PDA

View Full Version : மறதி !



Russellhni
8th November 2014, 02:41 PM
ரவியும், மீனாவும் மன நல மருத்துவர் அறையில்.

“சொல்லுங்க! என்ன ப்ராப்ளம்?” டாக்டர்.

“ஒண்ணுமில்லை டாக்டர்!. என் பேரு ரவி, இது என் மனைவி மீனா. எங்க குடும்ப டாக்டர் தான் உங்களை பாக்க சொன்னார். எங்க பிரச்னையே, மறதி தான். என்ன பண்றதுன்னே புரியலை.அதான் .. ”

“ரவி, முதல்லே, நீங்க மறக்கறதுக்கு முன்னாடி, என் பீஸ் ஐநூறை, இப்போவே கொடுத்துடுங்க!” டாக்டர் ஜோக்கடித்தார்.


https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcR4gOWxCa99U5b0Et89ryRK2R3JyO1we isJR8gI8SV6DkqL7yKezw

ரவி சிரித்தான். “ டாக்டர், மறதி எனக்கில்லை. என் மனைவிக்கு தான். எப்போவாவது ஒரு தடவை கதவை பூட்டினோமா, காஸ் அணைத்தோமான்னு பாக்கறது தப்பில்லை. ஆனால், இவள், பத்து தடவை பார்த்ததையே பார்த்து, செய்யறதையே திரும்ப திரும்ப செக் பண்ணறாங்க. என்னாலே தாங்க முடியலே. இவளால், எங்க வாழ்க்கையே நரகமாயிருக்கு.. நீங்க தான் இதுக்கு ஒரு வழி சொல்லணும்”

“மறதி எல்லாருக்கும் சகஜம்தானே? . நீங்க பயப்படறா மாதிரி அப்படி என்ன பண்ணிட்டாங்க உங்க மனைவி?”

“கேட்டால் சிரிப்பீங்க. பத்து நாளைக்கு முன்னாடி, நெய்வேலி போக வேண்டியிருந்தது டாக்டர். இவளை வீட்டை பூட்டிகிட்டு, ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டாண்ட் வரச்சொன்னேன். சாதாரணமா எங்க வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரை ஆட்டோ சத்தம் ஐம்பது ரூபாய் ஆகும். இவள் எவ்வளவு கொடுத்தாள்னு தெரியுமா டாக்டர்?”

“எவ்வளவு?” – டாக்டருக்கே ஆவல் வந்து விட்டது.

“இருநூறு ரூபாய்”

“அடாவடியா இருக்கே, ஏம்மா அவ்வளவு கொடுத்தீங்க?”

மீனா ஆரம்பிப்பதற்குள் ரவி முந்திக் கொண்டான். “பின்னே என்ன டாக்டர், பஸ் ஸ்டாண்ட் வரதுக்குள்ளே, நாலு தடவை ஆட்டோவை, வீட்டுக்கு திருப்ப சொன்னா, ஆகாதா? வெயிட்டிங் சத்தம் வேறே தண்டம் அழுதாள்”

“ஏன் அப்படி?”

“முதல் தடவை, வீட்டை சரியாய் பூட்டலை, சந்தேகமாயிருக்குன்னு ஆட்டோவை வீட்டுக்கு திருப்பினாள். அப்புறம், அயர்ன் பாக்ஸ் அணைக்க மறந்துட்டேன்னு, மூனாவது தடவை காஸ் அணைக்க மறந்துட்டேன்னு, நாலாவது தடவை திரும்ப சரியாக வீட்டை பூட்டலேன்னு ஆட்டோக்காரனை கோயம்பேடு வரை வந்துட்டு திருப்பச்சொன்னாள் "

"அடடா !அப்புறம்!" டாக்டர் சிரித்தார்.

ரவி தொடர்ந்தான். "ஆட்டோ காரனே நொந்து போயிட்டான். இதிலே ரெண்டு பஸ் வேறே மிஸ் பண்ணிட்டோம். இதுமாதிரி இவள் பண்றது கணக்கு வழக்கில்லே. சமயத்திலே ஏண்டாப்பா வெளியிலே கிளம்பரோம்னு இருக்கு டாக்டர்.”

“அட பாவமே. உங்கள் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்”. டாக்டர் சூள் கொட்டினார்.

மீனா இடை மறித்தாள். “எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல டாக்டர். வெறும் மறதி தான்! அதுக்கே என்னை பைத்தியம்னு முடிவு பண்ணிட்டார் இவர். இங்கே மட்டும் என்ன வாழறதாம்? இவரைப் பற்றி வெளிலே சொல்ல முடியலே ! சொன்னா வெக்கக் கேடு?” . உதட்டை சுழித்தாள்.

“ரவிக்கு கூட ஏதாவது ப்ராப்ளம் இருக்கா என்ன? என்ன ரவி? ”

இப்போது மீனா முந்திக் கொண்டாள். “அதை ஏன் கேக்கறீங்க டாக்டர்? ஒரு மாசம் முன்னாடி, பேங்க் கீயை தொலைச்சுட்டு வந்து நிக்கறார். அவருக்கே அதை தொலைச்சது தெரியாது. சாவியை வங்கியிலேயே வெச்சுட்டு, வீட்டிலே வந்து தேடறார். நல்ல வேளை, இவரது கல்லீக் கையிலே சாவி கிடைச்சுது. வேறே யார் கையிலேயாவது சாவி கிடைச்சிருந்தா, இவருக்கு வேலையே கூட போயிருக்கும். இந்த லக்ஷனத்திலே இவர் பேச வந்துட்டார்.” பொரிந்து தள்ளினாள் மீனா.

டாக்டர் : “அடி சக்கை. சரியான போட்டி. ஆனால், எப்போவோ ஒருதடவை தொலைக்கறது, மறக்கறது , பெரிய விஷயமில்லையே மீனா.? ”

“நீங்க வேற டாக்டர்!. பத்து நாளைக்கு முன்னால், இவரோட ஸ்கூட்டர் சாவியை வீடு முழுக்க,தேடு தேடுன்னு தேடினார். வெச்சது வெச்ச இடத்திலே இல்லைன்னு என்னை வேற சத்தம் போட்டார். அப்புறம் ,அவருக்கே ஞாபகம் வந்து ஸ்கூட்டர்லே விட்டுட்டேன் போலிருக்குன்னு சொன்னார்.”

“சாவி கிடைச்சிதா?”

“இல்லையே! முதல்லே சாவியை தேடினார். இப்போ இவரது ஸ்கூட்டரையே தேடிக்கிட்டிருக்கிறார். !. எவனோ ஒரு பாக்கியசாலி, சாவியோட ஸ்கூட்டரை ஒட்டிண்டு போயிட்டான்”

“பரவாயில்லியே! உங்க ஜோடி பொருத்தம் நல்லா இருக்கே! ஜாடிக்கேத்த மூடிதான்!”

“இப்போ பஸ்லே தான் ஆபீஸ் போயிண்டிருக்கார்! இன்சூரன்ஸ் கிளைம் கேட்டு நடையா நடக்கிறார். இதிலே நான் மறதியாம்.”

“அட கஷ்ட காலமே!. ஆனால், இதிலேயும் ஒரு லாபம் இருக்கே! இப்போ ரவி ஸ்கூட்டர் சாவி தேடவேண்டாம்!”. டாக்டர் சிரித்தார்.

ரவி “டாக்டர்! சும்மா கோட்டா பண்ணாதிங்க! எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க!”

“சொல்றேன்! மீனாவோடது ஒரு குறை. இதை ஒ.சி.டி (அப்செசிவ் க்ம்ப்பல்சிவ் டிசார்டர்- OCD - Obsessive Compulsive Disorder) ன்னு சொல்வாங்க. தேவையில்லாத சந்தேகங்கள், மனக் குழப்பங்கள் மீண்டும் மீண்டும் தோன்றி ஒரே காரியத்தை செய்ய தூண்டினால், அது ஒ.சி.டி".

“நிஜமாவா டாக்டர், எனக்கு ஒ.சி.டி.யா?”

“அப்படித்தாம்மா தோணறது. சில டெஸ்ட் பண்ணி பாத்திடலாம். அப்புறமா, தேவைப் பட்டா , மருந்து கொடுக்கிறேன். கவலைப்படாதே! சீக்கிரம் குணப்படுத்திடலாம். ஓகே வா ? ஆனால், ரவி, பெரிய விஷயங்களையும் நீங்க மறந்து போறீங்க. மறந்து விட்டோம்கிற பிரக்ஞை கூட உங்களுக்கு இல்லை. அதனால், உங்க ப்ராப்ளம் கொஞ்சம் வித்தியாசம்!"

"அதெப்படி?"

"வீட்டிலே ஒரு பர்க்ளர் அலாரம் இருக்குன்னு வெச்சுக்கோங்க. திருடன் நுழையலன்னா கூட, சில அலாரம் தப்பா அடிக்கும். அது மாதிரி தான் உங்க மனைவி. அனாவசியமா பயந்துக்குவாங்க. அது ஒரு ரகம். ஆனால், சில அலாரம் திருடன் உள்ளே நுழைஞ்சா கூட, அடிக்காது. எனக்கென்ன வந்ததுன்னு கம்முன்னுட்டே இருக்கும் . அது மாதிரி நீங்க. புரியுதா? ரெண்டும் பிரச்னை தான்.”

“ஐயையோ! என்ன டாக்டர் பயமுறுத்தறீங்க? ”

“சும்மா தமாஷுக்கு சொன்னேன் ரவி, ஒண்ணும் டென்ஷன் ஆகாதீங்க. மறதிக்கு, உங்க வேலை பளு கூட காரணமாக இருக்கலாம். கொஞ்சம் பட படப்பை கொறைங்க. யோகா ட்ரை பண்ணுங்களேன். ஈசியா சரி பண்ணிடலாம்!”

மீனா “நம்பவே முடியலே டாக்டர்! எனக்கா ஒ.சி.டி. ? நல்லா செக் பண்ணிட்டு சொல்லுங்களேன்?”

“இது இதுதான் ஒ.சி.டி!. திருப்பி திருப்பி கேக்கறீங்களே இதுதான்! அந்த நோய்க்கு அடையாளம் ! ” டாக்டர் சிரித்தார்.

மீனா“ அப்போ டாக்டர், என்னோட ஒ.சி.டியை எப்படி சரி பண்றது?”

”ரொம்ப சுலபம் மீனா. உங்களுக்கு ஏதாவது மன உளைச்சல் இருந்தால், அதை முதல்லே குறைக்கணும் !. ரிலாக்ஸ்டாக இருக்க பழகுங்க . அப்புறம், நல்லா தூங்கணும். அதுக்கு சில மாத்திரை தரேன். இன்னொண்ணு மீனா! உங்க ஒ.சி.டி நினைப்பை ‘இது ஒரு பைத்தியக்காரத்தனம், மடத்தனம், அர்த்தமே இல்லை’ ன்னு ஒதுக்கணும்.”

மீனா “சே! எனக்கா ஒ.சி.டி.? நம்பவே முடியலே ! நிஜமாவா டாக்டர்? ”.

“ஆமாம்மா! கவலை படாதிங்க! சரி பண்ணிடலாம்!”

டாக்டர் தொடர்ந்தார் : “நீங்க என்ன பண்ணுங்க, எதுக்கும் ஒரு லிஸ்ட் போட்டு செக் பண்ணுங்க! கதவை பூட்டினவுடனே, “கதவை தாள் போட்டாச்சு” அப்படின்னு ஒரு தடவை மனசுக்குள்ளே சொல்லிக்கோங்க! ‘காஸ் அணைச்சாச்சு’ன்னு லிஸ்ட்லே டிக் பண்ணிக்கோங்க. கொஞ்ச நாளிலே எல்லாம் சரியாயிடும்.”

ரவி “அப்பாடா! ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்!”

டாக்டர் கை குலுக்கினார். “மீனா , ரவி , இப்போதைக்கு சில மாத்திரை எழுதி தரேன். சாப்பிடுங்க. ஒரு வாரம் கழிச்சி என்னை வந்து, மறக்காமல் பாருங்க. மீனாக்கு டெஸ்ட் எடுத்து பாக்கணும் !”

ரவி "சரி டாக்டர், தேங்க்ஸ். மீனா! வா போகலாம்"

மீனா : " என்னங்க! எனக்கா ஒ.சி.டி? என்ன பண்ணப் போறேன்னு தெரியலியே!"

ரவி : "அதெல்லாம் ஒண்ணுமில்லே ! கவலைப் படாதே!சரியாயிடும். இப்போ கிளம்பு! ".

வெளியே வந்து ஆட்டோவில் ஏறும்போது, மீனா கேட்டாள் “ என்னங்க டாக்டர் பீஸ்..? கொடுக்கலியே! மறந்துட்டீங்க போலிருக்கே ?”

“உஷ்! எனக்கு எல்லாம் தெரியும்! வாயை மூடிகிட்டு சைலண்டா வா!”

****


ஒரு மணி கழித்து ரவி மீண்டும் டாக்டர் அறையில்.

"டாக்டர், உள்ளே வரலாமா!”

"வாங்க! ரவி, நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்."

“இந்தாங்க டாக்டர் !உங்க பீஸ் கொடுக்க மறந்துட்டேன்! சாரி"

"அதனாலென்ன பரவாயில்லே.!”

"அப்புறம் டாக்டர், இங்கே எங்கேயோ, என் செல் போன் மறந்து வைச்சுட்டேன் போலிருக்கு!"

"அப்படியா.! ஓ ! சொல்ல மறந்திட்டேனோ? சாம்சங் கேலக்சி போன் தானே ! இதோ இருக்கு இந்தாங்க! சுவிட்ச் ஆன் பண்ணிக்கோங்க”

“தேங்க்ஸ்! டாக்டர்!”

*** முற்றும்

pavalamani pragasam
8th November 2014, 06:30 PM
ரொம்ப பாவம் இந்த ஜோடி! நல்லாயிருக்கு, முரளிதரன்!

Russellhni
8th November 2014, 08:11 PM
நன்றி பவளமணி பிரகாசம் :-)

Madhu Sree
10th November 2014, 07:56 PM
hahahahhaha super muralidharan... :)

aanaa
13th November 2014, 01:25 AM
நன்றாகவே உள்ளது.

அப்படியே...

வயதுபோன தம்பதிகள் அன்னியோன்யமாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
கணவன் மனைவியை எப்பொழுதுமே "டார்லிங் டார்லிங்" என்றுதான் வாஞ்சையோடு அழைப்பதுண்டு.

பத்திரிகையாளர் ஒரு நாள்பேட்டி காண வந்தார்
74 வயது ஆகியும் சந்தோஷமாக இன்னும் மனைவியை "டார்லிங் டார்லிங்" என்றே கூப்பிடுகிறீர்கள்.
அது எப்படி சாத்தியம் என்று வினவ
கணவனோ " 10 வருடங்களுக்கு முன்பே அவளது பெயர் மறந்து போய்விட்டது"
பெயரைக் கேட்கப் பயந்து
" டார்லிங்", அன்பே" என்று கூப்பிட்டு சமாளித்து வருகிறேன் என்றார் அந்த மறதிக் காரக் கிழம்.
:-)

Russellhni
19th November 2014, 07:05 AM
நன்றி மது ஸ்ரீ :-) நன்றி aanaa :D

AREGU
19th November 2014, 09:44 AM
டாக்டர் பாத்திரம், கலகலப்பாக பேசுகிறேன் பேர்வழி என்று எரிச்சல் மூட்டுகிறது. தங்கள் இன்னல்களைச் சொல்லவந்தோரிடம் இவ்வாறு ஏகடியம் செய்வது நல்ல மருத்துவருக்கு அழகல்ல..

எந்த ஒரு கதைக்கும், இறுதியில் இருக்கவேண்டிய ஒரு முத்தாய்ப்பு இக்கதையில் இல்லை. தனக்குத் தெரிந்த மருத்துவத் தகவல்களைச் சொல்லவிரும்பிய கதாசி`க்கு, பாராட்டுகள்..

Russellhni
19th November 2014, 11:55 AM
மிக்க நன்றி Aregu . நல்ல பின்னூட்டம் :-)