sivank
2nd September 2009, 06:16 PM
நட்பு
உச்சி நேரத்து சூரியன் மண்டையை பிளந்தது. ஆனாலும் இவ்வளவு வெப்பம் கூடாது. சிறிய மலையாக இருந்தாலும் அந்த படிகளை ஏறி இறங்குவது இந்த கோடை காலத்தில் கஷ்டமாக இருக்கிறது. இதோ, உச்சிகால பூஜை முடிந்து கோவிலை பூட்டி வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் கட்டையை சாத்தினால் தான் உடம்பு தாங்கும் என்று எண்ணியபடியே பட்டாச்சாரியார் இருக்கும வேளையில் தான் வியர்த்து விறு விறுக்க படிகளை ஏறி வருபவனை கண்டார்.
முகத்தில் முள்ளு முள்ளாய் நான்கு நாள் தாடி. வியர்வையால் கலைந்த முடி. போட்டிருக்கும் காக்கி சட்டையும், கால்சட்டையும் பக்கத்தில் பல்லாவரத்திலோ, குரோம்பேட்டையிலோ ஏதோ ஒரு பாக்டரியில் வேலை செய்பவனாக இருக்க வேண்டும். கையில் ஒரு மஞ்சள் பை, கண்களில் ஒரு வித கோபம், என்று அவன் வரும் விதமே ஒரு புது விதமாக இருந்தது.
"கோவில் மூடியாச்சுங்களா? " என்று கேட்டவனை உற்று பார்த்த பட்டாச்சார்யார், " இல்லைப்பா, இன்னும் கொஞ்ச நேரத்துல நடை சாத்திடுவோம். போய் சேவிக்கருதுன்னா சேவிச்சுக்கோ. "
கிடந்தவரின் சந்நிதிக்கு போனவன் மற்றவர்களை போல் கை கூப்பி வணங்காமல் ஏதோ கோபமாக பேச ஆரம்பித்தான். நின்றவருக்கு பூஜை செய்து கொண்டு இருந்த பட்டருக்கு எதுவும் சரியாக கேட்கவில்லை. பூஜையை முடித்துவிட்டு சென்ற போது அவன் வேகமாக கீழே இறங்கி போவது தெரிந்தது.
இப்படி ஆரம்பித்தது, கிட்டதட்ட ஆறு மாதங்களாக நிதமும் நடந்து கொண்டு இருந்தது. உச்சி கால பூஜை முடியும் நேரத்தில் வருவான், கிடந்தவரின் சந்நிதியிலோ, நின்றவரின் சந்நிதியிலோ இல்லை இருந்தவரின் சந்நிதியிலோ ஏதோ தனக்குள் பேசுவான், சிரிப்பான், திட்டுவான் இல்லையென்றால் அழுவான். சிறிது நேரம் கழித்து வேகமாக கீழே இறங்கி போய் விடுவான். சில நாட்கள் கொஞ்சம் தாமதமாக வந்தால் மலை மேல் ஏறாமல் கீழே நீர்வண்ண பெருமாளை தரிசித்து விட்டு போய் விடுவான். யாருடனும் பேச மாட்டான். எல்லோரும் அவனை பைத்தியம் என்ற போது பட்டாச்சாரியார் மட்டும் அவனிடம் எதையோ வித்யாசமாக கண்டார்.
கோவில் வாட்சுமேனாக இருக்கும் கன்னியப்பனை கூப்பிட்டு அவனை ஒரு நாள் விசாரிக்க சொன்னபோது தான் அவனுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் என்றும் பக்கத்தில் பல்லாவரத்தில் பாண்ட்ஸ் கம்பனியில் வேலை செய்பவன் என்றும். தனது மதிய இடைவேளையில் திருநீர்மலை வந்து போவான் என்றும் தெரிய வந்தது. கிட்டத்தட்ட ஆறு மாதத்தில் ஒரு வித நட்பு பட்டருக்கும் அவனுக்கும் ஏற்பட்டது. வாயால் ஒரு வார்த்தை கிடையாது அவரை பார்த்தால் ஒரு சிறிய புன்சிரிப்பு அவ்வளவு தான்.
ஒரு கல்யாணத்திற்காக கும்பகோணம் சென்ற பட்டாச்சார்யார் பத்து நாள் கழித்து திரும்பி வந்தார். உச்சி கால பூஜை முடிந்து நடையை சாத்தும் நேரம் அவனை காணவில்லை. ஏதோ வேலை போல் இருக்கிறது என்று சமாதானம் சொல்லி கொண்டாலும் மனத்தை ஏதோ நெருடியது. மறுநாளும் அவன் வரவில்லை. மெதுவாக கன்னியப்பனை கேட்டு பார்த்தார். அவன் கடந்த ஒரு வாரமாக வரவில்லை என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் ஒரு மாதம் கழிந்தது, அவன் வரவே இல்லை. பட்டரின் மனம் மிகவும் பாடுபட்டது. ஒரு நாள் விடுமுறை எடுத்து கொண்டு நேராக பாண்ட்ஸ் கம்பனிக்கே போய் விசாரித்தபோது தான் கோபாலனை பற்றி தெரிய வந்தது. எட்டு மாதம் முன்பு பாண்ட்ஸ் கம்பனியில் வேலைக்கு சேர்ந்த கோபாலன், நண்பர், உறவினர் ஏதும் இல்லாத கோபாலன் புற்று நோயால் தாக்கப்பட்டு தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து கொண்டார்.
கையில் கொஞ்சம் சாத்துக்குடியை வாங்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய் அவனை பற்றி விசாரித்த போது, அவன் பேசும் நிலையில் இல்லை என்றும், இருந்தும் அவர் அவனை பார்க்க ஆசைபட்டால் போய் பார்க்கலாம் என்றும் சொன்னார்கள். மெதுவாக வார்டுக்குள் நுழைந்த போது மற்றொரு வழியாக ஒருவர் வெளியேறுவது தெரிந்தது. அவனது படுக்கைக்கு அருகே அமர போனவரை பார்த்த நர்ஸ், " மறுபடியும் விசிட்டரா" சலித்தவாறே கேட்டு விட்டு சென்றாள். "அத்த விடு சாமி, அது அப்படித்தான் எல்லாத்துக்கும் சலிச்சுக்கும். " என்ற பக்கத்து படுக்கைக்காரன், " கிழிஞ்ச நாரா இருக்குறவன பாக்க உங்கள மாதிரி நண்பர்கள் வரீங்களே அது தான் சாமி அவன் செஞ்ச புண்ணியம். உங்கள இன்னிக்கு தான் பாக்குறேன். ஆனா, ஒருத்தர் நெதமும் மத்தியானம் லஞ்ச் அவர்ல வருவாரு. அப்படி என்னதான் நட்போ. அவர் பாட்டுக்கு ஏதோ பேசுவாரு, திட்டுவாரு, சிரிப்பாரு, சில சமயம் அழக்கூட அழுவாரு. இவரால எதுவும் பேச முடியாது. கண்ணுல தண்ணியோட கேட்டுகிட்டு இருப்பாரு. சிலசமயம் அந்த பிரெண்டு, அவரு ஏதோ பாகவதர் போல இருக்கு. பையில இருந்து ஒரு புல்லாங்குழல் எடுத்து வாசிச்சுட்டு இருப்பாரு. அதை கேட்டாலே வியாதி எல்லாம் பறந்தா மாதிரி இருக்கும். கொஞ்ச நேரம் இப்படி இருந்துட்டு போய்டுவாரு. இதோ இப்பத்தான் நீங்க வாரத்துக்கு மின்ன தான் போனாரு" என்றவனை வாயை பிளந்தவாறே பார்த்தார் பட்டாச்சார்யார்.
தடுமாற்றத்தோடு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த பட்டாச்சார்யாருக்கு பக்கத்தில் ஏதோ ஒரு டீக்கடையில் சீர்காழி கோவிந்தராஜன் கம்பீரமாக,
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்களில் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
என்று பாடுவது கேட்டது.