chinnakkannan
26th August 2012, 06:59 PM
(முன்பு திண்ணையில் கே.ஆர். ஐயங்கார் என்ற பெயரில் எழுதிய கதை இது)
பூனை வளர்த்த வரதராஜன் கதை
சின்னக் கண்ணன்
சிற்சில சமயங்களில் சென்னை துரைசாமி பாலத்தின் முடிவில் இரு எருமை அல்லது பசு மாடுகள் நின்று கொண்டு சுற்றுச்சூழல் பற்றிப் பொருட்படுத்தாமல்,யாரைப் பற்றியும் அக்கறையில்லாமல் 'கன்னத்தில் முத்தமிட்டால் ' சிம்ரனின் கன்னத்தையோ அல்லது ஆங்கிலமோகங் கொண்டு தமிழ்ப்பற்றையும் விடாமல் 'மித்ர எனது நண்பன் ' போன்ற திரைப்படச் சுவரொட்டிகளையோ சட்னி சாம்பார் தொட்டுக் கொள்ளாமல் தின்று கொண்டிருக்கும். அவைகளுக்கு நெரிசலில் சிக்கித் தவிக்கும் அம்பாஸடர்,ஸாண் ட் ரோ, ஹோண்டா சிவிக் பற்றிக் கவலை கிடையாது. அவரவர் வசதிக்கேற்ப ஹோண்டா,கினடிக் ஹோண்டா,யமஹா,ஆட்டோ,பஸ் என்று செல்பவர்களையோ, அந்த வாகனங்களால் எழும்பும் புகையினால் காற்று பாழ்படுவதையோ நினைக்காமல் அவைபாட்டுக்கு வயிறு நிரம்புவதையே குறியாகக் கொண்டிருக்கும்.
அவைகளைப் போலவே அந்த வாலிபனும் அன்று அசோக் நகரில் அந்த சிறிய என்றும் சொல்ல முடியாத,பெரிய என்றும் சொல்ல முடியாத நடுத்தரப் பெரிதான கோவிலினுள் ஆஞ்சநேயர் சன்னதியில் நின்றவாறு அவரையே பார்த்தவண்ணம் பக்தி ஒன்றையே குறியாகக் கொண்டு, வருவோர் போவோரை கவனிக்காமல் கைகூப்பி நின்று கொண்டிருந்தான். அவன் கண்களிலிருந்து தண்ணீர்ப் பஞ்சகாலத்தில் மாநகராட்சிக் குழாய்களிலிருந்து கஷ்டப்பட்டு அடித்துப் ப்ளாஸ்டிக் குடங்களில் நிரப்பப்பட்டு சைக்கிளில் ஏற்றப்ப்பட்ட தண்ணீர் கொஞ்சம் பேலன்ஸ் தவறும்போது தளும்புவது போல்- கண்ணீர் தளும்பிக் கொண்டு இருந்தது.
யார் அந்த வாலிபன் ? பார்க்க வாட்டசாட்டமாக இருக்கிறான். முகம் மட்டும் வாடிய வெள்ளரிப்பிஞ்சைப் போல இருக்கிறது. எதற்காக இப்படிக் கோவிலில் நிற்கிறான் ? என்ன வேண்டுகிறான் ? போன்ற கேள்விகளுக்கு விடையிறுக்க வேண்டுமென்றால் வாசகரை இருமாதங்களுக்கு முன் அவன்வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் - நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். (பெரிய்ய்ய கல்கின்னு நினைப்பு..)
இதோ சென்றுவிட்டோம். (இரு மாதங்களுக்கு முன்னால்..)
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் மன்னிக்க உயர்சாலையில் ஏகப்பட்ட இரு,மூன்று, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியுடன் ஓங்கி நெடிதுயர்ந்திருந்தது அந்த பல்வணிக அங்காடி. (ஷாப்பிங் மால் தான்). அதன் இரண்டாவது தளத்தில் அமைந்திருந்த 'வேகக் காப்பி ' (quikies coffee) என்ற இடத்தில் நமது வாலிபனும் கூட யெளவனத் துடிப்புடன் அழகிய சிற்றாடை அணிந்த ஒரு யுவதியும் அமர்ந்திருந்தார்கள்.
இப்போது அந்த வாலிபனைப் பற்றி விபரம் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அந்த வாலிபன் பிறந்த போது நெல்பரப்பி வெற்று முதுகோடு அவனைக் கிடத்தி 'நடராஜ சுந்தர மூர்த்தி ' என நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் அவன் பெற்றோர். பிற்காலத்தில் வேறு குழந்தை தமக்குப் பிறக்காது எனத் தெரிந்துவிட்டார்களோ என்னவோ, எல்லாப் பெயரையும் அவனுக்கே சூட்டிவிட்டார்கள். அப்போதே அவன் ஆட்சேபித்து அழுது பார்த்தான். முதுகில் நெல் குத்தியதால் குழந்தை அழுகிறது எனத் தூக்கி சமாதானப் படுத்தி சக்கரை வாயில் இட்டுவிட்டனர். இருந்தாலும் வளர வளர மற்றவர்கள் நட்டு, சுந்து,மூர்ஸ், ராசுக்குட்டி என அழைப்பதைப் பொறுக்க மாட்டாமல் நட் ராஜ் என்ற நட்ஸ் எனச் சுருக்கிக் கொண்டான். சமர்த்தாய்ப் படித்து அப்பாவிடம் இருந்து இரண்டு லட்சம் வாங்கி தனியார் பொறியியற்கல்லூரியில் பி.இ படித்து, சமர்த்தாய் அப்பாவிடம் சொல்லி சிபாரிசு பிடித்து இப்போது 'தங்கக் கோடு தொழிற்சாலை 'யில் ஸிஸ்டம்ஸ் அனலிஸ்ட். அருகில் அமர்ந்திருந்தவள் அவன் ஆயிரம் நாட்களாக கண்கள் தொட்டுக் கைகள் தொட்டுக் காதல் பண்ணும் நங்கை வசுமதி.
வசுமதியின் அழகைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால்: நீங்கள் இதுவரை படித்திருந்த கதைகளில் வரும் பெண்களைப் பற்றிய வர்ணனைகளை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். பிறகு கிருஷ்ணா ஸ்டோர்ஸ் சென்று ஒரு உள்நாட்டுத் தயாரிப்பான 'அயல்நாட்டு ரப்பரை வாங்கி அதனால் அவற்றை அழித்து விடுங்கள்! அப்படி அழகுக்கெல்லாம் அப்பாற்பட்ட அழகுடன் பளபளவென சமீபத்திய ப்ளாட்டின நகையைப் போல ஜொலித்தாள் வசுமதி.
ஒரு நாள் ஒரு உணர்ச்சி வசப்பட்ட தருணத்தில் நட்ஸ் வசுவிடம் 'ஏய், நீ ரொம்ப அழகா இருக்கே.. ' எனச் சொல்ல அந்தப்பக்கம் வந்த ஒரு திரைப்பட இயக்குநர் அதையே தன் படத் தலைப்பாக வைத்துவிட்டதாகக் கேள்வி.
'ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னே வசு ' என நட்ஸ் கேட்டதற்குக் காதில் விழாததுபோல் பக்கத்து டேபிளில் இருந்தவர்களை அரண்மனைத் தோட்டத்தில் பட்டாசு வெடிப்பதை டி.வியில் வேடிக்கை பார்க்கும் குழந்தைகளைப் போல பார்த்தாள் வசுமதி.
'என் இனிய வாளை மீன் குட்டியே!
உனக்காக
வெங்கட் நாராயணா போளி ஸ்டாலில்
வரிசையில் நின்று
நொந்து நூலாகி
அழகிய மசால் வடை
வாங்கி வந்திருக்கிறேன்...
வாயைத் திற.. ஆ...அம்.. ' என்றான் நட்ஸ்.
'என்னப்பா இது ? '
'தினசரிப் பத்திரிகைகள்ல ஞாயிறு மலர்ல வர்ற புதுக்கவிதை மாதிரி எழுதிப்பார்த்தேன். பிடிக்கலையா.. '
'சகிக்கலை '
'சரி. உனக்காக ஒரு க.க து எழுதியிருக்கேன். கேட்கறயா. '
'அது என்ன க.க.து ? '
'கட்டளைக் கலித் துறை.
அள்ளி முடியாத கூந்தல் அலைபாய நெற்றியிலே துள்ளிச் சுருண்ட முடியைத் தடைசெய்யக் கைகளினால் தள்ளி விலக்கும் தளிரே உனது இடைபிடித்து அள்ளி யணைக்கத் தவித்திடுவேன் இந்த மானிடனே!
டெக்னிகலாச் சொல்றதானா ஒரு வரியில் 15 வார்த்தை தான் வருது. பதினாறாய்க் காண்பிச்சிருக்கேன். எப்படி இருக்கு ' என்றான் நட்ஸ்.
'ஹையாங் ' என வசு சிணுங்க ஆர்டர் அப்போது எடுக்க வந்த சர்வர் பேந்தப் பேந்த விழித்தான். பிறகு சுதாரித்து ' என்ன சார் வேணும் '
'என்னல்லாம் காபி இருக்கு உங்க கிட்ட '
'எல்லா வகையும் இருக்கு சார். லேட்டஸ்ட்டா இந்தோனேஷியால ஒரு பழங்குடியினர் டாத்தூளால ஒரு காபி போடுவாங்களாம். அதுவும் இருக்கு! '
'அதெல்லாம் வேண்டாம்ப்பா. இரண்டு தென்னிந்தியக் காப்பி, இரண்டு கட்லெட் ' என்ற நட்ஸை அல்பமாகப் பார்த்தவாறு சர்வர் விலகினான்.
'சொல்லு வசு, என்ன விஷயம் ? ' என்றான் நட்ஸ்
'என் அண்ணனுக்கு நம் காதல் தெரிந்து விட்டது '
'இவ்வளவு தானே. உன் அண்ணன் பேரென்ன வசு '
'வரதராஜன் '
'இப்படியொரு அப்பாவியான பேர் வச்சுண்டிருக்கார். இவருக்குப் போய் பயப்படறயே '
'உங்களைப் பார்த்துப் பேசணுமாம் '
'கவலையை விடு வசு. நாளைக்கே போய் வரதுவைப் பார்த்துச் சட்டையைப் பிடிச்சு உன் தங்கையைக் கொடுன்னு கேக்கறேன்.இப்போ தைரியமா கட்லெட் சாப்பிடு ' என்றதும் எதையோ நினைத்து ஜிகர்தண்டா தம்ளரில் நொறுக்கப்பட்ட பனிக்கட்டிகள் மோதுவது போல களுங்கெனச் சிரித்தாள் வசுமதி.
*******************
பிற்காலத்தில் ஆர்.கே. நாராயணின் மால்குடியைப் போலப் பிரபலமாகப் போகும் கொக்குப்பாக்கம் (என்ன ஒரு ஆசை!) மீனம்பாக்கத்தைத் தாண்டி திரிசூலத்தில் உள்சென்று சில பல கிலோமீட்டர்கள் உள்தள்ளி அமைந்திருந்தது. அங்கு இன்னும் இனக்கலவரம், பிரபல இளம் நடிகை தற்கொலை, போளிச் சாமியாரின் லீலைகள்(போளி சாப்பிட்டுக்கொண்டே அருள்வாக்கு சொல்பவர்), கட்சித் தலைமையின் தொகுதி என எந்தவொரு விசேஷங்களும் நடைபெறாததால் 'தேமே ' என அமைதியாய் இருந்தது.
அந்தக் கொக்குப்பாக்கத்தில் ஏழாவது அவென்யூவில் இருந்த வசுமதியின் வீட்டின் முன்னால் மறுநாள் நட்ஸ் தனது யமஹாவை நிறுத்தி அழைப்பு மணியடித்தான்.
தி.ஜா வின் 'உயிர்த்தேன் ' ஆமருவையைப் போல ஒல்லியாய் வெடவெடவென்று ஒரு உருவம் திறக்கும் என எதிர்பார்த்தவனுக்கு அதிர்ச்சி.
திறந்தவர் ஆஜானுபாகுவாக இருந்தார். பதினைந்து கம்பளிப்பூச்சிகளைக் கோர்த்து விட்டாற்போல் முகத்தில் மீசை இருந்தது. சங்கு மார்க் லுங்கியும்,மேலே வெள்ளை ஜிப்பாவும் அணிந்திருக்க கழுத்தில் நெகுநெகுவென தங்கச் சங்கிலி மின்னி மார்பில் புலிநகத்தோடு முடிந்திருந்தது.
'ஸாரி சார். வீடு மாறி வந்துவிட்டேன் ' என விலகப் பார்த்தான் நட்ஸ்.
'யார் வேணும் உங்களுக்கு ' குரல் மிக்ஸியில் பொடிப் பொடியான கருங்கற்களை அரைத்தாற் போல இருந்தது.
'இங்க வரதராஜன்னு '
'நான் தான் அது ' என அந்த நபர் சொல்ல நட்ஸ் மனதிற்குள் 9.8 பூகம்பம் வெடித்தது. 'சே. வர்றச்சே வீட்லயாவது சொல்லிட்டு வந்திருக்கலாம் ' என வருத்தப் பட்டான்.
பிறகு கஷ்டகாலத்தில் எல்லாரும் செய்வது போல ஆண்டவன் பேரில் பாரத்தைப் போட்டு 'நான் தான் நட்ஸ். நீங்க பார்க்கணும்னு சொன்னீங்களாம் '
உடனே வரது வேலைக்காரி வருவாளோ மாட்டாளோ எனத் தவித்திருந்த குடும்பத் தலைவி அவளைப் பார்த்ததும் முகமலர்வது போல மலர்ந்து, ' ஓ நீங்க தானா அது. உள்ள வாங்க ' என்றார்.
உள்ளே நுழைந்து அமரச் செய்ததும், மு.க.சு சொல்லாமல்(recap) நேரடியாய் ஆரம்பிக்கும் டி.வி சீரியல் போல விஷயத்திற்கு வந்தார் வரதராஜன்.
'நீங்க என் தங்கையைக் காதலிக்கிறீங்க இல்லையா ' '
'ஆம்,யெஸ், ஹாங்ஜீ ' என்றான் நட்ஸ்.
'ஏன் மலையாளத்தில காதலிக்கலையா ' என்ற வரது ' இதபாருப்பா. நீ என் தங்கையைக் கல்யாணம் பண்ணிக்கறதுல எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை ' எனச் சொல்ல நட்ஸ் தன் இருகைகளையும் நெஞ்சின் மேல் வைத்துக் கொண்டான்.
'என்னாச்சுப்பா '
'மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கறது சார் '
'ஹ ' என்று உறுமிய வரதராஜன் 'ஆனா ஒரு நிபந்தனை ' என்றார்
'என்ன சார் '
'உன்னோட எனக்கும் கல்யாணம் ஆகணும் '
நட்ஸ் பதறினான். 'சார். நான் உங்க தங்கையைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன். உங்களையெல்லாம் முடியாது '
'ஓ.ஸாரிப்பா. அதாவது எனக்கும் கல்யாணம் ஆகணும்னு சொன்னேன் '
இவ்வளவு தானா. கவலையை விடுங்க. எங்க அப்பாக்கிட்ட சொன்னா போதும். நிறைய பொண்ணுங்களைக் கொண்டுவருவார் '
'ஏன். அவர் கல்யாண புரோக்கரா ? '
'இல்லை.சார். அவருக்கு நிறைய காண்டாக்ட்ஸ் இருக்கு. அப்படி இல்லைன்னா இருக்கவே இருக்கு நிறைய மேரேஜ் பீரோஸ், இண்டர்நெட்.. நல்ல பொண்ணா நானே பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் '
'நீயே என்ன நீயே. நீதான் பொண்ணு எனக்குப் பார்க்கணும். ஆனா எப்படிப் பட்ட பொண்ணு எனக்கு வரணும்னு எனக்குள்ள சில ஆசைகள் இருக்கு ' என்றார் வரது.
'சொல்லுங்க '
'உனக்கு டி.ஆர்.ராஜகுமாரி, தேவிகா, பத்மினி தெரியுமா ? '
'இவாள்ளாம் யாரு உங்க ரிலேட்டிவ்ஸா '
' நல்ல நடிகைங்கப்பா. உனக்குத் தெரியாது '
'ம்ஹீம். நான் ப்ளாக் அண்ட் ஒயிட் படங்கள்ளாம் பாக்கறதில்லை. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் லேட்டஸ்டா சிநேகா, மான்யா, ப்ரியங்கா சோப்ரா தான். '
'இந்த பார். எனக்கு வர்றப் போற பொண் பத்மினியோட கண்கள், டி.ஆர்.ராஜகுமாரியோட உதடுகள், overall தேவிகா மாதிரி குறும்புத்தனம் கொண்ட முகமாய் இருக்கணும் '
'ஸார். அப்ப நான் வரட்டா ' என நட்ஸ் எழுந்தான். 'உங்களுக்கு உங்கள் தங்கையைக் கல்யாணம் பண்ணித்தர இஷ்டமில்லைன்னு நேரடியா சொல்லியிருக்கலாம் '
'இப்ப என்னப்பா வந்தது ? '
'அதான் சொல்லிட்டாங்களே. பொண்ணு எப்படி இருக்கணும்னு. இப்படி ஒரு பொண்ணு எங்க சார் கிடைப்பா ? '
'ம். சொல்ல மறந்துட்டேனே. இந்த மாதிரி அடக்க ஒடுக்கமான பொண்ணை நீ கோயில்ல தான் வெச்சுக் கண்டுபிடிக்கணும். அதுவும் சென்னையிலேயே. பிறகு என்கிட்ட வந்து சொல். நான் ஆகவேண்டியதைப் பார்க்கிறேன் '
'அது ஏன் சென்னையிலேயே ? '
'இப்பதான் பஸ் கட்டணம் ரயில் கட்டணம் லாம் ஜாஸ்தியாய்கிட்டே இருக்கே. வெளியூர்ல மாமியார் இருந்தா எனக்கு வசதிப்படாது. அதுவும் பெண் பக்தி உள்ளவளா இருக்கணும் '
'குமுதம் பக்தியா ? '
'தமாஷ் பண்ணாதீங்க தம்பி. உனக்குத் தெரியாது. வசுவை வளர்க்க நான் எவ்ளோ கஷ்டப் பட்டேன்னு. இப்படியே பாதி வாழ்நாள் போயிடுத்து ' எனக் கண்ணைத் துடைத்துக் கொண்டார் வரது.
'அதுக்காக எங்களைக் கஷ்டப்படுத்தணுமா ' என மனதிற்குள் சொல்லி விடை பெற்றான் நட்ஸ்.
வசுமதியிடம் வரதுவின் நிபந்தனையைச் சொன்னதற்கு 'அதனால் என்ன. என் கண்ணோல்லியோ. உன்னால முடியாதா என்ன ' எனக் கொஞ்சலாகப் பதில் வர வேறு வழியில்லாமல் பழைய பேப்பர்கடைக்குச் சென்று சில பல பழைய,புதிய பக்திப் பத்திரிகைகள் வாங்கினான். அவ்வாறு வாங்கியதில் பத்து யந்திரங்கள், மூன்று வேல், நாலு தினசரிக் காலண்டர்கள், இரண்டு மாவிலை,வேப்பிலைத் தோரணங்கள், 2 வாக்கியப் பஞ்சாங்கம்,15 கையடக்க ஸ்தோத்திரப் புத்தகங்கள் நட்ஸிடம் சேர்ந்துவிட்டன. வாங்கிய பக்திப் பத்திரிகைகளை ஸின்ஸியராக பரீட்சைக்குப் படிப்பது போலப் படித்து சென்னையில் உள்ள கோவில்களைப் பற்றித் தெரிந்து கொண்டு தினசரி அலுவலகம் முடிந்ததும் 'தினம் ஒரு கோவில் ' என்று சென்று வரலானான்.
இப்படிக் கோவில்களைச் சுற்றிச் சுற்றி - வரதுவிற்கு ஏற்ற பெண் கிடக்காததாலும் - ஆன்மிகத்தில் ஈடுபாடு வந்துவிட்டது நட்ஸிற்கு. அதாவது சுருங்கச் சொன்னால் வாழ்க்கை வெறுத்து விட்டது.
இப்படி ஒரு மாலைப் பொழுதில் தான் அந்த அசோக் நகர் கோவிலில் ஆஞ்சனேயரிடம் மனதிற்குள் மெட் றாஸ் பாஷையில் புலம்பிக் கொண்டிருந்தான் நட்ஸ்.
'இன்னாப்பா. பேசாம உன்னை மாதிரியே இர்ந்துருக்கலாம். எல்லாம் இந்தப் பாழாப்போன லவ்வால வந்த வினை. இப்போ இன்னா செய்லாங்கறே ' எனப் பேசியவாறு இருந்தபோது மணி அடிக்க கண்களை முழுக்கத் திறந்தான்.
எதிரே அழகிய சிவப்பு சுரிதாரில் அழகிய சிவப்பு ஸ்டிக்கர் பொட்டு நெற்றியில் பொருந்தியிருக்க அழகிய இளம் பெண்ணொருத்தி (எத்தனை அழகிய) நின்றிருந்தாள். அவனைப் பார்த்து முறுவலித்தாள். நட்ஸ் பயந்து போய் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவளைப் பார்த்தான். 'ஒரு வேளை இவள் தான் கோட் ரெட் எனப்படும் வைரஸோ. அது அப்போவே வந்துடுச்சே. என் மனது ஸ்தம்பிக்கிறதே ' என நினைத்துப் பின் தெளிந்து அவளை உற்று நோக்கினான். 'அடடா. என்ன அழகாய் இருக்கிறது அவளது கூந்தல். முற்காலத்தில் சின்ன வயதில் மழை என்று ஒன்று வருவதற்கு முன்னால் கருமேகங்கள் சூழுமே அதுபோல அடர்த்தியாய் இருக்கிறதே. அவள் கண்கள்.. அடடா. முற்காலக் கல்யாண ஊர்வலங்களில் கொளுத்தப்படும் பெட்ரோ மாக்ஸ் விளக்கைப் போல பிரகாசிக்கிறதே. அதுவும் அவளது உதடுகள்.. அடடா.. நல்ல பக்குவமாகப் பழுத்த தர்பூசணியைக் கீற்றுப் போட்டிருப்பார்களே (அதுவும் அநியாயமாய் ரெண்டு ரூபாய் சொல்வானே) அதுபோல இளஞ்சிவப்பாக இருக்கிறதே ' எனக் கற்பனை தண்ணீர் முழுவதும் நிரப்பப் பட்ட தண்ணீர் லாரி போலத் தாறுமாறாக ஓட சுதாரித்து அந்த இடம் விட்டகன்று சுற்ற ஆரம்பித்தான். அந்தப் பெண் அவனைக் கூப்பிட்டாள்.
'ஹலோ சார் ஒரு நிமிஷம் '
'என்ன விஷயம் ' என்றான் நட்ஸ். அவனுக்கு B.P எகிறியிருந்தது.
'என் பெயர் வி.ஷாலினி ' என்றாள் அவள் அவனருகில் நடந்து கொண்டே.
'விஷாலினி ? '
'இல்லை. வி.ஷாலினி. வி for வெங்கட் ராமன். என் அப்பா டையமண்ட் லைன் இண்டஸ்ட் ரீஸ் எனும் கம்பெனி வைத்திருக்கிறார். ' சிரித்தாள். 'உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் '
'என்ன ? '
'உங்களுக்கு ஏகப்பட்ட தங்கைகள் இருக்கிறார்களா ? '
'இல்லை ஏன் ? '
'இல்லை.அவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகவேண்டுமென்று நீங்கள்... ' சொல்லிக் கொண்டே வந்தவள் நிறுத்தி 'got it.உங்கள் அப்பா அல்லது அம்மாவிற்குத் தீராத வியாதி இல்லையா ? '
'இல்லையே. ஏன் இப்படிக் கேட்கிறீர்கள் ? '
நட்ஸ் நிஜமாகவே குழம்பினான்.
'இல்லையென்றால் உங்களுக்கேவா.. ' என்றவள் அவன் அருகில் வந்து 'உங்களுக்கு ஏதாவது உடம்பிற்கு.. ஏதாவது சிறுநீரகக் கோளாறு..குடற்புண்..இருதய நோய்.. '
'நீங்க யாரு வாலிப வயோதிக அன்பரா ? ' என்ற நட்ஸ் 'லுக் ஷாலினி. நான் நன்றாகத் தான் இருக்கிறேன். நீங்கள் ஏன் இப்படிக் கேட்கிறீர்கள் எனத் தெரியவில்லை. '
'சொல்கிறேன் ' என்றாள் ஷாலினி.
'எனக்கும் என் அப்பாவிற்கும் தினசரி மாலை ஏதாவது கோவில் செல்லும் பழக்கம் உண்டு. உங்களை நிறைய கோவில்களில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு தெய்வங்களிடமும் நீங்கள் உளமுருக வேண்டுவதையும் வெறித்த பார்வையுடன் போவோர் வருவோரைப் பார்த்தவாறு இருப்பதையும் பார்த்திருக்கிறேன். so உங்களுக்கு ஏதாவது தீர்க்க முடியாத பிரச்னை இருக்கிறது என நினைத்தேன். அதான் கேட்டேன் ' என்றவுடன் பொங்கிக் கொண்டு வந்தது நட்ஸிற்கு.
அந்தக் கோவிலில் இருந்த சிறு மண்டபத்தில் ஷாலினியை உட்காரச் சொல்லி - தான் யார், தன்காதலி வசுமதி - 2.5 வருடமாகக் காதலிப்பது, அவளுக்காக சரவணபவன், கோமள விலாஸ், கோகுலம் பார்க் ஹோட்டல்,அல்ஸா மால், பெசண்ட் நகர் பீச், தி.நகர் சக்கரப் பொங்கல் ரெஸ்ட்டாரண்ட் போன்ற இடங்களிலெல்லாம் இதுவரை செலவழித்த ரூ.38,395.95 பைசா., முரட்டு வரது அவரது கண்டிஷன் போன்றவற்றைக் கொட்டித் தீர்த்து விட்டான் நட்ஸ்.
'இது தான் ஷாலினி என் பிரச்னை. அம்மன் கோவிலில் அம்மன் மாதிரியே வந்து என் குறை கேட்கறீங்களே. நீங்க என்ன ரம்யா கிருஷ்ணனா ? '
கலகலவென ஷாலினி சிரிக்க நட்ஸ் தொடர்ந்தான். 'உங்க கண்களைப்பார்த்தா பத்மினியோட கண்கள் மாதிரி இருக்கு. உதடு சுழிப்பு கூட டி.ஆர்.ராஜகுமாரி தான். என்ன தேவிகாவோட குறும்புத்தனம் மிஸ்ஸிங். அதை சமாளிச்சுரலாம். ஏங்க நீங்க ஒண்ணு செய்யுங்களேன். அந்த வரதுவை வந்து பாருங்களேன். ப்ளீஸ் எனக்காக '
ஷாலினி மறுபடியும் சிரித்தாள். 'அதை நீங்க என் அப்பா கிட்டத் தான் கேட்கணும். அப்பா ' என அழைக்க மண்டபத்தின் பின்னிருந்து வெங்கட்ராமன் வந்தார்.
'எல்லாம் நான் கேட்டேன் தம்பி. அதுக்கு முன்னால உன்னோட ஒண்ணு பேசணும் ' என்றார்.
***********************
கொக்குப் பாக்கத்தில் வசுமதியின் வீட்டில் அமர்ந்திருந்தான் நட்ஸ். எதிரே வரத ராஜன் + வசுமதி.
'என்ன நட்ஸ் திடார்னு பார்க்கணும்னு சொன்னீங்க ? ' வரது கேட்டார்.
அதற்கு நட்ஸ் தான் கோவிலில் ஷாலினியைச் சந்தித்தது பற்றிச் சொல்ல வரது பிரகாசமானார். 'அட் ரஸ் கேட்டயா. எப்போ பொண்பார்க்க போகலாம் ? '
'கொஞ்சம் இருங்க சார் ' என்றான் நட்ஸ். 'ஷாலினியோட அப்பா வெங்கட் ராமனும் என்னோட பேசினார். பெரிய கம்பெனி ஓனர். என்னைப் பல கோவில்கள்ல பார்த்ததும் அவருக்குப் பிடிச்சுடுத்தாம். என்னைப் பற்றி, என் கம்பெனியைப் பற்றியும் விசாரிச்சு வச்சுட்டாராம். அதுவும் நான் உங்களுக்குப் பெண்பார்க்கறதுக்காக sincere ஆ கோவில் சுத்தினது அவருக்குப் பிடிச்சுடுத்தாம். அதனால... '
'அதனால ' கேட்டாள் வசுமதி.
'அதனால என் பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கறியான்னு கேட்டார் '
'நீங்க என்ன சொன்னீங்க ? ' - குரல் தழுதழுக்க வசுமதி.
'என்னை என்ன பண்ணச் சொல்ற வசு. சரின்னுட்டேன் '
'இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை ? '
'இதுல வெட்கம் என்ன இருக்கு வசு. காதலுக்கு நடுவே கண்டிஷன் போடக் கூடாது. அப்படிப் போட்டா அந்தக் காதல் செத்துரும்! '
'இது எந்தப் பட வசனம் தம்பி '
'ம். என் சொந்த வசனம். அது மட்டுமில்லை வசு. உங்க அண்ணன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கற்துக்கு முன்னாடியே எனக்குப் பெரிய தண்டனை கொடுத்துட்டார். அவருக்குப் பொண்ணு பாக்கறதுக்காக கோவில் கோவிலாய்ப் போய் எத்தனை பெண்களைப் பார்த்தேன். எத்தனை மேக்கப் போட்ட முகங்களைப் பார்த்தேன். அப்படிப் பார்த்துப் பார்த்து அலர்ஜியே வந்துடுத்து. பேசாமல் சந்யாசி ஆகி பணக்காரனாகலாம்னு பார்த்தேன். வெங்கட் ராமன் மாட்டினார் ' என்றான் நட்ஸ்.
'முடிஞ்சுடுத்தா ? ' வசுமதி எழுந்தாள். 'யெஸ் ' என நட்ஸ் வெளியேற தன்னறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
வரது பதறினார். 'வசு. ஏதாவது ஏடாகூடமாய்ச் செஞ்சுடாதே. அந்தப் பொடிப் பயலை நாலு தட்டியாவது உன்னைக் கல்யாணம் பண்ண வைக்கிறேன் ' எனத் தில்லானா மோகனாம்பாள் வடிவாம்பாளைப் போலக் கதறி கதவை தடதடவெனத் தட்டிப் பின்னர் கைவலித்து கதவருகே அமர்ந்து விட்டார்.
சரியாய் அரை மணி கழித்துக் கதவு திறந்தது. வசுமதிவெளியே வந்தாள்.
வரது நெகிழ்ச்சியாக 'வசு. என்னை மன்னிச்சுடும்மா '
வசுமதி ' அண்ணா. எல்லாரும் கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுப்பா. ஆனா நீ என்னைப் பூனையாவே வளர்த்துட்டே. நான் ஒரு கிளியை லவ் பண்ணது தப்பு. அது இப்போ பறந்து போச்சு! ' என்றாள்.
வரது புரியாமல் ' என்னம்மா ஆச்சு உனக்கு. டாக்டர் ருத்ரன் கிட்ட போகலாமா ? ' எனக் கேட்டார்.
வசுமதி , ' 'பூட்டுகள் 'னு ஒரு மெகாசீரியல் 785வது எபிசோட்ல கதாநாயகன் பேசற வசனம்னா இது. அதைப் பார்க்கறதுக்காகத் தான் ரூமுக்குள்ள போனேன். என்னை பத்திக் கவலைப் படாதீங்கண்ணா. நீங்க சொல்ற மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்கறேன் ' என்றாள்.
*******************************************