PDA

View Full Version : மாடசாமி, 7 வது அவென்யூ



chinnakkannan
26th August 2012, 06:28 PM
மாடசாமி, 7 வது அவென்யூ
*************************
சின்னக் கண்ணன்
http://library.thinkquest.org/CR0211900/odie.jpg
சுள்ளுன்னு வெய்யில் அடிச்சதும் எனக்கு முழிப்பு வந்துடுச்சு அ ட டா ரொம்ப நேரம் தூங்கிட்டேனா என்ன.. கண்ணைத் தொறந்து பார்க்கறேன்..இல்லை. அ ப்படியொண்ணும் ரொம்ப நேரம் தூங்கலை.. வெய்யில் காலமில்லையா..அதான் சீக்கிரமா வெய்யில் வந்துடுச்சு..மறுபடியும் கண்ணை மூடலாம்னு நெனச்சப்போ கழுத்துப்பக்கம் அரிக்க ஆரம்பிச்சது..பின்ன்ங்காலால வரட் வரட்டுனு சொறிஞ்சுக்கிட்டேன்..ஒருபக்கம் சொகமா இருந்தாலும் கூட இன்னொரு பக்கம் ஏன் தான் இந்த நாய்ப் பொழப்போன்னு வருத்தமா இருந்த்து..

இப்படி அரிக்குதே என்ன காரணம்னு யோசிச்சுப் பாக்கறேன்.. நேத்து அந்த டாக்டர் வீட்டம்மா ஏதோ காய்கறில்லாம் கலந்த சாதம் போட்டாங்களே, புலவ்வோ பிரியாணியோ..அதுல உப்பு கொஞ்சம் ஜாஸ்தில்ல..

ஒரு வேளை அதனால் இருக்குமோ..இல்லை அதுக்கப்புறம் மெல்ல பக்கத்து தெரு போய் ரோஸியப் பாத்துட்டு வந்தேனே..அதனால இருக்குமோ..

ரோஸி.. ரோஸியப் பத்தி நினைச்சவுடனே என்னையும் அறியாம நாக்கைத் தொங்க விடறேன் என்ன அழகு அவ..

ஒடம்புல்லாம் கறுப்புன்னாலும் கூட நெத்தில பொட்டு வச்ச மாதிரி கொஞ்சம் வெள்ளை..அதுவே அவளுக்கு ரொம்ப அழகா இருக்கும்.. நாங்கூட அழ்கு தான்.. என்னோட பிரவுன் கலர் மாதிரி இந்த்த் தெருவில் எந்தப் பயலுக்கு இருக்கு..

என்னல்லாம் பேசறா அவ.. கொஞ்சம் கூட வெக்கமில்லாம.. ம்ம் வயிறு கொஞ்சம் கலக்குது..கொஞ்சம் லேம்ப் போஸ்ட் பக்கம் போயிட்டு வந்து சொல்றேன்..

ம் ம் எதுல விட்டேன் ரோஸி.. நான் போய் நின்னவொடனேயே வீட்டை விட்டு வெளிய வந்தா..
அவ என்னை மாதிரி கிடையாது..அவளுக்குன்னு வீடு இருக்கு..அவளுக்குன்னு எசமான், எசமானியம்மா இருக்காங்க..எனக்குத் தான் யாதும் இந்த்த் தெருவே..தெருவில் இருக்கும் யாவரும் எசமான்களே..

ரோஸி சொன்னா, ‘இந்த பாரு மாட சாமி .. கொஞ்சம் கூட தில் இல்லாத ஆளு நீ..’

’எப்படிச் சொல்ற ரோஸி?’

‘சும்மாச் சும்மா என்னச் சுத்திச் சுத்தி வர்றயே தவிர, அடுத்த ஸ்டெப் எடுக்கப் பார்த்தியா?’” அவளோட எசமான் காலேஜ் லெக்சர்ர்.. அதனால அப்ப்ப்ப இங்கிலீஷ் கலந்து பேசுவா..

எனக்கு ரோஷம் வந்துடுச்சு..பாஞ்சு அவ கன்னத்தில முத்தம் கொடுத்தேன்..கழுத்தக் கடிச்சேன்..அவளும் வக்கணங்காட்டி பதிலுக்குக் கடிச்சா..இப்படியே போச்சா..அப்புறம் என்ன ஆச்சுன்னா..போங்க எனக்கு வெக்கமா இருக்கு..

அதுக்கப்புறம் வந்து டாக்டர் வீட்டு வாசல்ல விழுந்தவன் தான் நான்..மெல்ல அரைக்கண் மூடியே எல்லாத்தையும் வாட்ச் பண்ணிக்கிட்டிருந்தேன்.. எங்க தூங்கறது..என் மாதிரிப் பொறப்புக்கெல்லாம் ராத்திரி தான் ட்யூட்டி..யாராவது தெரியாத ஆசாமிங்க வந்தா வள்ளுன்னு கத்தி ஊரைக் கூட்டுவோம்.. நல்லவேளை நேத்து நைட் யாரும் வரலை..

இப்போ என்ன பண்ணலாம்..வழக்கம் போல் இந்த்த் தெருவ ஒரு ரவுண்ட் வந்துட்டு மறுபடியும் அந்த உசர வாசப்படி கேட்டைத் தொறந்து உள்ள போய்த் தூங்கலாம்.. இப்படி நினச்சுக்கிட்டு கொஞ்சம் கால்களை வெரசாப் போட்டு நடந்தேன்

எங்க தெருல்ல வீடுகளா இருந்தாக் கூட அது மெயின் ரோடு தான்..அப்ப்ப்ப கார் பஸ்லாம் போகும்.. தெருமுனை வளைஞ்சு அதுக்கப்புறம் இருக்கற இன்னொரு மெயின் ரோட்டில் கலக்கும்

தெருமுனைல்ல ஒரு மளிகைக் கடை...இந்தக் காலத்தில மளிகைக் கடைல்ல தான் எல்லாம் கிடைக்குதே அம்மா அப்பாவைத் தவிர..மளிகைக் கடைக்கு எதிர்ல இருக்கற குப்பைத் தொட்டி தான் என்னோட ஃபேவரிட்... அட ரோஸி கூட பழகி எனக்கும் இங்க்லீஷ் வந்துடுச்சு..மளிகைக் கடை செட்டியார் எனக்கு ஒண்ணும் போட மாட்டார்..அங்க வேலைபாக்கற சின்னப் பையன் தான் ஏதாவது ஒடஞ்ச பிஸ்க்ட அப்ப்ப்ப போடுவான்

இப்பவும் மளிகைக் கடைப்பக்கம் போனப்ப கடை பக்கத்தில் அவன் இருந்தான்..என்னோட தோஸ்த்..என்னையும் மதிச்சுப்பேசறவன் அவன் ஒருத்தந்தான்..

அவன் யாருன்னு கேக்கறீங்களா..அவன்னா அவன் தான்..அவம்பேரெல்லாம் எனக்குத் தெரியாது..ரெண்டு மாசத்துக்கு முன்னால தான் அவன் இங்கேயே வந்தான்.. செட்டியார் கடை ராத்திரி சாத்தினதும் அங்கேயே கொஞ்சம் தள்ளி படுத்துக்குவான்

அவன் மொதமொத வந்தப்பயே எனக்குக் கொஞ்சம் ஆச்சர்யமா இருந்த்து..யார் இது நம்ம இனம் மாதிரி தெரியலையே..ஆனா நம்ம உசரம் தான் இருக்கான்..அழுக்குச் சட்டை அரை டிராயர்..மூஞ்செல்லாம் ஒரே தாடி மீசை..

அதுவும் அந்தப் பலகையை வச்சுக்கிட்டு கையால தள்ளிக்கிட்டு வேற வந்தான்..

என்னோட வழக்கப் பிரகாரம் ‘வள்ள்ள்ள்’னு கொலச்சேன்..அவன் அதுக்கெல்லாம் அசரலை..சினேகமாச் சிரிச்சான்
நான் சுலபத்தில யாரயும் நம்பற ஜாதியில்லை..பயந்துக்கிட்டே வாலை நல்லா மடக்கிக்கிட்டு அவன் பக்கத்தில போய் முகர்ந்து பார்த்தேன்..அவனை, அவன் கட்டையை,....

அவன் மறுபடி சிரிச்சான்..

சிரிச்சுக்கிட்டே ’உன் பேர் என்னடா’ன்னான்.. நான் மறுபடியும் வள்ள்ள்ன்னேன்..

செட்டியார் கடைப்பையன் தான் அவன் கிட்ட ‘அது பேர் மாடசாமி..சும்மா கொலைக்கும் ஒண்ணுஞ் செய்யாது..ஆனா பயந்துட்டீங்க விடவே விடாது’ன்னு எனக்கு சர்டிபிகேட் கொடுத்தான்..

அவன் ‘மாட சாமியா.. வித்யாசமான பேரா இருக்கே..யார் வெச்சது?”ன்னு கேட்ட்தும் செட்டியார்கடைப் பையனுக்கு சந்தோஷமாப் போச்சு..’நான் தான் வெச்சேன்’னு பெருமையாச் சொன்னான் அவன் கிட்ட..

அந்த சமயத்தில செட்டியார் வந்துட்டாரு..அவனை யார் என்ன்ன்னு வெசாரிச்சாரு..அதைக் கேக்கறதுக்கெல்லாம் எனக்குப் பொறுமையில்லை..தடால்னு ரோட்டைக் க்ராஸ் பண்ணி குப்பைத் தொட்டிப் பக்கம் ஏதாவது கிடைக்குதான்னு மோந்து பாத்துட்டு டக்குனு பின்னாடி போய் கால் தூக்கிட்டு திரும்ப வந்தேன்..

வந்தா செட்டியார் சொல்லிக்கிட்டுருந்தாரு, ‘ பேசாம உன்னோட குப்பத்துக்குப் போயிடறது நல்லதுப்பா..எடுத்து வளத்த ஆயா தவறிப் போய்ட்டா..அந்த இட்த்தில இருக்க ப் பிடிக்கலைங்கறே..அங்கேயே பழகின மனுஷங்கள்ளாம் இருப்பாங்கள்ள.. கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாய்டும்ப்பா..இங்க என்ன பண்ணப் போற.. பிச்சை எடுக்கறதுன்னாலும் இங்கே யாரும் போட மாட்டாங்களே’

அதைக் கேட்ட்தும் அவனுக்குக் கோபம் வந்துடுச்சு..’என்ன செட்டியாரே..யாரப் பாத்து பிச்சை எடுக்கறவன்னு சொல்றீங்க..கால் வெளங்காமப் போச்சுன்னா நான் பிச்சை எடுக்கறதவதா நினைக்கறதா..எனக்கு ரெண்டு கையிருக்கு சாமி..எனக்கு வேணுங்கறதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்..ராத் தங்க இடம்..இப்படியே ஒங்க கடை தாண்டி கொஞ்சம் படுத்துக்குவேன்..அம்புட்டு தான்’னான்..

செட்டியார் ‘ நீ யாருன்னே தெரியாதேப்பா..ஒன்னை எப்படி அனுமதிக்க முடியும்..இது கார்ப்பரேஷன் ரோடு தான் இல்லைங்கல..ஆமா..கையால என்ன செய்வே’ன்னு கேட்டார்.

அவன் எதுவுமே பேசல..தன்னோட தோள்ல ஒரு பை வெச்சுருந்தான்..கடைவாசல்ல அவனோட வண்டில்லருந்து இறங்கி இருந்தான் பேசறதுக்காக..இப்போ மறுபடி அந்த வண்டில்ல ஏறி கையால கட்டை வண்டியைத் தள்ளிக்கிட்டே எதிரில் குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில இருக்கற ப்ளாட்பாரத்திற்கு வந்தான்.. தோள் பையில் இருந்து ஒரு வெளக்கு மாற் எடுத்தான்..தவழ்ந்துக் கிட்டே சுத்தமா பெருக்கினான்.

நானும் அவன் கூடப் போய்ப் பார்த்துக்கிட்டே இருந்தேன்..

பிறகு தான் ஒலகமே மறந்து போச்சு அவனுக்கு..பையில நிறைய கலர் சாக்பீஸ்லாம் வெச்சுருந்தான்..மொதல்ல வெள்ள சாக்பீஸ் எடுத்து ஒரு அவுட்லைன் போட்டான்..அப்புறம் ரொம்பத் தீவிரமா வரைய ஆரம்பிச்சான்..எனக்கு ஒரே போரடிச்சுடுச்சு..வழக்கமா நான் பகல்ல தூங்கற வீட்டு வராண்டாவுக்குப் போயிட்டேன்

தூங்கி எழுந்துட்டு குப்பைத் தொட்டிக்குப் போலாம்னு போனாக்க ஆச்சர்யம்..அந்தப் ப்ளாட்பாரத்தில கொஞ்சம் கூட்டம் இருந்துச்சு..மெல்ல எட்டிப் பார்த்தேன்.

தரையில வெங்கடாஜலபதி உயிரோட சிரிச்சார்..ரொம்ப ரொம்ப அழகா வரஞ்சுருந்தான்.. அங்கங்க சில பேர் காசெல்லாம் போட்டிருந்தாங்க..செட்டியார் கூட கொஞ்சம் நின்னு பார்த்திட்டுஇருந்தார்..

‘எலேய் நீ யாரோ என்ன்ன்னோ தெரியாது..ஆனா ரொம்ப நல்லா வரையறடா’ன்னு சொல்லிக்கிட்டே அவரும் ஒரு ரூபாய் போட்டார்..மறுபடியும் சொன்னார்..’ இவனே மனசு சுத்தம் இருந்தாலொழிய இப்படியெல்லாம் வரைய வராது..ஒம்மேல நம்பிக்க வந்துடுச்சு.. நீ நம்ம கடையாண்டையே தங்கிக்கலாம்’

இது தான் அவன் எங்க தெருவுக்கு வந்த கதை..அவன் ஒருமாதிர்யான் ஆளுன்னு கூடச் சொல்ல்லாம்..அதுக்குப் பிறகு அவன் அந்த பிளாட்பாரத்தில தான் வரஞ்சுக்கிட்டு இருந்தான்..படம் ஒவ்வொண்ணும் உசுரோட கண் முன்னால வரும்.

மீனாட்சி, காமாட்சி, ஆஞ்ச நேயர், சிவன், வினாயகர்னு..ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு படம்னு வரஞ்சு தள்ளுவான்..

வரைவான்னு சொன்னேனேயொழிய, அவன் தெனசரில்லாம் வரைய மாட்டான்..ரெண்டு நாளைக்கு ஒரு தடவை, மூணு நாளைக்கு ஒரு தடவை, கீழ விழற காசுல முக்கால்வாசி சாக்பீஸா செட்டியார் கடையிலேயே மாத்திக்குவான்..

மிச்சம் உள்ளதுக்கு கொஞ்சம் பிரட், பெட்டிக்கடையில் கரீம் பீடி, அப்புறம் தெருமுனைல்ல கார்ப்பரேஷன் பாத்ரூம்ல மத்த வேலைகள்..

காசும் நிறைய விழும்னு சொல்ல முடியாது..ஏன்னா அந்தப்பக்கம் நடந்து வர்றவங்க கொஞ்சம் கம்மி தான்..ஆனா காசு சேர்றல்லயேன்னு வருத்தம்லாம் பட மாட்டான்.. கிடைக்கற காசுல எனக்கும் கொஞ்சம் பிரட் பிஸ்கட் வாங்கிப் போடுவான்..அதனால அவனையும் என்னோட எஜமான் லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டேன்.. அதைத் தவிர அவன் படம் வரையறச்சே நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு பார்த்துக்கிட்டே நிப்பேன்..அவனும் படம் வரையறச்சே என் கிட்ட பேச்சுக் கொடுப்பான்..

‘என்ன சொல்ற மாடசாமி..ஆஞ்சனேயர் வால் எப்படி இருக்கு..இன்னும் கொஞ்சம் நீட்டிடலாமா.. மீனாட்சிக்குக் கிளி எப்படி இருக்கு..சொல்லு நல்லா இருக்கா’ என்னமோ எனக்கும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி கேட்டுக்கிட்டு நிப்பேன்..

*
பாருங்க நான் பாட்டுக்கு ஒங்க கிட்டக்க ஃப்ளாஷ்பேக் லாம் சொல்லிக்கிட்டு இருக்கேன்..என்னடா இவன் போய் இங்க்லீஷ்லாம் பேசறேன்னு நினைக்காதீங்க..எனக்கு இங்க்லீஷ், தமிழ்ல கொஞ்சம் எல்லாத் தமிழும் தெரியும்.. இந்த்த் தெருல்ல ஒரு அய்யங்கார் வீடு இருக்கு..ஆட்டோ டிரைவர் வீடு இருக்கு..கம்ப்யூட்டர் இஞ்சினியர் வீடு இருக்கு..

(அவர் என்னை எப்ப்ப் பார்த்தாலும் ‘ஹாய்..மாடு..ஹவ் ஆர் யூ மை பாய்’னு சொல்வார்..)அதனால நான் சொல்றதுல எல்லாம் கலந்து வருமாக்கும்..(ஆமா .. ஒரு பாலக்காட்டுக் கா ர ரும் இருக்கார்..)

**
இன்னிக்கு செட்டியார் கடை ப் பக்கத்தில கொஞ்சம் தள்ளி அவன் படுத்துக்கிட்டு இருந்தான்..பிறகு எழுந்திருச்சான்..கண்லாம் கொஞ்சம் ஜிவு ஜிவுன்னு இருந்துச்சு..கடைப்பக்கம் போனான்..

செட்டியார் அவனைப் பாத்துட்டு, ‘என்னப்பா இன்னும் ஜூரம் போலயா..மாத்திரை போட்டுக்கிட்டயா..டாக்டர் கிட்ட போன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறே’ன்னார்..அவன் சிரிச்சான்..

’ஏதாவது சொன்னா சிரிக்க மட்டும் சொல்ற..என்ன வேணும் உனக்கு ப்ரட்டா”

’வேணாம் சாமி..காசு கம்மியா இருக்கு..கொஞ்சம் சாக்பீஸ் கொடுங்க’

‘அட என்னப்பா..இப்ப வாங்கிக்கோ..அப்புறம் கெடச்சா கொடு..என்ன உனக்குக் கொடுத்தா நான் ஒண்ணும் கொறஞ்சு போயிட மாட்டேன்’ என்றார் செட்டியார்.

‘ஆனா நான் கொறஞ்சு போயிடுவேனே செட்டியார்..கடன்லாம் இதுவரைக்குமே இல்லாம இருந்துட்டேன்..இனிமேலும் வேண்டாம்..’

’அட என்னடாப்பா ஒன்னோட ரோதனையாப் போச்சு..என்னவோ லட்சக் கணக்குல கடன் வாங்கிக்கோன்னு சொல்றாப்பல’ செட்டியார் அலுத்துக்கொண்டே சாக்பீஸ்களை அவனிடம் பையனை விட்டுக் கொடுக்கச் சொன்னார்..அவன் வாங்கிக் கொண்ட போதுதான் அவனது முகத்தை நன்றாகப் பார்த்திருப்பார் போல..பதறினார்..

‘என்ன ஆச்சு சுப்பு (அப்பாடி இப்போ தான் அவன் பேரும் எனக்குத் தெரியும்) கண்ணுல்லாம் மஞ்சளா இருக்கு.. ஏய் பேசாம டாக்டர்ட்ட போடா’

அவன் சிரித்து விட்டு வண்டியைத் தள்ளிக் கொண்டே ரோடைத் தாண்டினான்.. நானும் அவன் கூடப் போனேன்..
’ என்ன மாடசாமி, இன்னிக்கு என்ன வரையலாம்’னு பிளாட்பாரத்துக் கிட்ட வந்த்தும் என்னிடம் கேட்டான்.. நான் அவனையே பார்த்துக்கிட்டே நின்னேன்..

‘என்ன பண்றது மாடசாமி..பசிக்குது..சரியாச் சாப்பிட்டு மூணு நாளாகுது..ஜூரம் வேற ஒடம்பெல்லாம் வலிக்குது’ன்னு சொல்லிக்கிட்டே வண்டிய விட்டு இறங்கி உட்கார்ந்தான்..கொஞ்சம் நகர்ந்துக்கிட்டே ‘ரொம்ப களைப்பா இருக்கு மாடசாமி..ஆனா நான் கண்டிப்பா வரையத்தான் செய்யணும்..செட்டியார் கிட்ட பைசா வாஙகலாம் தான்..ஆனா என்னபண்றது..எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கொள்கையை விடக்கூடாதுன்னு நெனக்கறவன் நான்’

பேசிக்கிட்டே அவன் சாஞ்ச ப்ளாட்பாரச் சுவரில் நிறையக் கட்சிச் சின்ன்ங்கள் வரஞ்சுருந்தாங்க..

பையை மெல்லத் திறந்தான் அவன்..குட்டி வெளக்குமாற எடுத்து உட்கார்ந்துக்கிட்டே பெருக்க ஆரம்பிச்சான்
எனக்கு என்னமோ அவனை விட்டுட்டுப் போய்த் தூங்க மனசில்ல..அவனையே அவன் செய்யறதயே பார்த்துக்கிட்டு நின்னேன்..

தடுமாறித் தடுமாறிப் பெருக்கிட்டு என்னைக் கேட்டான், ‘என்ன வரையலாம் மாடசாமி?” பைலருந்து சாக்பீஸ் டப்பா, கலர்ப்பொடிக்காக வெச்சுருந்த மூணு கிண்ணங்கள எடுத்துட்டு, வெளக்குமாற பைக்குள்ல வெச்சு பைய அவனோட சக்கர வண்டிக்கடில்ல வெச்சான்.

’என்ன பதிலே சொல்ல மாட்டேங்கற மாட சாமி?ன்னு சொல்லிட்டு என்னை ஆதரவாப் பார்த்தான்..’ஆமா நீ எங்க பேசுவ.. நான் என்ன வரையப் போறேன்னு சொல்லட்டா..ராமர் படம்..

நான் அவனையே பார்த்துக்கிட்டே ஒக்காந்துக்கிட்டேன்..

’ராமர் படம் எதுக்குன்னு கேக்கறயா மாடசாமி..ராமன் லங்கைக்கு கொரங்கெல்லாம் கூட்டிட்டுப் போய் ராவணனை செயிச்சாருல்ல..அவர் தான் நெசமாலுமே பெரிய மனுஷன்.. எப்படின்னு கேளு’

அவ்னே தொடர்ந்து பேசினான்..

’அவ்வளோ கொரங்குகள அடக்கி அவங்களை வெச்சு ஒரு பெரிய அசுரனையே செயிச்சுருக்கார்னா சாதாரணமா...என்னைப் பாரு ஒரே ஒரு மன்சுங்கற கொரங்க என்னால அடக்க முடியலையே..அது பாரு..பசி பசின்னு என்னோட வயித்த குத்திக் குத்திக் காமிக்குது..’

எனக்கு ஒண்ணும் புரியலை..வாலை மட்டும் கொஞ்சம் லேசா ஆட்டினேன்..கால்ல கொஞ்சம் அரிச்சது.. நக்கி விட்டுக்கிட்டேன்..

அதுக்கப்புறம் அவன் எதுவும் பேசலை..சுறு சுறுன்னு வரைய ஆரம்பிச்சான்..ஆனாலும் அப்ப்ப்ப தடுமாறினான்..
நான் மெல்ல எழுந்திருச்சு மறுபடியும் தெருவுக்குள்ள போனேன். ஆச்சர்யம் என்ன்ன்னா அந்த டாக்டர் வீட்டு அம்மா டெய்லி ராத்திரி தான் சோறு போடுவாங்க.. அப்போ என்னப் பார்த்த்தும் வேகமா வீட்டுக்குள்ள போயிட்டு வெளிய வந்தாங்க.. கையில் ஒரு பிளாஸ்டிக் பை சுருட்டி வச்சுருந்தாங்க..வீட்டு வாசல்ல வெச்சாங்க..

நான் மோந்து பார்த்தேன்..அட சாதம்..அவனுக்கு வேணா கொடுக்கலாமா..படக்குன்னு கொஞ்சம் அந்தப் பையைக் கவ்விக்கிட்டு வேகமா ஓடறச்சே அந்தப் பை குப்பைத் தொட்டிக்கிட்ட வர்றச்சே கீழ விழுந்து அந்த சாதம்லாம் தரையில் விழுந்துடுச்சு..இத எப்படி மறுபடியும் எடுத்துக்கிட்டு போறதுன்னு பாக்கறச்சயே ‘சொய்ங்க்’னு மூணு காக்கா கீழ எறங்கிச்சுங்க..கீழ விழுந்துருந்த்த கொத்த ஆரம்பிச்சதுங்க..
நான் வள்ள்னு குரல் கொடுத்தேன்.படபடன்னு மேல பறந்துட்டு மறுபடியும் கீழ எறங்கிச்சுங்க..

இந்த்த் தடவை ஒண்ணு தரைல ஒண்ணு அங்க நின்னுக்கிட்டுருந்த ஆட்டோமேல, ஒண்ணு குப்பைத் தொட்டி மேல.. ஆட்டோ மேல ஒக்காந்த காக்கா ஒடனே கீழ எறங்கி மத்தடோத சேர்ந்து கொத்த ஆரம்பிச்சுது..

சே..என்ன பண்றதுன்னு தெரியாம அவன் கிட்டே வந்தேன்..சீரியஸா வரஞ்சுக்கிட்டு இருந்தான். அவன் கை மூலமா ராமர் பிறப்பெடுத்துக்கிட்டிருந்தார்.. அழகான முகம்..முகத்தில் முறுவல்..மார்பில் நகைகள்..பின்னால் அம்புறாத் துணில்ல விற்கள்..வலது கைல என்ன்ன்னு தெரியல..

பாதி வரஞ்சுக்கிட்டு இருந்தவன் அப்படியே நிப்பாட்டினான்.. ‘என்ன்ன்னு தெரியல மாடசாமி..கண்ணு இருட்டிக்கிட்டு வருது’ன்னான்.. அப்படியே சுத்தி வர்றச்சே சாக்பீஸ் டப்பாலருந்து சில சாக்பீஸ் சிதறிச்சு..ரெண்டு கிண்ணம் சரிஞ்சு கலர்ப்பொடி கீழ கொட்டிச்சு..பிளாட்பாரத்த விட்டு தரைல வேற ஒக்காந்தான். நல்ல வேளை அந்த சாக்கடை மூடி மூடியிருந்துச்சு. மறுபடி பிளாட்பாரத்து மேல கையை ஊனி ஏறினான்..அப்படியே அந்த வண்டி மேலஒக்காந்து ரோடை கிராஸ் பண்ணனும்னு நினச்சானோ என்னவோ..ஆனா கொஞ்சம் மேல வந்த்துமே அவனால முடியல..பொத்துனு விழுந்துட்டான்..ஒரு கை மடங்கிடுச்சு..ஒரு கை நீண்டுடுச்சு..கண்ணு சொருகிச் சொருகி உள்ளேயே போயிடுச்சு

எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை..வேகமா அவன் கிட்டக்க போனேன்..கையை மோந்து பாத்தேன். அவனோட சட்டைய லேசாப் பிடிச்சுப் பார்த்தேன். கவ்விப் பார்த்தேன்..வாயிருந்தா ‘சுப்பு சுப்பு’ன்னு கூப்பிட்டுருப்பேன்..என்ன ஆச்சு இந்த ஆளுக்கு..ஏன் இப்படி சலனமில்லாமக் கெடக்கான்..முகத்துக் கிட்டக்கப் போய் மூச்சு விட்டும் பாத்தேன்..

பதிலுக்கு அவங்கிட்ட இருந்து மூச்சு வர்ற மாதிரித் தெரியலை..ஏய் எழுந்திரியேன்..என மனசுக்குள்ள சொல்லி மறுபடியும் இழுத்தேன்.

ம்ம்..அவன் கிட்ட அசைவில்லை..கொஞ்சம் பயந்து போய் வாலை பின்னாடி மடக்கிக்கிட்டு ‘வள்ள்ன்னு’ விடாமக் கொரல் கொடுத்தேன்..

எதிர்க்கடைச் செட்டியார் அதைப் பார்த்துட்டு கடைய விட்டு வெளியே வந்தார்..

********************************************

madhu
26th August 2012, 08:17 PM
வள் வள் வள் :( வள்ள்ள்ள்ள் வள் வள் :cry: வள்ல் உவ்வ்வ்வூஊஊஊஊஊ :cry2:

ஹோப் யூ புரிஞ்சுப்பீங்க. எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு இங்கிலீஷ் டீச்சர் இருக்காரு

( இந்தக் கதையை நம்ம டைகருக்குப் படிச்சுக் காட்டினேன். அது சொன்ன பதில்தான் இது )

ம்ம்ம்ம்.. ஒரு நாயின் கண்ணோட்டத்தில் கதை போவது ( நடுவில் கொஞ்சம் XX வேற :lol: ) கொள்கையை விடாத சுப்புவும், சராசரி மனிதனாக செட்டியாரும் இருக்க ரோசியை இப்படி சட்டுனு ஐட்டம் நம்பராக மாத்தியது கஷ்டமா இருக்குதுங்ணா !

ம்ம்.. உயிரை விட்டு வரைந்த ஓவியங்கள் அவன் உயிரைக் காக்க முடியவில்லையே.. வருத்தமாகத்தான் இருக்கு.

கடைசி வரியைப் படிக்கும்போது கதை தொடருமோ அப்படின்னு ஒரு சந்தேகம் வருது. முடிஞ்சு போச்சா இல்லையா ?

chinnakkannan
26th August 2012, 08:22 PM
மதுண்ணா :) கதை முடிஞ்சுடுத்து..பயப்படாதீங்க..

ஒரு தெரு..அந்தச் சாலையோரம்குப்பைத் தொட்டி ஒரு காக்கை தொட்டிமேல் இன்னொரு காக்கை தொட்டி கீழ்.. சாலையில் ஒரு ஊனமுற்ற தாடிக்காரர் பாதி ராமர் படம் வரைந்து
பின் அப்படியே விழுந்திருக்கிறார்..அருகில் அவரது குட்டிப் பலகை..ஒரு சிகப்பு நாய் சோம்பலாய் ப்பார்த்து க் கொண்டிருக்கிறது..

இது தான் படம்..(மாருதி வரைந்தது என நினைக்கிறேன்) அதற்கு எழுதிய கதை இது..

madhu
26th August 2012, 08:36 PM
மதுண்ணா :) கதை முடிஞ்சுடுத்து..பயப்படாதீங்க..

ஒரு தெரு..அந்தச் சாலையோரம்குப்பைத் தொட்டி ஒரு காக்கை தொட்டிமேல் இன்னொரு காக்கை தொட்டி கீழ்.. சாலையில் ஒரு ஊனமுற்ற தாடிக்காரர் பாதி ராமர் படம் வரைந்து
பின் அப்படியே விழுந்திருக்கிறார்..அருகில் அவரது குட்டிப் பலகை..ஒரு சிகப்பு நாய் சோம்பலாய் ப்பார்த்து க் கொண்டிருக்கிறது..

இது தான் படம்..(மாருதி வரைந்தது என நினைக்கிறேன்) அதற்கு எழுதிய கதை இது..

ஆஹா... மாருதியே ராமர் படம் போட்டால் நல்லாத்தான் இருந்திருக்கும் :bow:

pavalamani pragasam
27th August 2012, 08:39 AM
நடிகை நாடகம் பார்க்கிறாள் மாதிரி நாய் கதை சொல்கிறது. ரொம்ப ஈரமான சாரமுள்ள கதை. மனசு கனத்துவிட்டது. தெளிவான யதார்த்தமான ஓட்டம்.

Shakthiprabha
27th August 2012, 11:05 AM
chinna vayathil paditha "autobiography of a coin" type of kathai.......pidithirunthathu...
edhirpartha mudivu........

unga ezhuthu :bow:

chinnakkannan
27th August 2012, 11:40 PM
தாங்க்ஸ் ஷக்தி பிபிக்கா..

Madhu Sree
29th August 2012, 08:57 PM
Cha touching story... very nice narration... :thumbsup: