PDA

View Full Version : கோள்கள் என்ன செய்யும்?



chinnakkannan
6th September 2014, 03:49 PM
சென்ற வாரம் ஒரு நண்பர் கோளாறு பதிகத்தைச் சொல்லி அதற்கு சிறு உரையை என்னை எழுதச் சொன்னார்..போன வாரம் தொடங்கி நேற்றிரவு எழுதி முடித்தேன்..

அது இங்கே உங்களுக்காக

அன்புடன்
சின்னக் கண்ணன்

chinnakkannan
6th September 2014, 03:51 PM
கோளறு பதிகம் வந்த கதை..
**
சின்னக் கண்ணன்..
***

ஆதெள கீர்த்தனாரம்பத்திலே..

ஹாய்..செளக்கியமா இருக்கேளா..சரி சரி அப்படிப் பார்க்காதீங்கோ....இனிமேலும் அப்படி இருப்பேள்..சந்தேகப் படாதீங்கோ.!.

என்னவாக்கும் இன்னிக்கு.. கொஞ்சம் பின்னோக்கிக் கொஞ்சம் காலச்சக்கரத்தை வேகமாகவே சுழற்றி ஏழாம் நூற்றாண்டுக்குப் போய்ப் பார்த்தோமான்னா.. என்ன தெரியறது..

தமிழ் நாடு தான்..சீகாழி (அந்தக்காலத்துல சீகாழி..இந்தக் காலத்துல சீர்காழி)..அங்கே ஒரு அம்மா இருந்தாங்க (தமிழ் நாடாச்சே..முதல்ல அதான் சொல்லணும்) பெயர்..பகவதியம்மை..அவங்களோட கணவர் பெயர் சிவபாத இருதயர்..ஒரே பையன்..அதுவும் திருத்தோணி புரத்து ஈசனை வேண்டி, நல்ல பிள்ளை கொடுன்னுல்லாம் கேக்கலை..உன்னோட புகழ் பரப்ப எனக்கொரு பிள்ளை கொடுன்னு காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி உருகி உருகி வேண்டியதில் ஈசன் மனமகிழ்ந்து கொடுத்த பிள்ளை..

பிறந்தது ஒரு திருவாதிரைத் திரு நாள் சூரியன் முதலான கோள்கள் உச்சத்தில இருந்த நாள்..

சிவநெறி சிறப்ப தற்கும்
..சிந்தையுள் புகுவ தற்கும்
தவநெறி உலகத் தாற்கு
…தக்கவாய் பரப்பு தற்கும்
கவலையில் தோய்ந்த மாந்தர்
…களிப்புடனிருப்ப தற்கும்
இவனென இறைவன் தந்தான்
..இருளதும் மறைந்த தன்றோ..

இப்படிப் பிறந்த குழந்தைக்கு வைத்த பெயர் ஆளுடைய பிள்ளை.. சமர்த்தாய் ப் பிறந்ததும் அழுது அன்னையிடம் பாலுண்டு தூங்கி நடு ராத்திரி வீலென்று கத்திப் படுத்தி, தூக்கக்கலக்கத்தில் அப்பா தோளில் போட்டுக்கொண்டு தட் தட்டென்று தட்டி தூங்க வைத்த சற்று நாழிகையில் மறுபடி எழுந்து கத்தி, அம்மாவையும் எழுப்பி கொஞ்சம் உணவருந்தி தூங்குவது என மற்றக் குழந்தைகளைப் போலத் தான் இருந்தது..

அப்பா கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போகும்போதெல்லாம் அந்தச் சிறுகுழந்தைக்கு..பிறந்த சிலமாதங்களுக்குள்ளேயே கை கூப்பல் தெரிந்து விட்டது.. வளர்ந்த ஒரு வயதில் அம்மா அப்பா அரி என்று சொல்ல ஆரம்பிச்சுடுத்து..அப்பா செய்கிற பூஜைகள் எல்லாம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தது..

எங்கேயோ செய்திருக்கிறோமா என்ன என்று மனதில் தோன்றும் பொழுதில் அவை மறந்து சிறு குழந்தையாய் மறுபடி அழுகை வீல்..அப்பா அப்பா தா.. என மழலைப் பேச்சு..

நீரோட்டமாய்க் காலம் ஓடி இரண்டு வருடம் முடிந்து மூன்றாம் வருடத்தில் பிள்ளை என்று அப்பாவாலும் ‘நீ என் ஆளுடா, செல்ல ஆளு, பட்டு ஆளு என அம்மாவாலும் செல்லமாய்க் கொஞ்சப் படுகின்ற ஆளுடைய பிள்ளை ஒரு நாள் என்ன செய்தான்..
*

chinnakkannan
6th September 2014, 03:52 PM
*
அதிகாலை..கருக்கல் வேளை..கதிரவன் குணதிசை வந்தடைய இன்னும் கொஞ்சம் நாழிகை பாக்கி..

அப்பாவிற்குமுழிப்பு வந்தது..சரி கோவிலிற்குச் சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி ஈசனைத் தரிசித்து வரலாம் எனத் துண்டெடுத்துக் கிளம்ப …அப்பா அப்பா எனக் குரல்…

பார்த்தால் பிள்ளை..

சமத்தோல்லியோ தூங்குடா செல்லம்.. கோவிலுக்குப் போய் ஜோ குளிச்சுட்டு ஒம்மாச்சி சேவிச்சுட்டு வரேண்டா..

“ம்ம்..மாத்தேன் போ..” என்றான் பிள்ளை.. நானும் உன் கூட வர்றேன்..

அதான் சாயந்தரம் கோவிலுக்கு டாட்டா கூட்டிட்டுப் போறேனே நெதைக்கும்..இப்ப விடேண்டா..

ம்ஹீம் மாட்டேன் நானும் வருவேன்..

பார்த்தார் சிவபாதர்.. உள்ளே அகமுடையாளோ கொஞ்சம் அசதியோ என்னவோ தூங்கிக் கொண்டிருந்தாள்.. சரி வா..ஆனா அடம்லாம் பண்ணப் படாது – எனச் செல்லமாகக்கண்டித்து கோவிலுக்குக் கூட்டிச் சென்றார்..

திருத்தோணிபுரம் தான் சீகாழியாய் மருவியதா தெரியவில்லை..சில புத்தகங்களில் சீகாழி சட்ட நாதர் ஆலயம் என்று சொல்லியிருக்கிறார்கள்..

கோவிலுள் தெப்பக் குளம்.. பிரம்ம தீர்த்தம் என்று பெயர் அதில் சென்று நீராட வேண்டும்..பையனைக் கூட்டிச் செல்ல முடியாது. அகமர்ஷண மந்திரங்களை வைகறைப் பொழுதில் ஜபம் வேறு செய்ய வேண்டும். என்ன செய்யலாம்..

chinnakkannan
6th September 2014, 03:53 PM
. “இவனே.. சமர்த்தா இந்தக் குளக்கரையில் உட்கார்ந்துக்குவியாம்.. அப்பா இதோ குளிச்சுட்டு வருவேனாம்.. அது வரை இந்தா… இந்தப் புளியங்காய்களை வைத்து விளையாடிக்கொண்டிரு... அழாம இருப்பியோன்னோ…. தோ வந்துடறேன்..”

மூன்று வயதுப் பையனான அவனுக்கு முதலில் சரியெனப் பட்டது..

அப்பா டபக் டபக்கென படிக்கட்டி.ல் இறங்கி குளத்தில் இறங்குவதைப்பார்க்க ப் பரவசமாய் இருந்தது..

அப்பா முழுக்க இறங்கி முழுகுவதைச் சற்று நேரம் பார்த்தவன் சுற்றிலும் கொஞ்சம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.. பின் குளத்தைப் பார்த்தால்…ஓ..அப்பா காணோம்..

அப்பா அப்பா..

அவரோ குளத்தில் மூழ்கி கொஞ்சம் ஜபமும் செய்ய ஆரம்பித்ததால் எழவில்லை..

அப்பா அப்பா.. இந்த அப்பாவைக் காணோம்..ஆனா சும்மா இருக்கலாம்னு பார்த்தா எனக்குப் பசிக்குதே..அப்பா அப்பா..அம்மா…

கண்ணோரம் திடுமென வானில் புகும் மேகங்களைப் போல கருமை கொள, மழை பொலபொலவெனக் கண்களிலிருந்து பெய்ய ஆரம்பிக்க..

மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் பரமசிவன்.. பார்வதியிடம் சொன்னார்..என்ன சொன்னார்..

“அன்பே குழந்தை அழுகிறது..வாட்டர்பரீஸ்லாம் வேண்டாம்..கொஞ்சம் பாலமுதம் தருகிறாயா..”

அம்பாள் சிவன் சொல்லியா மறுக்கப் போகிறாள்..என்ன செய்தாள்..
.
வயிற்றின்மிகு பசியால்சிறு குழந்தையது அழவே
உயிரின்மிசை உணவேயென உணர்ந்தேசிவன் உமையை
தயங்காமலே அமுதைநிதம் தருவாயெனப் பணிக்க
ஜெயங்கள்மிக ஜெபமும்சொலி அமுதூட்டினாள் அழகாய்....

(

chinnakkannan
6th September 2014, 03:55 PM
உமையிடம் ஞானப்பால் பருகிய ஆளுடைய பிள்ளைக்கு என்ன ஆயிற்று..

கானகத்தில் காரிருளில் கலங்கிநின்ற புள்ளிமான்
…கடகடத்து வானகத்தில் கண்முன்வந்த மின்னலால்
ஆனபடி மரமருகே அன்னைமானும் நிற்கவும்
…அலறித்தாவிச் தஞ்சமென அடைந்ததுபோல் அங்குதான்
ஊன உடல் உளத்திடையே ஒளிந்திருந்த கருமையும்
.,..உணர்வுகளைப் பெருக்கவிட்டு ஓடியோடிச் சென்றிட
ஞானமனம் பெற்றவராய் நாவதிலே கலைமகள்
…நன்குவந்து குடியிருக்க விழியுமொளி கண்டதே..

சேக்கிழார் என்ன சொல்றார்..

எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில்பொற் கிண்ணம்அளித்(து)
அண்ணலைஅங்கு அழுகைதீர்த்து அங்கணனார் அருள்புரிந்தார்.

சிவஞான அமுதத்தை பொற்கிண்ணத்தில் எடுத்து குழந்தை ஆளுடைய பிள்ளைக்கு உமையமை அளித்தாள்ங்கறார்..

அப்புறம் இன்னமும் சொல்றார்..

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

அப்புறம் தான் ஆளுடைய பிள்ளை ஞான சம்பந்தரா மாறினார்ங்கறார் சேக்கிழார்....
ஆனா இது அவர் அப்பாக்குத் தெரியாதே..!

*
குளிச்சு முடிச்சுட்டு வந்து பார்க்கிறார் சிவபாதர்.. பையன் சமர்த்தான்னா ஒக்காந்துக்கிட்டிருக்கான்.. ஆனா என்ன இது..கிண்ணம்..பொன் போலத் தெரியறதே..கோவிலுக்குள்ள போய் எடுத்துக்கிட்டு வந்துட்டானா என்ன..வாயோரம் என்ன..

”பிள்ளை.. என்னடா..இது..இந்தக் கிண்ணம் ஏது.. உள்ள போய் யார்கிட்டயாவது எடுத்துக்கிட்டு வந்தயா..சொல்லுப்பா.. போய்க் கொடுத்துடலாம்..அது என்னடாப்பா அது..வாயோரம்..யார் ஒனக்கு என்ன கொடுத்தா..”

சிரித்தது ஞானம்..

ஆர்ப்பரித்து அலைபோலேக் கேட்கின்ற அப்பா
..அலைமகளே இன்னமுதப் பாலினையே தந்தாள்
கார்குழலும் விரிந்திருக்கக் கருணைவிழி அங்கே
..கணக்கிலாத மழைபோலே எனைசற்று நோக்கி
சேர்த்தெடுத்து மடிமீதே தான்வைத்தே அப்பா
..சோர்வினையும் போக்குவண்ணம் உணவினையே தந்தாள்
தேர்போலே ஓரிடத்தில் நின்றுவிட்ட அறிவும்
…தெளிந்தேதான் சிவபாதம் நாடுதப்பா இன்று..

பார்த்தார் சிவபாதர்.. நெக்குருகினார்.. பையன் பேசின பேச்சுல்லாம் அவருக்கு சந்தேகம் எல்லாம் வரலை.. ஏனெனில் வா தா போ எனப் பேசிய பிள்ளை.. இன்று விருத்தம்போலப் பேசிப் பார்க்கிறது..

chinnakkannan
6th September 2014, 03:57 PM
கண்ணா..சிவன் ஈசன்கறயே.. கொஞ்சம் சொல்லேன்ப்பா..”

ஞானப் பிள்ளை சிரித்தது.. இதோ உங்களுக்கும் உலகுக்கும் எனச் சொல்லிப் பாடியது..


தோடுடையசெவி யன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப் பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடைய பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


தோடணிந்த திருச்செவியாள் உமையம்மை இடத்திலே
..தொக்கிநிற்கும் முறுவலுடன் உடற்பாதி கொண்டவன்
வேடமென எருமையிலே வெண்பிறையாம் நெற்றியுள்
..வெண்மையான சாம்பலையே தரித்தபடி அமர்ந்தவன்
தேடலெனத் தாவித்தாவி அலைபாயும் நெஞ்சையே
…திதிக்கவைத்தே கவர்ந்துவிட்ட கள்வனவன் மேலுமே
நாடிவரும் அடியார்க்கு நன்மைசெயும் நாயகன்
..நாட்டிலுள்ள பிரமபுரக் கோவிலுள்ள ஈசனே

அழகிய வேலைப்பாடுகள் மிக்க காதணிகள் அணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை தனது இடது பாகத்தில் கொண்டவன்.

விடையெனச் சொல்லப் படும் எருதின் மேலேறி, தூய்மையிலேயே தலைசிறந்த தூய்மைகொண்ட வெண்மை நிறத்திலான பிறைச் சந்திரனை தனது சிரத்தின் முடியிலே சூடியவன்.. சுடுகாட்டில் விளைந்த சாம்பற்பொடிகளை உடலில் பூசிய அந்த ஈசன் என்னிடம் வந்தான்..என் நெஞத்தைக் கொள்ளையும் கொண்டான்

அழகிய சிவந்த மெல்லிதழ்க்ளை உடைய தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்மன் படைத்தல் தொழில் வேண்டி முன்னொரு காலத்தில் வழிபட, அவனுக்கு அருள் புரிந்தபெருமைக்குரிய பிரம்மபுரத்தில் இருக்கும் பெருமான் அவன்..

வேறு யார் பரமசிவனாகிய இவன் தானே!

*

கண்களில் நீர் ஆறாய்ப் பெருக்கெடுக்க பிள்ளையின் காலில் வீழ்ந்தார் தந்தை.. பிள்ளை திகைத்தது..மெல்லத் தோள் தொட்டு எழுப்பியது.. வியப்பாய்ப் பார்த்த தந்தையை.. “ நீ சேவிக்க வேண்டியது நானல்ல..உள்ளே இருக்கும் இறைவனாம் ஈசனையே” என ஜாடையிலேயே சொல்லி கோவிலுள் அழைத்துச் சென்றது..

அப்பாவுடன் கோவிலுக்குச் சென்ற ஞான சம்பந்தர் அங்கும் சிவனைப் பற்றி ப் பதிகம் பாடினார்..பின் சிவ நாமம் பரப்புதற்காக பல கோவில்கள் சென்று பதிகங்கள்பாடி இருந்த போதில் அப்பரைச் சந்தித்தார்...

*

chinnakkannan
6th September 2014, 03:58 PM
*
அப்பர் என அழைக்கப் பெற்ற திரு நாவுக்கரசரைப் பற்றி நிறையச் சொல்லலாம்..அவர் வரிகளில் முதலில் சொல்வோம்..

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமசி வாயமே..

*
அப்பர் எப்படிப் பட்டவர்

ஒப்பிலா மனத்தவர் உளத்துள் ளீசனை
வெப்பமே விட்டுதான் குளிர அமர்த்தியே
செப்பினார் பதிகமும் நாமும் பயனுற
அப்பரும் தந்தது அன்றே அருள்களே..
*
அப்பரும் ஞான சம்பந்தரும் திருமறைக்காட்டில் சென்று – அந்த ஈசன் கோவில் கொண்ட தலத்தின் கதவுகளை தாளிட அப்பர் கதறிப் பலவண்ணம் பாட பின் தான் அந்தக் கோவில் கதவு திறந்தது..

பின் ஞானசம்பந்தப் பிள்ளை சின்னதாய் முறுவலித்து ஒரே ஒரு பாடல் பாட படக்கென கதவும் மூடியது..

ஆனபடிப் பாடல்கள் பாடி னாலும்
. ஐயாவுன் நெஞ்சகத்தில் ஈரம் இல்லை
கானம்பல இயற்றியே கதறினாலும்
..கண்ணோரம் வழிந்தநீரும் காயும் வண்ணம்
வானத்திலே பார்த்திருந்தே சிரித்த மாயம்
…வண்ணமென நானறியேன் பித்தா கொஞ்சம்
பானகமாய் ஒருவார்த்தை சொல்லி டப்பா
…பாவிநானும் செய்தபிழை என்ன வென்றே..

என்றே அப்பர் தன்னுள் உருகினார்.. கண்மூடிக் கதறினார்.. இறையோ சிரித்தான்.. என்னுடன் வாய்மூர் என்னும் இடத்திற்கு வா.. எனக் கூட்டிச் சென்று அருள் பாலித்தான்..பின்னர் ஞானசம்பந்தப் பிள்ளையும் அங்கு சென்று அப்பருடன் இறைவனருள் பெற்றது ஒருகதை..

ஆனால் பத்துப் பாடல்கள் பாடிய பின் இறைவன் தாழ் திறந்த காரணமென்ன..அப்பரின் குரலினிமை கேட்க விரும்பினான் என்பர்..இதுவே ஒரு திரைப்படத்திலும் வந்திருக்கும். வெகு அழகாக..

அதன் பின் தான் பாண்டி நாட்டிலிருந்து ஞானசம்பந்தருக்கு அழைப்பு வந்தது..

chinnakkannan
6th September 2014, 03:59 PM
பாண்டிய நாடு அன்றைய சூழ் நிலையில் எப்படி இருந்தது..

பாண்டிய அரசனின் பெயர் கூன்பாண்டியன்..அவனது துணைவியார் பெயர் மங்கையர்க்கரசி..அரசனோ சமணமதத்தில் ஈடுபாடுகொண்டிருந்தான்..அந்தச் சமணர்களும் அரசனின் அறியாமையைப் பயன்படுத்தி தீச்செயல் புரிந்து வந்தனர்..

மங்கையர்க்கரசிக்கோ கவலை..அவள் வணங்குவது என்னாளும் ஈசனே.. அவள் தன் அமைச்சர் குலச்சிறையாரிடம் சொல்லி ஞானசம்பந்தரை அழைத்து தன் கணவனின் அஞ்ஞானத்தைப் போக்க ஆசைப்பட்டாள்..அமைச்சர் சில நபர்களை அழைத்து ஞானசம்பந்தரை அழைத்து வருமாறு சொல்ல அவர்களும் வந்து ஞானசம்பந்தரை பாண்டிய நாட்டுக்கு வரச் சொல்லினர்..

அப்பரும் அங்கு இருந்ததால் கொஞ்சம் அவருக்கு அதிர்ச்சி.. வானத்தைப் பார்த்தார்.. பின் பிள்ளையைப் பார்த்தார்..

“பிள்ளைவாள்”

“அப்பாரே..மன்னிக்க அப்பரே”

“இப்போது வானில் உள்ள கோள்களைப் பார்த்தால் கொஞ்சம் கிரக நிலைகள் சரியில்லாதது போலத் தோன்றுகிறதே..இப்போதுசெல்ல வேண்டாமே..அதுவும் அந்த சமண மதத்தில் இருப்பவர்கள் எல்லாம் பேட் பாய்ஸ் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்..”

“டோண்ட் வொர்ரி அப்பரே.. நாமெல்லாம் அந்த எல்லாம் வல்ல ஈசனின் அடியார்கள்

தினம்தினமும் சிற்றெறும்பு முதலான உயிர்களின்
…தேவையென அறிந்தவன் நமையெல்லாம் தெரிந்தவன்
கணப்பொழுதும் கண்ணினை காத்துநிற்கும் இமையென
..கணமுழுக்க நம்மையே காத்துநிற்கும் வல்லவன்
நிணமுடலாய்ப் பிறந்தநாம் நித்தம்செயும் பாவமும்
…நொடிப்பொழுதில் அகற்றியே ஆட்கொள்ளும் உமையரன்
உணர்வுகளில் உளத்தினில் ஊறிநிற்கும் ஈசனால்
…ஓடியோடி மாறுமே கோள்நிலைகள் யாவுமே..

ஸோ .. கவலைப் படாதீர்.. எனச் சொல்லி ஞானசம்பந்தப் பிள்ளை பாடிய பதிகம் தான் கோளாறு பதிகம்..

அதைப் பாடி முடித்து பாண்டிய நாடு சென்று கூன்பாண்டியனின் வெப்பு நோயைக் குணப்படுத்தி அவனையும் சிவனுக்கு அடியவனாய் ஆக்கினார் சம்பந்தர்..

எனில் அவர் அருளிய கோளாறு பதிகம் பற்றி இனிப் பார்ப்போமா..

******

chinnakkannan
6th September 2014, 04:01 PM
******

கோளாறு பதிகம்..

முதற்பாடல்

***

”ஹாய்”

“ஹாய் மனசாட்சி..எப்படி இருக்கே”

“நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீ தான் அப்பப்ப என்னை மறந்துடற..”

“ஏன் உனக்கு என்ன குறை..”

நேத்திக்கு யாரைப் பார்த்த..யாரோட பேசிக்கிட்டிருந்த..உன்னோட வொய்ஃபுக்குத்தெரியுமா..

நேத்திக்கா.. என்ன மனசாட்சி..உனக்குத்தெரியாதா.. எங்க மதுரைல பக்கத்துத் தெருல இருந்தாளே பத்மா மாமி அவங்க பொண் தான்.. சுகந்தியோ என்னவோ பேர்.. ஏய் அவங்க வயசானவங்கன்னா..ஆனா அழகாத்தான் இருந்தாங்க.. அப்படியே சின்ன வயசுல பார்த்த மாதிரி யானைத் துதிக்கை போலத் தோள்கள்..”

“இதானே வேணாங்கறது.. யானைத்துதிக்கைன்னு ஜெண்ட்ஸ்க்குன்னா சொல்வா.. பெண்கள்னா மூங்கில் தோள்கள்..அட.. வேயுறுக்காகவா இப்படிச் சொன்னே..”

“அதே.. மன்ச்சு.. வேயுறு அப்படின்னு ஆரம்பிக்கறார் ஞானசம்பந்தர்.. அதாவது மூங்கில் மாதிரி தோள்கள்..யாருக்கு.. லார்ட் சிவா இருக்காரோன்னோ அவரோட சம்சாரத்துக்கு..இளமூங்கில் மாதிரி ஒல்லியாகவும் மென்மையாகவும் அழகுடனும் கொண்ட தோள்கள்..”
“சரி..அப்புறம்..”
“இந்த தேவ அசுர யுத்தம் தெரியுமோ..ஒரு சுபயோக சுபதினத்தில தேவாஸ்க்கும் அசுராஸ்க்கும் சண்டை வந்தது.. அப்போ பாற்கடலைக் கடைந்தாங்க.. முதல்ல விஷம் அதுவும் எப்படி காத்துப் பட்டாலே உலகமே அழிஞ்சுடும்..அப்படிப் பட்ட ஆலகால விஷம்..அதை உலகத்தைக் காக்கறதுக்காக சிவன் என்ன பண்ணார்னா.. டபக்குன்னு ஃப்ரேக்ஃபாஸ்ட் பொங்கல் வடை சாம்பார் முழுங்கறாமாதிரி முழுங்கிடறார்..

பார்த்தாங்க மிஸஸ் உமாதேவி .. இந்தாளு இப்படி முழுங்கிட்டார்னா நம்ம பாடு என்ன ஆறது.. ஸோ சட்டுன்னு போய் சிவனோட கழுத்தைப் பிடிச்சு அந்த விஷத்தை நிறுத்திடறாங்க.. அது அவரது தொண்டைக் குழிக்குள்ளயெ தங்கிடுது.. எனில் அவர் விடமுண்ட கண்டன்” ஏன் சிரிக்கற மனசாட்சி..

“வீட்காரிங்க வீட்காரன் கழுத்தப் பிடிக்கறது அப்பவே ஆரம்பிச்சுடுத்தா..”

“ஷ்.. நான் தான் ஒரு ஃப்ளோல்ல சொல்லிக்கிட்டு வர்றேன்ல..அழகிய ஸ்ருதி சேர்க்கப்பட்ட நரம்புகள் கொண்ட வீணையோட இருக்கறார் ஈசன்.. அதுவுமெப்படி தலையில் பிறைச்சந்திரன்.. சந்திரன்னாலே அவனிடம் கொஞ்சம் களங்கம் இருக்கும்.. ஆனா அதே சந்திரனை எடுத்து ஈசன் தலையில் வைத்துக் கொண்டதால அந்தக் களங்கமும் மறைஞ்சுபோய்டுதாம்.. ஸோ மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்துங்கறார்..”

“அப்புறம் பார்த்தியா. கோள்னா ஒன்பதுல்ல நாம அஸ்ட்ரானமில்லல்லாம் படிச்சுருக்கோம்.. ஒன்னோட ஜாதகத்துல கூட ஒன்பது கட்ட்ம் இருக்குமே.. இங்க ஏழுல்ல இருக்கு..”

“ஸ்ட்ரெய்ட்டாப் பார்த்தா அப்படித்தான் தெரியும் வீக்டேஸ் வீக் எண்ட் எல்லாம் சேர்த்து ஏழு வருது அப்புறம் தான் பாம்பிரண்டும் கறாரே.. ராகு கேது.. “

“அப்புறம்”

” நன்னா அப்புறம் சொல்ற மன்ச்சு.. இந்தக் கோள்கள் எல்லாமே குட்திங்க்ஸாம்.. ஆசறு நல்ல நல்ல.. அவை எல்லாம் நல்லவங்கறப்ப நாமெல்லாம் யார்..சிவனுக்கு அடியவர்கள். சிவனடியார்கள்..அவர்களுக்கும் அவை நல்லதே செய்யும்கறார்..”

“இப்போ பாடலுக்கும் அர்த்தத்துக்குப் போவோமா”

***

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!


இளமூங்கில் குருத்தினைப் போலத் தோள்களை உடையவள் உமையன்னை. அவளுக்கு ஒருபாதியைக் கொடுத்திருப்பவர் நம் ஈசன்..
உலக நல்வாழ்விற்காக ஆலகால விஷத்தையே பொருட்படுத்தாமல் உண்டு, உமையம்மை தடுத்ததனால் அதைத் தொண்டையிலேயே நிறுத்தி அதனால் கறுத்த கண்டத்தை உடையவர் அவர்..

அழகிய நரம்புகளால் கட்டப்பட்டு சுருதி பிசகாமல் இன்னிசை ஒலிக்கும் வீணையைக் கையிலேந்தியிருக்கும் அவர் விருப்பப்பட்டு அந்தப் பிறைச்சந்திரனைத் தன் தலையில் அணிந்ததால் அந்தச் சந்திரனிடம் இருந்த க் குட்டிக் களங்கமும் போய் வெண்முத்தாய் பிரகாசிக்கிறான்.. கூடவே அவர் கங்கையையும் அணிந்தவர்..அப்படிப் பட்ட நம் ஈசன் என் உள்ளத்தில் புகுந்துவிட்டார்..

அதனால் என்ன ஆயிற்றா.. ஞாயிறு, திங்கள்,செவ்வாய், புதன் வியாழன் வெள்ளி, ராகு கேது என்ற ஒன்பது நல்ல கோள்களும் என்னைப்போன்ற அடியார்களுக்கு எப்போதும் நல்லவையே செய்யும்..


***

chinnakkannan
6th September 2014, 04:03 PM
***

இரண்டாம் பாடல்..

**

”நட்சத்திரங்கள் பத்தி உனக்குத் தெரியுமாடா..”

“ஓ.. தமன்னா, அனுஷ்கா, இஷாரா, ப்ரியா ஆனந்த்”

“ஏன் நாலே நாலு சொல்லியிருக்க..ஆம்பள ஸ்டார்லாம் உன் கண்ணுல படல்லியா..சரீஈ..ஏதோ அஞ்சலிதேவி, குமாரி கமலா, எஸ்.சரோஜான்னு ஒரு இடத்தில பேசிக்கிட்டு வேற இருந்தே..”

“ஸீ அது வேற க்ரூப்.. அங்க அதப் பத்தித் தான் பேச முடியும்..மன்ச்சு.. நீ நட்சத்திரத்தப் பத்தி எனக்குத் தெரியும்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரி கேக்கறதப் பத்தி எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறயா..”

“ஹே..ஏன் காம்ப்ளிகேட்டடா பேசறே.. தல சொல்ற மாதிரி மேக் இட் ஸிம்பிள் யா.. யெஸ்;; நட்சத்திரம்னு சொன்னது இருபத்து ஏழு நட்சத்திரங்கள்.. இதுல சில நட்சத்திரங்கள் ஆகாதுன்னு சொல்வாங்க..உனக்குத் தெரியுமா..”

“இந்தப் பாட்டப்படிக்கற வரைக்கும் எனக்குத் தெரியாது மனசாட்சி..அது என்னல்லாம் ஆகாத நட்சத்திரங்கள்..”

“ஒன்றொடு அப்படின்னா முதல் விண்மீன் அதாவது நட்சத்திரம் கிருத்திகை அதாவது கார்த்திகைன்னு இப்ப வழங்கறாங்க..அத்தோட கவுண்ட் பண்ணினா ஒன்பதொடு – ஒன்பதாவது நட்சத்திரம் –பூரம் அப்புறம் ஏழாவது நட்சத்திரம் ஆயில்யம், பதினெட்டாவது நட்சத்திரம் பூராடம், அந்தப் பூராடத்திலருந்து கவுண்ட் பண்ணினா ஆறாவதா வர நட்சத்திரம் பூரட்டாதி..
ஒரு சின்ன க்ளாரிபிகேஷன் சொல்லட்டா..இந்த நட்சத்திரங்கள் எல்லாம் ஆகாத நட்சத்திரங்கள்..அதாவது பயணத்திற்கு ஆகாத ட்ராவல் பண்றதுக்கு ஆகாத நட்சத்திரங்களாம்.. அஸெண்டிங் ஆர்ட்ர்ல போட்டுப் பார்ப்\போமா.. கார்த்திகை, பூரம், ஆயில்யம் பூராடம், பூரட்டாதி இந்த நட்சத்திரங்கள் வர்ற நாள்ல ட்ராவல் பண்ணாம இருக்கறது நல்லதுன்னு அந்தக் காலத்துல சொல்லியிருக்கா..இந்தக்காலத்துல யாரும் பார்க்கறதில்லை..”
“ம்ம்ம்”

“என்ன ம்ம்ம்.. ஓ உன்னை யாராவது எருமைமாடேன்னு திட்டினா சிரிச்சுடு..”

“ஏன் மன்ச்சு”

“ஏன்னா இந்த எருமைங்கற எருது இருக்கே தர்மத்தின் தோற்றமாம்..அந்த தர்மத்தின் தோற்றம் கொண்ட எருதின் மேலேறே ஏழையுடனேங்கறார்.. அது கொஞ்சம் காட்சிப்பிழை மாதிரி எழுத்துரு மறைஞ்சிருக்கு..”

“புரியலை..

:எருதின் மேலேறி ஏழையுடனேங்கறார் பிள்ளைவாள்.. ஏழையுடனேங்கறது இங்க உமையம்மை உமாதேவி மிஸ்ஸஸ் உமாதேவி பரமசிவனைக் குறிக்கிறது..”

“ஏன் பாஸ்போர்ட் ஏதாவது அப்ளை பண்ணியிருக்காங்களா. ஃபுல் நேம்லாம் சொல்ற..”

“ஷ்.. ஏந்திழைன்னா நங்கைன்னு அர்த்தம் ..அதான் மருவி ஏழைன்னு வந்துருக்கு.. சரி..வா.. போய் பாட்டுல என்ன சொல்றார்னு பார்ப்போம்..”


என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே!

எலும்பு, கொம்பு, ஆமையின் ஓடு போன்றவற்றை மார்பில் அணிந்து தர்மத்தின் திருவுருவான எருதின் மீது ஏறி, கூட உமையானவளும் ஏறிக்கொள்ள, கழுத்தில் பொன்போன்ற மகரந்தம் கொண்ட ஊமத்தம் மலர்களால் தொடுத்த மாலையையும் சிரத்தில் கங்கையையும் (புனல்) அணிந்த ஈசனானவர் என் உளத்தில் புகுந்தார்..

அதனால் என்ன ஆயிற்றா.பயணத்துக்கு ஆகாத நட்சத்திரங்கள் கார்த்திகை, பூரம், ஆயில்யம் பூராடம், பூரட்டாதி கொண்ட நாள்களூம் கூட ஈசனின் அடியார்களுக்கு அன்போடு அவை மிக நல்லவையாக இருக்கும்.. எந்த நாளிலும் இன்பம் சூழுமாம்..

// பரமாச்சார்யாளின் உரையில் இதே நட்சத்திரங்கள் ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, திருவாதிரை எனக் குறிப்பிடப் பட்டிருக்கின்றன..//

**

chinnakkannan
6th September 2014, 04:05 PM
**

மூன்றாம் பாடல்

**

“திருத்துறையூர், திருப்பந்தணை நல்லூர், திருஅச்சிறுபாக்கம் முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தலமரமாக கொன்றை விளங்குகிறது,,

நீள் சதுரமான கூட்டிலைகளையும் சரஞ்சரமாய்த் தொங்கும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூங்கொத்துகளையும் நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடைய இலையுதிர் மரமாகும். தமிழகமெங்கும் இயற்கையாக வளர்கிறது.

பட்டை, பூ, வேர், காய் ஆகியவை மருத்துவப் பயனுடையதாக விளங்குகிறது. இதில் சில மரங்களில் ஆரஞ்சு, இளம் சிவப்பு வண்ணங்களிலும் பூக்கள் பூக்குமாம்..பொட்டானிக்கல் பேர் என்னவென்று பார்த்தால் ஃபேபியேசியே என்பதாம்..”

“சரி..எதுக்கு திடீர்னு கொன்றை..ஆமா நீ பாட்டனில்ல சுமாராத் தானே மார்க் வாங்கினே”

“அதெல்லாம் இங்க எதுக்கு மனசாட்சி.. முருகலர் கொன்றைன்னுவருது.. அதனால பார்த்தேன்..முருகு அலர்னு பார்க்கணும் ..முருகுன்னா தேன் .. அலர் அலர்ந்த.. அதாவது தேன் நிறைந்து மலர்ந்திருந்த கொன்றைப்பூக்கள்.. அப்புறம் கலையதூர்தி- கலையையே வாகனமாகக் கொண்ட கலைமகள்னு அர்த்தம்.. மத்ததெல்லாம் சிம்ப்பிள் தான்..வா பாட்டுக்குள்ளயே போய்டலாம்..”

*

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

*

பவளத்தைப் போல சிவந்து ஜொலிக்கும் மேனிகொண்ட பரமசிவன், ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் திரு நீற்றினை அணிந்து, உமையோடு தனது வெள்ளை எருதின் மேல் தேன் நிறைந்த கொன்றை மலர்களால் தொடுத்த மாலையையும், சந்திரனையும் தனது தலையில் தரித்து என் உள்ளத்தினுள்ளே புகுந்துவிட்டான்

அதனால் செல்வத்திற்கு அதிபதியான திருமகள்,, கலையாகிய வித்தைகளையே வாகனமாகக் கலைமகள், .மலைமகள் உமையம்மை, நிலமகளாகிய பூமி, மற்றும் எண் திசைக்கும் உண்டான பல தெய்வங்கள் அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும் குணமுடையவை..அவை அடியார்களுக்கும் மிக நல்லனவையே செய்யும்..

chinnakkannan
6th September 2014, 04:07 PM
*

நான்காம் பாடல்..

*

“வேலாம் விழிகளது விண்ணோக்கிப் பார்த்ததுவோ
பாலாகப் பொங்கும் பிறை..

என்னடா பேச மாட்டேங்கற..”

“ஆமா.. நீ பாட்டுக்கு கேரள மக்கள் டீயோட சாப்பிடற ப்ரேக்ஃபாஸ்ட் பத்திச் சொன்னேன்னா நான் என்ன சொல்றது..”

“பாவி.. அவங்க சாப்பிடறது பொறை.. நான் இங்க சொன்னது பிறை..

அந்த இளநங்கை ஏதுக்கோ யோசிச்சு குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கிட்டிருந்தாளா..அப்போ மேலே வானைப் பார்க்கறா..அங்கேயோ பிறைச்சந்திரன்..அது இந்த ப்யூட்டி தன்னைத் தான் பார்க்கறான்னு சந்தோஷத்துல பூரிச்சுப் பொங்குது ..அப்படின்னும் வெச்சுக்கலாம்.. விழிகள் மேலே எதுக்கோ பார்க்கறபோது அந்த ப் பெண்ணீன் பிறை நெற்றி இன்னும் வெண்மை கொண்டதுன்னும் வெச்சுக்கலாம்..”

”ஓ.. நீ மதி நுதல்க்கு வர்றயா..”

“ஆமாம்..மதி சந்திரன்..இந்த இடத்தில பிறை பிறை நிலாவைப் போல வளைந்து பிறை நிலாவின் குணத்தைப் போல க் குளிர்ந்து ஒளிவீசும் நெற்றியையுடைய நங்கை..வேற யார் நம்ம மிஸ்ஸஸ் பரமசிவன் தான்..அப்படின்னு வருது இந்தப் பாட்டுல..அப்புறம் கொதியுறுகாலன் அப்படின்னா டபக்குன்னு கொஞ்சம் குளிர்காத்துல போய்ட்டு வந்தா ஜூரம் வந்துடுதுல்ல..”

“அப்படி இல்லாட்டியும் வருமே..”

“ஹேய்.. நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன். ஸோ உடலை வெப்பமடைய வைக்கிற காய்ச்சல் அப்படிங்கறா.ர்.. வா.. உள்ள போய்ப் பார்ப்போம்..

*

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே 4

*

பிறை நிலாவைப் போல வளைந்து, பிறை நிலாவின் குளிர்ச்சியைப் போலக் குளிர்ந்து ஒளிவீசும் நெற்றியை உடைய உமையவளுடன் தென் திசை நோக்கி வடதிசையில் அமர்ந்து தஷிணாமூர்த்திக்கோலத்தில் மறைப்பொருளாய் இருக்கும் ஞான நூல்களான வேதங்களை ஓதி அருள்கின்ற நமது பரமசிவன் கங்கை நதியுடன் கொன்றை மாலையும் முடியில் அணிந்து என் உள்ளத்தில் புகுந்தான்..

அதனால் உடலைச் சூடேற்றி வருந்த வைக்கும் காய்ச்சல் என்ற காலனும், உடலைச் சுடுகின்ற அக்னியும் (அங்கி) உயிரை எடுக்கும் தொழில் புரியும் எமனும் அவனுடைய தூதர்களான கொடுமையான நோய்கள் பலவும் சிவனடியார்களுக்கு அவை நல்லவை ஆகிவிடும்.. நற்குணங்களையும் அளித்து விடும்..

*

chinnakkannan
6th September 2014, 04:08 PM
*

ஐந்தாம் பாடல்

*

“நஞ்சினை அணியாய் நல்வழி இருத்தி
அஞ்சுதல் தவிர்த்தே அன்புடன் பரமன்
துஞ்சியென் உளத்தில் தூய்மையை நிறைக்க
விஞ்சியேத் துயரும் வேகமாய்ப் பறக்குமே”

“என்னடா..சந்த விருத்தமா..”

“தெரியலை மன்ச்சு..ட் ரை பண்ணினேன்.. ஆன்றோர் தான் சொல்லணும் சரியா என்னன்னு..

இந்த அவுணர்ங்கறவா அசுரர் தானே..”

“அப்ப்டித் தான் இந்தப் பாட்டுல வருது..கொன்றை மரமும் வன்னி மரமும் சிவாலயங்கள்ள தல மரமா இருப்பவை தெரியுமோ..

“உருமிடின்னா என்ன..அந்தக்காலத்திலெயே மிடில்லாம் இருக்கா என்ன..”

“மன்ச்சு..என்னோட சேர்ந்து நீயும் கெட்டுப் போயிட்டே.. உருமிடின்னா உறுமும் இடி.தட் தடார்னு மின்னலோட வானத்தில்ருந்து சத்தம் வருமோன்னோ.. சமயத்துல சிங்கம் உறுமறமாதிரி இருக்கும்..அந்தச் சத்தத்தை உறுமலுக்குக் கம்ப்பேர் பண்ணியிருக்கார் பிள்ளைவாள்..”

“ஓ..அப்படியா…சரி சரி ..ரத்தி அக்னிஹோத்ரியான்னு கேக்காத..பாட்டுக்குள்ள போலாம்”

*

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

“அதோ நீலகண்டன் சிரிப்பது தெரிகிறதா.. எதனால் நீலகண்டன் எனப் பெயர்..தேவாசுர யுத்தத்தில் சிரித்தபடி உலகைக் காக்க ஆலகால விஷத்தை உண்டவன்.. அந்த ஆலகால விஷத்தையே தனது கழுத்தில் அணிகலனாக வைத்துக் கொண்டவன்..
அப்படிப்பட்ட நீலகண்டன் அனைவரும் ஆழ்ந்து உறங்கும் இரவு நேரத்தில் சூழ்ந்திருக்கும் காரிருள் போலக் கருமையான அடர்த்தியான வன்னி மலர்களையும் கொன்றை மலர்களையும் தனது திருமுடி மீது அணிந்து எருது வாகனத்தில் தன் மனைவியாகிய உமையவளுடன் என் உள்ளத்தில் புகுந்தான்..

வேகமாகக் கோபம் கொண்டு துன்பம் பல தரும் அசுரர்களும், வானில் உறுமல் த்வனியுடன் கர்ஜிக்கும் இடி போன்றவையும், நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு போன்ற பஞ்ச பூதங்களும் கூட நம்மைக் கண்டு அஞ்சி நமக்கு நல்லனவையே செய்யும்.. பரமசிவனின் அடியவர்க்கு அவை நல்லனவையே செய்யும்..

*

chinnakkannan
6th September 2014, 04:09 PM
*
ஆறாம் பாடல்



அந்தக் காலத்திலேயே டாக்ஸ்லாம் இருந்திருக்குல்ல..”

“பின்ன.. கவர்ன்மெண்ட் எப்படி சர்வைவ் பண்ண முடியும்..ஆமா திடீர்னு என்ன கேள்வி..சரி புரிஞ்சுடுத்து..”

“ நீ கற்பூரம்டா மன்ச்சு.. சொல்லு அது என்ன வாள் வரி, தாடை வரி.. வாள் வரி ஓகே, தாடை வரின்னா கன்னத்துக்கெல்லாம் வரியாராவது போடுவாங்களா..அதுவே காதலியா இருந்துச்சுன்னா ஒரு குட்டி முத்தா கொடுக்கலாம்..”

“நீ அதுலேயே இரு..வாள் வரி+ அதள்+ அது + ஆடை.. அதள் நா புலித்தோல்.. வாளைப் போன்ற கூர்மையான வரிகளைக் கொண்ட புலித்தோலால் ஆன மேலாடைன்னு அர்த்தம்..

”” நீ சொல்றது மேலாடையா..இதானா மனசாட்சி..

வாலாட்டும் இளமையுடன் வஞ்சியவள் அங்கே
.வசப்படுத்தும் மென்முறுவல் விழிமின்னல் கூட்டி
கோலாட்டம் போடுகின்ற கூந்தலினைத் தள்ளி
…கொஞ்சுநடை விஞ்சிவர குறும்புடனே கொஞ்சம்
பாலாடை வட்டமுகம் பளபளக்கும் மேனி
…பார்த்தவர்கள் சொக்கிவிடும் பருவமெழில் ஆட
மேலாடை விகசித்தே மேல்மெருகைக் கூட்ட
…மெல்லியளாள் வந்துவிட மனமாடும் அன்றோ”

“பாவம் செய்தவனே.. மேலாடைக்கு ஒரு விருத்தமா..உன்னைக் கோளரி உழுவைய விட்டுத் தான் பயமுறுத்தணும்..”

‘ஹை.. கோளரி..கொடுமையே உருவான- உழுவை- புலியாக்கும்.. நல்லவேளை கேழல் அனுப்புவேன்னு சொல்லலை.. எனக்குக் காட்டுப் பன்றின்னா கொஞ்சம் பயம்..அழுக்கா இருக்கும்..அப்புறம் ஹமாம் சோப் போட்டு டென் ஸ்கின் ப்ராப்ளம்ஸ் வராம இருக்கக் குளிக்கணும்.. இருந்தாலும்.... இப்போ அந்த சிவன் என் நெஞ்சுள் இருக்கான் ஒண்ணும் செய்யாது.. சரி மன்ச்சு..சட்டுன்னு வா.. போய் பாட்டு என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்..”

**

வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

வாளைப் போன்ற கூர்மையான அதே சமயம் மிகப் பளபளப்பான வரிகளைக் கொண்ட புலித்தோலினால் செய்யப்பட்ட மேலாடையை அணிந்தவனும், வரிந்து கட்டப்பட்ட கோவணத்தை அணிபவனுமான சிவபெருமான் அன்றலர்ந்த தாமரை மலர்கள், வன்னி இலைகள், கொன்றை மலர்கள், கங்கை நதி ஆகியவற்றைத் திருமுடியில் சூடி தனது இனிய மனையாளான உமையுடன் என் உளத்தினில் புகுந்துவிட்டான்..

எனில் கொடுமையே உருவான கொல்லும் புலியும், மதங்கொண்ட யானையும், காட்டுப் பன்றியும், கொடுமையான விஷம் கொண்டு சீறுகின்ற நாகமும், கரடியும் ஆட்களைக் கொல்கின்ற சிங்கமும்.. ந்ல்லனவையே செய்யும்.. அவை சிவ பக்தர்களான சிவனடியார்க்ளுக்கு மிக நலலனவற்றைச் செய்யும்..

**

chinnakkannan
6th September 2014, 04:10 PM
**

ஏழாம் பாடல்..

**

“அப்புன்னா”

‘சென்னை பாஷைல்ல அடி..ஆங்கில்த்துல உயரம், தூக்கு, அப்புறம் உன்னோட ஃப்ரண்ட் பேரு அப்புச் செல்லப்பன், கமலோடபேரா ஒரு படத்துல வரும்..”

“உன்கிட்ட போய்க் கேட்டேன் பாரு..அப்புன்னா நீர்.. அப்புத் தலம் நு சொல்லப்பட்றது திருவானைக்காவல்ல உள்ள அகிலாண்டேஸ்வ்ரி கோவில்.
”அதோட வெப்புன்னும் வருதே..”

‘வெப்புன்னா ஜூரம்.. வெம்மையான ஜூரம்னு இங்க வரும்..வா..பாட்டுக்குள்ற போகலாம்..”

*

செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

இளமையான, செம்பினை ஒத்த நகில்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகப் பெற்றவன். ரிஷபம் எனப்படும் எருதின் மேல் அவளையும் அமர்த்தி அமர்ந்தவன்.. அழகிய இளமை கொண்டு சிரிக்கும் பிறைச்சந்திரனையும், இளமையாய்த் துள்ளி ஓடும் கங்கை நதியையும் தனது திருமுடிமேல் அணிந்தவன்..அப்படிப் பட்ட பரமன் என் உளத்தினுள்ளே புகுந்துவிட்டான்..

அதனால் என்ன ஆயிற்று.. வெம்மை தரக்கூடிய சுரமும், குளிரினால் வரக்கூடிய சுரமும், வாத நோய்களும், பித்த நோய்களும் – நான் செய்த முன்வினையால் எனக்கு வருவதாகில் – அவை வந்து என்னை நலிய வைக்காது.. என்னையும், என்போன்ற சிவனடியவர்க்கும் அவை நல்லதையே செய்யும்..

chinnakkannan
6th September 2014, 04:11 PM
*

எட்டாம் பாடல்..

*

மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்..

“அது சரி.. என்னடா சமர்த்தா இருக்கியேன்னு பார்த்தேன்..”

‘இல்லை மன்ச்சு.. இந்த மாறவேள் எனப்படுகின்ற மன்மதன் என்ன செய்தான்.. தவத்தைக் கெடுக்க கெக்கெக்கெக்னு மலரம்புகளைப் பாய்ச்சினான்..சிவன் என்ன பண்ணினார்.. ஏற்கெனவே கோபம் நெற்றிக் கண்ணைத் திறந்து கொய்ங்க்னு அழிச்சார் இல்லையா..அதை நினைச்சேன்..

ஆறாய்ப் பெருகிடும் காமத் தீயினை
அற்றே போக்கிய பரனவன்
வேறாய்ச் சாம்பலாய் வீழ்த்தி வேளவன்
வாழ்வைப் பொடியெனச் செய்தவன்
வாரா படுதுயர் வாகாய் உளத்தினில்
வைக்க அருளினைக் கொடுப்பவன்
நேராய் வாழ்வில் நெறிதரும் ஈசனை
நெற்றி தாள்பட போற்றுவோம்

:”என்னடா ஒழுங்கா வரலைன்னு நினைக்கறியா.. பரவால்லடா.. முதல் முயற்சி தானே..போகப் போக சரியா வரும்..”

‘தாங்க்ஸ் மன்ச்சு.. முன்னாடி வந்த பாட்டுல புலி பன்றி, சிங்கம் செய்யாதுன்னாருல்லயா..இந்தப் பாட்டுல கடல்வாழ் பிராணிகளும் ஒரு தீமையும் செய்ய மாட்டாங்கறார்.. வா..பாட்டுக்குள்ள போய்ப் பார்ப்போம்..”

*

வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே


*
அன்று மன்மதன் சாம்பலாவதற்கு நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான் தனது ரிஷபமாகிய எருது வாகனத்தில் உமையம்மையோடும் வான்மதியாம் பிறையையும், வன்னி இலைகள் கொன்றை மலர்களையும் சூடி என் உளத்தில் புகுந்தான்..

எனில் ஏழுகடல்களால் சூழப்பெற்ற அரணை உடைய இலங்கையின் அரசனான இராவணன் போன்ற அசுரர்களால் ஏற்படும் இடர்களும், ஆழ்கடலில் இருக்கின்ற ஆபத்தான உயிரினங்களால் ஏற்படும் இடர்களும் எனக்கு ஒன்றும் செய்யா.. நல்லனவே செய்யும்.. அதுவும் சிவனடியவர்களுக்கு மிக நல்லதையே செய்யும்..

*

chinnakkannan
6th September 2014, 04:12 PM
*
ஒன்பதாம் பாடல்.
*

ஒரு நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்..

”கண்டிப்ப்பா சினிமாப் பாட்டு தேவையாடா உனக்கு..”

“கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணத் தானே மனசாட்சி.. நல்லா இருக்கும்ல சிச்சுவேஷன்..அதுவும் அந்த ஹீரோயின் அந்தப் படத்துல நடிச்சிருந்தப்ப ஷீ வாஸ் இன் த ஃபேமிலி வேன்னு கேள்விப் பட்டிருக்கேன்..

“ரொம்ப முக்கியம்..சரி..சொல்லு”

நாடுதற்கு அன்னையவள் அழகுமுகம் நோக்கியே
..நல்லநல்ல சைகைசெய்து பார்த்திருந்த காலம்போய்
ஆடலுடன் பாடலுடன் பள்ளிசென்று பாடங்கள்
..அழகுறவே கற்பதற்கு மாணவனாய் இருந்ததும்
மாடத்திலே நின்றிருக்கும் மங்கையரின் விழிமலர்
…மனதினுள்ளே ஊடத்தான் மாற்றங்கண்ட காலம்போய்
வேடமிட்டு வேடமிட்டு வாழ்க்கைநதி சென்றிட
…விந்தைமனம் நொந்தபடி ஈசனையே நாடுதே..

“அது சரி.. இது எல்லாரும் வாழ்கிற வாழ்க்கை தானே..இதுல எதுக்கு நோகணும்..வா..இந்தப் பாட்டுல எனன் சொல்றார்னு பார்க்கலாம்

*
பல பல வேடமாகும் பரன் நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

பரமசிவன்.. எனையாளுகின்ற ஈசன்.. எப்படிப் பட்டவன்.. பலப்பல வேஷங்கள் அணிந்து பல்வேறு தோற்றங்களில் அடியாருக்கு அருள்புரிபவன்.. அவன் தனது ரிஷப வாகனத்தில் த்னது உடலின் பாதியான உமையன்னையையும் இருத்தி தலைமுடியில் நீர்மகளாகிய கங்கையையும் எருக்கம் பூக்களையும் அணிந்த்படி என் உளத்தினில் புகுந்து விட்டான்..

அஹோ பாரும்… அதனால் என்ன ஆயிற்று தெரியுமா.. அழகிய சிவந்த தாமரை மலரில் வீற்றிருப்பவனாகிய பிரம்மன், திருமால்,வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலத்தில் முடிவைக் கொடுக்கின்ற காலனும் அதைப் போன்ற பலவும் நல்லவையே செய்யும்..அதுவும் பரமனின் அடியவருக்கு மிக நல்லதைச் செய்யும்..

*

chinnakkannan
6th September 2014, 04:14 PM
*

பத்தாம் பாடல்..

*
“பூ வாசம் புறப்படும்பெண்ணே நீ பூவரைந்தால்..”

“சரி.. எனக்குக் கோபம் வருது தான்..ஆனா பரவால்லை..பிழைத்துப் போ.. நீ எதுக்காக இதைச் சொல்ற..”

“,மன்ச்சு டியர்..கோச்சுக்காதடா.. கொத்தலர்னு பாட்டு ஆரம்பிக்குது..அப்படின்னா என்ன அர்த்தம்..விடியற்காலையில கதிரவன் குணதிசை எழுந்திருக்கும் போது படக்கென மொட்டவிழ்ந்து அவனைப் பாத்து ஹாய் குட்மார்னிங்க்னு சொல்லும் நறுமலர்கள்.. அந்த நறுமலர்களை ஒருகொத்தாகத் தொடுத்து கெத்தாகக் கூந்தலிலே வைத்திருப்பவள் உமை என்கிறார் ஞான சம்பந்தர்..

சொத்து பலவெனச் சோர்விலாமல் நான் தருவேன்
கொத்துமலர்க் கூந்தலுக்குத் தான்..

அப்படின்னானாம் ஒரு அரசன் ரொம்ப நாள் முன்னாடி.. கொத்தலர் பூங்குழல்னு திருப்பாவையிலயும் வந்திருக்கு தெரியுமோ..

“ஓ தெரியுமே..குத்துவிளக்கெறிய பாட்டு தானே..சரி ஒரு விஷயம் சொல்லு..யாராக்கும் அந்த அரசன்..”

“மன்ச்சு..வா..வா..சமர்த்தோன்னோ கேள்வில்லாம் கேக்கப்படாது..வா.. பாட்டுக்குள்ள போலாம்..”
*

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
*
அந்தப் பரமசிவன் அழகிய இள மலர்க் கொத்துகளை கூந்தலில் அணிந்த உமையோடு ஒருகாலத்தில் வேடமிட்டு அர்ச்சுனனுக்கு அருளியவன்..கங்கை நீரையும் பிறை நிலவையும் பாம்பினையும் தனது திருமுடி மேல் அணிந்தவன்..அவன் என் உளத்தில் நிரந்தரமாகப் புகுந்து விட்டான்..

புத்தமதத்தைச் சேர்ந்தவர்களான பெளத்தர்களையும், சமணர்களையும் வாதங்களிடும் போரில் அவர்களது கர்வத்தை அழிக்கும் தன்மை அந்தப் பரமசிவனின் திரு நீற்றுக்கு உண்டு என நான் நம்புகின்றேன்..அத்தகைய திரு நீறு அந்த எதிர்ப்புகளைச் சமாளிக்கும்..சிவனடியவர்களுக்கு நல்லதையே செய்யும். மிக நல்லதைச் செய்யும்..

*

chinnakkannan
6th September 2014, 04:17 PM
*
பதினொன்றாம் பாடல் (முடிபு)

*

“நான் நன்றி சொல்வேன்..”

“சரி..ஏன் பாதிலேயே நிறுத்திட்ட என் கண்களுக்குன்னும் வெச்சுக்க வேண்டியது தானே..”

“இல்லை மன்ச்சு..இந்த நன்றி என் நண்பருக்கு. இதை எழுதத் தூண்டியவருக்கு..அவரை என்னிடம் சொல்லச் செய்தவன் பரமன் அவனுக்கு..

“ஸோ ஒட்டுக்க தாங்க்ஸ்ங்கற..:

:யா..

பாழ்மனமாய்ப் பரிதவித்துப் பலபாவம் செய்தவன்
..பகட்டுடனே பலவிதமாய் பரிகசித்து நின்றவன்
காழ்ப்புணர்ச்சி கோபமென பலவுணர்வு கொண்டுதான்
..கட்டவிழ்த்து நின்றவனைக் கொண்டழைத்த நண்பரும்
ஆழ்மனதில் ஆடியாடி உறங்கிநின்ற ஜோதியை
..அழகுடனே ஊக்குவித்து எழுதவைத்த மாண்பினை
கோள்பதிகம் பலவுரைத்த அடியவராம் பிள்ளைக்கும்..
..கொண்டிடுவேன் நன்றிகளை எந்தவெந்த நாளுமே..

:ஸோ இந்தப் பாட்டில என்ன சொல்றார் ஞான சம்பந்தர்.. இந்தக் கோளாறு பதிகம் படிச்சா ஏற்படற நன்மைகளைச் சொல்றாரா..”

“:ஆமாம் மனசாட்சி.. வா, போய்ப் பார்க்கலாம்..”

*

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

அடர்த்தியான தேனைக் கொண்ட அழகிய பல மலர்களை உடைய நந்தவனங்களைக் கொண்டதும் க்ரும்பும், செந்நெல் நிறைந்ததும் பொன்போல் ஒளிர்வதும், நான்முகனாகிய பிரம்மன் வழிபட்ட காரணத்தால்
பிரமா புரம் என்னும்பேர் பெற்றதுமான சீகாழி என்ற ஊரில் தோன்றி அபர ஞானம் பர ஞானம் ஆகிய இருவகை ஞானங்களையும் உணர்ந்த ஞான சம்பந்தனாகிய நான், தாமே வந்து சம்பவங்கள் உண்டு பண்ணும் நவக் கிரகங்கள், நாள் நட்சத்திரங்கள் போன்றவை அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இந்தப் பதிகத்தைப் படிப்பவர்களுக்கு என்ன ஆகும்..

என்ன ஆகுமென்றால் வானுலகில் அவர்களுக்கு இனிய மோட்சமும் அழகிய பதவியும் பெற்று அரசு புரிவர்.இது நமது ஆணை..

*

ஈசனடி போற்றி..

சிவமயமே என்றும் சிவமயமே.. நன்றி.

. வாசக் தோஷ ஷந்தவ்யஹ..

pavalamani pragasam
7th September 2014, 07:50 AM
பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாருக்கு! கோளறுபதிகமேயானாலும் கோளாறுதான் சின்னக்கண்ணன் கையில் சிக்கினா! கூடப்பிறந்த குசும்பு சும்மா இருக்க விடுமா? லயமும் நயமுமாய் தெளிவாய் எம்போன்ற பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளங்கும் இந்த நவீன கோனார் உரையின் பாணியும் தொனியும்
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

chinnakkannan
7th September 2014, 08:40 AM
அன்பின் பவளமணிக்கா.. மிக்க நன்றி..

uvausan
7th September 2014, 01:59 PM
அன்புள்ள ck - மிகவும் அருமையாக , எல்லோருக்கும் பயன் படும்படியாக , எளிமையான தமிழில் , உங்களுக்கே உரித்த நகைச்சுவை நடையுடன் , மிகவும் சிரத்தை எடுத்துகொண்டு தமிழ் விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் - இந்த கோளாறு பதிகத்தில் கிடைக்கும் அத்தனை புண்ணியமும் உங்களுக்கு கிடைக்க அந்த தோடுடைய செவியனை மனமார வேண்டுகிறேன் - உங்கள் சௌந்தரிய லஹரி யின் தமிழ் வடிவாகத்திர்க்கு பிறகு மிகவும் ரசித்த ஒன்று இது - 360 டிகிரி திறமை உள்ள ஒருவரை சந்திப்பது என் வாழ்க்கையில் இதுவே முதல் தடவை - இப்படியே நீங்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம் , லலிதா சஹஸ்ரநாமம் - இவைகளுக்கும் தமிழ் வடிவம் கொடுத்தால் எங்கள் எல்லோருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்

அன்புடன்
ரவி

chinnakkannan
7th September 2014, 02:10 PM
அன்புள்ள ரவி..வாங்க வாங்க செளக்கியமா..:) மிக்க நன்றி ரவி தங்களின் பாராட்டுக்கு.. கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கிறேன் நீங்கள் சொன்னதை..
அன்புடன்
சி.க..

aanaa
14th September 2014, 08:48 PM
>>>அழகிய வேலைப்பாடுகள் மிக்க காதணிகள் அணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை தனது இடது பாகத்தில் கொண்டவன்.

விடையெனச் சொல்லப் படும் எருதின் மேலேறி, தூய்மையிலேயே தலைசிறந்த தூய்மைகொண்ட வெண்மை நிறத்திலான பிறைச் சந்திரனை தனது சிரத்தின் முடியிலே சூடியவன்.. சுடுகாட்டில் விளைந்த சாம்பற்பொடிகளை உடலில் பூசிய அந்த ஈசன் என்னிடம் வந்தான்..என் நெஞத்தைக் கொள்ளையும் கொண்டான்

அழகிய சிவந்த மெல்லிதழ்க்ளை உடைய தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்மன் படைத்தல் தொழில் வேண்டி முன்னொரு காலத்தில் வழிபட, அவனுக்கு அருள் புரிந்தபெருமைக்குரிய பிரம்மபுரத்தில் இருக்கும் பெருமான் அவன்..

வேறு யார் பரமசிவனாகிய இவன் தானே!>>>


:clap:

chinnakkannan
14th September 2014, 10:00 PM
உங்கள் கைதட்டலுக்கு என் நன்றி.. அது ஞான சம்பந்தருக்குத் தான் செல்லவேண்டும்.. உங்கள்பெயர்.. ..? ஏனெனில் உங்களுக்கு என் நன்றி ஆனா.. என்றால் வாக்கியம் முழுமை பெறாதது போல் தோன்றுகிறது..:)

gkrishna
19th September 2014, 07:39 PM
இன்று கோளறு பதிகம் வாசித்து முடித்தேன் ஒரே மூச்சில்.
மிக அருமை என்று சொல்வது சம்ப்ரதாய வார்த்தை .
அற்புதம்
சீர்காழிக்கு அருகில் திருகோலக்கா என்ற ஊரில் தான் அம்மை ஓசை கொடுத்த நாயகி தன்னால் அமுதூட்டபட்ட அந்த காழியூர் ஞான சம்பந்தனுக்கு தாளம் கொடுத்த படலத்தை படித்து இருக்கிறேன் .தாளபுரீஸ்வரர் என்று இறைவனுக்கு திருநாமம்
திருத்தோணி புறம்,திருப்ரம்மபுரம்,காழியூர்,கழுமல வள நகர்,வேணுபுரம்,புகலி,வெங்குரு,சிரபுரம்,பூந்தராய்,ப ுறவம்,சண்பை என்றல்லாம் அழைகபடுகிறது சீர்காழி

chinnakkannan
19th September 2014, 09:52 PM
மிக்க நன்றி கிருஷ்ணா சார்..அடுத்த ட்ரிப் சீர்காழி போக எண்ணியிருக்கிறேன்..எல்லாம் அவனருள்..