கதாசிரியர் ஆனார் அப்சரா .


மலையாள சின்னத்திரையிலிருந்து தமிழுக்கு வந்தவர் அப்சரா. பல சீரியல்களில் விதவிதமான கேரக்டர்களில் நடித்து வந்த அப்சரா தற்போது மரகதவீணை சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். அப்சராவின் புதிய அவதாரம் கதாசிரியர். தற்போது ஒளிபரப்பாகி வரும் விதி தொடரின் கதையை எழுதியவர் அப்சரா. இதுவரை பல சிறு கதைகள் எழுதியுள்ள அப்சரா நிறைய நாவல்களையும் எழுதி வருகிறார். அப்படி எழுதப்பட்ட ஒரு நாவலையே விதி சீரியலுக்கான கதையாக மாற்றியிருக்கிறார்.


கூட்டுக் குடும்பமாக வாழ்கிறவர்கள். திருமணமான பிறகு பணம், வேலை, சேமிப்பு, எதிர்காலம் என்று சந்தோஷங்களை தொலைத்துவிட்டு ஓடுகிறவர்களின் கதை. தற்போது இந்த கதையின் பிளாஷ்பேக் பகுதிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில எபிசோட்களுக்கு பிறகு முக்கிய கதைக்கு வருகிறது சீரியல்.


"மாமியார் கொடுமை, கர்ப்பிணி கொடுமை என்று வழக்கமான கதையாக இல்லாமல் இன்றைய குடும்ப சூழ்நிலைகளை சுட்டிக் காட்டி நாம் எந்த மாதிரியான இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை சுட்டுக்காட்டும் விதமாக விதியின் கதையை அமைத்துள்ளேன். சினிமாவுக்கு கதை எழுதுவீர்களா என்று கேட்கிறார்கள். ஒரு விஷயத்தை 2 மணிநேரத்துக்குள் சொல்வதற்கு நிறைய பயிற்சி வேண்டும். இப்போதைக்கு அதற்கு நான் தயாராக இல்லை. மலையாளத்தில் எழுதும் கதையை தமிழில் சொல்லி எழுத வைக்கிறேன். விரைவில் தமிழ் எழுத கற்றுக் கொள்வேன்" என்கிறார் அப்சரா.

நன்றி: தினதந்தி