PDA

View Full Version : ‘பார்க்’காமை



Russellhni
7th July 2016, 11:19 AM
" இதோ பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு, சர்க்கரை, இதோட சேர்ந்து போனஸா கொலஸ்ட்ரால் வேற! . இப்படி தூங்கிகிட்டே இருந்தால் விளங்கினால் போலதான் ! எழுந்துக் கொள்ளுங்க ! முதல்லே எழுந்து வாக்கிங் கிளம்பற வழியை பாருங்க ! .” மனைவியின் அதட்டல். ஒரு நாளைப் போல இதே தொந்திரவுதான். நிம்மதியாக என்னை இரவிலும் தூங்க விட மாட்டேங்கிறாங்க.


https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQIBDV_D_WMCgB1xCB249t4iM7LxQ2J-H7JFtece9Z3O6tZBwuX

வேறே வழியில்லை. கிளம்பிட்டேன். காலை 6.30 மணி. பார்க்லே கொஞ்சம் கூட்டம். பார்க் கேட் கிட்டே வரிசையாக ஒட்டி ஒட்டி ஸ்கூட்டர்கள் மோட்டார் பைக்குகள் நின்று கொண்டிருந்தன. ! என்னைப் போன்ற கன பாடிகள் பார்க்குக்குள் நுழைய வழியே இல்லை, என்ன கொடுமை சார் இது ? வண்டிகளை இடுப்பினால் இடித்து கொண்டே பார்க் உள்ளே நுழைந்தேன்.

பின்னால் ஆளரவம் . திரும்பினேன். “கொஞ்சம் கூட அறிவே இல்லை சார் இவங்களுக்கு ! இப்படியா வண்டிகளை பார்க் பண்ணுவாங்க” அலுத்துக் கொண்டே பார்க்கில் நடை பழகும் சக நண்பர் ஒருவர் வளைந்து வளைந்து உள்ளே நுழைந்தார். அவரது கையில் ஒரு சைனா செ(ங்க)ல்!

“என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! ” அந்த கால எம்.ஜி.ஆர் பாடல் உரக்க பிளிறிக் கொண்டிருந்தது. ‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’. அவரது மொபைல் அவரது வரவை பராக் பராக் சொல்லும் . முரட்டு மீசையுடன், கொஞ்சம் பெரிய தொப்பையுடன், போலீஸ் மாதிரி இருப்பார். அதனால் நான் அவருக்கு வைத்திருந்த பெயர் எஸ்.பி (சவுண்ட் பார்ட்டி).

நான் அவருக்கு சலாம் போட்ட படியே “பார்க் வந்திருக்காங்க இல்லியா! அதான் இப்படி பார்க் பண்ணியிருக்காங்க.!” ஜோக் கடித்தேன். என்னை ஏதோ பூச்சி மாதிரி பார்த்துக் கொண்டே வேகமாக நடந்தார். அப்படி என்ன தப்பாக சொல்லி விட்டேன்? சிலருக்கு என் நகைச்சுவை நகச்சுத்தி போல வலிக்கிறது ! எல்லாம் நான் வாங்கி வந்த வரம் !

நிறைய பேர் பார்க்கை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார்கள். அதில் சில பேர் மட்டும் இடம் வந்து கொண்டிருந்தார்கள், என்ன வேண்டுதலோ? ஒரு சிலர் பின் பக்கமாக ரிவெர்சில் , வேடிக்கையாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.


https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQq2YZUwOIDBWxKg_GgJEm9JTO2JIiwn w0aSgTg0JH61s_1rhEB

அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டே, என் மேல் இடித்து விடாமல் ஓரமாக ஒதுங்கி நடந்தேன் !

எத்தனை விதம் இந்த மனிதர்கள் ? கொஞ்சம் பேர் ஸ்லோவாக அன்ன நடையில், தரைக்கு வலிக்குமோ காலுக்கு வலிக்குமோ என்று ! வேறு சிலரோ, அசுர கதியில், ஜெட் லீ வேகத்தில் பூமி அதிர ஓடிக் கொண்டிருந்தனர். எதையோ வெட்டி முறிக்கும் வேகம் அவர்களுக்கு.
பார்க்கிலேயே வீடு விற்பது வாங்குவது பற்றி பேசிக் கொண்டு, காசு பண்ண காத்துக் கொண்டிருந்தார்கள் சில சந்தர்ப்ப வாதிகள். வேறு சில அரசியல் அள்ளக் கைகள் , நடந்து கொண்டே, போனில் காலேஜ் சீட் பேரம் பேசிக்கொண்டு , ஒரே கல்லில் நான்கைந்து காய் அடித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் பொய் புரட்டில் புரண்டு, வெறுத்த படியே , நான் பார்க்கில் கொஞ்சம் வேகமாக நடந்து , மூச்சிறைக்க, அவர்களை கடந்தேன்

எனக்கு முன்னே ரெண்டு பேர் தங்களை மறந்து, அவர்களது அதிகாரியை நக்கல் அடித்து கொண்டு நடை பயின்று கொண்டிருந்தார்கள். என்ன ஒரு மஜா அவர்களுக்கு அதில்! அதிகாரி காதில் விழுந்தால், இவர்கள் அவர் காலில் விழ வேண்டும் ! நான் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டே நடந்தேன்.

சில யுவதிகள், பறக்காத தலைப்பை சரி செய்து கொண்டே என்னை தாண்டி நடந்தனர். அவர்கள் பின்னே, அதே வேகத்தில், சில வாலிப மற்றும் அரை குறையாய் டை அடித்த வயோதிக அன்பர்கள் நடந்தனர். ரெண்டு மூணு விடலை ஜோடிகள் வாக்கிங் பெயரில் கடலை போட்டுக்கொண்டு போக, , ‘பார்க்’க கண் ரெண்டு போதாது.

இதை ரசித்துக் கொண்டே நான் அசைந்தேன் !

சொல்ல மறந்திட்டேன். சாரி ! பார்க் ரெகுலராக வரவங்க எனக்கு வெச்ச பேர் ‘ஆமை’. அவ்வளவு வேகம் எனது நடையில். இந்த லட்சணத்தில் எனக்கு உடல் எடை குறைய வேறு ஆசை. என்னோட வேக நடைக்கு, எறும்பு கூட என்னை ஓவர் டேக் பண்ணிடும். எறும்பு என்பது இன்னொரு வயதான தம்பதியினருக்கு நான் வெச்ச பேர். என்பதை தாண்டிய அவர்கள், ஜோடியாக ஒருவர் பின் ஒருவராக அடி பற்றி அடிஎடுத்து வைப்பார்கள்.

எனக்கு பரிச்சயமான பார்க் நண்பர்கள் சிலருக்கு சில ஆகு பெயர்கள் உண்டு. ஒல்லியான தேகம் கொண்டவரை “பென்சில்” என அடைமொழி சொன்னால் தான் என் மனைவிக்கு புரியும். எப்பவும் சின்னதான அரை பேன்ட் போட்டுக் கொண்டு ஓடும் ஒருவருக்கு நான் வைத்த செல்ல பெயர் “ஜட்டி”.

மனைவியோடு ஒட்டி ஒட்டி ஈஷிக்கொண்டே நடக்கும் தம்பதிகளுக்கு அடியவன் வைத்த பெயர் “ஈஷல்“. கொஞ்சம் இடுப்பை அளவுக்கு அதிகமாகவே ஆட்டும் அழகிய யுவதிக்கு பெயர் “ஸ்டைல் சுந்தரி”. எனக்கும் பொழுது போகவேண்டுமே. பார்க்குக்கு இன்று யார் வந்தார் வரவில்லை என கணக்கு பார்க்க வேண்டுமே ?

***

ஆயிற்று, ஒரு மாதிரியாக 5 ரவுண்டு முடிந்தது. அதற்கே கிட்டதட்ட முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது. . அப்பாடா! கிளம்ப வேண்டும். ஒரு வழியாக முடிந்தது. கேட் கிட்டே வரும் போது இன்னும் நெருக்கமாக கேட்டில் வரிசையாக வண்டிகள்.

“இங்கு வண்டிகளை நிறுத்தக் கூடாது” நோட்டீஸ் போர்டு கீழேயே ஸ்கூட்டர், பைக்குகள். இடைவெளி இல்லாமல் நிறுத்தி வைத்திருந்தனர். என்ன ஒரு மதிப்பு, மரியாதை நகராட்சி மன்றத்திற்கும் போலீசுக்கும் ! அடித்துக் கொள்ள இரண்டு கை போதாது !

“சே ! இப்படியா முட்டாள் தனமாக வண்டியை பார்க் பண்ணுவது ?” மனதிற்குள் அலுத்துக் கொண்டே நான் வெளியே வரும் போது, தாறு மாறாக நிறுத்தியிருந்த ஒரு பைக்கின் ஹான்டல் பார் என்னுடைய சுமாரான பெரிய தொப்பையில் இடித்தது. வலி தாங்காமல் அனிச்சையாக திரும்பினேன்.

இந்த பக்கம் இன்னொரு பல்சர் வண்டியின் ஹான்டல் பார் இடித்து, கை முட்டியில் அடி சுரீர் என்றது. வலி தாங்காமல் வேகமாக என் கையை இழுத்ததில், அந்த வண்டி கவிழ்ந்து, பின்னால் வந்த ஒருவர் மேல் விழுந்தது. அவர் நிலை குலைந்து கீழே சாய்ந்தார். நல்ல வேளை, அவருக்கு பெரிய அடி ஒன்றும் இல்லை. கை சிராய்ப்பு, ரத்த காயம், அவ்வளவு தான்.

அதற்குள், எங்கிருந்து பார்த்தாரோ, கீழே விழுந்த பல்சர் வண்டியின் ஓனர் ஓடோடி வந்து “என்ன சார், வண்டிய தள்ளிட்டீங்களே! ‘பார்க்’காம கண்ணை மூடிட்டு வரீங்களே?” என்று நெற்றிக் கண்ணை திறந்து எங்களை எரிக்காத குறையாய் திட்ட ஆரம்பித்து விட்டார்.

விழுந்தவரை பற்றியோ அல்லது என்னை பற்றியோ அந்த மகானுபாவர் கவலை பட்டதாக தெரியவில்லை. பின்னே, வண்டி இன்டிகேட்டர் லைட் உடைந்தால் யாருக்கு தான் கோபம் வராது? அவரது வண்டி தானே அவருக்கு முக்கியம்? அது தானே நியாயம்!.

“ஹலோ! யார் சார் உங்களை வழியில் வண்டியை நிறுத்த சொன்னாங்க? நாங்களே இங்கே அடி பட்டு கிடக்கிறோம். சும்மா சத்தம் போடறீங்க?” என்று நான் ஆரம்பிப்பதற்கு முன்னால் கீழே விழுந்தவர், சத்தம் போட்டு எகிற ஆரம்பித்து விட்டார்.. அவர் படித்தவர் போல. அதனால் ஆங்கிலத்தில்” ஸ்டுபிட், இடியட் இப்படியா வண்டிய நிறுத்தறது? அறிவு வேணாம்?”. என்று காச் மூச்சென்று கத்தினார்

புல்சர் வண்டிகாரருக்கு பிரஷர் எகிறி விட்டது. “நாங்க பின்னே எங்கே விடறது? நீங்க தான் பாத்து போகணும் ! பெருசா பேச வந்துட்டீங்க ? இந்த பக்கம் குப்பை வண்டி, அந்த பக்கம் கார்ப்பரேஷன் தோண்டிய பள்ளம். எங்களுக்கு ஏது இடம்? சொல்லுங்க! ” வண்டி காரர் கத்த , மற்றவர்கள் கூச்சல் போட, கூட்டம் சேர்ந்து விட்டது. ரசா பாசம்.

நான் கொஞ்சம் முன் கோபி. எனக்கு ஏற்கெனவே நிறைய ரத்த அழுத்தம் . வயசானால் எல்லாமே அதிகம் தான். உடம்பில் உப்பு, சக்கரை, கொழுப்பு . எனக்கு கூடவே போதாத நேரம் வேறு.. 9-ல் இருந்த ராகு இப்போது 8-ஆம் இடத்துக்கும்; 3-ல் இருந்த கேது இப்போது 2-ஆம் இடத்துக்கும் , என்னை எதுவும் கேட்காமலேயே மாறிவிட்டார்களாம். சனி வேறு என்னை வக்கிரமாக பார்க்கிறாராம். அடக்கி வாசிப்பது நல்லது என என் மனைவி அடிக்கடி சொல்லுவாள் (சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் அவளிடம் என்றும் இன்றும் அடக்கி தான் வாசிக்கிறேன் !)

என் கெட்ட நேரம், என்கிட்டே இல்லாத ஒண்ணை இருக்கான்னு பல்சர் வண்டி காரரின் நண்பர் என்னை எகத்தாளமாக வினவினார் (வேறென்ன, மூளைதான்). அவர் அங்கே அவரது ஸ்கூட்டியை பார்க் பண்ணியிருந்தார் போல. அதுவும் சாய்ந்து லேசான சிராய்ப்பு அந்த வண்டிக்கு. அந்த கோபம்.

கோபம் தாங்காமல் அவரை அடிக்க போனேன். மாறாக, அவரிடம் அடி ஒன்று வாங்கிக்கொண்டேன். இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் அந்த பக்கமாக போன ஓட்டை உடைசல் ஸ்கூல் பஸ்ஸில் ஏறியது. வெறுத்து விட்டேன்.

அன்றிலிருந்து என் மனசுக்குள் ஒரு வெறுப்பு.. இந்த பார்க்கே வேண்டாம் ! இந்த ஊரில் எனக்கு வேறு போக்கிடமே இல்லையா என்ன ? ரொம்ப வீராப்பாக, பத்து நாள் பார்க் பக்கமே போகாமலிருந்தேன். ஆனாலும், என்னை அடித்தவர் முகம் மற்றும் அவரது ஸ்கூட்டி ஞாபகம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர பழி வாங்க மனது துடித்தது. மறக்க முயன்று கொண்டிருந்தேன். முடியவில்லை.

***

இந்த பத்து நாளும் ரோட்டில் வாக்கிங். ஆனால், மாநகராட்சி தோண்டல். அவர்களது உபயத்தில் ரோடே பள்ளமும் மேடுமாக. குப்பை வேறு! மக்கள் நலனுக்காக (?!) அரசாங்கம் வெட்டிய குழியில் விழுந்தால், எழுந்துக்க முடியாது. மண்ணை போட்டு நம்மை மூட வேண்டியதுதான். அதையும் நகராட்சி செய்யாது. அப்படியே விட்டு விடும்.

வேறு வழி, திரும்பவும் பார்க்குக்கு போனேன். ஒரு மாற்றமும் இல்லை. அதே குப்பை. வண்டிகள் எப்போதும் போல் கேட் வாசலில் பார்கிங், இடக்கு மடக்காக. என்னை அடித்தவரோட ஸ்கூட்டி அங்கே நின்று கொண்டிருந்தது. அடி வாங்கியது மறக்க முடியவில்லை.

பழி வாங்க மனது துடித்தது. என்ன பண்ணலாம்? வண்டியை தள்ளி விடுவோமா? யாராவது பார்த்து விட்டால்? டயரை பஞ்சராக்கி விட்டால்? ஆனால் அது சாத்தியமில்லையே. படிச்சவங்க பண்ற காரியமா இது? மாட்டிக்கொண்டால் எவ்வளவு அவமானம் ?

யோசனையுடன் பார்க்கில் நடந்தேன்.. அன்று ஆமையே அசால்டாக என்னை ஓவர்டேக் பண்ணியிருக்கும். திடீரென்று ஒரு பல்பு என் மண்டைக்குள் எரிந்தது. ஐடியா. பழி வாங்க.


https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTF41CDawVn5oe5yrzJA5lUDNopVyRTg F6b5FLi9X0-ayIsCOGU5g


****

அடுத்த நாள். உற்சாகமாக,எனது மனைவிக்கு முன்பாக நான் எழுந்து வாக்கிங் தயாராகி விட்டேன். பழிக்கு பழி. வழக்கம் போல “பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு,...” மனைவி சுப்ரபாதம் ஆரம்பித்து முடிப்பதற்குள், வீட்டிற்கு வெளியே நான். ஆச்சரியத்தில் , அவள் வாய் மூட மறந்தாள். என் கையில் ஒரு சின்ன பேனா கத்தி. விடுவிடுவென பார்க் நோக்கி நடந்தேன்.

முயல் கூட அன்று என்னிடம் ரேசில் தோற்றிருக்கும். அவ்வளவு வேகம் !

என்னை அடித்தவரோட ஸ்கூட்டி ,பார்க்கில் கேட் முன்னால், எப்போதும் போல் வழியை மறித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தது. நேராக அருகில் போனேன். யாரும் பார்க்கவில்லை. கத்தியால் சீட்டில் நாலு கோடு இழுத்தேன். டர்ரென்று சீட கிழிந்தது. அப்பாடா, திருப்தி. பழி வாங்கினால் என்ன சுகம்.! அதுக்கு ஈடு இணையே கிடையாது. மற்றவரின் சீட்டை கிழிப்பது என்பது எல்லாருக்கும் கிடைக்கும் பாக்கியமா என்ன?

திரும்பினேன். ஸ்கூட்டி ஓனர், என்னை அடித்த மகானுபாவன். அவனுடன் கூட ரெண்டு தடியன்கள். என்னை நோக்கி ஓடி வந்தார்கள்.

“மாட்டினியா! மவனே! பத்து நாலா (அவருக்கு ளா வராது) எங்க வண்டிங்க சீட் கிழிச்சியே! நீதான்னு எனக்கு சந்தேகம். பிடிச்சிட்டோம் பாத்தியா!” கொக்கரித்தான் ஸ்கூட்டி ஓனர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் பார்க் பக்கம் வந்தே பத்து நாளாயிற்றே. இன்னிக்கு தானே இந்த வேலையை பண்ணினேன். பத்து நாளா நான் எங்கே, எப்படி செய்திருக்க முடியும்?.

என்னைப் போல் எவனோ ஒருவன், இந்த வேலையை பண்ணியிருக்கிறான். பழி என் தலையில்.

எல்லாரும் சேர்ந்து என்னை ஜூஸ் பிழிந்து விட்டார்கள். என்னை ஒண்ணுமே சொல்ல விடலை. ஒரே ஒரு நாள் கிழிச்ச பாவத்துக்காக, பத்து பேருக்கு புது சீட கவர் வாங்க பணம் கொடுத்தேன். நல்ல வேளை, தெரிந்த நண்பர்கள் வந்து காப்பாற்றினார்கள். இல்லாவிட்டால், போலீஸ் கேஸ் ஆகியிருக்கும்.

***

அடுத்த நாள், பார்க் பக்கம் போனேன். ‘சார்! சார்!’ என்று யாரோ கூப்பிட்டார்கள். திரும்பினேன். டெய்லி மார்னிங் வாக் வருபவர். ஒல்லியா இருப்பார். பென்சில்னு அவருக்கு நான் அன்பாக வைத்த அடைமொழி. “சாரி சார், நேத்து நீங்க சீட் கவர் கிழிக்கறப்போ நான் அங்கே தான் இருந்தேன். எல்லாத்தையும் பார்த்தேன்”

எனக்கு கொஞ்சம் ஆதங்கமாக இருந்தது. “ஆமா சார், கோபத்திலே நான் ஒரே ஒரு நாள் தான் சீட்ட கிழிச்சேன். அனால், பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் மாதிரி, பத்து நாள் தண்டனை கொடுத்திட்டாங்க” எனக்கு யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல இருந்தது.

“என்ன சார், படிச்ச நீங்களே இதெ செய்யலாமா? பண்றது தான் பண்றீங்க, யாரும் பாக்காம பண்ண வேண்டாம்? அது கூடவா தெரியாது? நானே பாருங்க, ரெண்டு நாள் இந்த தடியன்கள் வண்டி சீட் கிழிச்சிருக்கேன். மாட்டினேனா?”- பென்சில் மார் தட்டிக் கொண்டார்.

“அப்படியா? நீங்க கூடவா? நீங்க ஏன் அப்படி பண்ணீங்க?”

“பின்னே என்ன சார் ? வண்டியே குறுக்கால நெடுக்கால நிறுத்தி இடைஞ்சல் பண்றாங்க. வெறுப்பா இருக்கு. கேட்டால் சண்டைக்கு வராங்க”- தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

“அப்போ, மீதி ஏழு நாள் யார் கிழிச்சிருப்பாங்க!”

“அதான் சார், எனக்கும் புரிபடலை. ஆனாலும், ஸ்கூட்டர் கேட் கிட்டே நிறுத்திறது குறையலியே! தண்டனை கொடுத்தாலும் திருந்த மாட்டேங்கறாங்க”. பென்சிலுக்கு குழப்பம்.

எனக்கு தெரிந்துவிட்டது. யாரை சொல்லியும் பிரயோஜனமில்லை. குறை எங்க எல்லோரிடமும் தான். நமது ஊரில் நடப்பது நகராட்சி இல்லை. நகராத ஆட்சி. கார்பரேஷன் மெத்தனம், ஊர்பட்ட ஸ்கூட்டர், கட்டமைப்பு குறைகள், மலிந்து போன ஊழல், மக்களின் வெறுத்து போன முரட்டு சுபாவம், தன்னலம் எல்லாம் தான் காரணம்.

எனக்கு இப்போது ஒன்று தெரிந்தது. வன்முறை இதற்கு வழியில்லை. நான் செய்த தவறு எனக்கு மெதுவாக புரிந்தது. நாம கோபப்பட்டு ஒரு உபயோகமும் இல்லை. ஒரு ஆணியும் பிடுங்க முடியாது ! மனக் கஷ்டமும், பண நஷ்டமும் தான் மிச்சம்.

முடிவு செய்து விட்டேன். இப்போது தலையில் மீண்டும் ஒரு முறை பல்பு எரிந்தது. இனி என் வழி இன்முறை தான்.


https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQHYGeD4S_b5Zry7_iv7N99a1xCkUH3L ZMushwft55O4pH3xlKY

பார்க் டிரஸ்ட் மெம்பர்களிடம் சொல்லி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்சில், ஜெட் லீ, உதறல், எஸ்.பி (சவுண்ட் பார்ட்டி) , எள்ளுரண்டை மாதிரி நண்பர்கள் மூலமாக , ஸ்கூட்டர் பார்கிங் சீர் செய்ய முயல வேண்டும். இந்த ஆமையும், கொஞ்சம் பொறுமையாக செயல் பட்டு, வண்டிகளை சீராக, மற்றவருக்கு தொந்திரவில்லாமல் நிறுத்த வழி செய்ய வேண்டும். ஒரு சின்ன சமூக சேவை. பார்ப்போம்! .

முயன்றால் முடியாதது எது?


https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcR4nT88rdZEB9ufnaIcpmTT_n9YiL3rx IGdkxwCH_9Lu9e_GNGi8Q

முற்றும்.........

pavalamani pragasam
7th July 2016, 06:04 PM
படு யதார்த்தமான, கருத்துள்ள கதை! எளிமையான, ரசிக்கும்படியான நடை! வாழ்த்துக்கள்!

Russellhni
10th July 2016, 07:41 PM
Thank you Madam !