PDA

View Full Version : virunthu



pavalamani pragasam
9th November 2004, 03:02 PM
விருந்து

விரலால் வெற்றிலை நீவி
சுண்ணமும் பாக்கும் வைத்து
வாகாய் வாயில் அடைத்து
குதப்பும் நிறைவான நேரத்தில்
இதமான சிந்தனை நீளும்
உண்ட விருந்தின் மீது

அசை போட்டு அலசும் போது
பல்லில் பட்ட ஒரு சிறு கல்லும்
குழம்பின் கால் கல் உப்பு தூக்கலும்
சற்றே குழைந்திட்ட கூட்டின் காயும்
முதலில் நினைவில் தலை தூக்கும்
அதே வேகத்தில் அடங்க்ப் போகும்

உப்பை ஒதுக்கவில்லை
இனிப்பை தடுக்கவில்லை
எண்ணெய்க்கு தடையில்லை
சப்புக்கொட்டி சாப்பிட சத்தாய்
இட்டம் போல் உண்டிட தோதாய்
பத்தியம் பயந்து பதுங்கியே நின்றது

பரிமாறிய உணவும் பதமானது
ஆறாமல் கொதிக்காமல்
விக்கல் வந்து தாக்காமல்
தும்மல் வந்து துடிக்காமல்
இடையூறென ஏதுமின்றி
இனிதே நடந்தேறியது விருந்து

காணாததை கண்டது போல்
காய்ந்து போய் கிடந்தது போல்
இன்றோடு முடிவது போல்
அள்ளி அடைத்து உண்ணவில்லை
ஆகாத எதையும் நாடவில்லை
அளவும் நிதானமும் தவறவேயில்லை

பசியில் ஏப்பம் விட்டதில்லை
புளித்துப் புரையேறியதில்லை
உண்டது உடனே வெளிவந்ததில்லை
செரிக்காத சிரமமுமில்லை
சீரான இயக்கம் கண்டது உடம்பு
உணவின் நோக்கம் நிறைவேறியது

பஞ்சமின்றி படைக்க முடிந்து
வஞ்சமின்றி வயிறை நிறைத்து
தஞ்சம் தந்தணைக்க அழைக்கின்ற
மஞ்சம் சென்றடங்கும் முன்னே
நெஞ்சம் நிரவிய விருந்தின் நினைவில்
கொஞ்சம் சொர்க்கத்தின் இனிய வாசம்

RR
9th November 2004, 03:26 PM
சப்புக்கொட்டி சாப்பிட சத்தாய்
இட்டம் போல் உண்டிட தோதாய்
பத்தியம் பயந்து பதுங்கியே நின்றது

அருமை :)

உங்கள் கவிதை விருந்துண்டு மனது நிறைந்தது.

tiruttakkan
9th November 2004, 05:50 PM
PP ma'm,

I am unable to read your poem properly. It displays a different style of Tamil (some kind of script dialect?).There is some font issue.

Tiruttakkan

RR
9th November 2004, 06:18 PM
PP ma'm,

I am unable to read your poem properly. It displays a different style of Tamil (some kind of script dialect?).There is some font issue.

Tiruttakkan

try changing your encoding to auto-select.