தமிழ் தொடர்களில் அதிகரிக்கும் வன்முறையும், கவர்ச்சியும்




திரைப்படங்களை போன்று சின்னத்திரை தொடர்களுக்கும் தணிக்கை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நேரத்தில் தமிழ் தொடர்களில் வன்முறைகளும், கவர்ச்சியும் அதிகரித்து வருகிறது.


தொடர்களில் பரபரப்பைகூட்ட வேண்டும் என்பதற்காகவும், பார்வையாளர்களை எப்போதும் ஒருவித பதட்டத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும் வன்முறை காட்சிகள் அதிகரித்து வருகிறது. உயர்நீதிமன்ற நீதிபதியே வருந்தும் அளவிற்கு அண்ணிகள், மாமியார்கள் என பலரும்... வில்லிகளாக காட்டப்பட்டு வருகிறார்கள்.


கர்ப்பிணி பெண்ணை எப்படி கரு கலைக்க வைப்பது. வலியே தெரியாமல் எப்படி கொலை செய்வது, கொலை செய்ய அடியாட்களை ஏற்பாடு செய்வது எப்படி? கூடவே இருந்து குழிபறிப்பது எப்படி? பாலில் விஷம் கலப்பது எப்படி, சாப்பாட்டில் விஷம் கலந்து கொல்வது எப்படி? கொலை செய்துவிட்டு தடயத்தை மறைப்பது எப்படி என்பது மாதிரியான காட்சிகள் அதிகம் இடம்பெறுகிறது.


டப்பிங் சீரியல்களில் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை. தற்போது ஒளிபரப்பாகி வரும் ஒரு பாம்பு சீரியலில் பாம்பு பெண்ணாக மாறும்போது சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் அணியும் ஆடைகளை விட குறைவான ஆடைகள் அணிந்து கவர்ச்சி காட்டுகிறது. இவை எல்லாவற்றையும்விட தற்போது பாலியல் பலாத்கார காட்சிகள்கூட தொடர்களில் வர ஆரம்பித்து விட்டது. இதன் அடுத்த கட்டம் என்ன என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.



நன்றி: தினமலர்