ஹீரோ எனது டார்க்கெட் இல்லை - ‛அது இது எது ஜார்ஜ்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் ஜார்ஜ். குறிப்பாக, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற எபிசோடில் நடித்த பிறகு தனுஷின் மாரி படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற அவர், தற்போது மேலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


தான் நடிகரானது பற்றி ஜார்ஜ் கூறுகையில், எனக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் மிகுதி. அதனால் பள்ளிகளில் நடக்கும் நாடகங்களில் நடித்து வந்தேன். எனது நடிப்புத்திறமையைப்பார்த்து எனது பெற்றோர் என்னை உற்சாகப்படுத்தினர். எனது அம்மா ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா போன்ற நடிகனாக வேண்டும் என்பார். எனது தந்தையோ மணிவண்ணன், ஜனகராஜ் போன்று நடிகராக வேண்டும் என்று சொல்வார். இப்படி பெற்றோரே என்னை உற்சாகப் படுத்தியதால் நடிப்பில் எனக்கான ஆர்வம் அதிகரித்தது.


அதனால் விஜய் டிவியின் ஒரு நிகழ்ச்சியில் கான்சப்ட் ரைட்டராக என்ட்ரி கொடுத்தேன். பின்னர் அது இது எது நிகழ்ச்சியில் நடிக்கத் தொடங்கினேன். பல நடிகர்களின் கெட்டப்பில் நடித்தபோதிலும் மணிவண்ணன் கெட்டப்பில் நடித்த போது எனக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தது. அதையடுத்து, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா -என்ற எபிசோடில் எனது நடிப்பைப்பார்த்த இயக்குனர் பாலாஜிமோகன், மாரி படத்தில் என்னை நடிக்க வைத்தார்.


அதன்பிறகு இப்போது விக்ரம் வேதா, நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவும் தப்பில்ல, ஜூலியும் 4 நண்பர்களும் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துள்ளேன். அதனால் இப்படங்கள் வெளியாகும்போது சினிமாவில் எனக்கென்று ஒரு இடம் கிடைக்கும். அதோடு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது எனது டார்க்கெட் இல்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடிக்கவே ஆசைப்படுகிறேன். மேலும், என்னதான் சினிமாவில் பிசியானாலும் சின்னத்திரையில் எப்போதும் போல் எனது பயணம் தொடரும் என்று கூறும் அது இது எது ஜார்ஜ், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். அது எனக்கு ஆத்மதிருப்தியை கொடுக்கிறது என்கிறார்.

நன்றி: தினமலர்