Results 1 to 10 of 92

Thread: பாசுரம் பாடி வா தென்றலே!

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாசுரம் பாடி வா தென்றலே

    ஆறு..


    கறுப்பு என்போம்..அடைக்கறுப்பு என்போம்.. கறுப்பு நிறம் தான்..அதுவே அடர்ந்த கறுப்பு என்றால்.. என்னவென்று பார்க்க முடியாத கருமை.. அதையே அந்தகாரம் என்பர்..

    அப்படி இரவு ஆரம்பித்து மூன்றாம் ஜாமம் முடிந்து நான்காம் ஜாமம் துவங்கிவிட்ட அந்த வேளையில் அந்த அடர் கானகத்தில் ஒரு வித அலட்சிய அமைதி நிலவியிருந்தாலும் எங்கு நோக்கிலும் அந்தகாரம் சூழ்ந்தே இருந்தது..

    இருட்டு தான் என நினைத்த படியால் தங்களுக்குள் மெல்லிய காற்றலை அடித்ததால் சற்றே உரசிக் கொள்ளலாம் என நினைத்த சில மரங்களின் கிளைகள் கொஞ்சம் காற்று நின்று போனதால் அப்படியே உறைந்த நிலையில் உறங்கத் தான் செய்தன..

    அந்தக் கானகத்தில் நடுவில் இருந்த பாழடைந்த கோவிலில் மட்டும் ஒரு வெளிச்சப் பொட்டாய் ஒளி தெரிந்து கொண்டிருந்தது..சற்று அருகில் சென்று பார்த்தால் அந்தக் கோவிலின் உள் இருந்த கருவறைக்குமுன் இருந்த அறையில் ஏற்றிவைக்கப் பட்ட சிறு நெய் விளக்கு என்று தெரியும்..

    அந்த அறையில் யாரோ நடமாட அதில் கொஞ்சம் காற்றசைய அந்த தீபமும் கொஞ்சம் ஆட அந்த நிழல் சற்றே பெரிதாய் சுவற்றில் தெரிந்து தெரிந்து மறைந்தது..

    அந்த நிழலுக்குச் சொந்தக்காரன் “ஏன் இன்னும் அவர் வரவில்லை..வந்திருக்க வேண்டுமே” எனச் சொல்லிக் கொண்டு வானத்தை கொஞ்சம் எட்டிப் பார்த்தான்..அமாவாசைக்கு மறுதினம் ஆனதினால் இருட்டாய் இருந்தாலும் போனால்போகிறதென்று நடை பழக வந்திருந்த சில நட்சத்திரங்கள் அவனைப் பார்த்துக் கண்சிமிட்டின..

    “ம்க்கும்” என்ற கனைப்புச் சத்தம் கேட்டு மறுபடியும் அந்தக் கோவிலினுள் நுழைந்த அவன் அந்த தீபம் வைத்திருந்த இடத்துக்கு எதிரே இருந்த மூலையில் அமர்ந்திருந்த உருவத்தைக் கண்டதும் திடுக்கிட்டான்..

    கறுப்புப் போர்வை, அந்த தீபம் செய்வித்த சிறுஒளியில் தெரிந்த நரைத்த தலை, மீசை..வாளின் ஒற்றைக் கீறல் கன்னத்தில்..இடுப்பில் ஒரு பருத்தி ஆடை அதுவும்கொஞ்சம் அழுக்காக… கண்களில் மட்டும் பளிச்சென எடைகூடிய ஒற்றை வைரக்கல்லின் ஒளியைப் போன்ற பிரகாசம்..”உதயகுமாரா” என விளித்த குரல் சற்றே கருங்கற்பொடிகளை சிறு பாத்திரத்தில் வைத்துக் குலுக்குவது போன்ற சப்தமாய் இருந்தாலும் அவற்றிலும் ஒரு வசீகரம் இருந்தது..

    உதயகுமாரன் தலை வணங்கினான். “சக்கரவர்த்தி.. இங்கு எப்போது எப்படி வந்தீர்கள் என்று தெரியவில்லை”

    “சக்கரவர்த்தி” சிரித்தார் வீர சிம்ம பல்லவர்.. எங்கிருக்கிறது ராஜ்யம், அரண்மனை,.. எல்லாம் இழந்தாகி விட்டதடா உதயகுமாரா.. நீ ஒருவன் தான் விசுவாசமாய் இருக்கிறாய் என நினைக்கிறேன்.. எல்லாம் சோழனுக்குக் கொடுத்தாகி விட்டது..”

    “சக்கரவர்த்தி.. நீங்கள் அப்படி சொல்லக் கூடாது.. நான் இருக்கிறேன்..மேற்கொண்டு பாண்டிய மன்னன் உதவுவதாகச் சொல்லியிருக்கிறான்..”

    “ நிஜமாகவா சொல்கிறாய் உதயகுமாரா.. என்னிடம் தான் படைகள் ஏதும் இல்லையே.. ஏதோ மறைந்து மறைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். மனைவி, மகனைக் கூட சிறைப்பிடித்து விட்டானாம் சொழன்.. பிடித்து விடுதலையும் செய்து அங்கேயே ஒரு குடிலில் இருக்க வைத்திருக்கிறானாம்..என்ன ஒரு கேவலம் பல்லவ நாட்டிற்கு..ம்ம்..பாண்டியப் படைகள் எவ்வளவு..சோழனை சமாளிக்க அந்தப் பாண்டிய மன்னனால் முடியுமா..எனக்கு உதவி செய்வதன் மூலம் அவர் என்ன ஆதாயம் அடைவார்”

    “அதைப் பற்றி நீங்கள் அவரிடமேயே கேட்டுக் கொள்ளுங்கள்..”

    “அவர் இங்கு வரப் போகிறாரா..”

    “இல்லை சக்கரவர்த்தி..இதோ ஒருகல்லில் இருக்கிறது காஞ்சி.. அதற்கு முன்னால் ஒரு சிறு கிராமம்..ஓரிருக்கை..அங்கே சென்று அக்ரஹாரத்தில் மூன்றாவது வீட்டிற்குச் செல்லுங்கள்..”

    “சரி செல்கிறேன்..அதற்கு முன்.. உண்ண எதுவும் வைத்திருக்கிறாயா..”

    “இந்தாருங்கள்..இந்தத் தட்டில் சில பழங்கள் இருக்கின்றன உண்ணுங்கள் சக்கரவர்த்தி என்ற உதயகுமாரனுக்கு க் கண்ணில் நீர்க் கோர்த்தது.. சக்கரவர்த்தி இருந்த நான்கு வாழைப்பழங்களை வேகமாக விழுங்கினார்.. இந்தா தட்டு..

    வேண்டாம் அதை நீங்களே எடுத்துச் செல்லுங்கள்.. இதைப் பார்த்ததும் அவர் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்” என்றான்..

    வீர சிம்மர் மெல்ல எழுந்து கரும்போர்வையைச் சுற்றிக் கொண்டு அந்தக் கோவிலை விட்டு வெளிவந்து அந்த காரத்தில் மறைந்தார்..

    உதயகுமாரன் உள்ளிருந்து ஒரு புறாவை எடுத்தான்..பின் ஏற்கெனவே இடுப்பில் எழுதி வைக்கப் பட்டிருத ஓலையைப் பார்த்தான்..”சோழ மன்னருக்கு..வீர சிம்மன் சொன்னபடி அக்ரஹாரம் ஆறு நாழிகை ப் போதில் வந்துவிடுவார்” என எழுதியிருந்ததை மறுபடி படித்துக் கொண்டான்.. புறாவின் உடலில் புதைத்து அதைப் பறக்க விட்டான்.. புறா திடுமென க் கோபித்துக் கொண்டு பிறந்தகம் விரைவாகச் செல்லும் மனைவியைப் போல வானத்தில் பறந்தது..

    **

    இது தானே ஊர்..ஊரே அமைதியாய் இருக்கிறதே.. இருள் வேறு.. நமதாட்சியில் என்றால் தெருவுக்குத்தெரு ஒரு தூண் விளக்கு எரிந்துகொண்டிருக்கும் இரவெங்கிலும்..ம்ம்

    ஊருக்குள் நுழையக் கால் வைக்கும் போது வள்ள் வள்ள்ள் என மெல்லிய உறுமல் பின் அதுவே சத்தமாக வரப் பார்த்தால் கண்கள் பளபளக்க இரு கரு நாய்கள்.. அவர் மேல் பாய்ந்தன..

    கையிலிருந்த தட்டினால் தடுத்துத் தள்ளிவிட்டார் வீரசிம்மர்.. நாய்களின் பாய்ச்சலும் பலமும் கொஞ்சம் கூடுதலாக இருக்கவே வேகமாக ஓடி ஓடி ஒரு தெருவில் நுழைந்து ஒரு திண்ணையின் மேலேறி ஒளிந்து கொண்டார்..

    துரத்தி வந்த நாய்கள் அவரை க்காணாமல் தேடின.. பின் காற்றில் அவர் வாசனை பிடிப்பதற்காக மூக்கை மூக்கை நீட்ட..சொட்டென அவற்றின் தலையில் விழுந்தன மழைத்துளிகள்..அதுவே வேகமாக விழ ஆரம்பிக்க அவையும் நனையாமல் இருக்க விரைவாக அந்தத் தெருவை விட்டே ஓடின..

    திடுமென ஆரம்பித்த மழைக்கு நன்றி சொல்லிக் கொண்டார் வீரசிம்மர்.. கடவுளே நன்றி..இது தான் அக்ரஹாரம் போலிருக்கிறது..இது என்ன இரண்டாவதுவீட்டுத் திண்ணையா.. சரி மூன்றாவது வீட்டுக்குப் போகலாம் எனக் கிளம்பும் போது மெல்லிய சிரிப்பொலி.. பெண்ணினுடையது..

    “யார் யாரது” என்றார் வீர சிம்மர்..

    மறுபடியும் சிரிப்பொலி..இடுப்பைத்தேடினார்..வாளை ஓரிடத்தில் வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது.. குறுவாளும் ஓடிவந்ததில் எங்கோ விழுந்து விட்டது..இருப்பது தட்டு மட்டும் தான்..

    “துணிச்சலென்றால் வெளியில் வா..யார் நீ”

    “வெளியில் எல்லாம் வரமாட்டேன்..உனக்கு உதவி செய்யவே வந்தேன்.. நான் தான் விதி..”

    “விதியா.. பின் ஏன் பெண்குரலில் பேசுகிறாய்..”

    “ஆண்குரலில் பேசியிருந்தால் என்னைத் தேடியிருப்பாய்..அப்புறம் வேலைமெனக்கெட்டு அந்தப் பக்கம் ஒளித்து வைத்திருக்கும் வாளை எடுத்துக் கொண்டு என்னிடம் வருவாய்..எனக்கு வாள் என்றால் பயம்..அது தான் பெண் குரலில் பேசினேன்..சொல்வதைக் கேள் வீரசிம்மா..”

    “சக்கரவர்த்தி என்று சொல்”

    “சக்கரவர்த்தியா.. “ சிரித்தது விதி..” எங்கிருக்கிறது மன்னா எங்கிருக்கிறது உன் ராஜ்யம் நீ எப்படி இருந்தாய்..

    ஒரு காலத்தில் செல்வச் செழிப்பான அரண்மனையில் அழகாக அரசாட்சி செலுத்தி வந்தாய்.. என்ன ஆயிற்று காலம் செய்த கோலம் எல்லாவற்றையும் இழந்தாய்..உணவு கூட உனக்குக் கிடைக்கவில்லை..

    கேவலம் உன்னிடம்வேலைபார்த்த கடை ஒற்றனை நம்பி இங்கு வந்திருக்கிறாய்.. பசியில் அவனிடமே பழங்கள் கேட்டிருக்கிறாய்.. கேட்டு உண்டும் இருக்கிறாய்..

    இங்கு வந்தால் கரு நாய்கள் உன்னைத் துரத்துகின்றன..என்ன செய்வதென்று தெரியாமல் இப்படித்திண்ணையில் ஒதுங்கிப் பரிதவிக்கிறாய்..

    இவையெல்லாம் எதனால் நிகழ்ந்தது தெரியுமா”

    “நீ தான் காரணம்” என்றார் வீரசிம்மர்

    “ நான் காரணமாயிருக்கலாம்” என்றது விதி..”ஆனால் அதை நீ வென்றிருக்கலாம்… செல்வந்தர்கள் வறுமையை அடைவதும் வறுமையிலிருப்பவர்கள் செல்வமடைவதும் ஒரு வட்டம் போல..வாழ்க்கைச் சக்கரம்..அப்படிச் செல்வம் இருக்கும் சமயத்தில் நீ நாராயணனின் தாளைப் பற்றியிருக்கலாம்.. அப்படிச் செய்யவில்லை தெரியுமா.. அப்படி நாராயணனின் தாள் பற்றியிருந்தால் விதிப்பலன் என்று ஒன்று இருந்தாலும் உனது இடர்கள் துன்பங்கள் எல்லாம் குறைந்திருக்கும்”

    ஒருநா யகமாய் ஓட,வுலகுட னாண்டவர்,
    கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
    பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்,
    திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ

    புரிகிறதா உனக்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் வரும் இந்தப் பாசுரத்தின் பொருள்”

    “புரிகிறது” என்றார் வீரசிம்மர்..” இப்போது நான் என்ன செய்யவேண்டும் விதியே”

    “மூன்றாவது வீட்டிற்குச் செல்லாதே..அங்கே சோழ காவலர்கள் இருக்கிறார்கள்..கொஞ்சம் தொலைவில் போய் முதலில் கண்ட பெருமாள் கோவிலில் போய்க் கசிந்துருகி வேண்டு..பின் உனக்கு வேண்டியது கிடைக்கும்..” என்றது விதி

    சரி என வீரசிம்மர் புறப்பட்டுச் சென்றார்..

    சரி என நாமும் அடுத்த பாசுரத்தில் சந்திக்கலாமா..

    (தொடரும்)
    Last edited by chinnakkannan; 18th September 2014 at 11:23 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •