Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'வெள்ளிக்கிண்ணம்தான்... தங்கக் கைகளில்'



    'உயர்ந்த மனிதன்' பிறந்தநாள் சிறப்புப் பாடல்.

    நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் வேலை நிமித்தம் காரணமாக பாடல்கள் அளிக்க இயலவில்லை. இன்று நமது 'இமய'த்தின் இமயம் தொட்ட பாடல் ஒன்றை அளித்து எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறேன் சுயநலத்தோடு.

    நடிகர் திலகத்தின் பாடல்களில் எனக்குப் பிடித்த முதன்மையான காதல் பாடல். காதல் பாடல்களுக்கெல்லாம் தலையாயது. இனிமை...இனிமை...இனிமை. அதைத் தவிர ஒன்றுமே இல்லை. வனப்பும், வாளிப்புமாக, வாலிப வடிவழகனாக நடிகர் திலகம். ஒட்டுமொத்த நடிகர் திலக ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற வாணிஸ்ரீ ஜோடி. அப்புறம் என்ன?

    'வெள்ளிக் கிண்ணந்தான்
    தங்கக் கைகளில்
    முத்துப் புன்னகை
    அந்தக் கண்களில்'



    வெள்ளிக்கிண்ணத்தை தங்கக் கைகளில் ஏந்தி தங்கமகள் முதல் இரவுக்கு வரும்போது நடிகர் திலகம் சேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் அழகே அழகு. கழுத்தைக் கவர் செய்யும் அந்த ஜிப்பா அவர் மனதைப் போலவே வெண்மையானது. தூய்மையானது.

    வெள்ளிக்கிண்ணம் வாங்கி வைத்து, சுமந்து வந்த கைகளை சுகமாக முத்தமிட்டு, வாணியின் 'வழுவழு' கன்னத்தில் அதைவிட வழுவழுப்பான தன் இதழ்கள் பதித்து, முத்துப் புன்னகையை அவ்விடத்தில் படரவிட்டு, அந்த காந்தக் கண்களாலேயே காதலியின் கண்களை சுட்டிக் காட்டி, அப்படியே மலர்த் தோரணங்கள் அலங்கரித்த கட்டிலுக்குக் வைரச் சிலையை மெதுவாகக் கொண்டு சென்று, அமர வைத்து, அவள் எதிரே கீழ் அமர்ந்து கை பிடித்தவளின் கையை நுனியிலிருந்து மேல்வரை உதடுகள் விரித்து, தொட்டுக் கலந்து, கழுத்தில் முகம் புதைத்து 'இதுதான் சுகம்' என்று அங்கு சொர்க்கத்தைக் காணும் சுகக் கணவன். பார்ப்பவர்களை பரவசப்படுத்தும், கண்ணியக் காதலை வெளிப்படுத்தும் கண்கவர் அழகன்.

    மெத்தையில் புரளும் தத்தையின் அருகில் வந்து, கவிழ்ந்து படுத்து, கால்களை நீட்டி மடக்கி குழந்தையாய் ஒரு வினாடி படுக்கையில் தவழ்ந்து, கன்னியின் கன்னத்தோடு கன்னம் வைத்து, அவளுடன் கட்டிலில் காவிய நாயகன் சாய்வது தொட்டிலுக்காகவா?

    முதலிரவுக் காட்சியின் போது கணவன் ஸ்தானத்தை விட காதலன்தான் அதிகமாகத் தெரிவான். சற்றே காமத்தை அதிகமாகக் கா(கொ) ட்டுவான். மெல்லிய வேகம் கொண்டு மெல்லிடையாள் மேல் படருவான்.

    அப்படியே கொஞ்சம் நாளாகி, தாம்பத்ய அந்நியோன்னியம் அதிகமாக அதிகமாக, நெருக்கத்தின் நாகரீக வெளிப்பாடு பாடலில் கொஞ்சம் கொஞ்சமாகத் மேம்படும். காமம் சற்று குறையும். உல்லாசப் பயணங்களில் உவகை பெருகும். காதல் மேலும் வளரும். சிகை அலங்காரம் கூட கண்ணியமாக மாறி இருக்கும். உடையும், நடையும் கூட.

    வெளிப்பயணத்தில் நதியின் குறுக்கே நிற்கும் அந்த போல்ட்டுகள் தைத்த இரும்புப் பாலத்தில் இருவரும் மாறி மாறி அரை வட்டமிட்டு சாய்ந்து சல்லாபம் புரிய, பின் சற்றே 'பாலும் பழமும்' டாக்டரை ஞாபகப்படுத்தும் ஹேர் ஸ்டைலுடன் ப்ளாக் ஸ்வெட்டர் அணிந்து, அந்த மலைபிரதேச சரிவில் பாடலின் இடையிசையில் வாணிஸ்ரீ முன்னால் ஆடிக் கொண்டு ஓட, பின்னால் கைகள் உயர்த்தி ஒரே ஒரு துள்ளலுடன், பின் கைகள் தளர்த்தி மான் போல குதித்து ஓடி வரும் என் இதய தெய்வத்தை கவனியுங்கள்.

    படகுத் துறையின் அருகே ஓடி வந்து, வாணியின் கரம் பிடித்து, படகில் நிற்க வைத்து, அவருடைய சித்திர விழிகளின் கீழ் 'மீனோ..மானோ' என்று தன் விரல் கொண்டு தீட்டிக் காட்டி, வாணி படகில் அமர்ந்தவுடன்,

    'செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ'

    என்று பாடியபடி இடது தோள் பட்டையையும், உடலையும் சற்றே சைடு வாங்கி, இடுப்பை லேசாக ஒருக்களித்து ,வளைத்து, அன்னத்தின் அருகே அமர்ந்து, வாணியின் உணர்ச்சிமிகு உதடுகளை தன் விரல்களால் பிடித்து ஒன்று குவிக்க வைத்து, படகில் கைகளை மாற்றி மாற்றி, அழகாகத் துடுப்பு வளித்துக் கொண்டே 'இன்னும் சொல்லவோ... இன்பமல்லவோ' என்று பாவம் காட்டுவதை பத்தாயிரம் தரம் பார்த்தாலும் திருப்தி ஏற்படாது.

    ('மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ' வரிகளில் கைகளை உள்வாங்கி மாற்றி ஒருதரம் துடுப்பு போடும் அழகைக் கவனியுங்கள்.)



    கொஞ்சமே கொஞ்சம் முதுகு வளைத்து, உடலை முன்னிறுத்தி பாடும் 'இன்னும் சொல்லவோ... இன்பல்லவோ' வரிகளில் 'சொல்... லவோ' எனும்போது நாக்கை மேலன்னத்தில் சில வினாடிகள் மடித்து வைத்து, பின் ரிலீஸ் செய்து வாயசைத்து, மிக அழகாகத் தலையாட்டி, 'இன்பமல்லவோ' வில் 'வோ' முடிகையில் கழுத்தை லேசாக இடப்புறம் வாங்கி இழுத்தசைப்பது யாரைத்தான் இந்த மனிதரின் மேல் வெறி கொள்ள வைக்காது? ('சொல்....லவோ எனும் போது ஒரே தடவை என் கடவுள் கண் மூடித் திறக்கும் கண் கொள்ளாக் காட்சியும் உண்டு)

    முதல் சரணம் முடிந்து ஒரு குயில் 'ஹஹ்ஹஹஹ்ஹஹா' உலகின் ஒட்டுமொத்த இன்பத்தையும் குரலில் வைத்து கூவுமே! அப்போது வரும் இடையிசைக்கு தூரத்தே பனிபடர்ந்த கற்பாறை மலைகளும், பள்ளத்தாக்குகளும் தெரிய, நடிகர் திலகமும், வாணிஸ்ரீயும் போடும் அந்த ஸ்டெப்ஸ். ஆஹா! இருவரும் எதிரெதிர் நடந்தபடியே, இரு கைகளையும் இடுப்பருகே கொஞ்சமாக நீட்டி மாற்றி மாற்றி ஆட, அதே இசை திரும்ப தொடர்கையில் இருவரும் முதுகுப்புறமும், முன்புறமும் தோள்களை இணைத்து, பின் விலக்கி உடலை ஷேக் செய்தபடியே நின்றவாக்கில் ஆடியவாறு திரும்புவது அவ்வளவு எளிதில் திகட்டக் கூடியதா என்ன?

    'கட்டுடல் சுமந்த மகள்' பின்னால் கட்டுக் குலையாத என் கட்டழகன் நடக்கும் பெருந்தன்மையான பேராண்மை நடையழகுதான் என்ன!

    இடது இடுப்பில் கைவைத்து, குனிந்தபடி, வாணிஸ்ரீ இல்லாத தனி போஸாக, வலது புற தலைமுடி பம்பையாய் மேலே அழகோவியமாய்த் தூக்கி வாரி சீவப்பட்டு,(கோரைப் புற்கள் மொத்தமாக மேல்நோக்கி வளைந்து காற்றில் பறப்பது போல) 'காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன?" என்று கண் சிமிட்டி, பளிங்குப் பற்கள் காட்டி, கள்ளமில்லா கணவனாய் களிப்புடன் சிரிப்பது கடவுளைக் கூட மயக்கி விடுமே!



    'கண் பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன' எனும் போது கணவனின் உரிமை எல்லை மீறாமல், ஆனால் அதே சமயம் எல்லை மீறி விடுமோ என்ற நமது அப்போதைய அச்சத்தை வினாடியில் பொய்யாக்கி, இந்தக் கணவனின் கைகள் எங்கோ செல்ல எத்தனித்து, இறுதியில் இதய இருப்பின் குறுக்குப் பாதையில் பயணித்து, நாயகியின் கழுத்தை விரல்களால் பதமாக இதமாக வருடி, நெக்லஸின் வளைவுகளோடு சேர்ந்து வரைவுக்கோடு வரைந்து, நம் மனதில் அந்தக் கணம் நினைத்ததை இன்று வரை கூட, நெருங்கியவர்களிடம் கூட சொல்ல முடியாதபடி நமக்குள்ளாகவே இனபச் சிறகுகளை சிறகடிக்க வைக்குமே! இந்த வியத்தகு விந்தையை தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் கண்ணியம் கெடாமலும் இந்த உயர்ந்த மனிதனைப் போல எவர் செய்து காட்டிவிட முடியும்?

    அந்த இயற்கையான ரம்மிய சூழ்நிலையில் தன்னிலை மறந்து, மனைவியுடன் ஒரு கை கோர்த்து, மறு கை அவள் இடுப்பை வளைத்திருக்க, அவளை அணைத்து, அரவணைத்து புல்பாதையில் நடந்தபடி, அவளை வலதும் இடதுமாக சாய்த்து சாய்த்துப் பிடித்துத் தாங்கி, அரை சதவீத உதட்டோர அழகுக் கோணலில் 'தொட்டுக் கலந்தால்' பாடி உதட்டசைவாலும், உடல் அசைவாலும் உள்ளம் தொட்டுக் கலந்த நம் 'உயர்ந்த மனிதனி'ன் முத்திரைகளை முறியடிக்க வேறு யார்?

    பக்கத்து மலைகளில் பனிப்படலம் புகையாய்த் தவழ்ந்து தென்றலில் மிதந்து வந்து குளிர்சுகம் தர, 'லல்லல்லல்லா' முடிவதற்குள் அவசரமாய் அதே ராகத்தில் ஷெனாய் முந்திக்கொண்டு அதைவிடவும் அங்கம் சிலிரிக்க வைக்க, நடையழகு மன்னவன் நாயகியுடன் இணைந்து ராஜ நடை போட்டு, அசால்ட்டாக அன்னத்துடன் அழகு நடை நடந்து, பின் அவள் முன் வந்து இடம் மாறி, அவள் கையைப் பிடித்து, அவளை அப்படியே வாங்கி, கைகளை ஆட்டியபடி பார்ப்பவர் அத்தனை பேர் மனதையும் ஆட்டிவிட்டுச் செல்வானே!

    ஒரு கணவன் அதுவும் புதுக் கணவன் அதுவும் இயற்கை அழகு சூழ் வெளிப்புறங்களில் அழகு மனைவியுடன் தன்னந்தனியே பயணிக்கும் போது செய்ய வேண்டியவை என்ன என்பதை குரு பாடமாக கற்றுக் கொடுக்க இந்தப் பாடலை விட்டால் வேறு பாடல் இல்லை. செய்து காட்ட இந்த மனிதரை விட்டால் வேறு மனிதரும் இல்லை.

    வாணிஸ்ரீ. வன தேவதை. எளிமையான எழில். கொஞ்சும் இளமை. பூலோக அழகனுடன் இணை சேர்ந்த பூரிப்பு பரிபூர்ணமாக, வெட்ட வெளிச்சமாகத் தெரியும் அந்த பிரகாச முகத்தில். 'வசந்த மாளிகை'யின் ஆடம்பர ஜோடி அதற்கு முன்னமேயே இதில் இயற்கை விந்தைகளுக்கிடையே வெகு இயல்பாய் இணைந்து ஒட்டிக் கொள்ளும். கட்டிக் கொள்ளும். பெயரைத் தட்டிக் கொள்ளும்.

    ஆணழகனுக்கு ஏற்ற குரலழகன். சௌந்தரராஜன். திரைக்குப் பின்னால் நின்று குரலால் மனதை நிறை செய்தவன். நடிப்புத் திலகத்திற்கு 'பாடகர் திலகம்' பாடிய காதல் பாடல்களில் முதன்மையானது....முழு நிறைவானது.

    'ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா' ஹம்மிங்கிலேயே ஹார்ட்டில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிடும் மாயப் பாடகி சுசீலாம்மா. மரணப் படுக்கையில் இருப்பவன் கேட்டால் கூட மகிழ்ச்சியில் துள்ளி எழுந்து எமனை விரட்டுவான்.

    'பாடகர் திலகம்' பாடலின் பல்லவி வரிகளை ஒவ்வொன்றாக முடிப்பதற்கு முன்னமேயே தொடங்கிவிடும் இந்த இசைத் தேவதையின் இனிமையான 'ஆ.......ஆ' ஹம்மிங்க்குகள். இது பாடலுக்கே தனிச் சிறப்பு. நமக்கு கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்ப்பு.

    பாடல் முழுதும் இசை சாட்டை எடுத்து இன்ப அடி அடிக்கும் 'மெல்லிசை மன்னன்'.

    வாலியின் வரிகள் சிருங்காரம் அள்ளிக் கொட்டுகின்றன. கொடைக்கானலின் இயற்கை அழகை பி.என்.சுந்தரம் தன் காமராவில் அடக்கி நாம் ரசிக்க ரசிக்க ஊட்டுவார்.

    இணையற்ற இசையாலும், அருமையான இயற்கை சூழல் இடங்களாலும், இதயம் கவர்ந்த இணையில்லா ஜோடியாலும், பாடலின் வரிகளாலும், இசைக் கருவிகளின் ஆளுமைகளாலும், வளமான பாடகர்களாலும், குறிப்பாக ஆண்மைநிறை அழகானாலும், அவர் ஸ்டைலாலும், ஆயுள் முழுக்க என்னை ஆளுமை செய்யும் நடிகர் திலகத்தின் காதல் பாடல். மனதில் என்றும் முதலிடம். நிரந்தரமான இடம்.




    வெள்ளிக் கிண்ணந்தான்
    தங்கக் கைகளில்
    முத்துப் புன்னகை
    அந்தக் கண்களில்
    வைரச் சிலைதான்
    எந்தன் பக்கத்தில்
    தொட்டுக் கலந்தால்
    அதுதான் சுகம்.

    வெள்ளிக் கிண்ணந்தான்
    ஆ.......ஆ
    தங்கக் கைகளில்
    ஆ.......ஆ
    முத்துப் புன்னகை
    ஆ.......ஆ
    அந்தக் கண்களில்
    ஆ.......ஆ ஆ

    சித்திர விழிகள் என்ன மீனோ மானோ
    ஹஹ்ஹஹ்ஹா
    செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ
    ஹஹ்ஹஹ்ஹா
    முத்திரைக் கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ
    ஹஹ்ஹஹ்ஹா
    முத்திரைக் கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ
    மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ
    மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ
    இன்னும் சொல்லவோ
    இன்பமல்லவோ

    ஹஹஹாஹஹா
    ஹஹஹாஹஹா

    ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா
    ஹஹஹா...
    ஹஹ்ஹஹஹ்ஹஹா
    ஹஹஹா.....
    ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா
    ஹஹஹாஹா

    கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல
    ஹஹ்ஹஹ்ஹா
    கை தொட்டுத் தலைவன் அவள் பின்னே செல்ல
    ஹஹ்ஹஹ்ஹா
    காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன
    ஹஹ்ஹஹ்ஹா
    காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன
    கண் பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன
    கண் பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன

    இன்னும் சொல்லவோ
    இன்பமல்லவோ

    லலலாலலா
    லலலாலலா

    வெள்ளிக் கிண்ணந்தான்
    ஆ.......ஆ
    தங்கக் கைகளில்
    ஆ.......ஆ
    முத்துப் புன்னகை
    ஆ.......ஆ
    அந்தக் கண்களில்
    வைரச் சிலைதான்
    ஆ.......ஆ
    எந்தன் பக்கத்தில்
    ஆ.......ஆ
    தொட்டுக் கலந்தால்
    ஆ.......ஆ
    அதுதான் சுகம்.

    லல்லல்லல்லல்லா
    லலலா
    லல்லல்லல்லல்லா
    லலலா




    அடுத்தது....

    சொல்கிறேன் விரைவில்.
    Last edited by vasudevan31355; 5th October 2015 at 01:56 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •