`காதல் கணவரை `டிக் டாக்'ல நடிக்க வைக்க நான் பட்ட பாடு இருக்கே...!" - `ராஜா ராணி' ஶ்ரீதேவி

``நான் மட்டும் பண்ணினா எப்படி? என் கணவர் முன்பு கொஞ்சம் தயங்கினார். அவரை நடிக்க வைக்க ரொம்ப மெனக்கெடுவேன்; மிரட்டவெல்லாம் செய்ய மாட்டேன்."
``காதல் கணவரை `டிக் டாக்'ல நடிக்க வைக்க நான் பட்ட பாடு இருக்கே...!
சின்னத்திரைப் புகழ் நடிகை ஶ்ரீதேவி, தன் காதல் கணவருடன் `டிக் டாக்'கிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். அவரிடம் நடிப்பு, பர்சனல் விஷயங்கள் குறித்துப் பேசினோம்...

``நடிப்புப் பயணம் எப்படிப் போயிட்டு இருக்கு?"

``இப்போ விஜய் டிவி `ராஜா ராணி' சீரியல்ல நடிக்கிறேன். இந்த சீரியல் உட்பட மூணு சீரியல்கள்லதான் நெகட்டிவ் ரோல். நெகட்டிவா நடிக்கிறதும் ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருக்கு. ரெண்டு வருஷத்தைக் கடந்து சீரியல் ஒளிபரப்பாகுது. ஆனாலும் மக்கள் இன்னும் பாசிட்டிவ் ஶ்ரீதேவியாகவே என்னைப் பார்க்கிறாங்க. இந்த சீரியல் டீம் மொத்தமும் ஜாலியா சிரிச்சுப் பேசிட்டு இருப்போம். தினமும் வேலைக்குப் போகிறோம்ங்கிற உணர்வு இல்லாம சந்தோஷமா நடிக்கிறோம். தவிர, ஷூட்டிங் ஸ்பாட்ல ஃப்ரெண்ட்ஸ் பலரும் சேர்ந்து, `டிக் டாக்' வீடியோஸ் பண்ணுவோம். எங்களுக்குள் எக்கச்சக்க ஃபன் நடக்கும்."



``சின்னத்திரையில நீண்டகாலமா வேலை செய்ற அனுபவம் பற்றி..."

``ரொம்ப நல்லா இருக்கு. சின்னத்திரைக்கு வந்து பத்து வருஷம் முடிஞ்சுடுச்சு. இதனால, நிறைய அனுபவம் கிடைச்சுடுச்சு. ஆனாலும் போதும்ங்கிற எண்ணம் இன்னும் வரலை. ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு அனுபவம் கொடுக்கிறதால, உற்சாகமா நடிக்கிறேன். ஆனா, `எவ்வளவு அடிச்சாலும் தாங்குவா'னு சொல்ற மாதிரி, ரொம்பப் பாவப்பட்ட கேரக்டர் மற்றும் `அருந்ததி' மாதிரி பவர்ஃபுல் ரோல்ல நடிக்க ஆசை உண்டு."


``சினிமாவில் நடிக்க விருப்பமில்லையா?"

``காலேஜ்ல படிச்சுகிட்டு இருக்கும்போது, `புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் தனுஷூக்கு தங்கச்சியா நடிச்சேன். பிறகு படிப்பு, சின்னத்திரை நடிப்புனு பிஸியாகிட்டேன். அதனால, சினிமாவில் வாய்ப்புகள் வந்தும் நடிக்க முடியாம போச்சு. இப்போ சினிமாவில் நடிக்கத் தயார்தான்."



``உங்க கணவரும் நீங்களும் வளர்ப்புப் பிராணிகளின் பிரியர்கள். அந்த அனுபவம் பற்றி..."

``வளர்ப்புப் பிராணிகளின் மேல நாங்க கொண்டிருந்த அன்புதான், எங்க காதல் திருமணத்துக்கும் அஸ்திவாரம். என் கணவர் அசோக் சிந்தாலா, பெட் போட்டோகிராபர். பெங்களூருவில் ஐடி நிறுவனத்துல வேலை செய்துகிட்டே, போட்டோகிராபியிலயும் கவனம் செலுத்துறார். நான் சென்னையில இருந்தபடியே வளர்ப்புப் பிராணிகளின் நலனுக்கான சில செயல்பாடுகளைச் செய்கிறேன். எங்களில் ஒருவருக்கு ஃப்ரீ டைம் கிடைக்கிறபோது, இன்னொருத்தரை மீட் பண்ண கிளம்பிடுவோம். நாங்க வளர்க்கிற நாய்கள்தான், எங்களோட ஒருமித்த அன்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவரோட போட்டோகிராபி வேலைக்கு என்னாலான உதவியைச் செய்றேன். அவரும் என் நடிப்புக்கு ரொம்ப உதவுவார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தும் என்னோடு நேரம் செலவிடுவார். வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்கு."



`` 'டிக் டாக்'ல தம்பதியா கலக்கறீங்க போல..."

(சிரிக்கிறார்) ``அப்படியெல்லாம் இல்லை! ஆக்டிங், டான்ஸ், எக்ஸ்பிரஷன்ஸ்னு நம்ம நடிப்பில் நிறைய வெரைட்டி காட்ட முடியும்னுதான், `டிக் டாக்'ல தொடர்ந்து வீடியோஸ் வெளியிடுறேன். நான் மட்டும் பண்ணினா எப்படி? என் கணவர் முன்பு கொஞ்சம் தயங்கினார். அவரை நடிக்க வைக்க ரொம்ப மெனக்கெடுவேன்; மிரட்டவெல்லாம் செய்ய மாட்டேன். இப்போ, வீடியோவில் நடிக்க என் கணவருக்கும் விருப்பம்தான். அதனாலதான் நாங்க இருவரும் சேர்ந்து நிறைய வீடியோஸ் ரிலீஸ் பண்றோம். அப்போ எங்களுக்குள் நிறைய காமெடி நடக்கும். இதனால எங்களை நிறைய பேர் பாராட்டுறாங்க" எனப் புன்னகைக்கிறார், ஶ்ரீதேவி.