சிவாஜியின் சாதனை சிகரங்கள்

பின்னுரை

இந்த தொடரை ஆரம்பித்து எழுதிக் கொண்டிருந்த போது இந்த விஷயங்களை இப்போது எழுத வேண்டிய தேவை என்ன என்ற எண்ணம் ஒரு சிலருக்கு தோன்றியிருக்கலாம். நண்பர் Plum போன்றவர்கள் அதை வெளிப்படையாக கேட்கவும் செய்தார்கள். நடிகர் திலகத்தின் படங்களை காப்பாற்றி வைத்தாலே, 2080-லும் இருக்கக்கூடிய ரசிகன் சொக்கி போவானே என்று அழகான ஒரு பாய்ண்ட் சொன்னார். உண்மைதான். எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர் ரசிக்கப்படுவார். அதில் இங்கே யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் அவரை ஒரு சிறந்த நடிகராக மட்டுமே முன்னிறுத்தி அவரது பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை மறைத்து விட பல காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. அந்த கருத்து நாளைடைவில் பரவலாக பரப்பபட்டது.

நடிகர் திலகம் ஒரு அற்புதமான நடிகர். ஆனால் அவரது படங்கள் எப்போதாவது தான் சிறப்பாக ஓடியிருக்கிறது. மினிமம் காரண்டி கிடையாது என்றெல்லாம் சொல்ல, எழுத ஆரம்பித்தார்கள். முதலில் கர்ணன் தோல்வி, பிறகு சிவந்த மண் தோல்வி, உத்தம புத்திரன் தோல்வி என்றெல்லாம் பல வருடங்களாக சொல்லி சொல்லி வந்தவர்கள் இப்போது அண்மையில் வீர பாண்டிய கட்டபொம்மன் தோல்வி என்று எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியே போனால் வசந்த மாளிகை கூட தோல்வி படம் என்று சொல்லுவார்கள். அதிலும் இணைய தளமும் வலைப்பூக்களும் வந்த பிறகு விஷயம் தெரியாதவர்கள், ஏதோ கொஞ்சம் தெரிந்தவர்கள் எல்லாம் படம் ஓடிய அரங்குகளில் இருந்த டி.சி. ஆரை பக்கத்திலிருந்து பார்த்தது போல கமன்ட் வேறு. இன்று இணையதளத்திலேயே வாழும் இளைய தலைமுறையும் அடுத்தடுத்த தலைமுறைகளும் இதை உண்மை என்றே நம்பி விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். உடனே அடுத்த கேள்வி எழும். இவர்கள் சொல்வதாலோ, எழுதுவதாலோ கட்டபொம்மனோ வசந்த மாளிகையோ தோல்விப் படமாகி விடுமா? அப்போது இந்த எழுத்துகளை பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும் என்ற வினா வரும், வந்திருக்கிறது. இதை கேட்கும் போது நான் படித்த ஒரு கட்டுரை நினைவிற்கு வருகிறது.

ஒரு தமிழறிஞர் ஒரு வார இதழில் நாம் அன்றாட வாழ்வில் தமிழ் சொற்களை விடுத்து பிற மொழி சொற்களை பயன்படுத்துவதை ஒரு குறையாக சொல்லியிருந்தார். உதாரணமாக அருவி என்ற தமிழ் சொல்லை விடுத்து ஆங்கிலத்தின் water falls -ஐ மொழி பெயர்த்து நீர் வீழ்ச்சி என்று சொல்லுகிறோம். சாளரம் என்ற சொல்லை விடுத்து ஜன்னல் என்று சொல்லுகிறோம். இப்படி போனது அவரது வாதம். ஒரு வாசகர் கடிதம் அனுப்புகிறார். பயன்படுத்த எளிதாக உள்ளதும் அனைவருக்கும் தெரிந்த வார்த்தையான ஜன்னல் என்ற சொல்லை விடுத்து சாளரம் என்று சொல்ல வேண்டுமா? இப்படி கேட்டிருந்தார் அவர். அதற்கு அறிஞர் சொன்ன பதில். தவறில்லை. ஆனால் ஜன்னல் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தினால் நாளடைவில் சாளரம் என்ற சொல் புழக்கத்திலிருந்து மறைந்து போகும். ஜன்னல் மட்டுமே நிலை நிற்கும். இது வருங்கால வரலாற்று ஆர்வலர்களுக்கு நாம் செய்யும் துரோகம். காரணம் ஜன்னல் என்பது போர்ச்கிசிய சொல். வரலாற்று அறிஞர்கள், போர்ச்கிசியர்கள் இந்தியாவிற்கு/ தமிழகத்திற்கு வந்த பிறகு தான் கட்டிடங்களுக்கு ஜன்னல் வைக்கும் முறையே வந்தது என்ற முடிவுக்கு வருவார்கள். யாரும் சொல்லி தராமலே அது குடில் ஆனாலும் கோபுரம் ஆனாலும் வெளிச்சமும் காற்றும் வருவதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி அந்த இடைவெளி வழியாக விலங்கினங்கள் உள்ளே வராமல் இருக்க கம்பிகள் கட்டைகள் வைத்து அடைத்து அதற்கு சாளரம் என்றும் பேரிட்டவன் தமிழன். அவனுக்கு போர்ச்கிசியர்கள் வந்து சொல்லிக்கொடுத்தார்கள் என்ற வரலாற்று பிழை சரித்திரத்தில் இடம் பெறாமல் இருக்கவே இந்த முயற்சி என்று முடித்தார் அறிஞர்.

அது போல நாளை தமிழ் திரைப்பட வரலாறு எழுதப்படும் போது நடிகர் திலகத்தை பற்றிய வரலாற்று பிழைகள் இடம் பெற்று விடக்கூடாது என்பதே நமது விருப்பம். என்னால் தமிழ் கூறும் நல்லுலகம் மொத்தத்திற்கும் இதை சொல்ல முடியாவிட்டாலும் கூட, இங்கே எழுதுவதன் மூலம் கணிசமான ஆட்களிடம் இதை கொண்டு சேர்க்க முடிந்ததில் ஒரு மன நிறைவு.

இந்த தொடரின் ஆரம்ப வித்து விழுந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு. மதுரைக்கு சென்றிருந்த போது அங்கே கர்ணன் படம் சென்ட்ரல் திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. அங்கே சென்ற எனக்கு அங்கிருந்த ரசிகர்கள் மூலமாக ஒரு கையேடு (Booklet) கிடைத்தது. அதில் நடிகர் திலகத்தின் படங்கள் மதுரையில் மற்றும் சென்னையில் நிகழ்த்திய சாதனைகளை தொகுத்திருந்தனர். நடிகர் திலகத்தின் சாதனைகளை இங்கே சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அவற்றுடன் எனக்கு தெரிந்த தகவல்களையும் இணைத்து கொண்டேன்.

வைரமுத்துவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் என்னுடைய சாயங்காலங்களை சந்தோஷப்படுத்திய, ஏன் என் காலைகளை, மதியங்களை மாலைகளை இரவுகளை சந்தோஷப்படுத்திய, தன் நடிப்பின் மூலமாக ஒரு பரவச உணர்வு நல்கிய அந்த மகா கலைஞனுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு காணிக்கை இந்த தொடர். இது மதுரையை மட்டுமே (சென்னையையும்) மையமாக வைத்து தொகுக்கப்பட்ட ஒன்று. இது போல திருச்சியிலும் சேலத்திலும், கோவையிலும் நெல்லையிலும் மற்றும் தமிழகத்தின் பல ஊர்களிலும் நடிகர் திலகம் புரிந்த சாதனைகள் எத்தனை எத்தனையோ.

இந்த தொடருக்கு நான் நன்றி சொல்ல வேண்டியது இந்த கையேட்டை வழங்கிய எங்கள் மதுரையின் காமராஜர் சாலை அரசமரம் செவாலியே சிவாஜி குரூப்ஸ்-ஐ சேர்ந்தவர்களுக்கும், நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் பேப்பர் கட்டிங்களை தொகுத்து வழங்கிய சென்னை ரசிகர்களுக்கும், அதையும் தன்னிடம் இருந்த நாளிதழ் விளம்பரங்களையும் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டு, நான் எந்த நேரத்தில் கூப்பிட்டு தகவல்கள் கேட்டாலும் முகம் சுளிக்காமல் கொடுத்துதவிய ராகவேந்தர் அவர்களுக்கும், அந்த விளம்பரங்களை இங்கே அப் லோட் செய்த ஜோ அவர்களுக்கும். தகவல்கள் அளித்து உதவிய செந்தில்குமார் போன்றவர்களுக்கும், இதை ஒரு தனி திரியாக அனுமதித்த ஹப் moderators, இந்த தொடருக்கு பெரிதும் அதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.

அன்புடன்