்போதும்
வெற்றிலையை
உரலில் இடித்த படி
கேக்கும் பொன்னாயிக் கிழவி..

இடிக்கும் இசைக்குத் தக்கபடி
காதில் தண்டட்டிகள் ஆடும்..

நான் சொல்வதை
நிதானமாய்க் கேட்டு
எல்லாம் சரியாய்டும்ல
மூத்த பொண்ணு என்ன
பூரட்டாதியா அப்படித் தான்
கொஞ்சம் படுத்தும்..
பையன் ரேவதில்ல
நலல் வேலை அமஞ்சுடும்..
இன்னும் பலவிதமாய்ப் பேசும்..

ஒரு நாள் பார்த்த போது
அதே கேள்வி
நானும் பதில் சொன்னேன்
இருந்தாலும் ஏதோ
இல்லாதது போல்..

அட தண்டட்டி

கேட்டும் விட்டேன்..
அதுவா
என்ன நான் ..இந்த நட்சத்திரம்ல
கொஞ்சம் கிரகம் சரியில்லையாம்
பாங்க்ல வச்சுருக்காம் பையன்..
மோரு குடிக்கறீகளா..
ஏட்டி... மோரு கொடு..

உள்ளிருந்து மருமகள்
டம்ப்ளரில்
மோரு கொடுத்த போது
மின்னியது அவள் கைகளில்
வளையல்கள்..

pavalamani pragasam
9th March 2013, 04:21 PM
வளையல்கள் பூட்ட ஓடி வாருங்க
வயிற்று மேட்டை வந்து பாருங்க
வெட்டவெளிச்சமானது அந்தரங்கம்
வெட்கத்தில் மின்னுது அவளங்கம்

chinnakkannan
11th March 2013, 12:17 AM
அவள் அங்கத்தில் சின்னதாய்
தங்கமுலாம்
திடீரென யார் செய்தது..


உள்ளே புகுந்து விட்ட
இளஞ்சூரியனின்
கிரணங்க்ள்
வெளிப்படுகிறதோ மெல்ல

pavalamani pragasam
11th March 2013, 07:33 AM
மெல்ல நகரும் கடிகார முள்
காத்திருக்கையில்
கடகடவென ஓடும்
களித்திருக்கையில்
காலத்திற்கு நிலையான வேகம்
மனம் மயங்கிக் காணும் பேதம்

venkkiram
11th March 2013, 08:03 AM
பேதம் எதில்தான் இல்லை
பிறப்பில் வளர்ப்பில் இறப்பில்
சாதியில் மதத்தில் இனத்தில்
உணவில் உடையில் உறவில்
தொழுகையில் சடங்கில் தெய்வத்தில்
நட்பில் ரசனையில் அபிப்ராயத்தில்
மொழியில் கலாச்சாரத்தில் பண்பாட்டில்
ஊரில் மாநிலத்தில் நாட்டில்
நீக்கமற நிறைந்து இருக்கிறது
மனிதமற்ற சமுதாயத்தில்

pavalamani pragasam
11th March 2013, 08:59 AM
சமுதாயத்தில் கற்றுயர்ந்தோம்
சரித்திரத்தைப் படைத்தோம்
சார்ந்து வாழும் கலையறிந்தோம்
சகோதரர்களாய் வாழ்ந்திருந்தோம்
பார்க்கவும் பேசவும் வினையாற்றவும்
பொதுவான பல இடங்கள் காலங்கள்
பழக்கங்கள் மறந்து வருகிறோம்
பார்க்காமல் பழகி பகிர்ந்து உருகி
பொய் சமுதாயங்கள் உருவாக்கினோம்
பொழுதுக்கும் அத்தளங்களை நாடி
பறக்கிறோம் புது சமுதாய வானிலே
புரியவில்லை போக்கும் அதன் இலக்கும்

chinnakkannan
12th March 2013, 04:29 PM
அதன் இலக்கும்
பாதையும் தெரியாமல் தான்
பறந்து கொண்டிருந்தது அந்தப் பறவை

எங்கு பார்த்தாலும் நீர்..
தெரிந்ததெல்லாம் தூங்கிய இடம் மட்டும் தான்
அதுவும் நகர்ந்து கொண்டிருக்கிறது..

நடுக்கடல் தான்
கரை எப்போது வரும்
யாரைக் கேட்பது
தெரியவில்லை..

திக்கித் திணறி
உறங்கிய கப்பலின் மேல்தளத்தில்
அமர்ந்து
உருகியதந்தப் பறவையில்
தெரிந்தது பாசுரம்

pavalamani pragasam
12th March 2013, 05:09 PM
பாசுரம் பாடி
பூச்சரம் ஏந்தி
பாவை சென்றாள்
பரமனை நாடி

chinnakkannan
12th March 2013, 11:52 PM
நாடி வந்தேன் உன்னை
என
குடுகுடுவென உச்சிக்கிளையில்
பூ பறித்து வந்து காதலியின்
அன்பை பெற
ப்ஹா ப்ஹாவென்
மூச்சிரைக்க
காதலன் கொடுத்தது அந்தக் காலம்..

பூங்கொத்துக் கடைக்கெல்லாம் போகமலே
பணம் கட்டி
காதலிகளுக்கு அனுப்புகிறார்கள் காதலர்கள்..
என்ன
அந்த ப்ஹா எனப்படும்
உயிர்த்துடிப்பு மட்டும்
கொஞ்சம் குறைவாய்

pavalamani pragasam
13th March 2013, 07:04 AM
குறைவாய் கொடுக்குமாம் தெய்வம்
தன்னிடம் நலன்களை வாங்கிட
பெரிய கூடையுடன் வருபவளுக்கு
நிறைத்து அனுப்புமாம் அத்தெய்வம்
மற்றவள் கொண்டு வந்த சின்னக் கூடையை
வயக்காட்டு உரமாய் பாட்டியின் போதனைகள்
வசவோடும் பழமொழியோடும் கேட்டவள்
வளர்ந்தேன் நேராய் வாழ்கிறேன் நலமாய்
ஒழித்தேன் பேராசை பெற்றேன் அடக்கம்
திருப்தியின் அருமை அறிவீர் அனைவரும்

chinnakkannan
14th March 2013, 09:05 AM
அனைவரும் வருக
என்ற
பொதுக்கூட்ட அழைப்பிதழ் பழைய சுவரொட்டி
கிழிந்து தொங்க
உள்ளேயும்
பழைய போஸ்ட்ர்
யாரோ தொண்டனின்
கண்ணீர் அஞ்சலி...

pavalamani pragasam
14th March 2013, 03:30 PM
அஞ்சலி அஞ்சலி
எங்கும் அஞ்சலி
எல்லாம் அஞ்சலி
அழகான அஞ்சலி
கரையை வருடும்
கடலின் காதல்
மண்ணை மூடும்
மலர்கள் மோகம்
வானில் தவழும்
மேகம் மோகம்
நதியின் சங்கமம்
ஒப்பிலா ஆராதனை
உலகில் உன்னதம்
அன்பின் சமர்ப்பணம்

chinnakkannan
14th March 2013, 10:11 PM
சமர்ப்பணம் கிருஷ்ணா
உனக்கே அர்ப்பணம்
சொல்லி
அம்மா
ஒவ்வொருமுறையும்
உணவு உண்ணும் போதும்
ஹால் கிருஷ்ணர் படத்துக்கு
கண்கள் செல்லும்.

கிச்சாவின்
வாய் முழுக்கச் சிரிப்பு தெரியும்
வயிறு நிரம்பிய தொப்பையுடன்..

venkkiram
15th March 2013, 12:06 AM
தொப்பையுடன் ஓடி துரத்திப் பிடிக்க
ரொம்பவும் கடினமாகப் பட்டது
மொட்டைச் சுவரை தாண்ட முடியவில்லை
பார்வையிலிருந்து மறைந்தே விட்டான் திருடன்
கால்தட்டி கண்ணடைத்து மூச்சு வாங்கியதால்
அருகேயிருந்த பொட்டிக்கடையில்
ஆற அமர ஓய்வெடுத்து ஓசியில் சோடா குடித்து
ஸ்டேஷன் திரும்புகையில்
வேகமாக வந்த வாகனங்கள் இரண்டை
நின்றபடியே பிடித்து பாக்கட் நிரப்பி வந்தார் ஏட்டையா
திருட்டுத் தொழில் பலரைப் பாதிக்கிறது என்பது
திருடனுக்குத் தெரியவேயில்லை

pavalamani pragasam
15th March 2013, 08:23 AM
தெரியவேயில்லை
எண்ணவோட்டங்கள்
ஒப்பனை பூச்சும்
பதறாத பாங்கும்
பணிவான தொனியும்
குலையாத துணிவும்
அபார பொறுமையும்
சலைக்காத பதில்களும்
விலகாத புன்னகையும்
சமயோசித சமாளிப்பும்
வரவேற்புப் பணி பெண்கள்
அதிசயமான பதுமைகள்

chinnakkannan
15th March 2013, 10:21 AM
ப்துமைகள்
தங்களுக்குள் சிரித்துக் கொண்டன..

...சிறுவனாக இருந்த போது
விளையாட்டாய் ஓடி வந்து தொட்டுப் பார்த்த அவன்..
வாலிபத்தில்
தங்களருகே வந்து வியந்து நோக்கியதும்
பின் இன்று
புது மனைவியுடன் அருகில் வருகையில்
திரும்பிக் கூடப் பார்க்காமல்
அவளிடமே பேசியபடி போவதும்..

ஒரு ப்துமை சொன்னது..
பாரேன்.. நாம் நிற்கிறோம்
அவன் நடக்கிறான்..

அங்கு
சிரிப்பு எழுந்தது பொங்கி...

pavalamani pragasam
15th March 2013, 01:01 PM
பொங்கி வரும் பால் அடங்கும் நீர் தெளித்து
கடலும் மனமும் அடங்குமா கட்டுப்பட்டு
தேசிங்கு ராஜன் கையிலென்ன மாயமிருக்கு
கடுந்தவ முனிவரிடம் எவ்வளவு பலமிருக்கு
கடிவாளம் போட சித்துகள் செய்ய எடு முயற்சி
குவிந்த முனைப்புடன் சாதிக்க உதவும் பயிற்சி

chinnakkannan
15th March 2013, 01:33 PM
பயிற்சி முடித்து
வியர்வைத் துளிகளை
துண்டினால் ஒற்றியெடுத்தாள்..
துண்டு மேலும் ஈரமானது
ஆனந்த்க் கண்ணீரால்..

pavalamani pragasam
15th March 2013, 08:58 PM
கண்ணீரால் மாற்றி எழுதப்படும் சரித்திரம்
வயிறு காய்ந்தவர் பொங்கியெழுந்தால் புரட்சி
வேசமான அழுகையும் பாசத்தை அசைக்கும்
அழுத பிள்ளைதான் பால் குடிக்குமென்றறிவர்
கள்ளமில்லா குழந்தையும் கபடமான மாந்தரும்
முதலைக் கண்ணீரை அறிந்திட வேணும் ஞானம்

venkkiram
16th March 2013, 01:57 AM
ஞானம் என்பதாம்
கேட்டல் தீக்குச்சி உரச
சிந்திந்தல் வாயுவின் துணையோடு
தெளிதல் சுவாலையுடன்
அணையாச் சுடர்விடும் ஒளி

pavalamani pragasam
16th March 2013, 08:46 AM
ஒளி வரும் முன்னே
ஒலி வரும் பின்னே
மின்னலது முந்தும்
இடியதை தொடரும்
ஒலி முந்தும் தருணம்
யானை மணியோசை
ஒலியும் ஒளியும் இணையும்
பெரிய சின்னத் திரைகளில்
கணிணியில் மடியில் கையில்
தகவல் தொடர்பு யுகமிதில்
எண்ணிலா அதிசய சாதனம்
கூடிடும் பரிமாணங்கள் நூதனம்

chinnakkannan
16th March 2013, 12:16 PM
நூதனமாய் இருந்தது
அந்த நகை..
ரோஜா நிறத் தங்கம், வைரக்கற்கள் பதித்து..
சரியான வேலை வாங்கியிருக்கும்..
வெகு நுணுக்கம் தான்..
முழுக்கக் கை வேலை..
பதிவு எடுத்து இன்ன பிற செய்து...
வெகு நல்ல வேலை..
அந்தப் பெரிய கஸ்டமர்..
ஒரு கம்பெனியின் எம்டி
கூப்பிட்டால் வந்து
அள்ளிக்கொண்டு போய்விடுவார்..
ம்ம்

எண்ணவோட்டத்துடன் நிமிர்ந்தால்
ஆசாரி
கண்ணில் ஆர்வம், உடையில் வறுமை..

முகம் கல்லாய் மாற
எவ்ளோ நாள் ஆச்சு
எவ்வளவு கேக்கற

வேலை பாருஙக்..
ஒண்ணரை மாசம் ஆச்சு
4 லேபர் வச்சிருந்தேன்..

ம்ம் முடியாதுப்பா
சரி என்னவோ சொல்றே
தர்றேன்..
இன்னொண்ணு வேண்டும்
அதுவும் ஒருமாசத்துக்குள்ள..

தயங்கினான்
கஷ்டம்ங்க..

ஒண்ணுமே கஷ்டம் இல்லை
வாழ்க்கையில்..
இந்தா சரியா இருக்கா..
சரிங்க..
பண்றதுக்கு தங்கம் வைரம் எல்லாம்..
நாளைக்கு வந்து பாரு..

சரி சொல்லி
கதவைத் தள்ளி ஆசாரி வெளியே போக
அவன் முதுகில் அறைந்தது
கதவும்..

pavalamani pragasam
16th March 2013, 02:11 PM
கதவும் ஜன்னலும் மூடிய
இதமான செயற்கைக் குளிர்
ஏனோ எனக்கு பிடிப்பதில்லை
வேர்வையும் தூசியும் பழகியவை
வெட்டவெளி காற்றும் காட்சியும்
தராத சுகமா என்பதென் தாபம்

chinnakkannan
16th March 2013, 05:11 PM
தாபம் கொண்டு
பாராமல் பார்க்கும் பார்வை
எனக்குப் புரியாதா என்ன..

விமான நிலையம் போகிறேன்
என்றவுடன்
உன் அம்மா அப்பா
தங்கை தம்பி
குதிகுதித்து வந்து விட்டார்கள்..

ரெண்டு கார் எடுத்துக்கலாம்
என்று
பெருந்தன்மை வேறு..

இரண்டரை வருடம் பிரிந்திருந்து
நீ வருகிறாய் என
எப்படிச் சொல்வது..
கேட்டால் அவர்களும் தான்
அப்படி இருந்தார்கள் எனச் சொல்வார்கள்..

ஆனாலும் நீ மோசம்
ஏன்முகம் சுருங்கினாய்..

ஆசையாய்த் தானே
உன் தங்கை தம்பி
காரினுள் அருகில்...

அவ்வப்போது முறைப்பது
புரிகிறதெனக்கு..

தோ..இன்னும் ஒரு மணி நேரம் தான்..
வந்துவிடும் அண்ணா நகர்..
பொறுத்துக்கொள்..

ம்ம்..
இது நான் உனக்குச் சொல்லவில்லை

எனக்குச் சொன்னேன்..!

pavalamani pragasam
16th March 2013, 08:24 PM
சொன்னேன் என் முடிவை
மேசை முன் அமர்ந்து
இட்லி தோசை பிடிக்கும்
வடை பொங்கலும் நன்று
பூரியும் கிழங்கும் அருமை
பரவாயில்லை இன்றைக்கு
எனக்கும் நான் குல்ச்சா
பிச்சா கார்லிக் பிரெட்
ஃப்ரைட் ரைஸ் ஃபிங்கர் சிப்ஸ்
தொட்டுக்கொள்ள சீஸ் சாஸ்
ஒத்து வாழ்வது முக்கியம்
புதுமையில் நான் ஐக்கியம்

chinnakkannan
17th March 2013, 02:47 PM
ஐக்கியம் ஆவதற்கு
இன்னும் மனது
பக்குவப் பட வேண்டும்
என நினைத்தபடியே
இஷ்டத்துக்கு வாழ்ந்தாயிற்று..

நோய்வாய்ப்பட்டு
போகும்காலம்
வந்தது தெரிந்தபோது
சங்கரா சொன்னால்
தெரிகிறது
இறைவன் முகத்தின்
புன்னகையில் ஏளனம்..

pavalamani pragasam
17th March 2013, 04:59 PM
ஏளனம் செய்வோர் துணிவில்லாதோர்
ஆசைபட்டபடி அலங்காரம் செய்திட
மனம் போல் பொழுதை போக்கிட
இணையத்தில் இஷ்டம் போல் மேய
வயதும் பாலும் தடையேயல்ல
சொல்வது ஒரு நவயுகத்துப் பாட்டி

kirukan
17th March 2013, 06:54 PM
பாட்டி சொன்ன கதைகள்
நெட்டில் உண்டு
கதை சொன்ன பாட்டிகள்தான்
வீட்டில் இல்லை.
-
கிறுக்கன்.

pavalamani pragasam
17th March 2013, 08:19 PM
இல்லை என்பது எதிர்மறை சொல்லா
சொல்லத் தெரியவில்லை உறுதியாய்
குழந்தையும் குமரியும் சரளமாய் கூறும்
இச்சொல்லில் கபடம் தெரியும் அப்பட்டமாய்

chinnakkannan
17th March 2013, 10:10 PM
அப்பட்டமாய்த் தான் தெரிந்தது
புதுமுக நடிகையின் புகைப்படத்தில்
அவளது புற அழகும்
அதையும் மீறி
மன சோகமும்

pavalamani pragasam
18th March 2013, 08:09 AM
சோகமும் கரையும்
காலைப் பனியாய்
மாலை நிழலாய்
சோப்பு நுரையாய்
வானவில்தானாய்
இசை கேட்கையில்
இயற்கையின் மடியில்
இணைய மேய்ச்சலில்

pavalamani pragasam
18th March 2013, 08:28 AM
//கிறுக்கனின் இடுகை:

பாட்டி சொன்ன கதைகள்
நெட்டில் உண்டு
கதை சொன்ன பாட்டிகள்தான்
வீட்டில் இல்லை.

The trick is to click seetings at the top of the page->Tools->encoding->unicode//

venkkiram
18th March 2013, 09:05 AM
மேய்ச்சலில் மாடுகளை விட்டுப் பொடிநடையாய்
ஓடைப் பக்கமிறங்கி கையள்ளி முகங்கழுவி
மேட்டோரம் கூடை கூடையாய் பில்லறுக்கும்
ராதைநோக்கி காதல் நடையளந்தான் கண்ணன்.

chinnakkannan
18th March 2013, 10:11 AM
கண்ணனைத் தேடித் தேடி
..கண்களும் பூத்த தேடி
மன்னவன் நெஞ்சைக் கொண்ட
..மாயவன் எங்கு சென்றான்
வண்ணமாய்ப் பட்டுச் சேலை
..வாட்டமாய் நகைகள் பூண்டு
கன்னிநான் நிற்குங் காலம்
..கடுகியே வரச்சொல் தோழி..!

pavalamani pragasam
18th March 2013, 01:01 PM
தோழி பாத்திரம் தவறாமல் இருக்கும்
பழைய ராஜா ராணி திரைப்படத்திலே
அரசகுமாரியின் அந்தரங்கம் அறிவாள்
அவளுடன் ஆடிப் பாடுவாள் விளையாடுவாள்
காதல் தூதும் சென்று வருவாள் அப்படியே
தலைவனின் தோழனுடன் பிரியமாகிடுவாள்
எத்தனை கதையில் பார்த்தும் அலுப்பதில்லை
இன்று எண்ணுகையில் ஏனென்று புரியவில்லை

kirukan
18th March 2013, 04:34 PM
ஏனென்று புரியவில்லை
நஞ்சை கொண்டு
நெஞ்சை நக்கும்
நயவஞ்சகரிடம்
நாட்டினர் மயங்குவது.

-
கிறுக்கன்

chinnakkannan
18th March 2013, 06:06 PM
மயங்குவது போலத் தான்
தெரிந்தாலும்
அப்படி இல்லை என
அவனுக்கும் தெரியும்..
எனக்கும்..

என்ன செய்வது..
சின்னச் சின்னப்பொய்களால்
தான்
வாழ்க்கை ஆகும் சுவாரஸ்யம்

pavalamani pragasam
18th March 2013, 08:10 PM
சுவாரஸ்யம் நிரம்பிய கதை
பேரன்கள் சிபாரிசு செய்த கதை
பிள்ளைப் பிராயத்துக்குப் பிரயாணம்
புத்தகத்தை கீழே வைக்க முடியாமல்
பிராண்டி இழுக்கும் கடமையெண்ணி
புழுவாய் தவிக்க என்னவொரு இம்சை

chinnakkannan
18th March 2013, 08:37 PM
இம்சையா உதைப்பேன் நானும்.
.இருமினால் குறைந்தா போகும்
கம்மென இருடி, அம்மா
...கண்களைத் திறந்து கொள்வாள்
நிம்மதி கொஞ்சம் கூட
..நிஜத்திலே கண்ட தில்லை
நம்மவன் என்றே வந்தாள்
...நலமெனத் துயில்கொள் ளட்டும்

என்னவர் இருக்கி றாரே
..இவர்க்கிணை எங்கும் ஏது
திண்ணமாய்ப் பெற்ற நான்கில்
...தெளிந்தநல் மூத்த பிள்ளை
அன்னையோ தனது சொத்தை
...அடுத்தவர்க் கெழுதி னாலும்
தன்னலம் இல்லா இந்தத்
...தனயனை நாடி வந்தார்..

நல்லவர் என்ற பேர்தான் நானிலம் மீதில் உண்டு
...வல்லவர் என்ற பேரும் வஞ்சிநான் அறிவேன் போதும்
கள்ளமாய் மற்றோ ரெல்லாம் கறந்திட இவரோ இன்று
...வெள்ளமாய் அன்பைத் தந்தால் இவரையே என்னவென்பேன்

venkkiram
19th March 2013, 08:20 AM
என்னவென்பேன் உன் கைராசியை
தொட்ட இடமெல்லாம் சூன்யமாய்கிறது
பச்சை மரமே பட்டுப்போய் விடுகிறது
என்ன சொல்வேன் உன் வாய்முகூர்த்தத்தை
ஆறுதல் சொன்னால் நிம்மதி தொலைகிறது
ஆசிகள் வழங்கினால் ஆயுளே குறைகிறது

pavalamani pragasam
19th March 2013, 08:40 AM
குறைகிறது உடல் பலம்
இது முதுமை காலம்
நிறைகிறது மனம்
நிம்மதியான ஓய்விது
ஓடியாடி அடங்கி இனி
அலுங்காமல் விளையாடி
விருப்பம் போல் வார்த்தையாடி
விந்தையான வசந்தமிது

venkkiram
19th March 2013, 09:14 AM
வசந்தமிது வந்தது காற்றில்
இளந்தளிர் நிறங்காண
வண்ணமலர் பூத்தது காட்டில்
கருவண்டு முகங்காண
சித்திரைக் கொணரும் பருவமாம்
சிரிக்கும் நிலத்திற்கு புதிய உருவமாம்
சிந்தையினை செழுமையாக்கும்
வசந்தமே வருக வருகவே

kirukan
19th March 2013, 10:13 AM
வருக வருகவே என
வரவேற்று வாழவைத்த
மக்களையே வஞ்சித்து
வாட்டி எடுக்கும்
வல்லூருகள் கொண்ட நாடிது.

-
கிறுக்கன்

chinnakkannan
19th March 2013, 10:20 AM
... நாடிது..
என அபினயம் பண்ணி
அவையை வணங்கிய குட்டிப் பெண்
கைதட்டல்களைப் பொருட்படுத்தாமல்
மேடை மூலையில் இருந்த
அம்மாவிடம் ஓடினாள்..
அம்மா.. பசிக்குது..

venkkiram
19th March 2013, 10:33 AM
பசிக்குது கொழந்தைக்கு..அம்மா
பழைய சோறு இருந்தா போடுங்கம்மா
வாடும் பெண்குரல் விடாமல் வெளியெ
திறக்காதோ கதவு என்ற சந்தேகத்தில்
உடைக்கப் பார்க்கிறது பேரொலி
இன்னும் சாமி கும்பிடல காக்கைக்கு வைக்கல
ரெண்டு தெரு போயிட்டு கொஞ்ச நேரம் கழித்து வா
அதட்டலுடன் உள்குரல் திறந்து மூடிக்கொண்டது

chinnakkannan
19th March 2013, 11:28 AM
மூடிக் கொண்டது கண்ணிமைகள்
திறந்து கொண்ட மனதில்
ஏகப்பட்ட கூச்சல், பிம்பங்கள்
சுற்றிச் சுழன்றவை
சற்று நேரத்தில் அடங்க
தழுவிக் கொண்டது உறக்கம்

kirukan
19th March 2013, 11:37 AM
உறக்கத்தின் கிறக்கத்தில் மயங்காது உறங்கின்
உடலொடு மனமும் சுகிக்கும்.

-கிறுக்கன்

chinnakkannan
19th March 2013, 01:10 PM
சுகிக்கும்; சுழன்றிடும்; சோம்பலைத் தள்ளி
முகிழ்த்திடும் எண்ணத்தில் மூழ்கிப் பலவிதமாய்
நெஞ்சிலே வைத்திட்டு நெக்குருகும் யாதென்றால்
பஞ்சுமனம் என்றேதான் பகர்

pavalamani pragasam
19th March 2013, 01:35 PM
பகர் என்றான் பல்லவ மாமன்னன்
கோபத்தில் சிவந்த அவன் முகத்தில்
ஒப்பனை தூக்கலோ என்றெண்ணும் போதே
பதில் கூறத் தயாரான படை ஒற்றனின்
தலைப்பாகை கழன்று விழ அரங்கத்தில்
எழுந்த சிரிப்பொலியில் அதிர்ந்தனர் ஆசிரியர்
பள்ளி நாடகத்தில் எதிர்பாரா திருப்பம்
சரித்திரத்தில் நகைச்சுவை புகுந்து குழப்பம்

kirukan
19th March 2013, 01:40 PM
குழப்பமாய் இருக்கிறது!

அது உண்டு என்போரும்
அது இல்லை என்போரும்
ஒரு அதை சார்ந்தே
விளக்கம் தருகின்றார்

இருக்கிறது என்போரின்
சார்தல் புரிவதுண்டு
இல்லை என்போரின்
சார்தல் புரிவதில்லை

இல்லை என்பார்க்கு
எதிலும் அது இல்லை தானே.

-
கிறுக்கன்

chinnakkannan
19th March 2013, 01:42 PM
குழப்பம்,
நடுக்கம்,
பயம் எல்லாமாய்த் தான்
இருந்தது
வினாத்தாள் பார்க்கும் வரை..
பின் கொஞ்சம் தெளிவு,
திட்டமிட்டு
எழுத ஆரம்பித்ததில்
பதில் கொட்டியது அருவியாய்..

chinnakkannan
19th March 2013, 01:44 PM
அது இல்லை தானே
தயக்கமாய்க் கலக்கமாய்க்
கேட்ட அவள் கண்களில் பயம்..

டாக்டர் முறுவலித்து
ஒன்றும் இல்லை
கவலைப் படாதே
நான்காவது குழந்தையெல்லாம் இல்லை
எனச் சொல்ல
பொங்கியது சந்தோஷம் அருவியாய்..
கூடவே கொஞ்சம்
இனம்புரியா வேதனை..
இருந்திருக்கலாமோ என..

ம்ம் மனசு
எப்பொழுதும்
ஒரு ரெண்டும்கெட்டான்..!

pavalamani pragasam
19th March 2013, 01:56 PM
ரெண்டும் கெட்டான் வயசில்
உடைந்து மாறும் குரலில்
அரும்பும் பூனை மீசையில்
விறைப்பாய் திரிவான் விடலை

chinnakkannan
19th March 2013, 02:29 PM
விடலை என்பது பையனுக்கு
அதுவே
பெண்ணுக்கு வாலை என்பர்
உனக்கு வாலைப் பருவம்
வளர்ந்தால் புரிந்து கொள்வாய்
உலகம் எப்படி என்று..

கண் சுருக்கினாள் பள்ளி மாணவி
அப்பா நீ தமிழ் வாத்தியார் தான்
பட்
சொல்லு
எனக்கு ஐஃபோன் தருவியா மாட்டியா..

முடியாது எனச் சொல்ல
வாலைப் பருவம்
காலை எட்டித் தரையில் உதைத்தது
பின்
உன்னோட ஒரு மாசம்
பேசமாட்டேன் போ எனச் சொல்லி

முகத்தை
உயரே வைத்துக் கொண்டது
ஒட்டகச் சிவிங்கியாய்

pavalamani pragasam
19th March 2013, 07:23 PM
ஒட்டகச்சிவிங்கியாய் பிறந்திருந்தால்
நினைக்கவே இனித்தது அவளுக்கு
அடுக்கடுக்காய் மாட்டலாம் அட்டியலும்
நெக்லஸும் மின்னும் பொன்னில் பதித்த
வைரமும் வைடூரியமும் ரத்தினமும்
முத்தும் மரகதமும் கோமேதகமும்
பவளமும் பளிச் பளிச்சென மின்னிட
பெருமையாய் தலை தூக்கி நடப்பேனே

chinnakkannan
19th March 2013, 10:13 PM
தலை தூக்கி நடப்பேனே
என் பைய்னும் பெண்ணும்
படிப்பு முடித்தால் என

கர்வமாய்ச் சொன்ன பக்கத்து வீட்டு மாமா
தலை குனிந்ததும்

ம்ம் இவன் எங்க உருப்படப் போறான்
தண்டச் சோறு
எனத்
திட்டி திட்டி எதிர்வீட்டு மாமி
வளர்த்த அவர் பையன்
வியாபாரத்தில் பெரிய ஆளான பின்னும்
அவ்ர் வார்த்தைக்குக் கட்டுப் பட்டு
நடப்பதும்..

ம்ம்..எல்லாம் காலம அண்ட்
அவர்களின் நேரம்

venkkiram
20th March 2013, 08:07 AM
நேரம் சரியில்லை பூசாரிக்கு
அய்யனார் ஆயுதமான வீச்சரிவாள்
முறிந்து பாதியாக தலையில் விழ
அறுக்கப்பட காத்திருக்கும் கறுப்பாட்டின்
ஆயுசு அடுத்த ஒரு வாரத்திற்கு கெட்டி

pavalamani pragasam
20th March 2013, 08:18 AM
கெட்டிப் பட்டது இரும்பு
பட்டறையில் தயாரிப்பு
உறமேறுது மனதில்
உலக அனுபவ பாடத்தில்

kirukan
20th March 2013, 09:46 AM
அனுபவ பாடத்தில் பிறக்கும் புத்தி
பட்டய படிப்பில் பிறப்பதில்லை.

-
கிறுக்கன்

chinnakkannan
20th March 2013, 10:15 AM
பிறப்பதில்லை எதுவும்
சாதாரணமாய்

மேகத்திலிருந்து மழை
சாரலில் இருந்து மென்காற்று
கொடியிலிருந்து மொட்டு
கருவிலிருந்து உயிர்..

கவிதை உட்பட..

kirukan
20th March 2013, 10:38 AM
தை உட்பட
அரசியலில் சிக்காத
விடயங்களில்லை
இந்நாட்டினிலே

எதையும் வித்தாக்கி
விஷ விருட்சமாக்கும்
வித்தகர்கள் நம்
அரசியல்(வியாதிகள்)வாதிகள்.

-
கிறுக்கன்

chinnakkannan
20th March 2013, 11:10 AM
அரசியல் வியாதிகளுக்கு
மருந்து கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என
முயன்றவர்களையும்
அரசியல் மாற்ற..
லட்சங்களில் இருந்த
செலவுகள் இப்போது
ஆயிரக்கணக்கான கோடிகளில்

pavalamani pragasam
20th March 2013, 12:10 PM
கோடிகளில் கொட்டிக் கிடக்கும் விண்மீன்கள்
இரவல் ஒளியில் மின்னும் ஒரு நிலவு முகம்
அருகிலிருக்கிறது அது அருமையாய் தெரிகிறது
எட்டாத தூரத்தில் இருந்து சிமிட்டுதல் வீணோ

chinnakkannan
20th March 2013, 05:36 PM
வீணோ என்றெல்லாம்
சொல்ல முடியாது..
பொதுவாக மற்றவரைப் பார்த்து
நட்பாக
இதழ் சிந்தும் புன்னகைக்கு
என்றாவது
பதில் கிடைத்தே தீரும்

pavalamani pragasam
20th March 2013, 08:12 PM
தீரும் தன் காலமென்று
தெரியாது சிட்டுக்குருவிக்கு
சின்ன சிங்காரக் குருவிக்கு
அசுர வளர்ச்சி அபார வேகம்
யந்திரமயமாகும் புது உலகம்
வசதியும் சுகமும் உயரும் நிலை
அதற்கு எவ்வளவு பெரிய விலை

chinnakkannan
20th March 2013, 08:32 PM
பெரிய விலை என்றாலும்
பரவாயில்லை
நன்றாக இருக்கிறது
என
வாங்கிய பொம்மை ஒரு மூலையில்
ஊரிலிருந்து
பெரியப்பா வாங்கிக்கொடுத்திருந்த
சின்ன தக்கணூண்டு மர பொம்மை
அவள் தலையணைக்கருகில்

venkkiram
21st March 2013, 08:11 AM
தலையணைக்கருகில்
சுதந்திரமாக சுறுசுறுப்பாக
எல்லைகளே இல்லாமல்
இயங்கிக்கொண்டிருக்கிறது
ஆழ்மனம்.

pavalamani pragasam
21st March 2013, 08:22 AM
ஆழ்மனம் மெத்தையாகும்
அழகிய முத்துச்சிப்பிக்கும்
அபாயகரமான சுறாவுக்கும்
எதிர்பாரா ஒரு கணத்தில்
திரை விலகி வெளிப்படும்
அதன் குணமும் கொடூரமும்

venkkiram
21st March 2013, 08:29 AM
கொடூரமும் பேரன்பும்
ஒரே மனதின்
இருவேறு ஊற்றுத்துளைகள்
ஒன்றைக் குறைக்க ஆரம்பித்தால்
மற்றொன்று
அளவுக்கு அதிகமாக
கொட்டத் தொடங்குகிறது

kirukan
21st March 2013, 09:56 AM
தொடங்குகிறது, கயவர்கள்
கயவர்களை கைவிட்டதால்
கயவராய் கைகாட்டும் பணி.

-
கிறுக்கன்

chinnakkannan
21st March 2013, 10:39 AM
பணியில் பணிவு
கொஞ்சம் திறமை
நேரந்தவறாமை
எல்லாம் வேண்டும்
புரிந்ததா..
நான் கேட்ட காப்பி என்னாச்சு
இவ்ளோ லேட் ஆகுது

சர்வர்
சற்று நேரத்தில் எதுவும் பேசாமல்
காப்பி கொண்டுவந்து வைக்க
அது இருந்தது கொதித்து..

pavalamani pragasam
21st March 2013, 10:42 AM
கொதித்து எழுந்தது மாணவர் சமுதாயம்
புரட்சி பிறக்குமா மலருமா மனித நேயம்

kirukan
21st March 2013, 10:51 AM
மனித நேயம்
மண்ணாகி போக
மக்கிய மனிதனை
பார்க்கவோ இல்லை
மிஞ்சிய மனிதனை
பார்க்கவோ!!

-
கிறுக்கன்

chinnakkannan
21st March 2013, 10:56 AM
பார்க்கவோ என எதற்காக
என்னைக் கேட்கிறாய்..

உனது
மாநிறத்திற்கு சிவந்த வண்ணப்
ப்டவை நன்றாக இருக்கும்
எனச் சொன்னேன்..
கரு நீலம் பிடித்தால் எடுத்துக்கோயேன்
எதற்காக்க் கேட்கிறாய்..

ம்ம்
நல்லாத் தான் இருக்கு
கரு நீலமும்..
ஏய் எதற்காக சிவப்பையே எடுக்கிறாய்..

பரவாயில்லைம்மா
உனக்குப் பிடிச்சது நீ எடுத்துக்கோ
இல்லையா
அதுவும் சரி..

சிரித்தபடியே சிவப்பை எடுத்தவள்
மனதுள்
கொஞ்சம் வருத்தம் தான்..

kirukan
21st March 2013, 12:57 PM
தானென்பது தன்னுள் வந்திட தரம்
தாழ்ந்து துயர் சேர்ந்திடும்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
21st March 2013, 01:17 PM
சேர்ந்திடும் பாவமும் புண்ணியமும்
சித்ரகுப்தன் கணக்குப் புத்தகத்தில்
கண்ணுக்குத் தெரியாத நீதியொன்று
போகுமுன்னே பலனை தந்துவிடும்
விந்தையான பல வழிகளிலே இது போல்-
களைப்பிலே ஆற்றங்கரை மர நிழலிலே
தூங்கிவிட்ட பால்காரன் பணப்பையை
குரங்கொன்று கவர்ந்து கிளை மேலேறி
காசுகளை தரையில் ஒன்றும் ஆற்றில் ஒன்றுமாய்
வீசியதில் தண்ணீர் கலந்து விற்ற பாலின்
லாபக்கணக்கு நேரானது கேட்டதுண்டு
முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்தது

chinnakkannan
21st March 2013, 03:17 PM
விளைந்தது கொஞ்ச்ம் எனக்
கணக்குக் காண்பித்து
பத்து மூட்டை நெல் கொண்டு வருவான்
குத்தகைக் காரன் முன்பெல்லாம்

எட்டாகி ஆறாகி
நாலு என வந்த போது
அப்பா நீயே வைச்சுக்கோ சொல்லிவிட்டார்..
பின்
கிராமத்துக்கும் போனதில்லை
வயலையும் பார்க்கவில்லை..

போன மாதம் எதேச்சையாக
குத்தகைக் காரனின் பையனைப் பார்த்தேன்
நன்றாகத் தான் இருந்தான்..

அப்பா எப்படி இருக்கார் எனக் கேட்டதற்கு
முகம் வாடியது
எதையுமே சாப்பிட முடியவில்லையாம்
வாயெல்லாம் புண்ணாம்
ஷீகர் வேறு
மிக இளைத்து விட்டானாம்..
என்ன
பிள்ளையால் விவசாயம் பண்ண முடியாமல்
நிலம் விற்றாச்சு..
டவுனுக்கே வ்ந்துட்டேங்க..
ஃபேக்ட்ரில வேலை பாக்கறேன்
நிலத்தை விற்றதில் ஒரு வீடு
ஏதோ வ்ருமானம் ஓடுதுங்க பொழைப்பு

எனச் சொன்னவனின்
கைகளில்
தவழ்ந்திருந்தது ரேஷன் கார்ட்..

pavalamani pragasam
21st March 2013, 08:02 PM
ரேஷன் கார்ட் மட்டும் அங்கீகரிக்கும்
என் குடும்பத்தலைவன் பட்டத்தை
பெயர் விலாசம் படத்தோடு பவுசாக
தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையாய்
நானிருக்க மதிமந்திரியாய் அவளிருக்க
குறையொன்றுமில்லை கண்ணா வாழ்விலே

chinnakkannan
22nd March 2013, 09:50 AM
குறையொன்றுமில்லை கண்ணா வாழ்விலே

நெக்குருகி
ஊனுருகி
உயிருருகிப் பாடி முடித்த
பாடகியின்
கண்ணோரம் கோர்த்த நீருக்கு
மட்டும்
தெரியும் அவள் நிலை..

pavalamani pragasam
22nd March 2013, 12:04 PM
நிலை தடுமாறிடலாமோ
நீர்நிலைகள் வற்றலாமோ
நீரின்றி இவ்வுலகு வாழுமோ
நீருக்கு ஏனிந்த சோதனையோ
கண்மாய் மடையடைத்து கல்லூரி
குளமும் ஏரியும் ஆனது குடியிருப்பு
வனமழித்து வான் மழை பொய்த்து
சகல வித கழிவுகளைக் கொட்டி
அம்மம்மா மடமை போதுமம்மா
வளமிதை சேமிக்க வேண்டுமம்மா
சிறு துளியும் கூட வீணாக்காமல்
காப்போம் சந்ததிகள் தவிக்காமல்

chinnakkannan
22nd March 2013, 12:42 PM
தவிக்காமல் இருக்க முடியுமா என்ன

சின்னப் பெண்ணின் செல்ஃபோன்
எடுக்கவே மாட்டேன் என்கிறது..
ஆறுமணிக்கு வருபவள் ஏழாகியும்
காணோம்
வாசலுக்கும் கொல்லைப்புறத்துக்கும்
நடந்து கால்கள் தேய்கிறது.

ம்ம்
காலிங்க் பெல் அடிக்கிறது
அவள தானா..

விள்ம்பர இடைவேளைக்கு அப்புறமாம்
உருப்படுவார்களா சண்டாளர்க்ள்
என்னடி இவ்வள்வு நேரம்
வ்ர்றச்சே பஸ்ஸ்டாப்புலருந்து
ஒருத்தன் பின்னாலேயே வ்ந்தாம்மா..
ஓடி வ்ந்துட்டேன்..
வந்துட்டியோன்னோ ..சரி சரி
உள்ள இட்லி வெச்சுருக்கேன்
காலலம்பிட்டு சாப்பிடு

மறுபடி பார்த்தால்
இன்னும் ஆரம்பிக்கலை
என்ன விளம்பரங்களோ
என்ன ஜென்மங்களோ..

pavalamani pragasam
22nd March 2013, 07:37 PM
ஜென்மங்களோ பல கோடி இருக்கும்
ஆதாமுக்கு ஏவாளைப் பிடிக்கும்
மீண்டும் மீண்டும் பிறக்கும் பந்தம்
மாறவே மாறாத இனிய சொந்தம்

chinnakkannan
23rd March 2013, 06:18 PM
சொந்தம்னு தான்
பொண்ணு கொடுத்தேன்
அதுக்காக இப்படியா
கொடுமைப் படுத்துவான் என் பெண்ணை..

அந்தக் காலத்தில்
பக்கத்து வீட்டு மாமி
அம்மாவிடம் சொல்லி
அழுதது நினைவிருக்கிறது..

நேற்று
என் அலுவலக நண்பர்
சொல்லிக்கொண்டிருந்தார்..
சொந்த அக்கா பொண்ணுங்க
பையனுக்குக் கட்டிக் கொடுத்தேன்..
கல்யாணம் ஆனதுலருந்து
ஒரே சண்டை..
பையன் பாவம்
மூணு மாசத்துல
துரும்பா இளைச்சுட்டான்..
அக்காவக் கேட்டா
எல்லாம் ஒம் பையனக் கேளு
இல்லன்னா
நாம ஒண்ணும் தலையிட வேணாம்கறா..
என்ன செய்ய..

என்ன செய்ய முடியும்
சிரிப்பதைத் தவிர.

pavalamani pragasam
23rd March 2013, 07:00 PM
சிரிப்பதைத் தவிர வாழ்வில்
வேறெதுவுமில்லா பருவத்தில்
அவள் நின்றாள் அழகாக
வசந்தத்தின் வாயிலில்
கண்ணிறைந்த கணவன்
கை நிறைய வருமானம்
வயது ஐந்தும் மூன்றுமாய்
குருத்திரண்டு வளரும் காலை
கொடும் புயல் வீசத் துவங்க
மங்கைக்கு புற்று நோய் வர
காலன் வாசலில் நின்றிருக்க
கண் முன்னே கரையும் ஓவியம்
நலிந்து நொந்து எண்பதை தொட்டு
தொண்ணூறை தாண்டி காலனை
வருந்தி அழைக்கும் எண்ணற்றோரிருக்க
வாடி வதங்கி அவரெல்லாம் கிடக்க
வாழ வேண்டிய ஒரு தலைவியை
அச்சாணியை ஆணிவேரை அவசரமாய்
கவர்ந்து செல்லும் காலனுமொரு
கிறுக்கனா கல்நெஞ்சக்காரனா
உடையாளியின் உத்தரவை மீறாத
கடமைக்காரனா என்ன கணக்கிது

chinnakkannan
23rd March 2013, 07:08 PM
என்ன கணக்கிது
எப்படிக் கூட்டிக் கழித்தாலும்
வரவில்லை விடை..

பின் சீட்டில் உட்கார்ந்து
ஸ்கூட்டியில் சென்ற
பக்கத்து வீட்டுத்தாத்தா
மோதிய மோதலில்
கீறலுடன் எழுந்திருக்க
ஓட்டிச் சென்ற பேத்திக்கோ
முழங்கால் விரிசல்
மூன்று மாதம் பெட்ரெஸ்ட்டாம்..

ம்ம்
அந்தக்கால மனுஷாள்ளாம்
இப்படித் தான்
என
முணுமுணுக்கிறார்
தாத்தாவின் நண்பர்..

இருக்குமோ உண்மை..

pavalamani pragasam
23rd March 2013, 09:30 PM
உண்மை என்பதென்ன
உரிக்கும் வெங்காயமா
பாலுக்குள் வெண்ணெய்யா
கண்டவர் விண்டிராத
விண்டவர் கண்டிராத
வள்ளுவர் வாக்கில்
தீதிலாதது சொல்லுதல்
புரிந்தவரை போதும்

chinnakkannan
24th March 2013, 03:57 PM
புரிந்தவரை போதும்
எனப் பரீட்சைக்கு வந்து
பாடம் மற்ந்துவிடுவதைப்
போலத் தான் இருக்கிறது
அவள்
எதையாவது வாங்கிவரச் சொன்ன போது
ம்ம் சொல்லிவிட்டு
கடைக்கு வந்தால்
ம்ம் எவ்வளவு யோசித்தும்
வரவில்லை நினைவுக்கு..

என்ன பண்ண..
கிடைக்கப் போகிறது அடி..!

pavalamani pragasam
24th March 2013, 07:28 PM
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி
உதவுவது இல்லை என்றும்
அடியாத மாடு படியாது என்றும்
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகருமென்றும்
பட்டிமன்றத்தின் ஓரணியினர் அடி பின்னிட
அன்பான அணுகுமுறையை அரவணைப்பை
சாத்வீகத்தின் அரிய சாதனையை
அடியின் எதிர்மறை தாக்கங்களை
மற்ற அணி பிரித்து அலசத் துவங்க
கவனம் கலைத்தனர் சண்டையிட்டு
அலறும் என் புத்திர செல்வங்கள்
விருட்டென எழுந்து தேடினேன் குச்சியை

chinnakkannan
25th March 2013, 06:50 PM
குச்சியை வைத்து அடித்து
சிந்து சமவெளி நாகரீகம்
சொல்லித் தந்த சிவக்கண்ணு வாத்தியார்
இல்லை
பட்ட காயம் பின் வலி
எல்லாம் மாயம்..
நடத்திய பாடம் மட்டும்
இன்றும்
படிக்கிறாள் என் பேத்தி..

pavalamani pragasam
25th March 2013, 09:24 PM
பேத்தி ஒரு பெரிய சாகசக்காரிதான்
பேரன் அம்மாவை வாலாய் தொடர்ந்து
விடாமல் அரைத்துக்கொண்டிருக்கிறான்
தான் வேண்டியதை பெற்றிட வேண்டி
சின்னப் பொண்ணு அப்பா மடியிலேறி
செல்லமாய் கொஞ்சிக் கொஞ்சி குழைந்து
சாதித்துவிடுகின்றாள் வெகு சுலபமாகவே
இன்று நேற்றல்ல நாளையுமிது தொடரும்

chinnakkannan
26th March 2013, 02:13 PM
தொடரும் எனச் சொல்லிச்
சென்ற என் இனிய பாவி
ஒரு குறுஞ்செய்தி, மின்னஞ்சல்,
குட்டிப் பேச்சு என
ஒன்று கூட செய்யவில்லை..

ஒழுங்காய்ப் போய்ச் சேர்ந்திருப்பானோ
ஃப்ளைட் கரெக்ட் டய்த்துக்குப் போச்சா
எதுவும் பிரச்னை ஒன்றும் இல்லியே
ம்ம்
போய்ச் சேர்ந்து மூன்று மணி நேரம் ஆச்சே
காத்திருப்பாளே ஒருத்தி..
என்ன ஜென்மமோ..

இரவு நேரம் தான்..
நிலவு கூட தூங்குவதற்காக்
மேகந்த்தின் பின்னால்..
எனக்கும் தூக்கம் வருகிறது..
ஆனால் இவன்..
இர்ரெஸ்பான்ஸிபிள்..
பொறுப்பில்லாதவன்..
சொன்னால்
நீ என்ன மேஜரா என்பான்..

கொய்ங்க் கொய்ங்க் என்றசத்தம்
செல்ஃபோனா.. ஆமாம்..ஆனால் என்னதில்லை..
சாலையில் யாரோ..

ர்ரும் என்று ஆட்டோ போகும் ஓசை
டிவியில் மெளனமாகப் பாடலுக்காகக்
குதித்துக் கொண்டிருப்பவர்களின் மேல்
அசுவாரஸ்யப் பார்வை..
கையிலிருக்கும் பத்திரிகையில்
மனம் எப்படிப் போகும்..
இடியட்.. நீ பண்ணு..
அப்ப திட்டுவேன்..

கொஞ்சம் கொஞ்சமாய்க்
கண்ணசர்ந்து
தூக்கம் கண்ணைக் கொஞ்ச வருகையில்
கொய்ங்க் கொய்ங்க்..
செல்ஃபோன் தான்..

எடுத்தால்..
ஹாய் சாரிம்மா
தூங்கிட்டியா.. நானும்
வந்தவுடன் கொஞ்சம் கண்ணசந்தேன்..
இப்பத் தான் எழுந்தேன்..அகெய்ன் ஸாரி டியர்..

முகத்தில் புன்முறுவல் வர,
திட்ட நினைத்தது மறந்து போய்
தூக்கமெல்லாம் போயே போச்சு..

pavalamani pragasam
26th March 2013, 07:29 PM
போயே போச்சு பழந்தமிழர் போற்றிய
பழைய பழக்கமெல்லாம் புதைந்து போச்சு
பல் துலக்கிய உடன் பருகியதோ நீராகாரம்
பகல் வேலைக்கு பலமளித்தது பழைய சாதம்
பல்கி பெருகிய நுண்ணுயிர் அதிலிருந்து காத்திட
நோயும் நொடியும் பல காதம் பறந்து சென்றிட
புத்தொளியாய் வாழ்வில் ஆரோக்கியம் பொலிந்திட
புது அலையாய் பயமுறுத்தும் பகையாய் புகுந்திட்ட
பொருந்தாத பழக்கமில்லா பலகாரங்கள் நமக்கெதற்கு
பாட்டி செய்த பண்டங்கள் மேல் வேண்டாம் வெறுப்பு

chinnakkannan
27th March 2013, 10:57 AM
வெறுப்பு முகத்தில் தெரிய
அப்பா சொன்னார்
எதுக்குடி வந்தே..
அண்ணன் முகத்திலும் அதே தொடர்ச்சி..

வரட்டுமா
என்பதுபோல் அவள் கண்களில்
நீர் எட்டிப் பார்க்க
அம்மாவின் கண்களிலும்
அது தொடர
நிலவியது மெளனம்..

பின்
மெல்லச் சொன்னாள்..
நான் நல்லாயிருக்கேன்
உங்களால் அன்றும் இன்றும்..
அவரும் நலம்..
கொஞ்சம் விரிசலைச் சரி செய்யலாம் என..

முடிக்குமுன் வெடித்தது எரிமைல்..
நாங்களும் நலம் தான்..
இல்லை எனில் சொல்லி அனுப்புவோம்
அப்போது வா..

அம்மாவைப் பார்த்தால்
பதில் பார்வை வரவில்லை..
அண்ணன் முகம் திருப்ப
அப்பா எங்கோ பார்க்க..

தலை குனிந்து வெளி நடக்கையில்
ஓடி வந்தது ஜிம்மி..
காலை முட்டி தொற்றி ஏறப் பார்க்க
ஆசையுடன் அணைக்கப் பார்த்தால்..
அதைத் தொடாதே..
ஜிம்மி இங்கே வா
அண்ணன் இழுத்து எடுத்துக் கொள்ள..

மெலிதாய் வள் என வந்த ஓசையில்
தெரிந்தது பாசம்..

pavalamani pragasam
27th March 2013, 12:43 PM
பாசம் பக்கத்தில் பார்வையில் ஒரு காலம்
குரலாய் குறுஞ்செய்தியாய் கணிணித் திரையில்
குறுகிவிட்ட கலிகாலம் கண் முன்னே காண்பது
முதுமையில் தனிமை அக்கரையில் சொந்தங்கள்
அக்கறையை அருகிருந்து காட்ட இயலாமை
எதிர் வீட்டு முதியவர் புற்று நோய் முற்றி
ஐந்தாறு மாதமென கெடு சொன்ன பின்னே
இரவும் பகலும் குடித்தழிகிறார் அதிக வலி
தனிமையா முதுமையா பொல்லாத நோயா
ஆண்டவன் கணக்கும் மனிதன் போக்கும் புதிரோ

Iunffx
27th March 2013, 01:37 PM
பாசம் பார் பணம் மீது - தரும்
நோயை பார் குணம் மீது !
ஆத்தாலும் அப்பனும் தெய்வமென்பான் - பெரிதென்பான்
தன் பாசம் உடன் பிறந்த மக்கள் விட!
விழுந்துழைப்பான் விருந்தளிப்பான் - பணம்
கைக்கு வந்த பின் உதைப்பான்!
பணம் தரும் பாசம் - வெறும் வேசம்!

chinnakkannan
27th March 2013, 01:58 PM
புதிரோ வேஷமோ
எனத் தெரியவில்லை
காதலைச் சொன்ன பின்
அவளின் பார்வை..

எனினும்
பிடித்திருக்கிறது...

Iunffx
27th March 2013, 04:40 PM
பிடித்திருக்கிறது,
"என்னை பிடித்திருக்கிறது" என்று
நீ சொன்ன விதம்!
என் காதல் வீட்டை
மதி கெட்டான் சாலைக்கு மாற்றிய பிறகு..
எல்லாமே பிடித்திருக்கிறது!

chinnakkannan
27th March 2013, 06:18 PM
பிடித்திருக்கிறது
என
படத்தையோ, நாடகத்தையோ
கதையையோ சொன்னால்
மறுத்துத் தான் பேசுவான் கோபி..
ஒரு தலைப்பு என்றால்
அரை மணி நேரமாவது போகும்..
கடைசியில்
சொன்னவரையே அந்த விஷயம்
பிடிக்காமல் செய்துவிடுவான்..

கடந்த சில மாதங்களாகத்
தான் மாற்றம்..
ம்..சரி என
ஓரெழுத்து ஈரெழுத்து பதில்கள்..

ஏன் எனக் கேட்டதில்
பதில்வந்தது..
அவனுக்கு ஆகிவிட்டதாம்
கல்யாணம்...!

Iunffx
27th March 2013, 07:07 PM
கல்யாணம்..

தனியாய் திரிந்த காலம்,
ஏதோ பட்டாளத்தை பெற்றது போல்
களிப்பிலேயே கிடந்த மனம்
என்னை பார்த்தே கொக்கரித்தது..
"இது தான்டா சந்தோசம்", எகத்தாலமாய்!

நீ வந்தாய்..

என் மனத்தை பார்த்து,
"போயும்.. போயும்..
சந்தோச குட்டைக்குள் தவழ்கிறாயே.." என பரிகசித்து
அள்ளி
சுக கடலில் இட்டுவிட்டாய்!

pavalamani pragasam
27th March 2013, 07:21 PM
இட்டுவிட்டாய் கடைசியாய்
கன்னத்தில் கருப்புப் பொட்டு
இடுப்பில் தூக்கி வைத்து
கிளம்பினாய் கரிச்சான்குஞ்சுடன்

chinnakkannan
27th March 2013, 09:18 PM
கரிச்சான் குஞ்சுடன்
கோழிக்குஞ்சு ஒன்று
நட்பானது..

மரத்தின் மேலிருந்து
அம்மா இல்லாதசமயம்
கரிச்சான்
தத்தித் தத்திக் கீழே வர
கோழிக்குஞ்சு ஆவெனப்பார்க்கும்..
இரண்டும் பேசிக் கொள்ளும்..

எங்க அம்மா
ஒய்யாரமா நடப்பாங்களே
எங்க அம்மா
புயலாப் பறப்பாங்களே

எங்க அம்மா ஒசரம்
எங்க அம்மாவுக்கு வால்
அழகா நீளமா இருக்கும்..

வளர்ந்ததுக்கப்புறம்
நீ என்ன ஆவே கரிச்சான் கேட்க
கொஞ்சம் இரு
எனத் தன்னைப் பார்த்துக்கொண்டு
அம்மா மாதிரி ஆவேன்
எனப் பெருமையாய்ச் சொல்ல
க்ரிச்சான் நா பறப்பேனே
ஒலகம் முழுக்க..
ஆனா நீ பாவம்..

ஏன்..

எங்க அம்மா சொன்னாங்க
முழுக்கப்புரியலை..
ஆனா
உங்க அம்மாவக் கொன்னுடுவாங்களாம்
உன்னையும் தானாம்..
அதுக்குத் தான் இந்த நெல் மணி..உணவு எல்லாம்..
நாங்க அலஞ்சு திரிஞ்சு
சாப்பிடறது
ஒங்களுக்கு
நடக்கற இடத்திலேயே கிடைக்கிறகாரணம்..

ச்சீ போ
பொய் சொல்ற
என் கூடப் பேசாத போ
எனக்கோபம் காட்டி
குட்டிக் குட்டியாய்ப்
பாதம் வைத்து
திரும்பி நடந்தது கோழிக்குஞ்சு
விசுக்விசுக்கென..

pavalamani pragasam
28th March 2013, 09:08 AM
விசுக்விசுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டு
உம்மென்று பதில் சொல்லாமல் போனபோதே
விபரீதம் புரிந்துவிட்டது அவள் ஆத்திரம்
வீசிய முந்தானை வரும் புயலின் சின்னம்
வருடம் பல ஆனாலும் புரியவில்லையெனக்கு
வஞ்சியிவள் வெகுண்டெழத் தூண்டும் காரணிகள்

Iunffx
28th March 2013, 05:13 PM
காரணிகள் கண்ட
"கை குத்து" சுவாமி
கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்க..
கல் தூக்கி கேட்கிறான்,
"ஏன் சுவாமி இந்த மௌனம்.."

"சுவாமியின் கை குத்து
ராசியோ ராசி..
வாங்கினால் வாழ்க்கை முழுதும்
ஆசியோ ஆசி.."
எவனோ சொன்னதை கேட்டு
வந்து நிற்கும் மடையனை பார்த்து
சுவாமிக்கு கவலை வந்து விட்டது..

கை குத்தி அமர்வதற்க்கு
கட்டிவிடப்பட்ட கதையை கண்டு..

pavalamani pragasam
28th March 2013, 07:19 PM
கண்டு ஒரு கணிப்பு
காணாமல் ஒரு ஊகம்
காட்சியில் கொஞ்சம் உண்மை
கற்பனையில் மீதி சேதி
கடைசியில் கிடைத்தது
கடைந்தெடுத்த வதந்தி

chinnakkannan
30th March 2013, 10:12 AM
”வதந்தி எல்லாம்
இருந்ததே ரொம்ப
உனக்கும்
ரெட்டைத் தெரு கோபிக்கும்
அந்தக் காலத்தில்..”

நரைத்த தலை நிம்மியை
கோவில் கடைத்தெருவில்
பலவருடங்களுக்குப் பின்னால்
பார்த்த போது
கொஞ்சம் பேச்சுக்கப்புறம்
தயங்கிய படி கேட்டதில்..

சிரித்தாள்..
இன்னும் நினைவு வச்சுருக்கியா
அந்த லூஸீ தான்
என்னைச் சுத்திச்சு..
நானும் டைம்பாஸீக்காக
கொஞ்சம் விளையாடினேன்..
ம்ம் தப்பிச்சு
அமெரிக்கா போய்
இப்ப பேரன் பேத்தி
எடுக்கிற ஸ்டேஜ்..
ஒரு நாள் வீட்டுக்கு
வீட்டுக்காரியக் கூட்டிக்கிட்டு வா
அடுத்த மாசம் மிடில் வரை இருப்பேன்..”

சொல்லிப் போனவளிடம்

இவள் திருமணம் நடந்த
சில மாதங்களிலேயே
இவள் நினைவிலேயே இருந்த
அந்த லூசு
விபத்தொன்றில் மரித்த விஷயம்
சொல்ல நினைத்தும்
ஏனோ சொல்லவில்லை..
--

venkkiram
30th March 2013, 11:20 AM
சொல்லவில்லை
சந்திப்பின் கடைசிக் கணம் வரையிலும்
எப்போது கொடுக்கப் போகிறேன் என அவர்
எப்போது கொடுக்கப் போகிறாய் என நான்
மறந்தே போய்விட்டேன் நானென்ற
சந்தோஷத்தில் அவரும்
மறந்தே போய்விட்டாரோ அவரென்ற
குழப்பத்தில் நானும்
திரிசங்காய் இருவரது மனத்திலும்
நிறைந்திருந்த கடன்.

pavalamani pragasam
30th March 2013, 03:20 PM
கடனாய் நினைக்க முடியாதது கருவறை வாடகை
கடனாய் தீர்க்க முடியாதது திருமண ஒப்பந்தம்
கடனே என பணி புரிந்தால் கிடைக்காது திருப்தி
கடனில் வாங்காத வசதி ஏதும் இன்று இருக்கிறதா

chinnakkannan
31st March 2013, 03:40 PM
இருக்கிறதா என்றால் இல்லை தான்..

கருகரு முடிகள்
துள்ளும் இளமை
கவலையில்லா வாழ்க்கை..

இருந்தாலும் ஒன்று
இருக்கிறதே..
அனுபவம்..

pavalamani pragasam
31st March 2013, 07:19 PM
அனுபவம் ஆகிறது இன்றொரு கேலிக்கூத்து
ஐம்புலனின் விளிம்பிலோர் தற்காலிக அதிர்வு
ஆழமும் அடர்த்தியும் தொலைந்து போனது
ஆவியை உருக்கி கரையாத உறவாய் ஆனது
ஆயுளுக்கும் நினைவில் இனிக்கும் கல்கண்டு
மூடி மூடி வைத்து பாதுகாத்த மர்ம விருந்து
விரட்டி விரட்டி வென்ற ஆண்மை நிமிர்வு
தவிர்த்துத் தவிர்த்து பெண்மை பெற்ற களிப்பு
கலையாய் கரும்பை ருசித்து மகிழ்ந்த காலமது
ஊகத்திற்கு இடமில்லை திறந்து கிடக்கு அழகு
இன்ப விளையாட்டிற்கு நேரமில்லை இருவருக்கு
பொறுமையில்லா நுகர்வில் சுவை என்ன இருக்கு

chinnakkannan
1st April 2013, 12:01 PM
என்ன இருக்கு
எதற்காகக் கொண்டாடவேண்டும்
எனக் கேட்டான்
அலுவலக நண்பன்..
அவன் வரையில்
பிறந்த நாள் கொண்டாட்ட்ம கிடையாதாம்..

சரி..
மனிதப் பிறவியாய்ப்
பிறக்க வைத்தமைக்கு
கடவுளுக்கு நன்றி சொல்லும்
நாள் எனலாமா
என்றால்
சாதிக்கிறான் மெளனம்

Iunffx
1st April 2013, 02:36 PM
மௌனம் நீ பிடிப்பதனால் போவதென்ன?
கண்டவன் நா ஏசலுக்கு
வீரம் பார்த்து
கௌரவம் பார்த்து
சரிக்கு சமம் பேசச்சொல்லும்
பொல்லாங்கு மனமே..

நீ கேளாய் புத்தி என் சொல்லை..
மௌனத்தில் அமைதி
ஆத்திரத்தில் அவதி..
பார்,
அவன் பைத்தியகாரன்!

pavalamani pragasam
1st April 2013, 07:38 PM
பைத்தியக்காரன் என்றால் பிதற்றுபவன்
பாயைப் பிறாண்டுபவன் பரதேசியாய்
பரட்டைத் தலையுடன் திரியும் பித்தன்
என்றெல்லாம் அடையாளம் வைத்திருந்தேன்
போட்டி பொறாமையின்றி பெருந்தன்மையாய்
திரந்த புத்தகமாய் சூதுவாதின்றி வெகுளியாய்
திரிபவனே பைத்தியக்காரன் இக்கலிகாலத்தில்
காலங்கடந்து நான் பட்டுணர்ந்த உண்மையிது

Iunffx
4th April 2013, 10:41 AM
உண்மையது தந்த வன்மம் பறித்தது
மதிப்பில் அடங்கா என் உயிர்..
மறுத்தும் பேச வைத்த காவலர்கள்
பார்த்தது ஒருக்கும் வேடிக்கையே..

சாட்சியாலன்!

pavalamani pragasam
4th April 2013, 07:35 PM
சாட்சியாலன் அந்த அருளாளன் மத்தள வயிறன்
கரிமுகன் கணேசன் மூத்த மூஞ்சூறு வாகனன்
குமரிகள் கூடுமிடம் மேடையிட்டு அமர்ந்து
கண் குளிர அரசமர குளிர் நிழலில் தரிசிப்பான்
கல்யாண ஆசை நிறைவேற காத்திருக்கிறான்
கன்னியொருத்தியை அன்னையின் சாயலில் தேடி

chinnakkannan
7th April 2013, 10:54 AM
தேடிக் கொண்டே தான்
இருக்கிறோம் வாழ்க்கையில்
தேடல்கள் முடிவது போல்
தோன்றினாலும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது
அடுத்த தலைமுறைகளில்

pavalamani pragasam
7th April 2013, 03:22 PM
தலைமுறைகளில் இழையோடும்
சில பல அங்க அடையாளமும்
பூர்வீக சொத்தாய் நோய்களும்
தவிர்க்க முடியாத இப்பரிசுகளை
தடுத்திட வழிகள் ஆய்வு நிலையில்
கூசாமல் உதிர்த்துவிட முடிந்தவை
குணநலன்களும் குலப் பழக்கங்களும்
மரபணு இழக்கின்றது மரியாதையை

chinnakkannan
7th April 2013, 04:49 PM
மரியாதையைக் கைவிட்டுத்
தான் சொன்னாள்
ச்ச் போடா..
கூடவே கொஞ்சம் கொஞ்சலுமாய்..!

வார்த்தைகள் பூரித்துப் போய்
மரியாதையுடன்
காதுகளில் சொல்லின வணக்கம்..

pavalamani pragasam
7th April 2013, 07:33 PM
வணக்கம் வணக்கம் வணக்கம்
காலை நேரம் களைகட்டுகிறது
இருள் மறைய விரியும் வெளிச்சம்
காதை வருடும் புள்ளின கானம்
புல்லில் பனித்துளி மின்னி உருகும்
வண்ண மலர்கள் பூத்து மணக்கும்
இதமாய் இளந்தென்றல் தவழ்ந்திடும்
வாசலில் கிடக்கும் செய்தித்தாள்
வாசனை மிகுந்த முதல் காப்பி
வீதியில் கூடைக்காரிகள் கூவல்
விறுவிறுப்பான பண்பலை ரேடியோ
குறையின்றி முடியப் பிறந்த புது நாள்

chinnakkannan
9th April 2013, 02:13 PM
புது நாள்
என
சிரித்தது பூமி
சிரித்தது சூரியன்
சிரித்தது புள்கள்
சிரித்தது இயற்கை
இன்னும்
சிரித்தன சருகுகள்
அவை நினைவில்
மறுஜன்மம்..

pavalamani pragasam
9th April 2013, 02:56 PM
மறுஜன்மம் உண்டு பல பொருட்களுக்கு
மறுசுழற்ச்சி செய்து பயன் நீட்டிப்பு
மண்ணுக்கு போகும் மனித உறுப்பு
மறு வாழ்வு தரட்டும் இன்னொருவருக்கு

chinnakkannan
9th April 2013, 08:37 PM
இன்னொருவருக்குச்
சொந்தமான பொருள் தான்
நன்றாகப் புரியுதடி
அதற்காக
பார்க்கும் போதெல்லாம்
திருப்பிக் கொள்ளாதே பார்வையை..

சற்றேனும் என் கண்களைப்
பார்த்தால்
உனக்கு தெரியக்கூடும்
பெற்றவளின் வலி...

pavalamani pragasam
10th April 2013, 07:32 AM
வலி கொஞ்சம் மிஞ்சும்
லாபங்கள் அதிகம்
நட்டங்களும் தான்
விட்டுக் கொடுத்துப் பிடித்து
கூட்டிக் கழித்துப் பார்த்து
பழைய கணக்கு சலிக்குது

chinnakkannan
10th April 2013, 03:59 PM
சலிக்குது வயதும் ஆக
..சுவைபட வாழ்ந்த வாழ்க்கை
வலிக்குது செய்த பாவம்
..வயணமாய் நெஞ்சில் கூடி
துளிர்க்குது பயமும் மெல்ல
..துன்பமும் சற்றே சூழ
களிப்புடன் இருந்த நாட்கள்
..கடுகியே வருமோ மீண்டும்..

pavalamani pragasam
10th April 2013, 09:40 PM
மீண்டும் வருக
ஊர் எல்லையில் பலகை
ஏக்கப் பெருமூச்சு
இல்லை சாத்தியம்

chinnakkannan
11th April 2013, 05:05 PM
சாத்தியம் இல்லை..

அழகான ஏரி
நடுவில் படகு
இரவு
அமைதி
கூட அழகியஇளம் பெண்
பால் ஒளி நிலவு..

இருந்தும்
அமைதியிலலா மனதில்
கவிதை வராது..

சுற்றிலும் வாகனச் சத்தங்கள்
சிவப்பு மாறக்
காத்திருக்கும் பொழுதிலும்
கவிதை துள்ளிக் குதிக்கும்..

தேவை
கவிதை மனசு...

pavalamani pragasam
11th April 2013, 07:54 PM
மனசு ஆனது கொதிகலன்
துடிக்குது மெல்லிய உதடு
சிவக்குது வேலான கண்ணிரண்டு
அட்டைக்கத்தி வீசும் வீரனுக்கு
கொடும் வதை காத்திருக்கு
கொற்றவை சீற்றம் தப்பாது

chinnakkannan
12th April 2013, 03:01 PM
தப்பாது வந்த் பார்வை
..தடுக்காமல் நெஞ்சில் பாய
கப்பல்கள் புயலின் போது
..கடலன்னை மடியின் மேலே
சப்பரங்கள் கொண்ட தேர்தான்
..சாய்ந்துதான் அசையும் வண்ணம்
தொப்பலாய் அச்சம் வந்து
..திகைப்பிலே நனைக்கும் அங்கே..

மெல்லவே அருகில் சென்று
..மென்மையாய்க் கர்ம் பிடித்தால்
சொல்லொணா ஏக்கம் காட்டும்
..சுவைமிகும் கண்கள் மெளனம்
கொள்ளவும் கோதை தன்னைக்
..கொஞ்சியே அருகில் கூட்டி
அள்ளவும் அஞ்சு கத்தின்
..அனலது தணியு மன்றோ

pavalamani pragasam
12th April 2013, 08:20 PM
தணியுமன்றோ தாபமும் கோபமும்
குரோதமும் குமுறும் வஞ்சமும்
இழந்ததை மீட்க முடியாததை எண்ணி
இன்னலுற நாட்கள் அதிகமில்லை இனி

Madhu Sree
12th April 2013, 09:26 PM
enakku idhu kavidhaiyaanu theiryala.. edho thonichu... :ashamed: please ignore if it is inappropriate...:)

இனியாவது விதி செய்வோம்
என்று போராடி கொண்டிருந்தான்
ஆவியாக முண்டாசு கவிஞன்

chinnakkannan
12th April 2013, 09:52 PM
//ms welcome...commentskku thani thread irukku..anga vaanga//

pavalamani pragasam
13th April 2013, 08:37 AM
கவிஞன் ஆவான் காதலன்
கண்ணே மணியே என்பான்
கைபிடித்த பின் என்னாவான்
கடைசியில் சாயம் போனவன்

chinnakkannan
13th April 2013, 10:13 AM
போனவன் திரும்ப வந்து
...பொங்கிடும் நெஞ்சில் நன்றாய்
வானவில் வண்ணம் கூட்டி
...வார்த்தைகள் கோர்த்த நல்ல
கானமாய்த் துள்ள வைத்து
...கட்டியே அணைக்க அங்கே
நாணமோ வந்து வஞ்சி
...நல்முகம் தழையு மன்றோ..

pavalamani pragasam
13th April 2013, 12:02 PM
தழையுமன்றோ நிலம் பார்த்து
காய்த்துக் கனத்த வாழைப்பூ
கதிர் முற்றிய நெல்லுப்பயிரு
அடக்கிக் குனியுது பொருளுள்ளது
அழகும் அர்த்தமும் அங்கிருக்கு
புரிய வேண்டுமிது மனிதனுக்கு

chinnakkannan
14th April 2013, 12:43 PM
மனிதனுக்குத் தேவை
மனிதம் தான்..

கை தட்டல் ஒலி முடிந்ததும்
பேச்சாளர் கீழிறங்க
தொண்டர்கள் மகிழ்ச்சியில்
கை கொடுக்கப்பார்க்க
சிரித்த படி கொடுத்த
வேட்பாளரின் கண் சிவந்ததில்
மனிதம் தொலைந்து போயிருந்தது..

pavalamani pragasam
14th April 2013, 07:06 PM
தொலைந்து போயிருந்தது முன்பிருந்த வனப்பு
வெய்யிலில் கருக்காதிருக்க தடவிட ஓர் களிம்பு
வயதின் சுருக்கம் மறைத்திட இன்னொரு பூச்சு
வதனத்தில் பொலிவு மின்ன பல உத்தியிருக்கு
வறண்டுவிடாமல் கூந்தலுக்கு ஏற்றிடும் கருப்பு
அப்பப்பா பேரிளம் பெண்களுக்கெத்தனை பொறுப்பு

Iunffx
15th April 2013, 01:52 PM
பொறுப்பு ஏற்பதென்றால் வரும் வெறுப்பு - ஆவதென்ன
ஏற்காமல் போவதனால் போவதென்ன - யாருக்கும்
ஆகாது தீங்கெதுவும் - ஆகுமே
தீங்குனக்கு - போகுமே
விருப்பில் வந்த வழி!

Madhu Sree
15th April 2013, 02:28 PM
வந்த வழி மறக்கவில்லை
போகும் வழி புரியவில்லை
வழி மாறி போகாதே - அழுதாள் அம்மா
வந்துவிட்டேன்
இனி யோசித்து பயனுமில்லை

Iunffx
15th April 2013, 05:41 PM
பயனுமில்லை பலனுமில்லை
அழுவதினால் திறனும் இல்லை..
தாரைவார்த்த தந்தையவர்
தலை சாய்ந்து சென்றுவிட,
அழுகின்றேன்..
குடிகாரன் பின்னாலே
தள்ளி விட்ட விதியை நொந்து!
பயன் எங்கே?
உதை பெற்றேன்..
வீரம் கொண்டேன்..
இவனிடம் நான் பிள்ளை பெறேன்..
தள்ளிவிட்டேன்..
உதறி விட்ட என் சமுதாயம் - உதறிவிட்டேன்..
என் வாழ்க்கை நான் நடத்தி
உந்தி சென்றேன்..
தத்தெடுத்த என் குழந்தை அவள்
எதிர்காலம் காண சென்றேன்..
பெண் என
பெருமை கொண்டேன்!

Madhu Sree
15th April 2013, 06:38 PM
//very touching one srini :bow: //

கொண்டேன் அழகான காதல்
அறுபது நாள் தான் என்றது உலகம்..
நம்பினேன் என் தலைவனை..
ஏமாற்றம் தான் மிஞ்சியது...
எனக்கில்லை... ஊர் வாய்க்கு
மெல்ல அவல் இல்லையே என்று...

pavalamani pragasam
15th April 2013, 06:59 PM
இல்லையே என்று இன்று வரை ஏங்கியதில்லை
மீசை முளைப்பதில்லை வீரத்தில் சோடையில்லை
தசையில் வலு அதிகமில்லை உலகை தாங்குவேன்
வீணே ஊரைச் சுற்றித் திரியும் சுதந்திரம் எனக்கெதுக்கு
என்னைச் சுற்றியே இயக்கங்கள் நடக்கப் பார்க்கிறேன்
வெட்டி அதிகாரம் இல்லாமல் ஆளுகிறேன் கர்வமாய்

venkkiram
16th April 2013, 07:39 AM
கர்வமாய் மனப்பலூனுக்குள் காலடி வைத்து
இயல்பை மறைத்து தற்பெருமை பெருக்கி
இறுதியில் ஆளுமை வெடித்துச் சிதறும் நான்.

kirukan
16th April 2013, 11:55 AM
நான் ஓடி வருகிறேன் என்று சென்றவர்கள்
நய வஞ்சக நரிகளின் செயலால்
நடந்து வருவார்களா என்பதே
கேள்விக்குறியானது!!!!

-
கிறுக்கன்

chinnakkannan
16th April 2013, 02:15 PM
கேள்விக்குறியானது
நமது வாழ்க்கை என
நினைக்கவேண்டாம் தோழர்களே..
தலைவர் மறைந்தால் என்ன..
நாம் அவர் பாதையில்
தொண்டாற்றுவோம்..

பேச்சாளர் பேசி முடிக்க
கைதட்டிய தொண்டர்களின் ஒலியில்
தெரிந்தது
ஆச்சர்யக் குறி

pavalamani pragasam
16th April 2013, 03:08 PM
அச்சர்யக்குறிக்கு பக்கத்தில் கேள்விக்குறியை போட்டால்
அர்த்தமென்னவோ என்றெல்லாம் யாரும் குழம்பினால்
அது ஓர் அதிசயமான ஆனால் நம்பமுடியாத சங்கதி
என்பது வழக்கமாய் குசும்பர்களின் குறுக்கு அகராதி

chinnakkannan
16th April 2013, 03:52 PM
அகராதி பிடிச்சவம்பா..

யாரையும் மதிக்கவில்லை என
கோபுவை
அலுவலகத்தில் அனைவரும்
சொல்வர்..

கோபுவோ
தானுண்டு தன் வேலை உண்டு
என இருப்பவன்..

அதே கோபு
செகரெட்டரி பாஸ்கருக்கு
விபத்து ஏற்பட
மருத்துவ மனையில் சேர்த்து
ரத்தம் கொடுத்து
உயிர் பிழைக்க வைத்து
திரும்பி வீட்டுக்கு வந்த போது
வந்த மார்வலியில்
பொசுக்கென்று போய்விட

மலர்வளையம் வைக்க வந்தவர்கள்
சொன்னார்கள்
என்ன மனுஷம்ப்பா
ரொம்ப நல்லவர்...

pavalamani pragasam
16th April 2013, 07:04 PM
நல்லவர் ஒருவர் கூட இல்லை துரியோதனன் பார்வையில்
கெட்டவர் ஒருவரும் தெரியவில்லை அண்ணன் தருமனுக்கு
இரு குணமுமிங்கு வெவ்வேறு விகிதத்தில் கலந்துதானிருக்கு
துரியோதனும் தருமனும் நம்மிடையேயில்லாதது ஆறுதலே

chinnakkannan
17th April 2013, 10:12 AM
ஆறுதலே என்றாலும் கண்ணின் ஓரம்
...ஆற்றாமல் பொங்கிவரும் ஈரம் மேலும்
தேறுதலைச் சொன்னவர்கள் தோளின் மீது
..தொன்மையாகச் சாய்ந்திடவும் கொஞ்சம் தோன்றும்
ஊருசனம் கூடிவந்து சொல்லி என்ன
...உயிர்பிரிந்த உற்றாரும் மீண்டு வாரார்
மாறுதலைக் கொண்டதுதான் மனித வாழ்க்கை
..மறதியதன் விலையொண்ணா சொத்தும் ஆகும்..

Iunffx
17th April 2013, 11:58 AM
<Good one Chinnakkannan :) >

ஆகும் வடு உள்ளத்தில்
மறதி கொண்டு அழிப்பதென்றால்
போகுமா சோகம்
ஆகாது மறதி மட்டும்
உடன் தேவை அன்பும்
தரும் அரவணைப்பும்..
படிக்கட்டுகளே..

chinnakkannan
17th April 2013, 12:36 PM
படிக்கட் டுகளே கேட்டிடுவீர்
...பாங்காய் மேலே செல்லுதற்கு
அடியில் தரையில் இருந்தாலும்
...அழகாய் எம்மை ஏற்றிடுவீர்
வடிவம் எல்லாம் பார்க்காமல்
...வாகாய்ச் செல்ல இருப்பதனால்
துடிப்பாய் இருக்கும் உங்களையே
..தாண்டிச் சென்றால் மறந்திடுவோம்..

pavalamani pragasam
17th April 2013, 03:10 PM
மறந்திடுவோம் கோடையிலே
மார்கழிப் பனி வாடையிலே
மேனி நடுங்கியதை கம்பளியை
கதகதப்பை சுடு பானம் நாடியதை
அருவியாய் ஓடும் வியர்வை
அடித்துச் செல்கிறது ஞாபகத்தை

Madhu Sree
17th April 2013, 04:36 PM
ஞாபகத்தை வெறுக்கின்றேன்
மறக்க முயல்கின்றேன்
என் வலிகளை நினைக்க மறுக்கின்றேன்
ஞாபகம் வருகிறதே என் செய்வேன்
சொல்லாயோ என் மனக்குப்பையே..!!!!!!!

pavalamani pragasam
17th April 2013, 08:18 PM
மனக்குப்பையே தீதின் காரணம்
வயது வரம்பின்றி அது குவியும்
விதவிதமாய் நிதம் வெளிப்படும்
விரோதம் விகாரம் வெத்தாட்டம்
சுத்தம் செய்திட ஓர் துடைப்பம்
உனக்குள்ளே தேடு கிடைக்கும்

Iunffx
18th April 2013, 11:22 AM
அன்புள்ள இடத்தில் பண்பு கிடைக்கும்
ஆண்டவன் இடத்தில் அமைதி கிடக்கும்
இச்சையில் தவழ்ந்தால் அழிவு கிடைக்கும்
ஈ போல் பறந்தால் இழிவு கிடைக்கும்
உள்ளத்தில் என்றும் தெளிவு கிடைக்கும்
ஊக்கம் கொண்டால் வெற்றி கிடைக்கும்
எட்டாது என நினைத்தால் என்ன கிடைக்கும்
ஏறுவேன் என நினைத்துப்பார் எதுவும் கிடைக்கும்
ஐயம் கொண்டால் தவறு கிடைக்கும்
ஒருக்காதே ஒருவரையும் நேயம் கிடைக்கும்
ஓரமாய் உன்னையும் பார் ஞானம் கிடைக்கும்
ஒளவையாரின் ஆத்திச்சூடிக்கு போட்டி எங்கே கிடைக்கும்
ஃ இல் தாய் தமிழ் சிறப்பு கிடைக்கும்

chinnakkannan
18th April 2013, 12:00 PM
மனக்குப்பையே தீதின் காரணம்
வயது வரம்பின்றி அது குவியும்
விதவிதமாய் நிதம் வெளிப்படும்
விரோதம் விகாரம் வெத்தாட்டம்
சுத்தம் செய்திட ஓர் துடைப்பம்
உனக்குள்ளே தேடு கிடைக்கும்


கிடைக்கும் என்ற
எதிர்பார்ப்பில்
கை நீட்டி
குறுஞ்சிரித்து
மழலையாய்
அ ஆ இ ஈ ஒள என
சொல்லி முடித்ததும்
குழந்தையின் கையில் சாக்லேட்
கொடுத்தவ்ள் காதில் தேன்..

pavalamani pragasam
18th April 2013, 02:40 PM
தேன் பாய்கிறது என்னிரு காதில்
வேறு சத்தமில்லா பெரிய வீட்டில்
மூன்று கூண்டில் மூன்று வகை
வண்ணக்குருவிகள் பொழுதெல்லாம்
கீச்கீச் சத்தம் சிங்கார சீட்டியொலி
அழகுயிர்கள் என் மனதிற்கு குளிர்ச்சி

Madhu Sree
18th April 2013, 03:23 PM
குளிர்ச்சியாகத் தான் இருந்தது
நெஞ்சில் இனித்தது காதல்
இருவரும் பிரியும் வரை

இன்று நேரில் பார்த்துக்கொண்டாலும்
யார் நீ என்று கேட்காதது ஒன்று தான் குறை
அடிநாக்கில் கசந்தது காதல்

pavalamani pragasam
18th April 2013, 07:35 PM
காதல் கத்திரிக்காயுடன் உறவு கொண்டது எப்படியோ
சாப்பாட்டுப் பிரியர்கள் சவடாலாய் பேசி உருவானதோ
அடுக்களை புகுந்து இருட்டில் சட்டி பானையை உருட்டி
கலவரம் நடத்தும் திருட்டுப் பூனைதானது ஐயமின்றி
ஓசையின்றிதான் மனதுக்குள் புகுந்தாலும் தவறாமல்
வெளிப்பட்டுவிடும் அது நிகழ்த்தும் தடுமாற்றங்களால்

Iunffx
19th April 2013, 11:22 AM
தடுமாற்றங்களால் துவண்டுவிட்டேன்
காதல் தொடுக்கும் வேதையினால்..
பலர் நா புரட்டும் காலம் இது!
காதல் என்ன காதல்?
வெற்று மனிதன் மீது
மனது கொண்ட எக்கச்சக்க அன்பு காதல்..
நமது என்று சுயநலம் போற்றி
நஞ்சாய் தினமும் மாறும் போதை..

விழுந்து உடைந்த பொருள் ஒன்று
குடையுமா ஒருவர் உள்ளத்தை?
காதலை அங்கே சேர்த்துக்கொள்..
தருமே அல்லவா வேதனை!

உன்னையே உன்னிடம் திருடிவிட்டு
ஆஹா ஓஹோ போடவைத்து
மாயை வலையில் எளிதில் தள்ளி
வானம் அழகு
வாத்தும் அழகு
மரம் அழகு
மட்டையும் அழகு
உலகம் அழகு
அழகோ அழகு
ஐய்யோ அழகு
எல்லாம் அழகு
இப்படி எல்லாம் பிதற்றவைத்து
பித்தும் நன்றாய் பிடிக்க வைத்து
உன்னை எளிதாய் அழித்த பிறகு
வேறு என்ன பேச வைக்கும்
வேதனை என்னும் மந்திரம் தவிர..

காதல் ஒருவரில் நேசம் வளர்த்து
கருணை கொண்ட மனிதன் ஆக்கும்..
மிகுதியானால்..
மிருகம் ஆக்கும்!

pavalamani pragasam
19th April 2013, 11:37 AM
மிருகம் ஆக்கும் மனிதனை
என்று அதையும் இதையும்
கோபத்தை போதையை
காரணம் காட்டிக் காட்டி
பேராசையின்றி எளிமையாய்
இனம் காத்து வலிமையாய்
அழகாய் ஒழுங்காய் வாழும்
ஐந்தறிவினத்தை பழிக்காதீர்

chinnakkannan
21st April 2013, 11:26 AM
பழிக்கா தீர்நீர் என்றெல்லாம்
..பாங்காய் மொழிந்த பேச்சாளர்
விழிகள் கொஞ்சம் தான்சிவக்க
..வியப்பை அதனுள் கூட்டிவிட்டே
தெளிவாய்ச் சொன்னார் தெம்மாங்கில்
..தோதாய் எடுத்தே எதிர்க்கட்சி
வழிகள் எல்லாம் தனைச்சாடி
..வாகாய் முடித்தார் தன்னுரையை..

pavalamani pragasam
21st April 2013, 01:00 PM
தன்னுரையை வீரிட்டுத் துவங்கும் குழந்தை அறியாது
தனக்குக் கொடுக்கப்பட்ட மணித்துளிகள் எத்தனையென
முன்னுரையை துவங்கியதும் முடிந்துவிடுமா பேச்சு
அருமையான உச்ச கட்டத்தில் அணைந்துவிடுமா மூச்சு
கொட்டாவிகளை ஏளனப் பார்வைகளைக் சந்திக்கணுமா
வீரனாய் சூரனாய் சாதனையாளனாய் இறுமாந்து திரிந்து
கோபுரத்தைத் தாங்கும் பதுமையாய் தன்னை பாவித்து
இம்மேடையில் முழங்குவதுதானே என்றும் வாடிக்கை

chinnakkannan
21st April 2013, 05:24 PM
வாடிக்கைக் கடையோரம்
சைக்கிளை நிறுத்தி
பையில் துழாவி
சின்னஞ்சில்லறைகளைக்
கொடுத்து
ஒரே ஒரு சிகரெட் வாங்கி
கடை மூலையில்
ஒய்யாரமாய் இளம்பெண்போல்
நெளிந்து
அவள் உதட்டுச் சிவப்பு போல்
தன் உதட்டிலும் சிவந்து கனன்ற
முறுக்குக் கயிறைப் பற்றி
வஸ்துவுடன் முத்தமிட்டு
ப்ஹா எனப் புகையை உறிஞ்சி
உடன் அக்கம்பக்கம்
தெரிந்தவர்களா என நோட்டமிட்டு
கொஞ்சம் கடை பின்னால் மறைந்து
சில நிமிஷங்களையும் சிகரட்டையும்கரைத்து
கடலைமிட்டாய்
பாக்கு
சூடமிட்டாய்
வாயில் போட்டு மென்று
போதாக்குறைக்குத்தண்ணீர் குடித்து
வீட்டுக்குச் சென்றது
அந்தக் காலம்..

முழுப்பாக்கெட்டாய்
வைத்து
இஷ்டம் போல்
குடிக்க முடிந்தாலும்
அது கடனே, இடியட்டே
விடமுடியவில்லையே என
விரக்தியில் செய்வது தானேயன்றி
இல்லை
அந்த சுவை, சுகம், த்ரில்..

pavalamani pragasam
21st April 2013, 06:39 PM
சுவை சுகம் த்ரில் யாருக்குப் பிடிக்காது
பல்லும் சொல்லும் போனாலும் விடாது
திரையும் நரையும் வந்தாலும் குறையாது
பட்டையும் கொட்டையும் அதை அறுக்காது
நாடி நரம்பை சூடேற்ற காரணிக்கள் பலப்பல
ஐம்புலன் அனுபவிக்க ஆயிரம் இன்பமிருக்க
ஆழ்ந்து ஆராய்ந்து கவனித்துப் பார்க்கையிலே
விடாது மக்கட்சேவை செய்வதும் போதையே

Iunffx
24th April 2013, 10:31 AM
போதையில்தான் தவழ்ந்த கூடு
உபாதையில்நின் விழுந்த சுற்றம்
நீளுமேஅழிவு பாதை பாடை
பாருமேநான் தரும் அகங்காரம்

pavalamani pragasam
24th April 2013, 12:59 PM
அகங்காரம் அறியாது
அழகான அன்னப்பறவை
வண்ணத்தோகை மயில்
காட்டுக் கொம்பானை
பிடறி சிலிர்க்கும் சிங்கம்
இயல்பாய் வாழும் அவை
ஆறறிவு அற்பனுக்கு
அநாவசிய தலைக்கனம்

chinnakkannan
24th April 2013, 02:41 PM
தலைக்கனம் நிரம்பியவள் தான் அவள்..
அழகு அப்படி..
பக்கத்து வீட்டு மாமியின் பெண்..
பார்வை கூர்க்கத்தியாய்ப் பாய்வதில்
உறைந்தவர்கள் ஏராளம்..
நடையில் ஒரு அசாத்தியத் திமிர்..
தெருப் பையன்களுக்கு
வெளியே தேவதை..உள்ளே ராட்சசி..
நடுத்தரப் பெண்மணிகளுக்கு
’யார்கிட்ட மாட்டப் போறாளோ” எனக் கவலை..

ஒரு சுபயோக சுபதினத்தில்
திருமணம் நடந்து
வெளி நாடு போய்விட்டெல்லாம்
திரும்பி வந்த அந்தப் பெண்ணின்
பார்வையில்..
ஏதாவது மாற்றம் ம் ஹீம்..
என்ன
கூட ஒரு குட்டி ஜெராக்ஸ் சிறுமி..
அம்மாவின் குணம் அப்படியே வர..
கண்களில் அலட்சியம்..

பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னாள்..
ம்ம்
இது தான் போலிருக்கு
வாழையடி வாழை..

pavalamani pragasam
24th April 2013, 07:22 PM
வாழையடி வாழை இன்று
பழங்கதை ஆகிப்போனது
குழிப்பணியாரமும் அப்பமும்
வழக்கொழிந்து போனபின்
ஒரு இனத்தின் அடையாளம்
என்று எதுவும் மிஞ்சுமோ

kirukan
26th April 2013, 02:49 PM
மிஞ்சுமோ எதுவும் என்று
பிஞ்சுகளுக்கு அமுதூட்டும்
அம்மாக்கள் அஞ்சுவதுண்டோ!!!

pavalamani pragasam
26th April 2013, 03:48 PM
அஞ்சுவதுண்டோ வெறி பிடித்த காமுகர் வன்புணர
புதிய மலரை பூக்காத மொட்டை காய்ந்த சருகை
பதறுது நெஞ்சம் துடிக்குது உடம்பின் அணு அனைத்தும்
எத்தனை கருடபுராண தண்டனைகள் போன்றவை கேட்டும்
எத்தனை கொதிக்கும் எண்ணெய் கொப்பரைகள் கேட்டும்
எரிக்கும் கொடிய நரகச் செந்தீயின் வர்ணனை கேட்டும்
பயமறியா பாவிகள் இவரை என்னவெலாம் செய்யலாம்
கொடுக்கும் சித்ரவதையில் நடுங்க வேண்டுமடுத்த பாவி

chinnakkannan
26th April 2013, 07:39 PM
பாவியாய் போனேன் என்று..
..பலமுறைப் புலம்பும் பாட்டி
காவியில் துணியை இட்டு
..கண்களில் சோகம் காட்ட
ஆவியாய் இருக்கக் கூடும்
..அன்புடை தாத்தா என்று
கேவியே அம்மா சொல்ல..
..கூவினாள் இல்லை என்று..

ஏதோ என்னை விட்டுவிட்டு
..என்னமோ போனார் விட்டுவிடு
யாதோ புழுவாய் கொடிமரமாய்
..ய்வனியில் பலவாய் உருவ்த்தில்
தோதாய் அவரும் இருக்கட்டும்
..தொன்மை யாக வாழட்டும்
நாதன் அவரைத் தான் தேடி
...நாளில் நானும் சேர்ந்திடுவேன்..


..

pavalamani pragasam
26th April 2013, 08:17 PM
சேர்ந்திடுவேன் நொடியில் நான்
காற்றினும் கடிதாய் விரைந்து
மசியில் எழுதி பசையால் ஒட்டி
முத்திரை இட்டு ஊர்தியில் ஊர்ந்து
கதவைத் தட்டாமல் கையில் பெறாமல்
கணத்தில் கிடைக்கும் மின்னஞ்சல்

chinnakkannan
27th April 2013, 09:56 AM
மின்னஞ்சல் என்பது
உன் முகநூல் கண்களில்
நோக்கிய போது
என் இதயத்தில் புகுந்த
மின்னல்தானே..

pavalamani pragasam
27th April 2013, 01:31 PM
மின்னல்தானே முன்னால் வரும்
இடி அதன் பின்னால் உருண்டு வரும்
ஆயத்தம் முடிந்து மழை தொடரும்
திட்டித் தீர்த்தவள் அசையாத கல்லாய்
கணவன் சாக்ரட்டீஸ் அமர்ந்திருக்கவும்
வாளி தண்ணீரை தலையில் கொட்டிவிட
இடிக்குப் பின் மழை இயல்பு என்றான் ஞானி
தத்துவம் அறிந்தான் தத்தை நெஞ்சை அல்ல

chinnakkannan
28th April 2013, 02:04 PM
தத்தை நெஞ்சை அல்ல
...தாவும் கண்க ளாலே
பித்தம் கொண்ட அவனும்
...பேச்சி ழந்து போக
வித்தை ப்லவாய் செய்தே
... வேகம் கூட்டி ஆட
சித்தம் மாறி அவளும்
..சற்றே உள்ளம் தந்தாள்..

உள்ளந்தந்த நங்கை
..உவகை கொண்டு பொங்கி
கள்ளப் பார்வை கூட்டி
..காத லோடு சற்றே
தள்ளிப் போகும் போக்கில்
..தழுவத் தானே செய்ய
மல்லுக் கட்டும் உணர்வில்
..மங்கை யைத்தான் அணைத்தான்

pavalamani pragasam
28th April 2013, 07:18 PM
அணைத்தான் விளக்கை
அழைத்தான் நித்திரையை
ஊடல் கொண்ட உறக்கமோ
ஓடி ஒளிந்து விளையாட
எண்ணத் துவங்கினான்
ஒன்னு ரெண்டு மூனு என
முடிந்த நாளின் ஆயாசமும்
காத்திருக்கும் காலை அவதிகளும்
மத்தளமாய் இருபுறம் தட்ட
தவிப்பவன் பாவம் அப்பாவி

chinnakkannan
29th April 2013, 11:06 AM
அப்பாவியாய்
நான் சொல்லும்
வர்ணனைகள் புரியாதது போல்
கொஞ்சம் நெற்றிச் சுருக்கி
கண்களில் கோபம் காட்டி
குட்டிக் கவிதையாய்
கேள்விக்குறி தெரிவிக்கும்
உன் செயல் என்னசொல்லத்
தோன்றுகிறது தெரியுமா..

அடிப்பாவி

Iunffx
29th April 2013, 02:55 PM
"அடிப்பாவி மகளே
என்ன காரியம் சென்சுட்டே"
மாரில் அடித்துக்கொள்ளும் அன்னையும்..
இருதய ஓட்டம் நின்றவராய்
தந்தையும்..
"கொடுமா அருவால"
ஓடி பிடுங்கும் அண்ணனும்..
"இதை என்றோ செய்திருக்க வேண்டும்"
நினைத்து நிற்கின்றாள் காரிகை..
கெடுத்தவனே நித்தம் கூறுபோட
சமாதான கல்யாணம் செய்துவைத்த
சமூகத்தை உமிழ்ந்தவாறே..
கொய்த நீசன் தலை மீது..

pavalamani pragasam
30th April 2013, 08:08 AM
தலை மீது வைத்துக் கொண்டாடப்பட
மாமேதையாய் பெரிய படிப்பாளியாய்
உயிர்கள் காக்கும் ஆதூரமுள்ளவனாய்
உன்னத நெறிகள் கொண்ட உத்தமனாய்
வய்யம் உய்ய வந்துதித்த அவதாரனாய்
இருக்க வேண்டாம் திரையில் உதடு கவ்வி
கொஞ்சி கையை காலை உதறி ஆடி பாடி
பொல்லாத போலி பசப்பு வசனங்கள் பேசி
பல கோடிகளில் புரளும் யோகம் போதும்
பாலாபிஷேகம் பீராபிஷேகம் வாய்க்கும்

chinnakkannan
30th April 2013, 12:10 PM
வாய்க்குமா இந்த நேரம்
..வண்ணமாய்ச் சொல்லு நீயே
நோய்களும் பற்றி என்னை
.. நொடியினில் வீழ்த்த லாகும்
காய்த்திடும் விரல்கள் மீண்டும்
..கடிதென நாளை எண்ணி
தோய்ந்திடும் தாப எண்ணம்
..தோகையைக் கொல்லு மன்றோ..

வஞ்சி அவளும் கேட்டுவிட
..வாலிபன் சற்றே தான் தயங்கி
மிஞ்சிக் கால்கள் பார்த்தபடி
..மென்மை யாகச் சொல்லலுற்றான்
கொஞ்சும் கிளியே கலங்காதே
..கோவைப் பழமாய்ச் சிவக்காதே
விஞ்சிப் போனால் ஒருமாதம்
..விரைந்தே போகும் பொறுவென்றான்..

pavalamani pragasam
30th April 2013, 11:02 PM
பொறுவென்றான் கடன் வாங்கியவன்
நொந்துபோனான் பணம் கொடுத்தவன்
காந்தி கணக்கோவென கலங்கினான்
ஆழம் தெரியாமல் காலை விட்டவன்

chinnakkannan
1st May 2013, 02:49 PM
காலை விட்டவன்
கொஞ்சம் முறைத்தான்..
வலியில்லை என்றால்
ஏன் சொல்கிறாய்..

குறுஞ்சிரிப்பு அவள் முகத்தில்
உன் கவலை எனக்காக்ப்படும்போது
உன் முகம் அழகாகிறது மேலும்..

ஒருகணம் கோபவிழி பார்த்து
மறுகணம் சிரித்துச் சொன்னான்
‘வெவ்வெவ்வெவே”

Iunffx
2nd May 2013, 12:00 PM
வெவ்வெவ்வெவ்வே சொல்லும் சின்ன கண்ணு
உன் பாதம் கொஞ்ச மண்ணில் ஆடு கண்ணு..
இந்த தம்பட்டியான் தப்பும் தார தப்ப
உன் கலை கொஞ்சும் ஆட்டத்த காணத்தானே..

நாரோடு பூகோர்த்து மாலை சென்சு
உன் கழுத்துக்கு ஆரணம் போட்டுவிட்டேன்..
மஞ்சளும் குங்குமம் பிடிக்குமென்று
உன் நெற்றியில் நிலவாக இட்டுவிட்டேன்..
யாராரோ அவர் குறைகூற நித்தம் நித்தம்
உன் தலை மீது ஏற்றிடுவார் பாரம் மொத்தம்..
பாரிப்போ பார் எவரும் போர்வைக்குள்ளே
நித்திரை கொள்வதை உன்னை பனியில் தள்ளி..
உன் தம்பட்டியான் நான் தட்டும் தாளம் கண்ணு
வந்து மனம் குளிர ஆட்டத்த போடு கண்ணு..

கண்ணாத்தா பொன்னாத்தா மாரியாத்தா
வித விதமா பேர்வெச்சு அழைக்கிறாங்க..
படையலும் வேண்டுதலும் கோடி கோடி
உள்ளே எத்தனை சுயநலம் பாரு கண்ணு..
குறை தீர்க்கும் வேலையை ஒத்திவை நீ
மனம் குளிரும் வேளையில் பாதம் வை நீ..
திசை எங்கும் சந்தோசம் சிரிபலைகள்
ஆடிட ஆடிட ஆடு கண்ணு..
தப்பன் தாரை தப்பை கண்டு உருகிடவே
கணம் ஆடிட ஆடிட ஆடு கண்ணு..

kirukan
4th May 2013, 02:56 PM
கண்ணு கட்டிய தேவதை
கண்ணை திறந்தால்தான் புரியும்
வழக்குகளுக்கு வழங்குவது
நியாய தராசின் தீர்ப்பல்ல
அநியாய பரிசின் தீர்ப்பு...

-
கிறுக்கன்

pavalamani pragasam
5th May 2013, 05:03 PM
தீர்ப்பு சொல்லவோ
கலங்கினான்
நடுங்கினான்
தண்டனை அவனுக்கே
வாதியிடம் சிக்கவா
பிரதிவாதியிடம் மோதவா
பிராது கொணர்ந்தது
தாய் தாரம் என்றால்
பாவம் என் செய்வான்
அப்பாவி ஆண்மகன்

chinnakkannan
6th May 2013, 01:59 PM
ஆண்மகன் பிறந்து என்ன
..அளவிலா ஆசை கொண்டு
வான்மழை போல நன்றாய்
...வண்ணமாய் அன்பு கூட்டி
நான்பல செய்து என்ன
...நலமுடன் வேலை பெற்று
காண்பவர் வியக்கும் மாதைக்
..கண்டபின் சென்று விட்டான்..

pavalamani pragasam
6th May 2013, 07:25 PM
சென்றுவிட்டான் காளை
வென்றுவிட்டான் காதலை
கொன்றுவிட்டான் பாசத்தை
பாவம் அந்த அறியாப் பேதை
புத்தன் அணைத்த கோதை
திணிக்கப்பட்டத் துறவுப் பாதை

chinnakkannan
6th May 2013, 09:22 PM
துறவுப் பாதை நாடிச் செல்லும்
...தூய்மை எனக்கு இல்லைதான்
புறக்கண் காட்டும் காட்சி எல்லாம்
..புரிந்து உள்ளம் மயங்குவேன்
அறமா அழகா அமுதா கொடிதா
..அதுவும் நானும் அறிகிலேன்
உறவுப் பார்வை ஒன்று தாராய்
..ஒயிலில் மிளிரும் பாவையே

pavalamani pragasam
7th May 2013, 07:58 AM
பாவையே
கொல்லிப்பாவையே
உயிர்க்கொல்லிப்பாவையே
உனக்கிரக்கமேயில்லையா

Iunffx
7th May 2013, 01:31 PM
உனக்கிரக்கமில்லையா..
ஏரி திறக்கும் நல்லையா!
கண்ணை திறந்து பாரைய்யா..
கருகும் பயிர்விவ சாய்யையா..
அடிக்கும் வாழ்க்கை தானைய்யா..
போகும் உயிர்விரச மாயையா..
ஒட்டுவேனும் சீட்டும்வேனும் தற்கு
ஓரவஞ்சனை காட்ட வேண்டும்..
பகிர்ந்து மகிழும் பழக்கமெல்லாம்
மண்ணாகி போக வேண்டும்..
செய்தவனும் மண்ணுக்கே போகவேண்டும்!
பகிர்ந்து கொள்ள பாரையா..
நாட்டின் சுபிட்சம்கண்டு மகிழைய்யா!

pavalamani pragasam
7th May 2013, 07:38 PM
மகிழைய்யா சின்னப் பைய்யா
மழலை பேசும் பொன்னைய்யா
மாந்தர் கபடறியா நல்லய்யா
மறுபடியும் வராது இப்பருவம்

chinnakkannan
7th May 2013, 10:04 PM
இப்பருவம் போகாமல் இருக்கா தப்பா
..தப்பெதுவும் செய்யாமல் இருக்கும் போதும்
முப்பொழுதும் விரைவாக ஓடிச் சென்று
..முதுமையெனும் தன்மையுனை வந்தே தீரும்
அப்பொழுது அரனைத்தான் பற்றி னாலும்
..அருகுமோ நீசெய்த பாவ மெல்லாம்
.இப்பொழுதே சிந்தையிலே சிவனைக் கொண்டால்
...ஏற்றமும்பின் வந்துசேரும் மோட்ச முந்தான்...

pavalamani pragasam
8th May 2013, 08:12 AM
மோட்சமுந்தான் இங்கு மலிவாய் கிடைக்குதாம்
நுரைத்த கோப்பையிலே வழுக்கும் வளைவுகளிலே
போதையிலே காமத்திலே பிறழ்ந்த நெறிகளிலே
உருளுது புரளுது உலகம் பொல்லாத மாயையிலே

chinnakkannan
8th May 2013, 10:40 AM
மாயையிலே மதிமயங்கும் மனமே கொஞ்சம்
...மாதவனை நினைத்துவிடு சுகமே மிஞ்சும்
பேயைப்போல் பலவெண்ணம் பாய்ந்தால் கூட
..பிறழாமல் சிந்தையினை ஒன்றாய் வைத்து
தாயைத்தான் பிரியாமல் தாவும் சேய்போல்
.. தயங்காமல் நாரணனின் பாதம் பற்ற
பாயைத்தான் படுக்கையாகக் கொண்டி ருக்கும்
...பரந்தாமன் கருணைமழை பொழியும் பாராய்..

pavalamani pragasam
8th May 2013, 01:01 PM
பாராய் என்னை
ஓரக்கண்ணால்
ஒற்றைக்கண்ணால்
பம்பரக்கண்ணால்
வட்டக் கரு விழியில்
விழுந்துவிட்டேன் என்றோ

chinnakkannan
9th May 2013, 01:16 PM
என்றோ நெஞ்சில் பதிந்திருந்த
..எழிலின் உய்ரம் அவள்முகமோ
கன்றாய் நெஞ்சுள் துள்ளிடுமே..
..கவிதை ஊற்றாய் பொங்கிடுமே
இன்றோ என்ன ஆனதென்று
..ஏக்கத் துடன்நான் கேட்டிடவும்
தண்மைச் சிரிப்பில் தாமரையாய்ச்
..சொன்னாள் வயது போனதென்று..

கன்னியின் இளமையது காலஞ் சென்றால்
,..கட்டழகு குறைவதுவும் கண்ட வுண்மை
நுண்ணிய மாற்றங்கள் நோயோ வேறோ
...நொடியினில் தோலினிலே வந்து சேரும்
வண்ணமாய் வயணமாய் அழகு சேர்ந்த
..வஞ்சியின் வாழ்க்கையில் சுழன்ற காற்றால்
எண்ணுதற் கிலாமலே சோகம் கொண்டு
..ஏந்திழையின் முகமுந்தான் வாட லாச்சே

மெல்லச் சிரித்தே நான்சொன்னேன்
..மென்மைப் பெண்ணே வருந்தாதே
கள்ளச் சிரிப்பு சிரிக்கின்ற
..கண்கள் மாற்றம் கொளவில்லை
உள்ளந்தன்னில் கண்டிருந்த
..உந்தன் உருவம் மாறாது
அள்ளும் கவிதை போலிருக்கும்
..அழகில் முதுமை வாராதே..

pavalamani pragasam
9th May 2013, 08:08 PM
வாராதோ அந்த பொன்னான நாளும்
பாட்டி வீட்டில் கோடை வெயிலில்
செட்டுப் பிள்ளைகள் சேர்ந்து
களித்து ஆடிய ஆட்டமென்ன
கூட்டாஞ்சோறு மொட்டை மாடியிலே
கோடி வித்தை கூடிப் பழகி மகிழ
கைவேலை கூட்டு வேலை கதை நேரம்
கனவாய் இன்று காணாமல் போனதே

chinnakkannan
9th May 2013, 09:42 PM
(ப்ளஸ்டூ படிப்பில் மார்க் குறைவாய்ப் போனது என
ஒரு பையன் புலம்ப் அவனுக்கு அவன் நண்பன் ஆறுதல் சொல்கிறான்)

போனதே என்று புலம்பாமல்
...பொழுதைத் தள்ளி இருக்காமல்
ஆனது பார்ப்போம் எனச்சொல்லி
..அகத்தினில் பொங்கு என் தோழா
கானகம் போல வாழ்க்கையில்லை
...கல்வியில் தோல்வி கஷ்டம்தான்
வானதைப் போல உயர்ந்திடலாம்
...வீழ்ந்ததை நினைத்தே இருக்காதே..

அவன் :
விழுந்து விழுந்து படித்தேன்நான்
..விஷயம் புரிந்தே படித்தவன்நான்
பழுதா சரியா என்றேதான்
..பலரிடம் கேட்டுக் கற்றவன்தான்
கழுகாய்க் கண்கள் முழித்திருந்தே
..கணிதம் மற்றும் படித்திருந்தேன்
வழுக்கித் தந்தார் சிலமதிப்பெண்..
..வானம் போனது என்னாசை..

நண்பன்:
போடா போடா என் தோழா
..போன மதிப்பெண் சிலதானே
வாடா உள்ளம் கொண்டுவிடு
..வேறாய்ப் படிப்பு எடுத்துவிடு
பாடா வதியாய்த் தந்தாலும்
..பரவா யில்லை வெற்றிபெறு..
தாடா உழைப்பு எனச்சொல்லி
..தாவி வேலை கொடுத்திடுவர்..

pavalamani pragasam
10th May 2013, 08:44 AM
கொடுத்திடுவர் பல வாக்குறுதி
எண்ணற்ற இலவசம் வெகுமதி
அப்பாவி மக்களை ஏமாற்றி
எப்படியோ அரசுக் கட்டிலேறி
தன் குடும்பத்தைச் செழிப்பாக்கி
நாட்டை சின்னாபின்னமாக்கி
குரங்கின் கை பூமாலையாக்கி
வரலாறு படைப்பது நம் விதி

chinnakkannan
10th May 2013, 10:32 AM
விதி என்றாலும்
வேதனைகள் வேட்கைகள் தொட்ர்ந்தாலும்
எனக்கு
மிகவும் பிடித்திருக்கிறது
நம் கண்க்ள் சந்தித்த தருணம்

pavalamani pragasam
10th May 2013, 12:29 PM
தருணம் தப்புத் தப்பாய் போகுதே
உப்பு விற்கையிலே மழையடிக்குதே
உமி விற்கையிலே காற்றடிக்குதே
தங்கம் வாங்கினால் விலை குறையுதே
ஏறுக்கு மாறாய் ஏணியும் பாம்பும்
இயங்கினால் அடைவேனா பரமபதம்

chinnakkannan
10th May 2013, 01:47 PM
பரம பதம் அடைவ தற்கு என்ன வேண்டும்
...பாழும் மனம் அலையும் செய்கை தடுக்க வேண்டும்
நரனாய்ப் பிறந்த பின்பு கூட ஏன் தான் ஏக்கம்
.. நல்ல நல்ல எண்ணங் கொண்டால் நலமே பூக்கும்
கரத்தை நன்கு இணைத்துத் தோளின் மேலெ தூக்கிக்
..காக்க வென்றே சிவனை நெஞ்சில் கூவி அழைத்தால்
வரத்தைக் கையில் பற்றி வேகம் எடுத்தே வருவான்
..வந்தே உனக்கு சொர்க்க வாசல் தந்தே செல்வான்..

pavalamani pragasam
10th May 2013, 07:46 PM
செல்வான் சந்திரன்
மூடும் அல்லி முகம்
வருவான் சூரியன்
விரியும் செந்தாமரை
தூரத்துக் காதல்தான்
தீராத மோகந்தான்
மாறாத மறையாத
மயக்குகின்ற நியதி

chinnakkannan
11th May 2013, 12:15 PM
நியதி இது தான்
என்று சொல்லியிருந்தாலும்
செய்வதேயில்லை
வருடாந்திர்க் காரியங்கள்
பெற்றோர்களுக்கு..

அவர்கள் மறைந்த
சில் வருடங்களில்
வருடா வருடம் சோகமான சிந்தனைகள்
படிப் படியாகக்குறைந்து
இப்போது
ஓ அப்பா நாள்
ஓ அம்மா நாள் எனத் தான்
நினைக்க முடிகிறது...

நியதி ம்ம்
ஒரு சில வருடங்கள்
கோவிலுக்கு அன்னதானத்திற்கு
அனுப்பியது தான்
அது தவிர வேறேதும்
செய்யவில்லை
பெற்று வளர்த்து
படிக்க வைத்து ஆளாக்கியவருக்கு..

ம்ம்
அன்னிய தேசத்தில்
என்ன செய்ய முடியும் என
மனதை சமாதானப் படுத்திக் கொண்டாலும்..

ஒரு வேளை
என் காலம் முடிந்து
அவர்களைப் பார்க்க முடிந்தால்..

எப்படியும் குழ்ந்தை தானே
மன்னிச்சுடலாம் எனச் சொல்ல்வார்கள்
என்ற எண்ணம் தான்
காரணமா என்ன..

pavalamani pragasam
11th May 2013, 12:57 PM
என்ன விளையும் என்று தெரியாதா விதைத்தவனுக்கு
எப்போது பயிர் முதிருமென தெரியாதா விவசாயிக்கு
என்ன ஆவார் பிள்ளைகள் தெரியாதே பெற்றவருக்கு
எதிர்பாராத அதிரடி புரட்சிகள் உலகினில் அரங்கேறுது

chinnakkannan
12th May 2013, 10:45 PM
அரங்கேறுது வர்ற் 26ம் தேதி
குழந்தைய ஆசீர்வாதம் பண்ண வாங்க..
மேலும் வளரணுமின்னு..

அழைப்பிதழ் அட்டையில்
அதீத மேக்கப்புடன்
பாவம் காட்டாமலேயே
பயந்த மருண்ட விழிகளுடன்
பத்து வயதுச் சிறுமி..
முழுப் புகைப்படத்தில்
சிவந்த கால்களுடன்
செம்பஞ்சுக் குழம்பா
இல்லை ஆடிச் சிவந்ததா..

சரி வருகிறேன்
என்று சொன்னாலும்
நான் செல்லவில்லை..

pavalamani pragasam
13th May 2013, 07:29 AM
செல்லவில்லை கோவிலுக்கு
செய்யவில்லை பூசைகள்
சொல்லவில்லை மந்திரங்கள்
சலனமில்லை மனதில்
சறுக்கவில்லை நெறிகளில்
சொர்க்கமில்லை புறவெளியில்

chinnakkannan
13th May 2013, 11:19 AM
புறவெளியில் எண்ணங்கள் மயங்குகின்ற போது
..புலன்களும்தான் சிச்சிறிதாய் துடிப்படங்கும் நேரம்
உறவுகளை, உணர்வினிலே உறைந்திருக்கும் நட்பை..
..உளத்துள்ளே திரைப்படமாய் ஓட்டுகின்ற வேளை
சிரத்துள்ளே நினைவலையை ஒருமித்தே வைத்து
..சிந்தையுளே இறையருளைத் துதிக்கின்ற போது
பரபரக்கும் பூவுலகின் வாழ்வுபோது மென்று
..பக்குவ்த்தை அடையுமனம் அமைதிபெறும் நன்றாய்..

pavalamani pragasam
13th May 2013, 01:00 PM
நன்றாய் இருக்கிறதா சாப்பாடு
குறிப்பால் அறிவாள் சமைத்தவள்
முகம் சொல்லும் திரும்ப கேட்கும்
ஆவல் சொல்லும் கவனமாய் அமைதியாய்
ரசித்துப் புசிக்கின்ற பாங்கு சொல்லும்
வார்த்தையால் பாராட்டத் தேவையில்லை

chinnakkannan
14th May 2013, 11:23 AM
தேவை யில்லை என்று சொல்லி திரும்பி நின்ற வேளையில்
பாவை யுந்தன் விழியில் கோபம் கனன்று அங்கே பார்க்கையில்
நாவை நன்றாய் உதட்டில் சுற்றி ஈரம் கொள்ள வைத்திட
கோவைப் பழத்தின் வண்ணம் மின்னும் இதழும் மேலும் சிவந்ததே

pavalamani pragasam
14th May 2013, 01:09 PM
சிவந்ததே வானம்
அழகானதே புவனம்
மல்ர்ந்ததே வதனம்
பிறந்ததே கானம்

chinnakkannan
14th May 2013, 01:52 PM
கானம் பாடும் குயிலேயுன்
..காதுக் கினிய பாடலிலே
மோனம் கலையும் மாமரங்கள்
..மேவி உயரே தான்பார்த்து
வானம் நோக்கி சலசலத்து
..வாகாய் உன்குரல் இனிமையிலே
நாண ந் துறந்த நங்கையைப்போல்
.. நன்றாய்க் கிளையை ஆட்டிடுதே

pavalamani pragasam
14th May 2013, 08:14 PM
ஆட்டிடுதே பரம்பொருள்
படைத்த உலகினை
உலகின் உயிர்களை
நூலில் ஆடும் பொம்மைகளாய்
இயற்கை சக்திகளை
நிலத்தை நீரை காற்றை
கயிற்றில் சுற்றிய பம்பரமாய்
தீராத விளையாட்டுப் பிள்ளையாய்

chinnakkannan
14th May 2013, 10:14 PM
பிள்ளையாய்ப் பிறந்து என்னைப்
…பித்தனாய் ஆக்கி விட்டு
மெள்ளவே சொல்லு கின்றாய்
…மேவியே பகைவன் நாமம்
அள்ளியே எடுத்து உன்னை
…அடிக்கவே தோன்றினாலும்
வெள்ளமாய்ப் பாசம் வந்து
…வேகமாய்த் தடுக்கு தப்பா

தள்ளாடும் வயதினிலே பிள்ளையென இங்கே
..தயங்காமல் பிறந்துவிட்ட பிரகலாதா கேட்பாய்
துள்ளிவரும் உன்னழகை துடிப்பான உந்தன்
…அள்ளிவரும் பேச்சுகளைக் கேட்பதற்கு வந்தால்
எள்ளிநகை தான்புரிந்து என்னிடமே நீயும்
..எல்லாரில் வல்லவர்தாம் திருமாலே என்றே
சொற்களிலும் சரம்தொடுத்து சுடுகின்றாய், உன்னை
…சொல்லாலும் அடிப்பதற்கும் மருகுதடா நெஞ்சம்..

pavalamani pragasam
15th May 2013, 07:28 AM
நெஞ்சம் பதறுது
அங்கம் உதறுது
காதிலே விழுந்தது
கெட்ட கெட்ட சேதி
காடுகளை அழித்து
குரங்கினம் ஒழித்து
பல்லுயிர் தொலைத்து
தொழில்கள் வளர்த்து
முன்னேற்றமாயிது
மங்குது உன் அறிவு
மண்ணை தலையில் தானே
கொட்டிக்கொள்ளாதே மூடனே

chinnakkannan
16th May 2013, 02:05 PM
மூடனே நானென் றாலும்
..முனிவரே பகரு வீர்தான்
கூடவே இளமைக் கோலம்
..கொண்டநான் வருகை யில்தான்
பூடகம் எதுவு மிலாமல்
..பெண்மணி தானும் கேட்க
கூடநீர் சுமந்தே கரையில்
..கொணர்ந்த துமேனோ சொல்வீர்..

அக்கரையில் சுமந்த பெண்ணை
..இக்கரையில் விட்ட போதே
பக்கெனவே மறந்து போனேன்
.. பாழ்பட்ட உந்தன் நெஞ்சம்
சொக்கவைக்கும் பாவை தன்னை
..சிந்தையிலே சுமந்து கொண்டு
அக்கறையாய்க் கேட்கி றாயே
..அடைவாயா பக்கு வத்தை..

pavalamani pragasam
16th May 2013, 03:13 PM
பக்குவத்தை நான் காணேனே
ஆடம்பரமான புது சொகுசுகளிலே
வெக்கைத் தொல்லை மறையவே
வந்த மின்விசிறியும் போதலியே
அறிவியல் ஒரு தந்திரம் தந்ததே
குளிரூட்டும் யந்திரமும் வந்ததே
வேர்வை சுரப்பிகளுக்கு ஓய்வே
கழிவுகளற்ற சிறுநீரகம் மட்டுமே
ஓயாது உழைத்து மூப்படையுதே
நாகரிக பவுசுக்கு விலையிதுவே
கண்ணை விற்று ஓவியம் வாங்கவே
விரைகின்றனர் இத்தலைமுறையினரே

chinnakkannan
19th May 2013, 03:26 PM
இத்தலைமுறையினரே
நாட்டின் கண்கள்
நாட்டின் போர்வாள்கள்
நாட்டின் பயிர்கள்
நாட்டின் விடிவெள்ளிகள்
நாட்டின் சொத்துக்கள்..
நாட்டின் இன்னும் என்னவெல்லாமோ கள்..
அவர்களால் தான் இருக்கிறது
எதிர்காலம்
என மூச்சுவாங்கச் சொல்லி
இறங்கிய பேச்சாளர்
காரை அடைந்தால்
ஒரு சிறுவன்
ஐயா.. கார் க்ளீன் பண்ணட்டுமா..
ச்சீ போ அந்தாண்டை..
எங்கிருந்தோ வந்துட்டாங்க..
என விழுந்தார் எரிந்து..

pavalamani pragasam
19th May 2013, 08:20 PM
எரிந்து தணிந்த காடுகள்
அடக்கி வைத்த பெண்மைகள்
இருண்டு கிடந்த வானங்கள்
வரண்டு கிடந்த பாலைகள்
அரிதாகி வரும் காட்சிகள்
ஒழிய வேண்டும் மிச்சங்கள்

chinnakkannan
20th May 2013, 02:45 PM
மிச்சங்கள் கொஞ்சம் கூட இல்லை
காக்கைக்கு வைத்திருந்த சாதம்..
ம்ம்
முன்னோர்கள்
ஒட்டு மொத்தமாக வந்திருப்பார்களோ
இருக்கலாம்..
எனில் இன்று ஞாயிற்றுக் கிழமை

pavalamani pragasam
20th May 2013, 06:32 PM
ஞாயிற்றுக் கிழமை சிறப்பை இழக்கும்
ஏழில் ஒன்றாய் சாதாரணமாய் நிற்கும்
மாறுதலின்றி விடிந்து முடிந்து போகும்
ஏனெனில் இது ஒரு இலையுதிர் காலம்

chinnakkannan
21st May 2013, 11:42 AM
இலையுதிர் காலம் தான் இனி..

இருமாதங்களுக்கு முன்வந்தாய்.,,
கலக்கினாய் என்னையும்
என் குடும்பத்தையும்

பின் சின்னதாய் நேற்று
பை சொல்லி
கவலைப் படாதே
ஆறு மாசம் ஆறு நொடி தான்
என்று விட்டுப்போய் விட்டாய்..

படவா..
சீக்கிரம் வா..
நீ வந்தால் தான்
எனக்கு வசந்தம்

pavalamani pragasam
21st May 2013, 12:46 PM
வசந்தம் வாசமானது
கண்ணுக்கு விருந்தாவது
காதில் பாயும் தேனாவது
ஒரு முறை தான் வருவது
துளித்துளியாய் அனுபவித்து
மீதி நாளெல்லாம் திளைப்பது

chinnakkannan
21st May 2013, 01:25 PM
திளைப்பது என்றால்..
எண்ணுவது
என்றால்..
எப்படிச் சொல்றதுன்னு தெரிலைடா
காலைல ஸ்கூல் போறச்சே
நீ ஒரு முத்தா கொடுத்தியோன்னோ..
யா டாடி
அதுல தெரிஞ்ச உன் லவ்..அன்பு..
ஆஃபீஸ் போன பின்னும்
வேலைல கூட அதை நினச்சுக்கிட்டிருந்தேன்
ஓ..டாடி.. திளைப்பது என்றால்
எஞ்சாயிங்க் ஸ்வீட் மெமரீஸா..
கரெக்ட்தானே..தமிழ்ல்ல

வாஸ்தவம் தான்

pavalamani pragasam
22nd May 2013, 08:20 AM
வாஸ்தவம் தான்
போலி நாடகம்
பொய் வசனம்
ஒப்புக்கு சிரிப்பு
அடக்குபவர் அடங்கியவராய்
அடங்கியவர் அடக்குபவராய்
வெளியில் உலாவுதல்
வீட்டுக்கு வீடு வாசப்படி

chinnakkannan
22nd May 2013, 02:44 PM
வாசப்படியில் ஷீவைக் கழற்றி
உள்ளே நுழைந்தால்
செல்ஃபோன்..

சார்..இந்த பிரச்னை..அந்தப் பிரச்னை
ஷ்.. எதுவானாலும் காலையில்
அலுவலகத்தில் பேசலாம்..

என்று வைத்து அமர்ந்தேன்...
பின்ன என்ன
வயிற்றுக்கு அலுவகம்
மனசுக்கு வீடு..
இரனடையும் கலந்தால்
மிஞ்சும் அஜீரணம்..

pavalamani pragasam
22nd May 2013, 07:56 PM
அஜீரணம் வருவது நிச்சயம்
யானையைப் போல் பூனை தின்றால்
பசிக்கின்றி ருசிக்காக அரைத்தால்
பொருந்தாத வகைகளை வெட்டினால்
பழகாத பண்டங்கள் உணவில் மிகுந்தால்
வாயும் உனது வயிறும் உனது புரிந்துகொள்

chinnakkannan
23rd May 2013, 10:52 AM
புரிந்து கொள்
என்ற தலைப்பில்
தாங்கள் எழுதிய
கவிதை பல பரிமாணங்களில்
வெளிப்படுகிறது என்ற
காரணத்தினால்
பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்

pavalamani pragasam
23rd May 2013, 03:10 PM
வருந்துகிறோம் முதியவர்கள்
மூத்த நரைத்த தலைமுறையினர்
மூடர்கள் முதிர்ந்த சுள்ளிகள்
பெண்பிள்ளைகளின் பெரிய புரட்சி
பூ வைக்க பொட்டு வைக்க கசப்பு
நடையுடை பாவனை அனைத்தும் புதுசு
முள்ளாய் கண்ணில் குத்த புண்ணானது
பழமைவாத பாட்டி தாத்தா மனம்
வளர்ந்த செடி வளராத பிஞ்சு ரெண்டும்
மதிக்க மறுக்குது வீம்பு மிகுந்து திரியுது
என்ன ரசாயன மாற்றம் மூளையிலே
புரியாமல் முழிக்குது கிழட்டுக் கூட்டம்

chinnakkannan
23rd May 2013, 05:19 PM
கூட்டமாய்க் கூடி நின்ற
..கும்பலுள் புகுந்து சென்றால்
நீட்டமாய்க் கம்பைக் கையில்
..நெடுவென வைத்த வாறே
வாட்டமாய்க் கயிற்றில் வஞ்சி
..வலிவுடன் நடக்கக் கண்ணுள்
வாட்டமும் கண்டு நெஞ்சில்
..வருத்தமும் கூட லாச்சு

pavalamani pragasam
23rd May 2013, 06:55 PM
கூடலாச்சு கணிணி விளையாட்டு நேரம்
குறையலாச்சு அக்கம்பக்கதோடு சிநேகம்
கூடியமர்ந்து வம்பளந்தது பழைய காலம்
முகம் பார்த்துப் பேச முயலாத நாகரிகம்
ஆப்த நண்பர்களோ முகநூலில் அதிகம்
சோழன் பிசிராந்தையார் போலொரு வட்டம்
உலகத்தோடொத்து ஒழுகும் நல்ல பழக்கம்
நடுவிலே கொஞ்சம் நிஜ உறவைக் காணோம்

chinnakkannan
24th May 2013, 09:45 PM
உறவைக் காணோம் பேச்சினிலே
..உணர்வுகள் இல்லை கண்களிலே
அறத்தினை அகத்தில் தான்வைத்து
..அழகினை மனையைப் புறந்தள்ளி
புறத்தினில் காவி ஆடையினை
..புதிதென அணிந்தே நெடுந்தூரம்
துறவியாம் புத்தன் நடக்கின்றான்
..துன்பமும் நெஞ்சில் ஏதுமின்றி..

pavalamani pragasam
25th May 2013, 08:01 AM
ஏதுமின்றி எது சாத்தியம்
நெருப்பின்றி புகையா
நீரின்றி நிலமா
கடலின்றி கரையா
வேரின்றி மரமா
பூவின்றி காயா
உடலின்றி உயிரா
ஊடலின்றி காதலா
நிஜமின்றி நிழலா
ஐயமின்றி தெளிவா

chinnakkannan
25th May 2013, 09:21 PM
தெளிவாய் இருக்கும் அவள்முகத்தில்
...தெறிக்கும் விழிகள் சிரிப்பினிலே
வலிவாய் சின்னப் பார்வையதை
..வாகாய் கொஞ்சம் தொடுத்தாலும்
நெளியும் கூந்தல் சரிசெய்து
..நேராய்ப் பார்ப்பாள் பொய்யில்லை
களிக்கும் மனம்தான் அவளழகில்
..கரைந்தே செல்லும் தினம்தினம்தான்..

pavalamani pragasam
29th May 2013, 07:54 PM
தினம்தினம்தான் சூரியன் உதிக்கிறது
உலகினில் இறப்பும் பிறப்பும் நடக்கிறது
பூவாய் மலர்ந்து பொலிவாய் திகழ்ந்து
காற்றெங்கும் நறுமணத்தை நிறைத்து
நோகாமல் நொறுங்காமல் வதங்காமல்
உதிர்கின்ற பேர் ஆசீர்வதிக்கப்பட்டவரன்றோ
காந்தியத்தில் ஊறி கதருடுத்தி உழைத்து
நேர்மையும் நன்னெறியும் உயிர்மூச்சாகி
அடக்கமும் அமைதியும் அணிகலனாகி
பேரவா பொறாமை வன்முறையறியா
நோயென்றும் நொடியென்றும் என்றும்
படாமல் படுத்தாமல் பாசமலர்கள்
முகம் பார்த்து உறவாடிப் படுத்து
விடியும் நேரம் துயில் கலையாமல்
பெருவெளியில் பறந்து சென்றுவிட்டார்
பெரியவர் தொன்னூற்றியொன்று வயதினர்
என் துணைவரை ஈன்றவர் பாக்கியவான்
அந்த வரம் வாரிசெங்களுக்கும் வாய்க்கட்டும்

chinnakkannan
30th May 2013, 03:00 PM
வாய்க்கட்டும்
சகல செளபாக்கியங்களும் உனக்கு
ஆசி செய்த அப்பாவும்
ஆசி பெற்ற மகளும் கண்கலங்க
உடனிருந்த மாப்பிள்ளையும் கலங்கினான்..
என்ன ஆச்சு..
ஒண்ணுமில்லை புகை..

Ravi Krishnan
31st May 2013, 10:22 AM
Pugai Pidikaathey, Athu
Udal nalathirku kaedu endru
Vilambara palagai eluthubavan
Vaai pugainthu kondirunthathu.

pavalamani pragasam
1st June 2013, 09:01 AM
புகைந்து கொண்டிருந்தது
பல நாளாய் வஞ்சமொன்று
பனிப்போராய் நடந்தது
பங்காளிகளின் வெறுப்பு
பத்தி எரியுமிந்த நெருப்பு
பிறக்கட்டும் சாம்பலிலிருந்து
பரிசுத்தமான புதிய உறவு
புதைந்து மறையும் பழையது

Iunffx
10th June 2013, 11:52 AM
பழையது என்ன பழையது
வறுமையில் பழையதும் புதியது..
இரவும் பகலும் அல்லலே
இங்கே தரையும் இலையாய் மாறுதே..

அசந்தால் விழுங்கும் காலத்தில்,
கந்தல் துணியில் தேடினால்
உதையே வேளையாய் கிடைக்குது..
உதவச் சென்றால் சாலையில்
என் தோற்றம் பலரை விரட்டுது..

எவரை என்ன சொல்வது
இப்பிறப்பில் இவைதான் என் தோழனா?

காடும் மலையும் திரிகிறேன்
கனிகளை உணவாய் மாற்றினேன்
விலங்குகள் உறவாய் செய்கிறேன்
ஞானிகளோடு பழகினேன்
உடலில் பாம்பை உயர்த்தினேன்
சித்திகள் பல அடக்கினேன்
இறைவனின் வரத்தை உணர்கிறேன்
சித்தனாக அமர்கிறேன்!

pavalamani pragasam
10th June 2013, 01:27 PM
அமர்கிறேன் கணினி முன்
அது போதி மரத்தடி தவம்
ஒரு குட்டிச்சுவர் கழுதைக்கு
கிட்டுமா புத்தனின் ஞானம்

chinnakkannan
11th June 2013, 12:34 AM
ஞானம் பெறுவதற்காகக் கை நீட்டினால்
இல்லை என்கிறது மெளனச் சாமி..
க்ண்ணால் பேசுது
ஒண்ணும் புரியலை..

அது பேசாது
வாய் விட்டு க் கேளுங்க தரும்..

பின்னாலிருந்தவர் கூற
பேசாமல் மறுபடி கை நீட்ட
தள்ளி விட்டது..

சாமிக்கு சாமி வந்துடுச்சு
மற்றவர்கள் கன்னதில் போட்டுக்கொள்ள
மெல்ல தீப்பார்வை பார்த்து
வா எனக் கூப்பிட்டது..

தயங்கி எழுந்து அருகில்
சென்றால்

நெஞ்சில் நெஞ்சில் அடித்து
கண்ணால் சிறிது முறைத்து
மறுபடி கீழே தள்ள..

ஞானம் எட்டியது மனதுக்கு