View Full Version : சர்க்கரை.ஆஸ்கார்.சர்க்கரை
chinnakkannan
28th August 2012, 12:20 PM
சர்க்கரை.ஆஸ்கார்.சர்க்கரை
சின்னக் கண்ணன் (கே.ஆர்.அய்யங்கார் )
'சொல்வதைக் கேள் அர்ஜீனா. மரணம் என்பது என்ன ? மரணத்தின் தன்மை பற்றிச் சொல்கிறேன். மானிடர்களின் ஆன்மாவிற்கெல்லாம் மரணம் என்பது கிடையாது. அவை மறுபடிப் பிறப்பெடுக்கும். எனவே மேனியைக் கொல்வாய் ' என்று சொல்லிக் கொண்டே போன இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாசப் பெருமாளை இடைமறித்த சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜீனன், 'சார், கர்ணன் பாட்டைப் பற்றி ஜல்லியடிக்கறதை அப்புறம் வெச்சுக்கலாம். இப்போ நாம் வந்திருக்கிறது கொலையைப் பற்றி ஆராய்வதற்காக. அதை முதலில் பார்க்கலாம் ' என்றான்.
'சரி ' என்று விட்டு அறையை நோட்டமிட்டார் பெருமாள். அது ஒரு படுக்கை அறை. நடுவில் கட்டில் மெத்தை என இருக்க, வலது கோடியில் மேஜை. அதன் மேல் கண்ணித் திரை. அருகில் இருந்த நாற்காலியில் பாதி அமர்ந்து மேஜையில் சாய்ந்தவண்ணம் இருந்தது பெயர் நீக்கப் பட்ட அது. மேஜை மேல் ஒரு லெட்டர் பேட் விரிந்திருக்க, கணினியின் சி.பி.யூ கீழே அதன் அடியில் இருந்தது.
'இது இவராக இருந்த போது இதற்கு என்ன பெயர் அர்ஜீனா ' கேட்டார் பெருமாள்.
'கணேச மூர்த்தி '
'கணேச மூர்த்தி என்றதும் நான் படித்த நவீன கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
நான் யார்...
கணேச மூர்த்தி..
கணேச மூர்த்தி என்றால்...
மூர்த்திக்குள் இருக்கும் கணேசனா
கணேசனுக்குள் இருக்கும் மூர்த்தியா
புரிந்து கொண்டே புரியாமலும்
புரியாமலேயே புரிந்தும்
இருப்பது தான் நானா.... '
அர்ஜுனன் தலையைப் பிய்த்துக் கொண்டான். 'சார். வந்த வேலையைப் பார்ப்போமா. '
மேஜையைத் தாண்டி அதன் அருகில் ஒரு பீரோ இருந்தது. கண்ணாடி வைத்த பீரோ. அதில் தெரிந்த தனது ஐம்பது வயதுப் பிரதிபிம்பத்தைப் பார்த்தார் ஸ்ரீநிவாசப் பெருமாள். சற்றே சிவந்த முகம். அடர்த்தியாய் போலிக் கருமையுடன் இருந்த மீசை. எல்லாவற்றையும் அலசி ஆராய்ச்சி செய்வது போன்ற தோற்றமளிக்கும் கண்கள். அழகிய காக்கி உடை.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாசப் பெருமாள் பலப் பல வருடங்களுக்கு முன் உத்யோகத்தில் கான்ஸ்டபிளாகச் சேர்வதற்கு முன்னாலேயே தன் வீட்டின் கொல்லைப் பக்கத்தில் 'நீதி, நேர்மை, நியாயம், தர்மம் ' இவற்றை ஒரு மூட்டையில் கட்டிக் குழி தோண்டிப் புதைத்த பிறகே சேர்ந்தார். மற்ற சக அலுவலர்களெல்லாம் மேலதிகாரிகளுக்குக் குஞ்சுக் குஞ்சுக் காக்காய்கள் பிடிக்கும் போது இவர் ஒரு காக்கைப் பண்ணையையே பிடித்து வைத்தார். இப்படிச் சமர்த்தாய், புத்திசாலியாய் இருந்ததால் மஹாலஷ்மி தனது விழிகளைச் 'சோ ' முழியாக்கி அவரைப் பார்க்க, விரைவிலேயே பதவி உயர்வு பெற்று கொக்குப் பாக்கத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆக ஆனார். யாரிடமும் சென்று கையூட்டு, அன்பளிப்பு, பரிசு என்று கேட்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. எனவே அனைவரும் தாங்களாகவே அவருக்குப் போட்டி போட்டுக் கொண்டு கொடுத்தனர். அப்படிக் கொடுக்காதவர்களிடம் கொடுத்தவர்கள், 'யாருக்குய்யா நீ கொடுக்கறே. ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குத் தானே. உனக்கு நிறையப் புண்ணியம் கிடைக்கும் ' எனச் சொல்லிக் கொடுக்க வைத்தனர். இதன் பலனாக பெருமாளுக்கு கொக்குப் பாக்கத்தில் பெரிய பங்களா, சின்ன பங்களா என்றும், பலப் பல புனைப் பெயர்களில் கொழுத்த வங்கிக் கணக்குகளும் இருந்தன.
கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் தனக்குப் பின்னால் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜீனன் தெரிவதைக் கண்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜீனன் இளைஞன். அவனைப் பற்றிச் சொல்வதென்றால்:
பத்தாம் வகுப்பில் சிப்பிப் பீடி - பின்பு
ப்ளஸ்டூவில் நல்ல சிகரெட்;
கல்லூரி முழுதும் நல்ல குடி - என
வழக்கப் படுத்திக் கொண்ட அர்ஜீன் - எனலாம்.
அவ்வப்போது ஆதாமின் காதலியையும் அவன் சீண்டிவிட்டுக் கொண்டு இருந்தான். இதைப் பார்த்த அவன் தந்தை, எப்படியும் இவன் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தான் செல்வான்; அதற்கு முன் நாம் முந்திக் கொள்வோம் என நினைத்து சின்னதாய் இரு சூட்கேஸ்கள்; சில டஜன் அயல் நாட்டு மதுவகைப் புட்டிகள்; சில அயல் நாட்டு சிகரெட் சுருட்டுப் பெட்டிகள் போன்றவற்றை சில பலரிடம் கொடுத்து அவர்களது கை கால்களைப் பிடித்து அர்ஜீனை சப்-இன்ஸ்பெக்டர் வேலையில் சேர்த்து விட்டார். பயிற்சி முடிந்ததும் அர்ஜீனைக் கொக்குப் பாக்கத்திலேயே போட்டார்கள். அங்கு சேர்ந்த பிறகு தான், தான் செய்த காரியங்கள் எல்லாம் மிக அல்பமானவையே என்று புரிந்தது அர்ஜீனுக்கு. ஸ்ரீநிவாசப் பெருமாளின் திறமை,அனுபவம், பணம் இவற்றை எல்லாம் பார்த்து விட்டு அவரையே தனது ஆதர்ச புருஷராக நினைக்க ஆரம்பித்தான். அவர் எள் என்று சொன்னால் இவன் தினம் தோறும் இதயம் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தான்.
கண்ணாடியில் அர்ஜீன் மறுபடி 'சார் ' என பெருமாள் நகர்ந்த போது தான் கீழே அது அவர் பார்வையில் பட்டது. சடக்கென்று அதை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்.
chinnakkannan
28th August 2012, 12:21 PM
'என்ன சார் அது ? '
'ஷ். தடயம் '
'என் கிட்ட சொல்லப் படாதா ? '
'கடைசியில் தான் சொல்வேன் போ ' என்ற பெருமாள் மேஜைக்கு அருகில் சென்றார். மேஜை மேல் இருந்த லெட்டர் பேடில் ஏதோ எழுதி இருக்க படித்தார். ' என் கம்பெனிக்கு நேற்று சர்க்கரை, ஆஸ்கார்,சர்க்கரை வந்ததால்.... ' என எழுதிப் பாதியிலேயே முடிந்திருந்தது. மேஜையின் கீழ் பேனா விழுந்திருந்தது. கைக்குட்டையால் மூடி அதை எடுத்துக் கொண்டார் பெருமாள்.
'இந்த வீட்டில் வேறு யார் இருக்கிறார்கள் ? '
'வர்றச்சே ஒரு வேலைக்காரன் இருந்தான். வாசல்லயே நிக்கறான் சார் '
'அவனைக் கூப்பிடு '
உள்ளே நுழைந்த கைலி, பனியன் வேலைக்காரன், 'ஐயோ. எசமான இந்தக் கோலத்தில பாப்பேன்னு நினைக்கலீங்க '
'ஏன் இந்த டிரஸ்ஸீக்கு என்ன குறைச்சல் ? '
'ஐயோ. எசமான். உங்களைச் சொல்லலீங்க. உள்ள இருக்கற எசமானச் சொன்னேன் '
'உன் பேரென்ன ? '
'சுப்ரமண்யன் நந்தகோபன். கால் மி கோபு! '
'உன் எசமானுக்குச் சொந்தக்காரங்க... '
'எசமானியம்மா 4 வருஷத்துக்கு முன்னாடியே போய்ட்டாங்க. ஒரே ஒரு புள்ளை தான். ஆனா அது அவர் புள்ளை இல்லீங்க!. '
'என்னய்யா குழப்பறே ' என்று பெருமாள் கேட்டுக் கொண்டிருந்த போது வீட்டு வாசலில் ஒரு வெள்ளிச் சாம்பல் ஹையுண்டை சான்ட் ரோ நிற்க அதிலிருந்து ஒரு இளைஞன் இறங்கினான். கூடவே கருநீல மிடியும் வெளிர் நீல மேல்சட்டையும் அணிந்து குதிரைக்குளம்பை போல உயரமான செருப்புடன் ஒரு இளம் யுவதி இறங்கினாள். உள்ளே நுழையும் போதே கொஞ்சம் சத்தம் போட்டவாறு வந்தான்.
'கோபு. அப்பாக்கு என்ன ஆச்சு ? '
'அதோ அவரே வந்துட்டாருங்க. அவர் பெயர் ஷங்கர். அவர்கிட்டவே கேட்டுக்குங்க ' என்றான் கோபு.
உள்ளே நுழைந்து கணேச மூர்த்தியைப் பார்த்த ஷங்கர் 'கடவுளே ' என ஆங்கிலத்தில் சொல்லி நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். அவன் கண்களில் இருந்து வாலி வாலியாகக் ( எத்தனை காலம் தான் தாரை தாரையாக எனச் சொல்வது) கண்ணீர் வர ஆரம்பித்தது.
ஷங்கரை ஹாலில் அமர்த்திக் கேள்வி கேட்க ஆரம்பித்தார் பெருமாள்.
'ஷங்கர், நீங்க இவருக்கு.. '
'இன்ஸ்பெக்டர் நான் இவருக்கு மகன். ஆனா இவர் எனக்கு அப்பா இல்லை! '
'என்ன சார் சொல்றீங்க ? '
'சார். இவர் எனக்கு வளர்ப்பு அப்பா. அதாவது இவரது சொத்துக்களைப் பார்த்து நான் இவரை மானசீகமா அப்பாவா தத்தெடுத்துக்கிட்டேன். இவர் கூட நீ எனக்கு மகன் மாதிரின்னு அடிக்கடி சொல்வார் ' என்று சொல்லிக் கொண்டே இருந்த ஷங்கர் எழுந்து சோபாவின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த கருநீல மிடிப் பெண்ணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு 'அப்பா. போயிட்டாங்களா ' என அழ ஆரம்பித்தான்.
'ஷங்கர். அழறதா இருந்தா இங்கேயே அழுதிருக்கலாமே '
'இவ கிட்டே அழுதாத் தான் நான் விம்மிகிட்டே அழறேன்னு நினைப்பீங்க. ஏன்னா இவ பெயர் விம்மி என்ற விமலா '
'யார் இது '
'என் காதலி சார். சினிமா சான்ஸ் இவளுக்குக் கிடைச்சிருக்கு. பெயர்கூட லேட்டஸ்ட் டிரெண்ட்க்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டா.. காயத்ரி கல்யாண ராமன்! '
'நீங்க என்ன பண்றீங்க ? '
'ஏதோ ஏழைக்கேத்த மலிவு மது மாதிரி சின்னதா ஒரு சோமபானக் கடை வைச்சுருக்கேன். திலோத்தமா ஒயின்ஸ்! '
'என்ன.. எந்த ஏரியா.. '
'பக்கத்தில தான் சார். மரங்கொத்திப் பாக்கத்திலே! '
'அதானே பார்த்தேன்.. ஷங்கர் உங்களை அப்புறம் விசாரணை செய்கிறேன் ' என்று விட்டு அர்ஜீனைத் தனியாகக் கூப்பிட்டார் பெருமாள்.
chinnakkannan
28th August 2012, 12:22 PM
'துப்பறியும் நாவல்கள் படித்திருக்கிறாயா அர்ஜீன் ? '
'என்ன சார் இப்படிக் கேட்டுட்டாங்க. கருங்குயில் குன்றத்துக் கொலைல்ல ஆரம்பிச்சு, என் அப்பா அந்தக்காலத்திலே வாங்கி வச்சுருந்த மூணு பக்கமும் சிகப்புச் சாயம் பூசப்பட்ட 'குளியலறையில் குரூரக் கொலை, காபரே கன்னி, பேய்ச்சாமியாரும் பச்சிளங்குமரியும் 'னு எல்லாம் படிச்சுருக்கேன் சார். இந்தக் காலத்தில் நேரிடையா ஆங்கில ஒரிஜினல்களையே படிச்சுடறேன். ஏன் கேக்கறீங்க ? '
'இவ்வளவு படிச்சுருக்கயே. கொலை நடந்தா என்ன செய்யணும்னு தெரிய வேண்டாமா. ஃபாரென்ஸிக், ஆம்புலன்ஸுக்குப் கூப்பிட்டயா ? '
'ஓ சொல்லிட்டேனே. ஆம்புலன்ஸ் உடனடியா எப்போ வேணும்னாலும் வரும்.. ஃபாரென்ஸிக் பட்டாபி தான் வர்றதுக்குக் கொஞ்சம் நேரம் ஆகுமாம் '
'ஏனாம் ? '
'அவருக்கு ஊர்லேர்ந்து அவரது ஒண்ணுவிட்ட மாமா வந்திருக்காரம். ரேகை பார்க்கறவன் தானே நீ. என் கை ரேகைப் பார்த்துச் சொல்லுங்கறாராம்!. சமாளிச்சுட்டு வர்றேன்னு சொல்லியிருக்கார்.. அட இதோ
வந்துட்டாரே '
வழுக்கைத் தலை பட்டாபி உள்ளே நுழைய கூடவே ஆம்புலன்ஸும் ஆட்களும் உதிர்ந்து உள் செல்ல பெருமாளும் அர்ஜீனும் வெளியில் வந்தார்கள்.
பங்களாவின் எதிரே இருந்த பெட்டிக் கடையில் பெருமாள் 'பான் பராக் இருக்கா ? ' எனக் கேட்க கடைக்காரன் கை தன்னிச்சையாகக் கீழே சென்று சுதாரித்து 'இருக்கு சார். ஆனா உங்களுக்குக் கொடுக்கறதுக்கில்லை! '
'என்னப்பா சொல்றே '
'இல்லைன்னு சொன்னேன் சார் '
'சரி. ரெண்டு க்ளாஸிக் மைல்ட்ஸ் கொடு. எவ்வளவுப்பா ? '
சிகரெட்டைக் கொடுத்த பெட்டிக் கடைக்காரன், 'ஆறு ரூபாய் சார். ஆனா வேணாம் ' என்றான்.
'எப்படி வேணாம்னு சொல்லலாம் நீ. என் வீட்டுக்காரி எப்பப்ப சிகரெட் குடிக்கறேனோ அதே பைசா உண்டியல்ல போடணும்னு சொல்லியிருக்கா. ஆறு ரூபாய் கொடு! ' என பெ.கவிடம் வாங்கி பெருமாள் பையில் போட்டுக் கொண்ட போது தான் பாடகி ஹரிணி சிரிப்பது போன்ற ஒலி கேட்டது.
'செல்போன்ங்க ' என்ற பெ.க காதில் வைத்துக் கேட்டு 'உங்களுக்குத் தான் போன் ' என்று பெருமாளிடம் நீட்டினான்.
'என்னப்பா செல்லெல்லாம் வெச்சுருக்க ? '
'செல்போன் இருந்தா கல்லா எப்பவும் ஃபுல்லா ஆகும் -சமயத்தில் அதால கூட ' எனத் தனது சின்னக் கல்லாவைக் காட்டினான் பெ.க.
போனில் பட்டாபி. 'உடனே வா. பெருமாள். உன்னை ஒருத்தர் பார்க்கணும்னு சொல்றார் '
செல்லை பெட்டிக் கடைக்காரனிடம் கொடுத்து விட்டு பங்களாவினுள் பெருமாளும் அர்ஜீனும் நுழைந்த போது நரைத்த தலையும் வெள்ளைக்கோட்டும் அணிந்த அந்த நபர் எதிர்ப்பட்டார்.
'நீங்க டாக்டரா ? '
'நான் டாக்டர் இல்லை. கம்பெளண்டர். ஆனா கூடிய சீக்கிரம் டாக்டர் ஆயிடுவேன்! '
'சொல்லுங்க '
'நான் டாக்டர் சண்முக பாண்டியன் கிட்ட வேலை பார்க்கறேன். அவர் தான் கணேச மூர்த்தியைக் கொலைசெஞ்சுருக்கணும் '
'எப்படிச் சொல்றீங்க '
'எங்க டாக்டர் சண்முக பாண்டியன் இருக்காரே. அவர் ஒரு வெப்சைட் வெச்சுருந்தார்! '
'என்ன வெப்சைட். சொல்லுங்க சொல்லுங்க ' ஆர்வமாய்க் கேட்டான் அர்ஜீனன்.
'www.tamilbakhtheee.com. அதில எல்லாம் பல கோயில்களைப் பத்தியும் சில பல குட்டி சாமியார்களோட உபதேச மொழிகளையும் போட்டிருந்தார். குறிப்பாச் சொல்லணும்னா ஸ்வாமி குட்டியானந்தாவோட முட்டை மொழிகள் சொல்லலாம். 'முட்டைக்குள் குஞ்சு, குஞ்சுக்குள் முட்டை. மறுபடி முட்டைக்குள் குஞ்சு...இதுவே மறுசுழற்சி... இதுவே வாழ்க்கை..; முட்டையிடும் கோழிக்கு மட்டுமல்ல முட்டை போடும் ஆசிரியருக்கும் வலிதான்.. மாணவன் மக்காக இருக்கிறானே என்று; முட்டைக்கூடு உடைந்து வெந்தால் ஆம்லெட் - மனிதக்கூடு உடைந்து வெந்தால் சாம்பல்; இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம். பெய்ட் வெப்சைட்டா வச்சதுனால போணியே ஆகலை. அவர் நொந்து நூலா இருந்த போது தான் கணேச மூர்த்தி தன்னோட ஃப்ரெண்ட் கம் பார்ட்னர் ஆலிவரைக் கூட்டிக்கிட்டு வந்தார் '
'அப்புறம் ? '
'ஆலிவர் கை கொஞ்சம் வீங்கி இருந்தது. சண்முகம் அவரைச் சோதனை செய்து விட்டு ஏதோ கொசுக்கடின்னு சொல்லி மருந்து கொடுத்தார். அப்படியும் ஆலிவருக்குக் குணமாகலைங்கறதுனால வேறா டாக்டர் கிட்ட போய் செக் செய்தப்பத் தான் விஷயம் தெரிஞ்சது '
'என்னது '
'ஆலிவருக்கு கான்ஸர்னு! இப்படி ஒழுங்கா வைத்தியம் பார்க்கலைன்னு கணேச மூர்த்திக்கு டாக்டர் சண்முக பாண்டியன் மேல ஒரே கோபம். உன் பேர்ல கேஸ் போடறேன் பாருன்னு டாக்டர் கிட்ட ஏகப்பட்ட சத்தம் போட்டார். அவ்ர் ஏதாவது செஞ்சுடப் போறார்னு பயத்தில தான் டாக்டர் இதைச் செஞ்சுருக்கணும் '
'டாக்டர் உங்களுக்கு ஏதாவது தரணுமா ? '
'ஆமாம் சார் நாலுமாசச் சம்பளம் பாக்கி '
'சரி நீங்கள் போகலாம் ' என்ற பெருமாள் அர்ஜீனிடம் 'நாம இந்த கேஸ் பற்றி ஆழமா விசாரிக்கணும். எதற்கும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டைச் சீக்கிரம் வாங்கப் பாருங்கள் ' என்றார்.
*******************
chinnakkannan
28th August 2012, 12:22 PM
கொக்குப் பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் நகரின் மத்தியில் இருந்த பலதரப்பட்ட கடைகளின் நடுவே இருந்த வர்ணம் போன ஒரு ஆதிகாலத்துக் கட்டிடத்தில் சோர்வாக ஆனால் கன கம்பீரமாக நின்றிருந்தது. அதனுள் மாட்டப் பட்டிருந்த டல்ஹெளஸி அல்லது மெளண்ட்பேட்டன் காலத்துக் காற்றாடி 'கர்ரக் கர்ரக் ' எனக் குட்டித் தவளை போலக் கத்திக் கொண்டிருந்தது. அதன் கீழ் அமர்ந்திருந்த கமிஷனர் கந்தசாமிப் பிள்ளை மேஜை மேல் காகிதத்தில் வைக்கப் பட்டிருந்த வேகவைக்கப் பட்ட வேர்க்கடலையைச் சுவாரஸ்யமாக உடைத்து உடைத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தார். பூட்ஸின் ஒலி கேட்டு நிமிர்ந்து பார்த்தால் - இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாசப் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜீன். இருவரும் விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தனர்.
'என்ன பெருமாள். ஒரு தம்மாத் தூண்டு கேஸிக்காக என்னைக் கூப்பிடணுமா ? ' எரிச்சலுடன் கேட்டார் கந்தசாமி.
'இல்லை சார். வழக்கமா இந்த மாதிரி கேஸில் கமிஷனர் நேரிடையா பார்க்கறார்னு சொன்னா கேஸ்மேல மதிப்பு வரும். அது மட்டுமில்லை.. '
'வேற என்னய்யா '
' அந்த வியாபாரி கிட்ட நிலம் வாங்கறதப் பத்தி ஏதோ பேசணும்னீங்களே.. அதையும் முடிச்சுடலாம்னு... '
'சரி, சரி.. சத்தம் போட்டுப் பேசாதே. ' என்றார் கந்தசாமி.
'அர்ஜீன். இவர் தான் கமிஷனர் கந்தசாமிப் பிள்ளை ' என பெருமாள் சொல்ல பொசுக்கென அவர்காலில் விழுந்தான் அர்ஜீன்.. 'ஹேய். நான் அம்மா இல்லை... பிள்ளை '
'தெரியும் சார். கடவுளையே நேரில் பார்த்தவர் நீங்கள். உங்களைப் பார்த்ததில் எனக்குச் சந்தோஷம் '
'ச்..ச்.. அது புதுமைப் பித்தனோட கேரக்டர்ப்பா. நான் வேற ஆள்..பழமைப் பித்தன்..பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் பாட்டு கேட்டுருக்கியா.. '
'கேட்டுருக்கேன் சார் '
'பாரேன். அவன் தான் அழகா பாட்டு எழுதியிருக்கான். என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே.. நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே.. எவ்ளோ நல்லா இருக்கு.. இந்தக் காலத்தில என்னடான்னா ஃபேக்ஸீல நிலாவை அனுப்பறாங்க '
'ஆமாம் சார். நீங்க சொல்றது தான் கரெக்ட். நீங்க சொல்றதெல்லாம் கரெக்டாத் தான் இருக்கணும் ' என்றான் அர்ஜீன்.
'பார்த்து.. பெருமாள்..இவன் உன்னையே மிஞ்சிடப் போறான் ' என்ற கந்தசாமி 'கேஸ் என்ன ஆச்சு ? '
'ஓரளவுக்கு முடிஞ்சுடுத்து. சார். கேஸ்ல சம்பந்தப் பட்டவங்க எல்லாரையும் கூப்பிட்டு வந்திருக்கேன் ' என்று பெருமாள் ஜாடை காட்டியதும் சங்கர், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் டாக்டர் சண்முக பாண்டியன், கணேச மூர்த்தியின் பார்ட்னர் ஆலிவர்,விமலா, கோபு, கம்பவுண்டர் என ஒருவர் பின் ஒருவராக நுழைந்து அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.
'இத்தனூண்டு கேஸ்ல இவ்ளோ பேரா. உருப்பட மாட்டே நீ. பெருமாள் சீக்கிரம் முடி. நான் போய் கம்பராமாயணம் வேற படிக்கணும் '
'எதுக்கு சார் '
'ஆறு மாசத்தில் ரிட்டயர் ஆறேன்ல. உபன்யாசம் பண்ணப் போறேன். வீட்டுக்கு எதிர்ல உள்ள கோயில்ல கூட புக் பண்ணிட்டாங்க. சரி நீ ஆரம்பி ' என்றார் கந்தசாமி.
தொண்டையைச் செருமிக்கொண்டு ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாசப் பெருமாள்.
'வழக்கமா இந்தக் கேஸை 50,60 பக்கத்துக்கு இழுத்திருக்கலாம். ஆனா நான் சுருக்க முடிச்சுட்டேன். ஏன்னாக்க... நான் இன்னும் பிரபலம் ஆகலை! '
'சீக்கிரம் சொல்லித் தொலையேன்யா ' - கந்தசாமி.
chinnakkannan
28th August 2012, 12:23 PM
பெருமாள் தொடர்ந்தார்: 'இறந்தவர் பெயர் கணேச மூர்த்தி. அவர் தன்னுடைய லெட்டர் பேடில் 'நேற்று என் கம்பெனிக்கு சர்க்கரை.ஆஸ்கார்.சர்க்கரை வந்ததால்... ' என்று எழுத ஆரம்பித்து முடிக்காமலேயே போய்விட்டார். அதற்கு அர்த்தம் என்னவாக இருக்கும் ' என மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்ததில் சடாரென குழல் விளக்கு எரிந்தது.
போன வாரம் எனக்கு வேண்டிய ஒரு நபருக்கு வெளிநாட்டுக்கு ரிசர்வ் செய்வதற்காக டிராவல் ஏஜென்ஸிக்குச் சென்றிருந்தேன். அங்கு பெயரை - ஆங்கில எழுத்தை t as in tom; d as in delta என்று சொல்லச் சொன்னார்கள். அது போலவே இருக்குமோ. சர்க்கரை.ஆஸ்கார்.சர்க்கரை என்றால் சுகர்.ஆஸ்கார்.சுகர். எஸ்.ஓ.எஸ் என்றால் என்னவாக இருக்கும் ?
சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜீனைக் கேட்ட போது தாவிக் குதித்தான். 'சார். எஸ்.ஓ.எஸ் னா ஆபத்துன்னு அர்த்தம். வாண்டுமாமா எழுதிய 'சிலையைத் தேடி ' படக்கதைல வரும் படிச்சுருக்கேன். ' என்றான். அவன் சொல்வதை நான் எப்படி முழுமையாக எடுத்துக் கொள்ள முடியும். என் கெளரவம் என்னாகிறது. எனவே மறுபடி யோசித்தேன்.
எஸ்- என்றால் ஷங்கர். ஓ- என்றால் ஆலிவர். எஸ்- என்றால் டாக்டர் சண்முகப் பாண்டியன். ஏன் இவர்கள் மூவரும் சேர்ந்து கொலை செய்திருக்கக் கூடாது ?
'சார். விம்மி மேல சத்தியமா நான் சொல்றேன். நான் கொல்லலை ' என்றான் ஷங்கர். விம்மி முறைத்தாள். 'என் பேர்ல எதுக்குய்யா சத்தியம் பண்றே. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா ? '
'ஐயோ விம்மி.. நீயுமா இதை நம்பறே '
'பின்ன நம்பாம என்ன செய்யறது. எனிவே, எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை உண்டு. தமிழ் சினிமா ஹீரோயின் மாதிரி ஒரு ரெளடியையோ, ஒரு கொலைகாரனையோ காதலிக்கணும்னு. தாங்க் யூ ஷங்கர். உனக்காக நான் காலமெல்லாம் காத்திருக்கல்லாம் மாட்டேன். அடுத்த மாசமே என் அத்தைப் பையனைக் கட்டிக்கறேன்! '
'அடிப்பாவி '
'ஷ் ' அதட்டினார் பெருமாள். தொடர்ந்தார். 'இப்படி சந்தேகம் வந்ததும் கணேச மூர்த்தி இறந்த நேரத்தில இவங்க மூன்று பேரும் எங்க இருந்தாங்கன்னு விசாரிச்சேன். இவங்களும் எக்கச்சக்கமா துப்பறியும் நாவல்கள் படிச்சுருப்பாங்க போல. ஒவ்வொருத்தரும் ஸ்ட் ராங்கா அலிபி வெச்சுருந்தாங்க. ஆக இவங்க இல்லைன்னு ஆச்சு.
மறுபடியும் எஸ்.ஓ.எஸ் னா ஆபத்துங்கற அளவில் எடுத்துக் கொண்டு கணேச மூர்த்தியோட கம்பெனி மேனேஜரை விசாரித்தேன். சில உண்மைகள் தெரிந்தன. அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துடுச்சு. அதுலருந்து ஒண்ணு தெளிவாத் தெரிஞ்சுது '
'என்னது '
'கணேச மூர்த்தி கொலை செய்யப் படலை. அவரோட கம்பெனி முழுகற நிலையில் இருந்ததால தற்கொலை செய்ய முயற்சித்திருக்கார். நான் அவரோட மேஜைக்கடில இருந்து எடுத்த இந்த மாத்திரைக் கவரே சாட்சி. தூக்க மாத்திரை நிறையச் சாப்பிட்டு விட்டு லெட்டர் எழுத உட்கார்ந்திருக்கார். பாதிலெட்டர் எழுதறச்சே மாஸிவ் ஹார்ட் அட்டாக் வந்து போயிட்டார் மனுஷர். இதைத் தான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது ' என முடித்தார் பெருமாள்.
மற்ற அனைவரும் பெருமூச்சு விட்டனர். கமிஷனர் எழுந்து 'வெல்டன் பெருமாள். யூ ஹேவ் டன் எ வொண்டர் ஃபுல் ஜாப் ' என்றார்.
'சார், இந்தக் கேஸ்ல நான் ஒண்ணுமே செய்யலையே! '
'கேஸைச் சொல்லலைப்பா.. நீ வாங்கி வெச்சுருந்த வேர்க்கடலையைச் சொன்னேன்! செம டேஸ்ட்டா இருந்தது. '
கமிஷனரையும் மற்றவரையும் அனுப்பி விட்டு அர்ஜீனை ஜீப்பை எடுக்கச் சொல்லி வீடு நோக்கிச் செலுத்தும் போது பெருமாள் சொன்னார்.
'ஒண்ணு மட்டும் புரியவே இல்லை அர்ஜீனா. கம்பெனிக்கு ஆபத்துன்னு நேரா எழுதியிருக்கலாம்லே. ஏன் சர்க்கரை.ஆஸ்கார்.சர்க்கரைன்னு கணேச மூர்த்தி எழுதினார் ? '
'புரியலையா சார். எனக்கு நல்லாப் புரியுது '
' 'சொல்லேன் '
தேரோட்டிக் கொண்டிருந்த (மன்னிக்க) ஜீப்போட்டிக் கொண்டிருந்த அர்ஜீனன் பகவானைத் திரும்பிப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு சொன்னான்:
'இல்லைன்னா இந்தக் கதையே வந்திருக்காதே சார்! '
*************************************
(முற்றும்)
pavalamani pragasam
28th August 2012, 05:46 PM
வைரம் பட்டை தீட்டப்படுமுன் முயன்றதோ?:roll:
Madhu Sree
29th August 2012, 08:49 PM
Enakku idhu suththamaa pudikkala CK :oops: logic-ey illaadha vasanangal... PPmaa sollra maadhiri buddingla ezhudhinadhaa...
After reading your sankaran kadhai, We have lots of expectations in you... :D
Next time unga kitta irundhu oru super kadhaiya edhirpaarthittirukken... :D
Hope you didnt misunderstand my comment... :bow:
chinnakkannan
29th August 2012, 09:12 PM
கண்டிப்பா எம் எஸ், பிபி மேடம்...
இதுவும் கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கும் போது டைட்டில் கொடுத்து எழுதப் பட்ட கதை..ஒரே நாளில்..
rajeshkrv
30th August 2012, 09:11 PM
CK we have lot of expectations from you.
madhu
5th September 2012, 07:12 PM
புதுக்கவிதையில் ஆரம்பித்தும் கதை கொஞ்சம் பழைய பாணியிலேயே இருப்பதால்தான் PP akkaவுக்கு நீங்க பட்டை அடிக்கும் முன் எழுதிய கதை என்று சந்தேகம் வந்து விட்டது. எனக்கு கதை ஓகே. ஆனால் அவசரமாக எழுதியது என்பது அங்கங்கே தெரிகிறது. கொக்கு, மரங்கொத்தி என்று இடங்களுக்கு பெயர் வச்சு பறக்கப் பார்த்தாலும் மயில் பாக்கம் என்று வைக்காமல் போனதால் மயிலம்மாவுக்கு வருத்தம்தான்.
ஆனா எனக்கு இன்னமும் புரியலை வெல்லம் கிராம்மி வெல்லம் !
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.