PDA

View Full Version : சங்கரன் என்னும் சில மனிதர்கள்



chinnakkannan
26th August 2012, 02:57 PM
(முன்பு எழுதிய கதை இது..பல வருடங்களுக்கு முன் திண்ணையில் வெளியானது..)


சங்கரன் என்னும் சில மனிதர்கள்...
சின்னக் கண்ணன்




முதல் சங்கரனை எப்போது சந்தித்தேன் ?


அப்போது நாங்கள் மதுரையில் இருந்தோம். நாங்கள் இருந்த தெருவில்,எனது வீட்டிற்கு எதிரில் இருந்தது அந்த வேத பாடசாலை. அங்கு தான் முதல் சங்கரன் எனக்கு அறிமுகம்.


சங்கரன் சின்னப் பையன். எட்டு ஒன்பது வயது இருக்கும். (எனக்கு அப்போது பன்னிரண்டு வயது) மார்பின் குறுக்கே பூணூல். மிகப் பெரிய நெற்றியில் அழகாய் ஒன்றுபோல் வரையப் பட்ட வீபூதிக் கீற்றுகள். நெற்றியில் காப்பி டபராவின் அரைவட்டம் போலச் செதுக்கி, பின்னால் இழுத்து வாரப்பட்ட சிறு குடுமி.


எங்களது குழுவில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கேலியாக இருந்தான் அவன். அதுவும் தினசரி காலையில் எழுந்திருப்பதற்கு (போர்வையை இழுத்துப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்தால்) சோம்பல் பட்டால் எனது அப்பா - அந்த பாட சாலைப் பையன்களை உதாரணம் காட்டுவார். 'சமத்தா ஒரு பிள்ளை விடிகாலையில் எழுந்திருக்க வேண்டாமோ. எதிர்ல பாடசாலைல்ல பார். ஒவ்வொண்ணும் காலங்காத்தால எழுந்து குளிச்சிட்டு விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்கிறதுகள் '.


நான் மட்டும் என்றில்லை. எங்கள் குழுவில் மற்ற பையன்களுக்கும் தான் அந்த அர்ச்சனை அவரவர் பெற்றோரிடமிருந்து விழுந்தது. எனில் நாங்கள் ஒரு வித இனம் தெரியாத பகைமை உணர்வோடு இருந்தோம்.


நாங்கள் என்றால் - நான், பக்கத்தாத்து சாரதி, இந்தப் பக்கம் செட்டியார் வீட்டுச் செல்வராஜ், வக்கீல் வீட்டு ராதா(கிருஷ்ணன்).


வேத பாடசாலைப் பையன்கள் எங்களுடன் அவ்வளவாகப் பேசுவதில்லை. அவர்கள் உண்டு அவர்கள் வேலையுண்டு எனப் போய்க் கொண்டிருப்பார்கள். சங்கரன் மட்டும் விதிவிலக்கு. அவ்வப்போது எங்களைப் பார்த்துச் சிரிப்பான். பேசுவான். இப்படியே நாங்கள் விளையாடும் விளையாட்டுக்களிலும் எப்படியோ சேர்ந்து கொண்டான்.


எங்களுக்கும் வசதியாகிவிட்டது. கோலிக்குண்டு விளையாடினால், அவனுக்கு நான் வெட்டும் புலி தீப்பட்டிப் படங்கள், மற்ற படங்கள் எனக் கடன் கொடுப்பேன்.(சில சமயம் இவை மாறும் - சிகரெட் அட்டைகளாக- கோல்ட் ப்ளேக் பில்டர், யானை,பாஸிங்க் ஷோ, நேவி ப்ளூ என) ஜெயித்துத் திருப்பித் தரவேண்டும் எனக் கண்டிஷன். ஆனால் பல பொழுதுகளில் சங்கரனைத் தோற்கடித்து விடுவோம். முழங்கை தேயத் தேய, தெருவில் தரையில் கோலிக்குண்டை தள்ளித் தள்ளி அவன் குழிக்குள் தள்ளிவிடுவது ஒருவிதமான சந்தோஷமாக இருக்கும்.


அவன் அதற்கெல்லாம் கவலைப் பட மாட்டான். விளையாட்டென்றால் அப்படித் தானே என்று விடுவான். இப்படியே கண்ணாமூச்சி, வாலிபால் என சீஸனுக்கு ஏற்ப பல விளையாடி இருக்கிறோம்.


அது பம்பர சீஸன். நானும் ராதாவும் ஏற்கெனவே முக்குக் கடையில் நல்ல பம்பரம் வாங்கி விட்டோம் (என்னோடது சிகப்பு, ராதா பச்சை).


ஒரு நாள் மாலைப் பொழுதில் நாங்கள் இருவரும் அபிட் எடுப்பதை ஏக்கத்துடன் பார்த்தான் சங்கரன்.


'டேய்,. ஒரே ஒரு தடவை கொடுடா.. நான் விட்டுட்டுத் தரேன் '


ராதா ' ம்ம் முடியாது போ..வேணும்னா நீ ஒண்ணு வாங்கிக்கோயேன் '


'எவ்ளோடா ஆகும்.. '


'என்னோடது நாலணா. சுந்தராவோடது எட்டணா.. '


பாடசாலைக்குள் சென்று விட்டு வந்தான் சங்கரன்.. 'டேய் என்கிட்ட நாற்பது பைசா இருக்கு..அஞ்சு அஞ்சு பைசாவா கஷ்டப்பட்டுச் சேர்த்ததுடா. ப்ளீஸ், பம்பரம் வாங்கித் தாயேன். '


'பம்பரம் மட்டும் தாண்டா நாலணான்னேன். சாட்டை ஆணில்லாம் தனியா இருபது பைசா ஆகும்.. வேணும்னா ஒண்ணு செய்யலாம். நீ வெளியில் வர முடியுமா ? '


'எதுக்கு '


'கீழமாசி வீதீல்ல சீப்பாக் கிடைக்குமாம். அங்கே வேணும்னா போய் வாங்கி வரலாம் '


பாடசாலை சர்மா எங்கோ வெளியில் போயிருந்ததால் - இவன் விளையாடப் போகிறேன் என்று ஒரு பையனிடம் சொல்லி விட்டு எங்களுடன் வர, நாங்கள் கீழமாசி வீதி சென்றோம். அழகாகப் பேரம் பேசி பதினைந்து பைசாவிற்கு ஒரு பம்பரமும்(சிகப்பு வட்டம் நடுவில் பச்சை, அதன் மேல் சின்னதாய் ஒரு ப்ளாஸ்டிக் குமிழ் மஞ்சள் நிறத்தில்), பதினைந்து பைசாவிற்குச் சாட்டை ஆணி வாங்கி விட்டு- மிச்சம் பத்துப் பைசாவில் எங்களுக்குக் கடலை மிட்டாய். (பம்பரம் வாங்கிக் கொடுத்ததற்கான கமிஷன்)


மறுபடி தெரு வந்து விளையாட ஆரம்பித்தோம். சங்கரனுக்கு ஏக சந்தோஷம் . அது அவனது பெண்பிள்ளைத்தனமான சுண்டலுக்கு ஏதோ கொஞ்சம் சுழன்று விட்டு கீழே விழுவதைப் பார்க்க. எனக்கும் ராதாவிற்கும் ஏதோ புகைந்தது. ஏனெனில் அவனது பம்பரம் மிக அழகாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணால் பார்த்துப் பேசிக் கொண்டோம்.


'சங்கரா, வா கேம் விளையாடலாம் '


'இல்லைடா எனக்குச் சுத்தவே வர மாட்டெங்குது. இதில எங்க அபீட் எடுக்கறது. நான் வரலை '


'ச் சும்மா வா ' வம்படியாய் இழுத்து விளையாட வைக்க, நாங்கள் நினைத்தது போலவே அவனால் அபீட் எடுக்க முடியவில்லை. வெற்றிப் புன்னகையோடு , அவனது பம்பரத்தை வைத்து, அதைச் சுற்றி வட்டம் போட்டு , நானும் ராதாவும் எங்களது பம்பரத்தை ஆக்ரோஷத்துடன் பாய்ச்சினோம்.


கடைசியில் விளையாட்டின் விதிகளின் படி அவனது பம்பரத்திற்கு ஆக்கர் குத்த வேண்டி வந்தது. சங்கரன் கதி கலங்கி விட்டான். 'டேய் டேய் ராதா, சுந்தரா ப்ளீஸ்டா.. அதெல்லாம் வேண்டாண்டா..ப்ளீஸ்.. '


ராதா கொஞ்சமும் விட்டுக்கொடுக்கவில்லை. நான் தான் சொன்னேன் -ராதா விட்டுடலாம்டா..


'ம்ம் முடியாது ' என்ற ராதா தனது பம்பரத்தைக் கல்லில் தீட்ட ஆரம்பிக்க(ஆக்கர் குத்துவதற்காக) எங்கள் இருவர் கையையும் பிடித்தான் சங்கரன். 'டேய் காலில் வேணும்னாலும் விழறேன்.. பம்பரத்தை விட்டுடுடா.. ' என அழ - சற்றும் இளகாமல் அதன் தலையில் குத்தக் குத்த - அந்த அழகிய பம்பரம் தனது பச்சை சிகப்புப் பகுதியெல்லாம் குண்டும் குழியுமாக மாற- ஒரு எதிர்பாராத தருணத்தில் இரண்டாக உடைந்தது.


சங்கரன் அழுதுகொண்டே பாடசாலைக்குள் சென்று விட்டான். அதன் பிறகு எங்களுடன் விளையாட வருவதில்லை.


********


வருடங்கள் பல கழிந்த பிறகு- நான் டெல்லி துபாய், யுஎஸ் என்றெல்லாம் இருந்து விட்டு இரண்டு மாதங்கள் முன்னால் தான் சென்னை வந்தேன்.


என் மாமியார் கொஞ்சம் ஆசாரம் பக்தி மிக்கவள். 'மாப்பிள்ளை.. ஆத்துல கணபதி ஹோமம் பண்ணலாம்னு இருக்கேன். வந்துடுங்கோ '


கணபதி ஹோமம் நடக்கும் நாளன்று சென்றால் - ஹாலில் சாஸ்திரிகள் திவ்யமாய் அமர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க அவர் இடுப்பில் செல்ஃபோன். அருகில் சில சின்னப் பையன்கள் (குட்டி சாஸ்திரிகள்) மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தனர்.


ஹோமப் புகையில் கண்களைச் சுருக்கிப் பார்க்க - சாஸ்திரிகள் வெண்மையும் கருப்பும் கலந்த தாடியுடனும் கண்களிலே கோல்ட் ப்ரேம் கண்ணாடியுடனும் பளபளவென வேட்டி, அழகிய பூணூல்,கழுத்தில் நெகுநெகுவென தங்கச் செயின் என இருந்த போது என் நினைவுக்குள் சின்னப் பொறி. இவன்..இவர்.. சங்கரன் இல்லை...


சங்கரனுக்கும் என்னை அடையாளம் தெரிந்திருக்க வேண்டும். மையமாகப் புன்சிரித்து மந்திரத்தைத் தொடர்ந்தான்.


ஹோமம் முடிந்த பின் மாமியார் என்னை அழைத்து அறிமுகப் படுத்தினார்.. 'இவர் சுந்தர்ராஜன். என் மூணாவது மாப்பிள்ளை. இதுபெண் சுகந்தி '


சங்கரன் பதிலுக்குப் புன்முறுவல் மட்டுமே செய்தான்.மாமியார், 'ஒரு நிமிஷம் வாங்கோ.. ' என என்னையும், மனைவியையும் கூப்பிட்டார்.


'என்ன.. '


'ஹோமம்லாம் முடிச்சிருக்கார் இந்த சாஸ்திரிகள்..லேசுப் பட்டவரில்லை. எவ்ளோ தெளிவா மந்திரம்லாம் சொன்னார் பார்த்தேளா..சுகந்தி.. நீயும் உன் ஆத்துக்காரரும் போய் ஆசீர்வாதம் வாங்கிக்கோங்கோ '


நானும் சுகந்தியும் சென்று காலில் விழுந்தோம்......


*******************************************


கல்லூரியில் சேர்ந்த் போது தான் இரண்டாம் சங்கரனைப் பார்த்தேன்.


நான் சேர்ந்த கல்லூரி மதுரை விமான நிலையத்திற்கு அருகில் இருந்தது. தினசரி பஸ்ஸில் ஒரு மணி நேரப் பயணம். அதுவும் பெருங்குடி என்ற இடத்தில் மெயின் ரோட்டை விட்டு விலகி செம்மண் பாதையில் ஒரு கிலோ மீட்டர் பயணித்துச் செல்ல வேண்டும்.


எப்படியோ என்னிடம் சிகரெட் வழக்கம் பிடித்துக் கொண்டுவிட்டது. அதுவும் சில சமயத்தில் மதிய வேளையில் ஒரு கிலோ மீட்டர் நடந்து பெருங்குடி வந்து கோல்ட் ப்ளேக் ப்ளெயின் குடித்தால் அபார சுகம். (மத்தியான நேரம் என்பதால் ப்ரொபஸர்கள் வர வாய்ப்பில்லை)


அப்படி ஒரு சமயம் சிகரெட் பற்ற வைத்து விட்டுத் திரும்பினால் ஒரு புல்லட் வந்து நின்றது. அதில் இருந்து அவன்/ர் இறங்கினான்.நல்ல திடகாத்திரமான உருவம். கொத்துக் கொத்தாய்க் கயிற்றை முறுக்கினாற்போன்ற கருகரு மீசை. கரிய நிறம். சிவந்த கண்கள்..


எங்கள் கல்லூரியைத் தாண்டி பரம்புப் பட்டி என்ற கிராமம் இருந்தது. அதில் மல்லிகைப் பந்தல்கள் நிறைய உண்டாம்.(நான் போனதில்லை). தினசரி காலையில் நாங்கள் வகுப்புகளில் அமர்ந்திருக்கும் போது இவனது புல்லட் அமைதியைக் கிழித்துக் கொண்டு சாலையில் செல்லும். புல்லட்டின் பின்சீட்டில் பெரிய மூட்டை கட்டி வைக்கப் பட்டிருக்கும்(மல்லிப் பூக்கள்). டவுனுக்குப் போய் விட்டுமறுபடியும் மூன்றுமணிவாக்கில் அவன் திரும்புவதைத் தொலைவிலிருந்து பார்த்திருக்கிறேன்.


பெட்டிக் கடையில் வாழைப்பழமொன்று வாங்கி விட்டு அதைப் பிரித்த வண்ணம் கேட்டான் 'தம்பி எந்த வருஷம் படிக்குது.. '


'ஃபர்ஸ்ட் இயர் மேத்ஸ் ' என்றேன் அலட்சியமாய்.


மேலும் எதுவும் பேசாமல் புல்லட்டை எடுத்துச் சென்று விட்டான்.


*****


காலேஜ் என்று போக ஆரம்பித்ததும் என் அப்பா மாலை வேளைகளில் எனக்கொரு சிறுவேலை கொடுத்து விட்டார். வசூல் செய்ய வேண்டும் என.


என் அப்பா தெற்காவணி மூல வீதியில் ஒரு சந்தில் கரிக்கடை வைத்திருந்தார். அடுப்புக் கரி, பட்டறைக் கரி எனச் சில்லறை வியாபாரம். டாக்கடைகளுக்கெல்லாம் காலையில் வேலையாட்கள் சப்ளை செய்து விடுவார்கள். மாலையில் நான் சைக்கிளில் போய் ஒரு மூடை ரெண்டு எனப் பணம் வாங்கி வர வேண்டும். அதனால் எனக்கும் கொஞ்சம் பாக்கெட் மணி கிடைத்துக் கொண்டிருந்தது.


ஒரு நாள் வசூல் பண்ணி விட்டு அப்பா கடைக்குள் நுழைந்தால் அப்பாவுடன் அவன். புல்லட் ஆள். அப்பாவிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவன் என்னைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்தான்.


அப்பா என்னிடம், ' இதான் சங்கர பாண்டி. நமது புது வியாபாரி..நல்ல சரக்குத் தரேன்னு சொல்லியிருக்காரு..நம்ம வியாபாரி முத்துவேல் இருக்காரில்ல அவர் வீட்டில சம்பந்தம் பண்ணப் போறாரு ' என்று விட்டு அவனிடம் ' இது சுந்தரா..என் கடைசிப் பையன். காலேஜ்ல படிக்கிறான் ' என அறிமுகப் படுத்த எனக்குக் கலங்கியது. பணக் கவரை அப்பாவிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன்.


அப்படியே சென்று வடக்குச் சித்திரை வீதி வந்து மூலையில் நான் வழக்கமாக சிகரட் பிடிக்கும் பெட்டிக் கடைக்கு வந்து பற்ற வைத்த பிறகுதான் கொஞ்சம் பயம் குறைந்தது. 'சங்கர பாண்டி அப்பாவிடம் சொல்லி விடுவானோ - நான் சிகரட் பிடிப்பதை ' என எண்ணிய படியே சிகரட்டை முடித்து விட்டுக் கிளம்புகையில் எதிரில் வந்தது புல்லட்.

சங்கர பாண்டி.


'சுந்தர்ராஜன்..என்ன தம்பி இங்க நின்னுக்கிட்டிருக்கீங்க.. வாங்க ஜீஸ் சாப்பிடலாம் '


'வேண்டாங்க ' எனச் சொல்லச் சொல்ல ஒரு நன்னாரி சர்பத் வாங்கிக் கொடுத்தான். பிறகு சொன்னான்.


'தம்பி அன்னிக்கு ஒங்களைப் பெருங்குடில்ல பாத்தப்ப கொஞ்சம் பூஸ்ல இருந்தேன். உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். வாசத்துல முகஞ்சுளிச்சீங்க.. இத உங்க அப்பாருக்கிட்ட சொல்லிடாதீங்க..ஏன்னா எனக்குப் பெண் கொடுக்கற முத்துவேலன் மிகப் பெரிய ஆள்.இதெல்லாம் பிடிக்காது அவருக்கு. அதனால தயவுபண்ணி '.


சொல்லிக் கொண்டே போனான் சங்கரபாண்டி...


*********************************


மூன்றாம் சங்கரனையும் கல்லூரியில் தான் சந்தித்தேன்.


சிகரெட் பழக்கத்துடன் இன்னொரு பழக்கமும் வந்து விட்டது எனக்கு. கவிதை.


அவ்வப்போது எதையாவது எழுதிக் கிறுக்கி அல்லது கிறுக்கி எழுதிப் பார்ப்பது வழக்கமாக இருந்தது.


கல்யாணம்..

*********


அழகான போர்டிகோ

அட்டகாசமான பங்களா..

வண்ணக் கலவைகளின்

அணிவகுப்பு..

என்ன இருந்து என்ன பிரயோஜனம்..


உள் நுழைந்த பிறகெல்லவா

தெரிகிறது

கூரையால் வேயப்பட்ட

ஓட்டைகள் பல உள்ள குடிசை என்று..


இருந்தாலும் மோசமில்லை..

அவ்வப்போது படும்

நிலவொளியை நினைத்துக் கொள்ளலாம்..


என்றெல்லாம் எழுதிப் பார்ப்பதுண்டு..


ஒரு போரடித்த பொழுதினில், நாற்பது பக்கம் நோட் வாங்கி 'ரம்பம் ' என ஒரு பத்திரிகை ஆரம்பித்தேன். 'எல்லோரும் துன்புற்றிருக்க அறுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ' என்பது மோட்டோ. அட்டை டு அட்டை எல்லாம் நானே. நானே சிறுகதை, கட்டுரைகள் கொஞ்சம் கவிதைகள் என எழுதி பக்கத்தை நிரப்பினேன். முதல் பக்கத்த்தில் அட்டைப் படமாக யானை போடலாம் என நானே முயன்றதில் முகம் நீண்ட பசு மாதிரியாகவும் கொஞ்சம் அசைத்துப் பார்த்தால் ஒட்டகச் சிவிங்கி போலவும் படம் வர, கீழே மாடர்ன் ஆர்ட் பை சுந்தரா எனக் கையெழுத்துப் போட்டு விட்டேன்.


அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. முன்னாலெல்லாம் சிரித்துப் பேசிய சினேகிதர்கள் எல்லாம் என் தலை தெரிந்தாலே ஓடி காலேஜ் காண்டானில் ஒளிந்து கொண்டார்கள். அப்படியும் ஓரிரு வெள்ளெலிகள் என்னிடம் மாட்டி ரம்பத்தைப் படித்து ' ரொம்ப நன்னா இருக்குடா ' என்றன. அதில் ஒரு வெள்ளெலி தனது ஒன்று விட்ட அக்கா(எம் எஸ்ஸி படிப்பவள்) விடம் கொடுக்க அவள் படித்து விட்டு என்கதையையும் கட்டுரைகளையும் சீரியஸாக நன்றாக இருக்கிறது என நோட்டின் கடைசிப் பக்கத்தில் எழுதியே கொடுத்து விட, என்னிடம் மிக மெல்லியதான கர்வம் படர்ந்து கொஞ்சம் மிதந்தே வர ஆரம்பித்தேன்.


அப்போது தான் ஒரு நாள் அவன் தயங்கித் தயங்கி என்னிடம் வந்தான்.. அவன் என்றால் சங்கர நாராயணன்.


சங்கர நாராயணன் அமைதியானவன். அவன் பெஞ்சில் இருப்பவர்களைத் தவிர வேறு யாரிடமும் பேச மாட்டான். யாரிடமும் ஜாஸ்தியாகப் பேசி நான் பார்த்ததில்லை. கொஞ்சம் கறுப்பான உருவம்.குட்டி முகம். சுருள் முடி கொஞ்சம் கொண்டவன்.


கல்லூரிக்கு வரும் வழியில் இரூக்கும் அவனியா புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் எனத் தெரியும். எப்போவாவது பேச நேர்ந்தால் நீங்க வாங்க என்று தான் பேசிக் கொள்வது வழக்கம்.


'சுந்தரா, உங்க ரம்பத்தை நான் படிச்சேன்.. '


'அப்படியா எப்படி இருக்கு ' பெருமையாய்க் கேட்டேன்.


' நல்லா இருக்கு, மறுபடி அடுத்த இதழ் கொண்டு வரப் போறீங்களா.. '


'முடியுமான்னு தெரியலைப்பா.. எக்ஸாம் லாம் வருதே '


'இல்லை. நானும் கொஞ்சம் கொஞ்சம் கவிதைகள் எழுதுவேன்.. தரட்டுமா.. '


ஆச்சர்யத்துடன் 'ஓ பேஷா தாங்களேன். இதழ் கொண்டுவந்தாக் கண்டிப்பாப் போடறேன் '


மறு நாள் கொண்டு வந்தான். பைண்ட் செய்யப் பட்ட இரண்டு இரண்டு அல்லது மூன்று குயர் நோட்டுப் புத்தகம். இரண்டிலும் ஒருபக்கத்தில் கவிதைகள், மறுபக்கத்தில் படங்கள்.. நிஜமாகவே எல்லாமே நன்றாக இருந்தன, முத்து முத்தான் கையெழுத்து வேறு. ஒரு நோட்டில் 'விழிகளுக்கு வழி விடுங்கள் ' என ஒரு காவியமே புதுக்கவிதையில் எழுதியிருந்தான்.


எனக்கு மகா ஆச்சர்யம்..ப்ளஸ் கொஞ்சம் மெலிதான பொறாமை.ஆளைப் பார்த்தால் சின்னதாக இருக்கிறான். இவனா.. ' நல்லாவே எழுதியிருக்கீஙக சங்கரா. எதை எடுத்துக்கறது எதை விடறதுன்னே தெரியலை. காலேஜ் ஆண்டு மலருக்குக் கூட கொடுங்களேன். இன்னும் எவ்வளவு எழுதியிருக்கீங்க.படம்லாம் நீங்க தான் போட்டாங்களா.. '


'ஆமாம் ' என்றான் 'இன்னும் ஒரு ஆறு நோட்டு இருக்குங்க.. எழுதி எழுதிப் பார்க்கறது என்னோட வழக்கம். வீட்டில் யாரும் படிக்க மாட்டேங்கறாங்க. இதெல்லாம் வெட்டி வேலைங்கறாங்க.முதல்ல படிப்ப முடிச்சுட்டு உருப்படற வழியப் பாருங்கறாங்க ' என்றான் உண்மையான வருத்தத்துடன்.


'ஓ நோ. அப்படில்லாம் நினைக்காதீங்க. நல்லா எழுதுங்க. பத்திரிகைக்கெல்லாம் அனுப்புங்க. ஓகே. ' என்றேன் நான்.


******


கல்லூரி முடித்த பிறகு அவனைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பல வருடங்கள் கழித்து இருவருடங்களுக்கு முன்னால் மதுரை சென்றிருந்தேன்.


அண்ணாவின் நண்பர் யாரோ வில்லாபுரத்தில் இருக்கிறாராம். 'வா அவனைப் பார்த்து விட்டு வரலாம். வர்ற வழில்ல உனக்கு ஊருக்குக் கொண்டு போறதுக்கு காப்பிப் பொடில்லாம் வாங்கிண்டு வரலாம் ' என்றார் அண்ணன்.


'சரி ' என அவர் பைக்கில் பின்னால் ஏறி வில்லாபுரம் சென்று சில பல சந்துகள் நுழைந்ததில் அண்ணனுக்கு நண்பன் வீடு மறந்து விட்டது. 'கொஞ்சம் இருடா வந்து ரொம்ப நாளாகிவிட்டது. யார்கிட்டயாவது அட் றஸ் காட்டி விசாரிக்கலாம் ' என பைக்கை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்ததில் ஒரு பட்டறை தெரிந்தது. கொல்லன் பட்டறை.


அழகிய பெண்ணின் சிவந்த உதடுகளைப் போல சிவந்து, அவற்றைப் பார்த்து உணர்ச்சிவசப்படும் வாலிபனின் மனம் போல ஜிகுஜிகுவென அடுப்பு எரிந்து கொண்டிருக்க, அதனுள் ஒரு இரும்புக் கம்பி (கடப்பாறை ?> நுழைத்துக் கொண்டும்,எடுத்தவாறும் இருந்தான் ஒரு ஆள்.


அண்ணன் அவன் அருகில் சென்று விலாசம் விசாரிக்க, அலட்சியமாய்க் கண்களை ஓட்டிய நான் அதிர்ந்தேன். இது.. இது.. சங்கர நாராயணன் இல்லை..


உற்று நோக்கியதில் அவன் தான்.. சுருள் முடி கொட்டியிருக்க கொஞ்சம் முடிகள் ஆங்காங்கே இருக்க அவை எல்லாம் நரை. முன் வழுக்கை. முகம் இன்னும் கறுத்திருந்தது. மீசை சாம்பல் நிறமாக மாறியிருந்தது. அழுக்குக் கைலி, நிறம் மாறிய பனியன்.


கண்சுருக்கி அவன் விலாசம் சொல்லிக்கொண்டிருந்த போது - போய்ப் பேசலாம் என நான் நினைத்துக் கொண்டிருந்த போது - பட்டறை உள்ளிருந்து வெள்ளையும் சொள்ளையுமாய் ஒரு ஆள் வந்தார்- 'என்ன சங்கரா.. என்ன அரட்டை. இன்னிக்கு அந்த வேலை முடிக்கத் தாவலை.. கடப்பாறை கொஞ்சம் உடனே கொடுக்கணும்ப்பா..என்னசார் உங்களுக்கு வேண்டும் ' என அண்ணனைக் கேட்க அவர் சொல்ல..அந்த வெ.சொ. சொல்ல ஆரம்பித்தார்.


சங்கரன் அந்த அடுப்பிலிருந்து பாதி சுட்டிருந்த அழகிய ஆரஞ்சு இரும்புக் கம்பியை எடுத்து தரையில் இருந்த இரும்புக் கல்லில் மீது வைத்தான்.


'புறப்படலாமா ' என அண்ணன் வந்து பைக்கை உதைத்துக் கிளப்ப அதில் ஏறி அமர்ந்து திரும்பிப் பார்க்கையில் அந்தக் கவிஞன் இரும்பைச் சம்மட்டியால் அடித்துக் கொண்டிருந்தான்...


**************************


நான்காம் சங்கரனை என்ன முயன்றாலும் என்னால் விலக்க முடியாது. ஏனெனில் அவன் எனது மச்சினன். என் மனைவி சுகந்தியின் அண்ணன்.


'மாப்பிள்ளைக்கு எல்லாம் பண்ணிக் கொடுடி.. ' என சுகந்தியிடம் அடிக்கடி சொல்வான். 'அவரை மாதிரி ஒலகத்துல யாரையும் பார்க்க முடியாது '


இந்த சங்கரன் ஏதோ பிஸினஸ் செய்து கொண்டிருந்தான். டிவி.விஸிஆர், கம்ப்யூட்டர் ஏஸி என எல்லாவிதமான ரிப்பேர்களும் இவனுக்கு அத்துப்படி. டிஷ் ஆண்டென்னா வந்த புதிதில் நிறையவே சம்பாதித்தான் என அடிக்கடி சுகந்தி சொல்வாள்.


ஐந்து வருடங்களுக்கு முன்னால் நான் துபாயில் இருந்த போது ஒரு நாள் ஃபோன். ' மாப்பிள்ளை.. கொஞ்சம் அவசரம்.. பிஸினஸ்க்காக அம்பதாயிரம் தேவைப் படுது. தந்தீங்கன்னா ஒரே வாரத்தில தந்துடறேன். '


நான் சுகந்தியிடம் சொல்ல.. 'பாவம் என்ன கஷ்டமோ அரேஞ்ச் பண்ணுங்கன்னா ' என்றாள். அப்படியே வீட்டு வாடகைக்கு (நான்கு மாதத்திற்கு என ஒரு செக் கொடுக்க வேண்டும் - துபாய் வழக்கம்)வைத்திருந்த பணத்தை எடுத்து டிராப்ட் எடுத்து அவனுக்கு கூரியரில் அனுப்பினேன். (வீட்டு வாடகைக்காக ஆபீஸில் லோன் எடுத்தது வேறு விஷயம்).


அவ்வளவு தான் ஒரு வாரம் பல வாரங்களாகி, பல வாரங்கள் வருடங்களானது தான் மிச்சம். பணம் வரவேயில்லை.


ஒவ்வொரு முறையும் லீவில் சென்னை வரும்போதெல்லாம் 'கண்டிப்பாய்க் கொடுத்துடுவேன் மாப்பிள்ளை ' என்பான் சங்கரன். மாமியார் 'பாவங்க அவன். பிஸினஸ் ல ஏகப்பட்ட நஷ்டம்..ரொம்ப கஷ்டப் படறான். அவ வேற (மாட்டுப் பெண் தான்) இவனை ரொம்ப படுத்தறாள் ' என்பார்.


ஆக சென்னையிலே இருந்து விடலாமென நினைத்து இருமாதங்களுக்கு முன்னால் வந்தவுடனே எனக்குத் தோன்றியது இவனிடம் கேட்கலாமென. (கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணம்)


அவனை வீட்டிற்கு அழைத்து அமரச் செய்து கேட்டால் அலட்சியமாக 'என்னால் எப்படிக் கொடுக்க முடியும்னு நினைக்கிறேள்.. என்கிட்ட என்ன source இருக்கு.. கொஞ்சம் பொறுங்கோ..உங்களையும் சேர்த்து ஒரு அஞ்சு லட்ச ரூபா கடன் இருக்கு.. ஒரு இடத்தில வேலை தர்றேன்னு சொல்லியிருக்க்கா. கிடைக்கற மாதிரி தான் இருக்கு.. முப்பதாயிரம் சம்பளம். கிடைச்சுடுத்துன்னா எனக்குத் தெரிஞ்ச பேங்க் மேனேஜர்ட்ட சொல்லி லோன் எடுத்து உங்களோடதைக் கொடுத்துடறேன்.. '


சுகந்தி, 'அஞ்சு வருஷமாச்சேடா.. '


'இப்போ எங்கடா போகப் போறது உன்னோட பணம்.. '


அவன் சென்று ஒரு மணி நேரத்தில் மாமியாரிடமிருந்து ஃபோன். 'சுகந்தி..சங்குகிட்ட (சங்கரன் தான்) பைசா கேட்டயாமே.. நல்லாக் கேட்ட போ..அவனோட குழந்தைகளோட ஸ்கூல் பீஸ்லாம் ராஜீ (சுகந்தியின் தம்பி) தான் கட்டிக்கிட்டு இருக்கான். ஏதோ அவன் பொண்டாட்டி ஸ்கூல் போய்ட்டு கொஞ்சம் சம்பாதிக்கிறா..அவ டிரஸ்ஸீக்கே அது சரியாப் போறது போ. இவனுக்கும் நல்ல காலம் வரவே மாட்டேங்கறது..நீ ஏண்டா திடார்னு பணம் கேட்ட.. அவ்வளவு பணத்துக்கு அவன் எங்கடா போவான் '


இவை யாவும் ஸ்பீக்கரில் வைக்கப் பட்டதால் நானும் கேட்டேன். சுகந்தி அவள் அம்மாவிடம் பேசி முடித்த பிறகு அவளிடம் கேட்டேன்.


'சுகந்தி இப்போ என்ன பண்றது ? '


'பேசாம இருங்கோன்னா. எப்படியும் நான் அவன்கிட்ட இருந்து வாங்கிடறேன்..அப்படி இல்லேன்னா.. '


'அப்படி இல்லேன்னா '


'அப்படி இல்லேன்னா ' அங்கு ஓடி விளையாடிக் கொண்டிருந்த எனது இரண்டு வயது மகள் வைஷாலியைப் பார்த்தவண்ணம் 'பேசாம இவளை அவன் பையன் வருணுக்குப் பண்ணி வச்சுடலாம். வரதட்சணை லாம் தரமாட்டோம்னு சொல்லிடலாம்.. ' என்றாள் சுகந்தி....


***

tvsankar
26th August 2012, 05:02 PM
chinnakannan,
romba azhagana nadai. Sujatha vin style ai nyabgapaduthiyadhu. analum.. Ungalin adaiyalamaga irukiradhu....
Parkum, nadakum vishayathai... interest aga solla.. oru thani thanmai vendum. ungalidam adhu neraiya irukiradhu.

kadhai mudiyara andha kadaisi varigal... romba azhagu..... rasithen..............

Keep it up... innum niraiya kadhaigalai edhirparkiren..............

Madhu Sree
26th August 2012, 06:06 PM
enakku evlo thooram solla thagudhi irukunu theiryala... irundhaalum... very nice :)


'அப்படி இல்லேன்னா ' அங்கு ஓடி விளையாடிக் கொண்டிருந்த எனது இரண்டு வயது மகள் வைஷாலியைப் பார்த்தவண்ணம் 'பேசாம இவளை அவன் பையன் வருணுக்குப் பண்ணி வச்சுடலாம். வரதட்சணை லாம் தரமாட்டோம்னு சொல்லிடலாம்.. ' என்றாள் சுகந்தி....


***


idhu konjam too much :rotfl2: ippadilaam yaarum sollamaattaaa... sari, jokeaa ezhudha try panniyirukeengannu puriyudhu :D ...

yedhaachum new story ezhudhalaame ck :D

chinnakkannan
26th August 2012, 06:37 PM
மிக்க நன்றி டிவி ஷங்கர்..எழுதணும் எழுதறேன்..

மிக்க நன்றி மதுஸ்ரீ.. புதுசா எழுதப் பார்க்கறேன்..ஏற்கெனவே எழுதிய, எங்கும் அனுப்பாத கதை(ஒரு போட்டிக்கு மட்டும் அனுப்பினேன்..பரிசு பெறவில்லை) ஒண்ணு இப்போ போட்டிருக்கேன்.. பாருஙக்..

madhu
27th August 2012, 04:54 AM
சங்கர சாஸ்திரிகள், சங்கர பாண்டி, சங்கர நாராயணன், சங்கர மச்சினன்.. இதோட சேர்த்து எனக்கு தெரிஞ்ச அஞ்சாவது சங்கரன்...

பார்வதியின் ஹஸ்பெண்ட். அதாங்க பரமசிவன்னு இன்னொரு பேரும் உண்டு. அது கிடக்கட்டும்.

மயிலம்மா சொன்னது போல நீளமாக இருக்க காரணம் நாலு தனிக் கதைகள் ஒரு தலைப்பில் முடிச்சு போட்டு ஒண்ணா இருப்பதுதான். தண்ணிப் பாலாக தாராளமா ஆக்கிடலாமே ? எதுக்கு கண்டென்ஸ்டு மில்க்கா வச்சிருக்கீங்கன்னு மயிலம்மாவுக்கு சந்தேகம். :happydance:

விசேஷம் என்னவென்றால் இந்த கதைகள் எல்லாமே அனேகமா எல்லாருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்க சான்ஸ் இருக்கு.

நாங்கெல்லாம் அபீட் எடுக்க முடியலேன்னா பத்து தோப்புகரணம் போட்டுட்டு பம்பரத்தை வாங்கிக்கிட்டு போக சொல்லிடுவோம். சென்னைவாசிகள் ரொம்ப சாஃப்டு. :mrgreen: முதல் முதலாக மேன்ஷனில் தங்கி இருந்தபோது என் ரூம் மேட்டின் நண்பன் கவிதை எழுதுவான் என்று தெரிந்தபோது அவனிடம் அது பற்றி விசாரித்தேன்.( வேணாண்டா.. சொந்த செல்வுல சூனியம் வச்சுக்காதே - என் ரூம்மேட் ). அவன் கொடுத்த எட்டு நோட் புத்தகங்களிலும் கண்ணதாசனாக உருவாகக் கூடிய கவிதை விதைகளைப் படித்தேன். பிற்காலத்தில் அவன் திருப்பூர் பக்கம் ரெடிமேட் தொழிற்சாலையில் ஏதோ சின்ன வேலையில் இருப்பதாக கேள்விப்பட்டேன் :(

வாட் ? காசையும் கொடுத்துட்டு பொண்ணையும் கொடுக்குறதா ? அதெல்லம் ஹைதர் காலம். இப்போ காசு கொடுத்தாலும் கல்யாணத்துக்கு பெண் கிடைக்கிறதில்லே !

எழுதுங்க.. எழுதுங்க... எழுதிக்கிட்டே இருங்க :thumbsup:

pavalamani pragasam
27th August 2012, 07:52 AM
எல்லாமே வாழ்கையின் விநோதங்கள்! பெருமூச்சு வருகிறது. நிறைய நண்பர்கள் பற்றிய சினிமா பாத்தாச்சி- புன்னகை மாதிரி. மதுர கத மனச தொட்டுச்சி-எங்க ஊருல்ல? அப்புறம் கடைசி வரியை ஊகிச்சிட்டேனே! மொத்தத்துல நல்லா இருக்கு.
அப்புறம், திண்ணையில் ஒரு காலத்தில் என் கவிதைகளும், கதைகளும் வாரா வாரம் வந்ததுண்டு, என் கதை, கவிதை எதுவும் எந்த போட்டியிலும் பரிசு வாங்கியதில்லை!

Shakthiprabha
27th August 2012, 11:03 AM
ck,

enakelaam enna arugathai irukku comment panna :) therila....
PROFESSIONAL writing....

I bow before your writing skills :bow:

madhu
27th August 2012, 11:04 AM
ck,

enakelaam enna arugathai irukku comment panna :) therila....
PROFESSIONAL writing....

I bow before your writing skills :bow:

காட்வின் ஆஸ்டின் சிகரத்தை எவரெஸ்ட் இப்படி புகழ்வதை இந்த பரங்கிமலை ரசிக்கிறது !

Shakthiprabha
27th August 2012, 11:25 AM
madhu idhelaam over thannadakkam.... :hammer:

madhu
27th August 2012, 11:28 AM
madhu idhelaam over thannadakkam.... :hammer:

எனக்குத் தெரியும். அதனால்தான் நீங்க ஓவர் தன்னடக்கமா இருந்ததாலே நான் வந்து விளக்கமா சொன்னேன் :(

chinnakkannan
27th August 2012, 11:37 PM
நன்றி மதுண்ணா பிபிக்கா ஷக்தி.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை..
ஷக்தி ஏதோ கொஞ்சம் சுமாரா எழுதுவேன்..இப்ப என்ன எழுத வரமாட்டேங்குது..:sad:

madhu
28th August 2012, 05:59 AM
நன்றி மதுண்ணா பிபிக்கா ஷக்தி.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை..
ஷக்தி ஏதோ கொஞ்சம் சுமாரா எழுதுவேன்..இப்ப என்ன எழுத வரமாட்டேங்குது..:sad:

உங்களை யாரு எழுதச் சொன்னது ? :evil: என்னவோ ரொம்பத்தான் !! :devil:

நாங்க சொல்றதெல்லாம் கதையை அப்படியே டைப் அடிச்சு போஸ்ட் பண்ணுங்க அப்படின்னுதான் :yes: