நேற்றில் மட்டும் வாழ்ந்தேன் நேற்று
இன்றில் மட்டும் இருக்கிறேன் இன்று
படிக்காத பக்கங்கள் இன்னும் எத்தனை
புரட்டும் இப்புத்தகமிதில் இதுவரை
முடிந்த அத்தியாயங்கள் நிறையத்தான்
நடந்த நாடக காட்சிகள் ஏராளம்தான்
எத்தனை திருப்பங்கள் எத்தனை மர்மங்கள்
எதிர்பாராத நிகழ்வுகள் கிளறிய ஆர்வங்கள்
ஆச்சர்யங்கள் ஏமாற்றங்கள் நிறைவுகள்
புதிது புதிதாய் தோன்றின கதாபாத்திரங்கள்
காணாமல் போயின பல நட்சத்திரங்கள்
கண்ணுக்குத் தெரியாத விரல்கள் இயக்கும்
கருத்தைக் கவரும் அதிசய பொம்மலாட்டம்
பொதுவாய் புரியக்கூடிய கதையோட்டம்
அடிமனதில் படியும் ஒரு ஆற்று வண்டல்
அதில் வளரும் வளமான கற்பனைகள்
பட்டின் இழையாய் ஊடூறுது ஒரு கரு
அதன் அர்த்தம் தேடுது என் மனது
நோகாமல் உதிரும் காய்ந்த சருகு
அதுபோல் அமைதியான முற்றுப்புள்ளி
கதையின் முடிவில் காத்திருக்கும் என்ற
கனவில் கணங்கள் கடிதாய் விரையும்