சினிமாவில் நடிக்க ஆசையில்லை! -சீரியல் நாயகி கிருத்திகா -


திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் அறிமுகமானவர் கிருத்திகா. அதையடுத்து செல்லமே, என் இனிய தோழியே, கேளடி கண்மணி, பாசமலர் என பல சீரியல்களில் நடித்தவர் தற்போது வம்சம் சீரியலில் நடித்து வருகிறார். மேலும், பெரும்பாலான டிவி நடிகைகளுக்கு அடுத்தபடியாக சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்கிற ஆசை இருந்து வரும் நிலையில், கிருத்திகாவோ தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளியும் இல்லை என்கிறார்.


அதுகுறித்து அவர் கூறுகையில், சீரியல்களில் நான் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறேன். ஒரு சீரியலில் பாசிட்டிவான வேடம் என்றால், இன்னொரு சீரியலில் நெகடீவ் கலந்த வேடம். மற்றொரு சீரியலில் இல்லத்தரசி வேடம் என நடிக்கிறேன். அப்போது அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப முழுமையான நடிப்பை வெளிப்படுத்துகிறேன். இதனால் டிவி சீரியல் பார்க்கம் நேயர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் இருந்து வருகிறது.


தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் நடிக்கிறேன். இந்த சீரியல் எனக்கு நல்ல ரீச் கொடுத்துள்ளது. இதில் பிசியாக இருப்பதால் வேறு சீரியல்களில் நடிக்க நேரம் இல்லை என்று கூறும் கிருத்திகாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் துளியும் இல்லையாம். காரணம், சீரியலிலேயே நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. அதோடு அலுவலகம் செல்வது போன்று காலையில் ஸ்பாட்டுக்கு சென்றால் மாலை வீடு திரும்பி விடலாம். அதனால் இதுவே எனக்கு போதுமானதாகவும், மனநிறைவாகவும் உள்ளது என்கிறார் கிருத்திகா.

நன்றி: தினமலர்