PDA

View Full Version : வேகமா ? விவேகமா?



Russellhni
27th January 2016, 02:07 PM
திலீபன் ஒரு பி.பி.ஏ. வேலையில்லா பட்டதாரி. அப்பா ஒரு விவசாயி. குடும்பத்தில் படித்தவன் இவன் மட்டும் தான். வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருந்தான்.


https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQodimoijeKMaFuhe6Cy2VMFF9tJDvjQ X6iJgfzgRSqxLozMV8P3w

மூன்று வருடமாகியும் , ஒரு நிறுவனம் கூட திலீபனை நேர்முக தேர்வுக்கு கூப்பிடவில்லை. அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆரம்ப நிலை பயிலாளர், எழுத்தர் வேலைக்கு கூட ஐந்து வருஷ அனுபவம் கேக்கிற காலம் இது. பத்தாயிரம் ரூபா குமாஸ்தா பணிக்கு கூட இன்ஜினியரிங் படிச்சவங்க, எம்பி எம்பியே ,இவனுக்கு முன்னாடியே கும்மி அடிக்கையில் , இவனுக்கு எங்கே வேலை கிடைக்கும்?

இருப்பினும், திலீபன் மனம் தளரவில்லை. மனு மேல் மனு போட்டுக் கொண்டேயிருந்தான் வேலை வாய்ப்பு இணையதளம், ஈமெயில் மூலமாக.. மீண்டும் மீண்டும் போட்ட அலுவலகங்களுக்கே கூட .

பதில் தான் ஒன்று கூட வரவேயில்லை. எதிர் பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.

இப்படியிருக்க வந்தது. ஒருநாள் அவனுக்கும் ஒரு கடிதம் ஈமெயிலில் . ஒரு பெரிய வணிக நிறுவனத்தின் மனித வள அதிகாரியிடமிருந்து.

“உங்களது மனு நிராகரிக்கப் பட்டுள்ளது.”.


https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRsSheL9iFaFeoLUGS4oav6-XU-sZqaZP1Kkc9iMYZE7yW-nelJcA

கூடவே அந்த ஈமெயிலில், “ உங்கள் விண்ணப்பம் சரியான முறையில் எழுதப் படவில்லை.” என்றும் எழுதியிருந்தது. , வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல.

படித்ததும் திலீபனுக்கு ஒரே எரிச்சல். வேலை கிடைக்காத நிராசையை விட, “இவனுங்க யாரு என்னை குறை சொல்ல?” எனும் எண்ணமே அவனுள் தலை தூக்கியது. செம கடுப்பு.

காய்ச்சி ஒரு பதில் கடிதம் போட , திலீபன் கையும் மனமும் துறுதுறுத்தது. உடனே மெயிலில் எழுதவும் ஆரம்பித்து விட்டான்.

"என்னோட ஆங்கிலத்தை குறை சொல்ல நீங்க யாரு? உங்களுக்கு ஏன் இந்த ஆணவம்? வேலை இல்லைன்னு சொல்றதோட மட்டும் நிறுத்திக் கொள்ளுங்க. நீங்களும், உங்க நிறுவனமும். போங்கையா போங்க. ஸ்டுபிட்!"

இப்படியாக, கண்டபடி திட்டி எழுதிக் கொண்டிருந்த போது, அவன் அப்பா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது.

" திலீபா! கோபமும் வெறுப்பும், ஒரு எரியற தணல் மாதிரி. கையில் கிடைச்சதை எடுத்து மற்றவர் பேரில் எறியலாம்னு நினைப்போம். ஆனால் நம்ப கையை அது முதல்லே சுட்டுடும். எதையும், நிதானமா யோசனை பண்ணி செய். அவசரப்படாதே."

அவனது ஆத்திரமும் , கோபமும் கொஞ்சம் தணிந்தது. அந்த எச். ஆர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்க கூடுமோ? தனது விண்ணப்பத்தை எடுத்து மீண்டும் படித்தான். நிறைய குறைகள் கண்ணில் பட்டன.

நமது மேலே குறைகள் வைத்துக் கொண்டு நாம் ஏன் அந்த நிறுவன அதிகாரியைத் திட்டனும்? அவர்களைத்திட்டி நமக்கு என்ன லாபம்?
பாவம், மீண்டும் மீண்டும் அதே மனுவை பார்த்து அவர்களுக்கு அலுப்பு தட்டியிருக்கும் போல. உடனே, பதிலை மாற்றி எழுதினான்.

“அன்புள்ள ஐயா, உங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டியமைக்கு வந்தனம். விண்ணப்பத்தை மாற்றி எழுதியுள்ளேன். உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். மீண்டும் நன்றி.”

கடிதத்தை நிறுவனத்திற்கு அனுப்பி விட்டான்.

பத்து நாளில், அந்த நிறுவனத்திலிருந்து ஒரு அலைபேசி அழைப்பு. “திலீபன்! உங்களுக்கு எங்கள் கம்பனியில் பயிலாளர் விற்பனை அதிகாரியாக வேலை நியமனம் செய்ய உள்ளோம். நாளை, உங்கள் இறுதி நேர்முக தேர்வு. உங்கள் சான்றிதழ்களுடன், எங்களது எச். ஆர். அலுவலகத்திற்கு நாளை வரவும். மேலும் விவரங்களுக்கு ஈமெயில் பார்க்கவும்.”

திலீபனுக்கு ஆச்சரியம். "எப்படி? என் விண்ணப்பம் தான் ஏற்கப் படவில்லையே ?"

மறு முனையிலிருந்து வந்த பதில் " இந்த விற்பனையாளர் பணிக்கு எங்கள் நிறுவனத்தின் தேவை முக்கியமாக பணிவு மற்றும் புரிந்து செயல் படல். உங்கள் கடிதத்தில் அதை கண்டோம் . ஈமெயில் தகுதிச்சுற்றிலே நீங்க வெற்றி பெற்றதனால், நாளை நேர் காணல். வாழ்த்துக்கள். "

சில நிமிட நிதானம்....பெரிய பலனைத் தரும் என்பதை திலீபன் புரிந்து கொண்டான் , அப்பாவிற்கு மனதில் நன்றி சொன்னான்.

அப்பா படிக்காதவர் தான், ஆனால், என்ன ஒரு விவேகம் அவருக்கு!


https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQNG07TN2L2Je7rc-tYRMlFXsjiq06yTXdNcarQAuLn3O-g9sIc3w



**** முற்றும்

Russellhni
27th January 2016, 02:14 PM
இந்த பட்டன் விரலுக்கு பக்கத்திலே இருக்கிறதாலே, பின் விளைவை நினைக்காமல், கோபத்திலே கண்டபடி எழுதி, பட்டனை தட்டிவிட்டு , "ஐயோ கொட்டிப்போச்சே, அள்ள முடியாதே !" அப்படின்னு அல்லலுறும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன் :-( . அதிலே நானும் ஒருத்தன்.


https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTvoTSnboOrb-rvZRBWGI0Lwb5HV3ZVWT-UzhwJgw62PEnmhgLH

அவசரப்பட்டு அமுக்கி விட்டு, தானும் வருந்தி, மற்றவரையும் வருத்தி, வம்பில் மாட்டிக் கொள்ளும் வல்லமை உள்ளவருக்கே இந்த கதை..

மகாத்மா காந்தி சொன்ன கருத்தை 'வாழ்க வளமுடன்' - வேதாத்திரி மகரிஷி தமிழில் சொன்னது

“எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.

சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.

செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.

பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.

ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”


******

pavalamani pragasam
28th January 2016, 08:10 AM
நல்ல கருத்து!நல்ல விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது! பாராட்டுக்கள்!

Russellhni
1st February 2016, 02:12 PM
Madam :ty: