சின்னத்திரையில் ஒரு பாகுபலி: தமிழ் கடவுள் முருகன் பிரமாண்ட தொடக்கம்


சின்னத்திரை வரலாற்றின் புதிய தொடக்கமாக அமைந்திருக்கிறது விஜய் டி.வியில் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள தமிழ் கடவுள் முருகன் தொடர். பல லட்சம் செலவு செய்து பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்திருந்தனர். தமிழ் கடவுளின் கதை என்பதாலும், தங்களுக்கு தெரிந்த கதை என்பதாலும் நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான தொடரை பலரும் பார்க்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தின் பிரமாண்டத்தை நினைவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தது. நவீன தொழில் நுட்பத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்தி இருந்தார்கள்.


அசுர குலத்தை அழித்துவிட்டு கேளிக்கையில் விழுந்து கிடக்கிறான் இந்திரன். அரசுகுலத் தலைவனின் மகள் மீண்டும் அசுரகுலத்தை உருவாக்கி தேவர் குலத்தை அழிப்பேன் என்று தன் தந்தையின் பிணத்தின் முன் சபதம் கொள்கிறாள். அசுரகுலத்தின் குரு சுக்ராச்சாரியாரின் ஆலோசனையின் பேரில் காட்டில் கடும் தவம் புரியும் பிரமனின் மகன் பார்த்திபனை தன் அழகால் மயக்கி மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். நரகாசுரனும் அவரது சகோதர்களும், சகோதரி அஜிமுகியும் பிறக்கிறார்கள். அனைவரும் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து அற்புதமான வரங்களை பெறுகின்றனர்.


வரத்தை பெற்ற அசுரர்கள் தேவர் குலத்தை அழிக்கும் வேலையைத் துவங்குகிறார்கள். கண்ணில் பட்டவர்களை வெட்டி சாய்கிறார்கள். அடுத்து இந்திரலோகத்துக்கு படையெடுக்க திட்டமிடுகிறார்கள். நிலமை கட்டுக்கடங்காமல் செல்லவே சிவன் விழிப்படைகிறார். அரசுரர்களை அழிக்க அவர் ஒரு சக்தியை உருவாக்க நினைக்கிறார். இதோடு முதல் ஒரு மணி நேர எபிசோட் நிறைவடைந்தது. அவர் உருவாக்கும் சக்திதான் முருகன்.


குறைந்த விளம்பரங்களுடன் நேற்றைய எபிசோட் ஒளிபரப்பானது அனைவருக்கும் ஆச்யர்த்தை ஏற்படுத்தியது. தொடர்ந்த அப்படி ஒளிபரப்பாகுமா என்று சொல்ல முடியாது. திரைப்படங்களுக்கு முதல் ஓப்பனிங் கிடைப்பதை போன்று முதன் முறையாக ஒரு சீரியலுக்கு பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்தது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினமலர்