PDA

View Full Version : Zee tamil Tv



R.Latha
28th August 2013, 12:22 PM
துர்கா எடுக்கும் துணிச்சலான முடிவு?

திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாமியார் தேவை தொடர், அடுத்தடுத்த திருப்புமுனைக் காட்சிகளில் வேகம் பிடிக்கிறது.

இளம் வயதில் மனைவியை இழந்த பணக்காரர் கங்காதரனுக்கு பிரேம்குமார், வசந்தகுமார், தீபக்குமார் என 3 மகன்கள். மூவருமே திருமணம்ஆனவர்கள்.

முதல் இரண்டு மகன்களும், மருமகள்களும் தனிக்குடித்தனம் போவ விரும்ப, மூன்றாவது மகன் தீபக்குமாரும் அவன்மனைவி மீராவும் மாமனாருடன் இருப்பதை விரும்புகின்றனர். முதல் இரு மகன்களின் முடிவால் குடும்பம் பிரிந்து விடுமோ என்று கங்காதரன் கலக்கம் கொள்ள– புத்திசாலியான இளைய மருமகள் மீரா குடும்பம் சிதறாமல் இருக்க கண்டிப்பான ஒரு மாமியார் தேவை என்ற முடிவுக்கு வருகிறாள். நேர்மையும்துடிப்பும் வேகமும் கொண்ட துர்கா என்னும் துணிச்சல் மிகுந்த பெண்ணை மாமனாருக்கு மனைவியாக– தங்களுக்கு மாமியாராக கொண்டு வருகிறாள்.

நடுத்தர வயதில் மூன்று மருமகள்களுக்கு மாமியாராக வந்த துர்கா– ஆரம்ப நாளில் இருந்தே அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்கிறாள். ‘ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சமையல் கிடையாது. ஒரே மாதிரி உணவு இருந்தால்தான் ஒரே மாதிரி உணர்வு இருக்கும். என்று தனித்தனி சமையலுக்கு தடை போடுகிறாள். மாமியார் உத்தரவால் குடும்பம் மொத்தமும் முணுமுணுக்க ஆரம்பிக்கிறது.

வாய்த்துடுக்கு கொண்ட இரண்டாவது மருமகள் கிரிஜா மாமியாராக வந்த துர்காவிடம் சண்டை போட்டுவிட்டு தன்தாய் வீட்டுக்குப் போகிறாள். கூடவே அவள் கணவனும் போகிறான். ‘புதிதாக வந்த துர்காவை விரட்டத் துப்பில்லாமல் என் கூடவே ஓடி வந்த நீங்க வேஸ்ட்’ என்று கணவனை வார்த்தைகளில் வறுத்தெடுக்கிறாள், கிரிஜா. இதனால் வேறு வழி இன்றி தங்கள் வீட்டுக்கே அவன் திரும்புகிறான்.

இதற்கிடையில் தொழில் போட்டி காரணமாக கங்காதரன், முனியன் என்ற ரவுடியின் பகையை சம்பாதித்து கொள்கிறார். கங்காதரனிடம் தொடர்ந்து தோற்ற முனியன், கங்காதரன் மகன் பிரேம்குமாரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கிறான்.

என் மனைவியை நான் பிரிந்து நிற்பதற்கும், என் அண்ணன் உயிருக்கு போராட்டமான சூழ்நிலையில் நிற்பதற்கும் புதிதாக வந்து நிற்கும் துர்காவே காரணம் என்று வசந்த் பழி சுமத்த, பயந்து போன அவன் அண்ணன் மனைவி நீலவேணி தனது மாங்கல்யம் நிலைக்க கோவிலில் தஞ்சம் புகுகிறாள்.

இதற்குப்பிறகு தன் மேல் விழுந்த பழிச்சொல்லை மாற்ற துர்கா துணிச்சலாக சில முடிவுகளை எடுக்கிறாள். அந்த முடிவால் பிரிந்து நிற்கும் கிரிஜா திரும்பவும் கணவன் உடன் இணைந்தாளா? மரணத்தின் விளிம்பில் இருக்கும் பிரேம்குமார் மீட்கப்பட்டானா? நீலவேணியின் மாங்கல்யம் தப்பித்ததா?

அடுத்துவரும் பரபரப்பு எபிசோடுகளில் இதற்கான விடை கிடைக்கும்.

தொடரின் நட்சத்திரங்கள்: சுபலேகா சுதாகர், அழகன் தமிழ்மணி, யுவராணி, குமரேசன், சுக்ரன், மகாலட்சுமி, சோனியா, வந்தனா, பத்மினி, விஸ்வநாத், ரவி, அழகு, ஜி.கே., மித்ரன், கலாதர். திரைக்கதை வசனம்: பாபா கென்னடி. ஒளிப்பதிவு: ராக்கு. பாடல்: பிறைசூடன். இசை: தினா. இணை தயாரிப்பு: துர்கா அழகன், தமிழ்மணி, போரூர் கே.எம். கண்ணன். தயாரிப்பு: தனுஷ் அஜய் கிருஷ்ணா, ஐஸ்வர்யா அஜய் கிருஷ்ணா.

இயக்கம்: சுலைமான் கே.பாபு.

Nandri. DailyThanthi

R.Latha
7th October 2013, 12:18 PM
புகுந்த வீடு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புகுந்த வீடு தொடர், நம்பிக்கைத் துரோகத்தை மையப்படுத்தி காட்சிகளில் வேகம் பிடிக்கும் தொடர்.

அனுஷாவின் அழகில் மயங்கிக் கிடந்த விசுவுக்கு பேரிடியாக அமைகிறது, அனுஷாவின் அண்ணன் ஜெயகுமார் செய்த காரியம். ஜெயகுமார் சிபாரிசு செய்த ஒரு மோசடிக் கும்பலுக்கு 15 கோடி ரூபாய் கடன் கொடுத்த பிறகே அவர்கள் மோசடிப் பேர்வழிகள் என்று அறிகிறான், விசு. அந்த அதிர்ச்சியில் நிலைகுலைந்து போகிறான். எதேச்சையாக தன் மகள் ஸ்வேதாவுடன் கோவிலுக்கு வரும் ராதா, விசு கோவிலில் அமர்ந்திருக்கும் நிலையைக் கண்டு பெரிதும் வருந்துகிறாள்.

இதற்கிடையே குடிபோதையில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கும் விசுவின் பையில் இருந்து வங்கியின் சாவிகளை ஜெயக்குமார் எடுக்கிறான். அதை காப்பி எடுத்தவன், பெரிய திட்டம் ஒன்றை தீட்டுகிறான். அதாவது ஜெயகுமாரை இந்த வழக்கில் மொத்தமாக மாட்டி வைத்து விட்டு தன் காதலியுடன் வடஇந்தியாவில் செட்டிலாகி விடுவது அவன் திட்டம்.

அவன் திட்டம் நிறைவேறியதா? விசுவின் வேலை, கவுரவம் காப்பாற்றப்படுமா? கேள்விகளுக்கான பரபரப்பான விடைகள், தொடரும் காட்சிகளில் கிடைக்கும்.
NANDRI. Daily Thanthi.

R.Latha
17th December 2013, 12:17 PM
மாமியார் தேவை–200

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘‘மாமியார் தேவை’’ தொடர் 200 எபிசோடை எட்டியிருக்கிறது.

இளம் வயதில் மனைவியை இழந்த தொழில் அதிபர் கங்காதரனுக்கு மூன்று மகன்கள். முதல் இரு மகன்களும் தங்கள் மனைவிகளின் தூண்டுதலின் பேரில் அப்பாவிடம் சொத்தை பிரித்துக் கேட்கின்றனர். அதனால் தவித்துப்போகும் கங்காதரன், மூன்றாவது மகன்–மருமகள் சொன்ன யோசனையின் பேரில் துர்கா என்ற துணிச்சல் மிக்க பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறார். முதல் இரண்டு மகன்கள் கோபத்தோடும், முதல் இரண்டு மருமகள்கள் கொந்தளிப்போடும் இருக்கும் வீட்டில் துர்கா மாமியாராக வருகிறாள்.

மாமியாராக வந்த வேகத்தில் வீட்டில் பலப்பல கட்டுப்பாடுகளை போடும் துர்காவை துரத்தவேண்டும் என்று நான்கு பேரும் என்னென்னவோ திட்டம் போட, எல்லாமே தோற்றுப்போகிறது. முதல் மருமகள் நீலவேணியின் கோபக்கார சித்தி நாராயணி, துர்காவை அவமானமாக பேச, கங்காதரன் அவளை ‘‘வீட்டில் நுழையக்கூடாது’’ என்று துரத்துகிறார். அதனால் அவமானம் அடைந்த நாராயணி கங்காதரனின் சித்தப்பாவை திருமணம் செய்துகொண்டு, அதிகாரமாக கங்காதரன் வீட்டில் நுழைகிறாள். துர்காவை வேண்டும் என்றே அவமானப்படுத்த ஆரம்பிக்கிறாள்.

இதற்கிடையே தொழில் போட்டி காரணமாக கங்காதரனுக்கு எதிரியாக வரும் முனியன் – கங்காதரனின் முதல் மகன் பிரேமை மிரட்டி, வீட்டை விட்டு பிரிக்கிறான்.

அடுத்ததாக இரண்டாவது மகன் வசந்த்தை அவனது மனைவி கிரிஜாவிடம் இருந்து பிரிக்கிறான்.

மூன்றாவது மகன் தீபக்கையும் முனியன் ஏதாவது செய்துவிடப்போகிறான் என்று கங்காதரன் அச்சப்படும் நேரத்தில், மீரா வயிற்றில் உருவான கருவால் தான் பலப்பல பிரச்சினைகள் வருகிறது என்று நாராயணி குத்தலாக பேசுகிறாள். அதனால் யாருக்கும் தெரியாமல் கர்ப்பத்தை கலைக்கும் முடிவுக்கு வருகிறாள் மீரா.

அதே நேரத்தில் கங்காதரன் தன் சொத்தை மூன்று மகன்களுக்கும் ஒரு திட்டத்தோடு பிரித்து தர நினைக்கிறார். நாராயணியோ, கங்காதரனின் வீடு தன் பெயருக்கு மாற வேண்டும் என்று காய் நகர்த்துகிறாள்.

குடும்ப நலனுக்காக மீரா தன் கருவை கலைத்தாளா?

கங்காதரன் வீட்டை பறிக்க நாராயணியால் முடிந்ததா?

திரைக்கதை, வசனம்: பாபா கென்னடி; ஒளிப்பதிவு: அன்பரசன்; இயக்கம்: சுலைமான் கே.பாபு. இணை தயாரிப்பு: துர்கா தமிழ்மணி, போரூர் கே.எம்.கண்ணன்; தயாரிப்பு: தனுஷ் அஜெய்கிருஷ்ணா, ஐஸ்வர்யா அஜெய்கிருஷ்ணா.

நட்சத்திரங்கள்: சுபலேகா சுதாகர், யுவராணி, மகாலட்சுமி, குமரேசன், சுக்ரன், சோனியா, விஸ்வநாத், வந்தனா, சூசன், ரவி, அழகு, பத்மினி, மித்ரன், ஜி.கே.கலாதர், கே.நட்ராஜ்.